என் நண்பரும் சுற்றுச்சூழல் ஆர்வலரும், எழுத்தாளருமான அ. முத்துகிருஷ்ணன் மதுரையில் பசுமை நடை என்ற அமைப்பை உருவாக்கி சுற்றுச்சூழலையும் வரலாற்றுப் பெருமை மிக்க இடங்களையும் பாதுகாக்க மிகுந்த முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்
பசுமை நடை மதுரையைச் சுற்றியுள்ள சமண மலைகள் குறித்து மிகப்பெரிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.
ஆர்வம் மிக்க இளைஞர்கள் பலரும் ஒன்று சேர்ந்து இயங்கும் பசுமை நடை தமிழகத்திற்கே முன்னோடியான சுற்றுசூழல் அமைப்பாகும். இந்த அமைப்பின் சார்பில் விருட்சத்திருவிழா, பாறைத்திருவிழா என மிகச்சிறந்த இயற்கை சார் விழாக்கள் கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்டுள்ளன.
பசுமை நடையின் ஐம்பதாவது நிகழ்வை சிறப்பிக்கும் விதமாக மதுரையில் வருகின்ற ஆகஸ்ட் 16ம் தேதி காலை கீழக்குயில்குடி சமணர் மலையடி வாரத்தில் இன்னீர் மன்றல் விழா நடைபெற உள்ளது.
இதில் பல்வேறு துறை சார்ந்த முக்கிய ஆளுமைகளும் ஆர்வலர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். புத்தக வெளியீடும் உரைகளும் நடைபெற உள்ளன.
இந்த நிகழ்வில் நானும் பங்குபெற இருக்கிறேன்.
தண்ணீரைப் பாதுகாக்கவும் நீர்நிலைகளைக் காப்பாற்றவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் நடைபெற உள்ள இந்த நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்