பனித்துளிகளைச் சேகரிப்பவள்.

இலக்கியத்தில் பதிவான சில சித்திரங்களை வாழ்நாளில் நாம் மறக்கமுடியாது. முதன்முறையாக வாசிக்கும் போது அடைந்த சந்தோஷத்தை இன்று வாசிக்கும் போதும் அந்த வரிகள் தருகின்றன.

பனித்துளிகளைச் சேகரித்து வந்து அந்தப் பனிநீரால் முகத்தைக் கழுவிக் கொண்டால் அழகி ஆகிவிடுவாள் என நினைத்து ஒரு பேதைப் பெண் பனித்துளிகளைச் சேகரிக்கச் செல்லும் பாஸீ அலீயெவா Fazu Aliyeva நாவலில் வரும் அந்தக் காட்சி எத்தனை அற்புதமாக எழுதப்பட்டிருக்கிறது.

இவ்வளவு அழகான ஒரு நாவலைத் தமிழில் மொழியாக்கம் செய்த பூ. சோமசுந்தரம் மிகுந்த பாராட்டிற்குரியவர்.

ஏன் இந்த நாவலைத் தமிழ் இலக்கிய உலகம் கொண்டாடவில்லை. கவனப்படுத்தவேயில்லை. நான் நாலைந்து முறை இந்நாவலைப் பற்றி எழுதியிருக்கிறேன். இளம்படைப்பாளிகள் இதை அவசியம் வாசிக்க வேண்டும். இந்நூல் தற்போது அச்சில் இல்லை என்கிறார்கள். ஒருவேளை நூலகத்தில் கிடைக்கக் கூடும்

வாசிக்கக் கிடைக்காத நூல்களைத் தேடி நானும் கோணங்கியும் எங்கெங்கோ சுற்றியிருக்கிறோம். நூலகத்திலே அமர்ந்து படிக்க மட்டுமே கிடைக்கும் என்ற சூழலில் நாட்கணக்கில் நூலகத்திற்குச் சென்று வாசித்திருக்கிறோம். இன்று வீடு தேடி புத்தகங்கள் வந்து சேருகின்றன. ஆனால் எதை வாசிப்பது. கிடைக்காத புத்தகங்களை எப்படிக் கண்டறிவது எனப் பலருக்கும் தெரியவில்லை.

பாஸீ அலீயெவா தாகெஸ்தானின் ஒரு மலைக் கிராமத்தில் பிறந்தவர், தனது 10-11 வயதில் தனது முதல் கவிதையை எழுதினார். அது பள்ளி நாளிதழில் வெளியானது. அன்றிலிருந்து அவள் கனவு காணத்துவங்கினாள். அவருக்கு ரஷ்ய மொழி தெரியாது. தானே அதைக் கற்றுக் கொண்டார்.

அவருக்குப் பிடித்தமான கலைஞர் யாரெனக் கேட்டபோது மைக்கேலேஞ்சலோ பதில் சொன்னார்.. அத்தோடு. என்றாவது ஒருநாள் இத்தாலிக்குச் சென்று, டேவிட் சிற்பத்தைப் பார்த்து, சிலையின் நரம்புகளில் உண்மையான ரத்தம் ஓடுகிறதா என்பதைக் கண்டறிய விரும்புவதாகச் சொன்னார்.

பின்னாளில் தனது எழுத்தில் அப்படியான அபூர்வமான மனிதர்களைச் சிருஷ்டித்து அழியாப்புகழ் பெற்றார் அலீயெவா

••••••

பாஸீ அலீயெவா

இதெல்லாம் தொடங்கியது 1948ம் ஆண்டு இளவேனில் காலத்துக் காலைப் பனித்துளிகளுடன்… எங்கள் அண்டை வீட்டுக் கிழவி ஹலீமாத் ஊசியில் நூல் கோத்துத் தரும்படி என்னைக் கேட்டுக்கொண்டாள். அவளுக்கு இந்த உதவியை நான் எப்போதும் உவப்புடன் செய்வேன்.

இதற்குக் கைம்மாறாக அவள் அழகின் மர்மத்தை எனக்கு அறிவித்தாள் (எங்கள் வீட்டு வராந்தாவில் மேஜை மேல் பொருத்தப்பட்டிருந்த சிறு கண்ணாடியில் நான் முகம் பார்த்துக் கொள்வதை அவள் கவனித்திருக்க வேண்டும். அவள் சொன்ன இரகசியம் இது தான்: உராஷ் பைராம் பெருநாள் அன்று பல பல வென்று விடியும் போது ஒரு கன்னிப் பெண் புல் வெளிக்கு வந்து, தூய பீங்கான் கிண்ணத்தில் பனித்துளிகளைத் திரட்டிச் சேர்த்து, அந்தப் பனி நீரால் முகத்தைக் கழுவிக்கொண்டால் அவள் அழகி ஆகிவிடுவாள்.

இதைத் தெரிந்து கொண்ட பிறகு உராஸ் பைராம் பெருநாளுக்கு முந்திய இரவு என்னால் தூங்கவே முடியவில்லை என்பதைச் சொல்லவும் வேண்டுமா? நான் விடை கொள்ளாமல் தவிப்பதைக் கண்டு அம்மா வியப்படைந்தாள். பல்வலி என்னைத் தொல்லைப்படுத்துவதாக அவளுக்குச் சமாதானம் கூறினேன்.

வானில் விண்மீன்கள் ஒவ்வொன்றாக மறையத் தொடங்கியதுமே சிறு கிண்ணத்தை மறைத்து வைத்துக்கொண்டு வெளியேறி மலை நடுவை அடைந்தேன். என் கண்கள் கூசின. சுற்றிலும் அழகழகாகக் கணக்கற்ற பூக்கள்! ஒவ்வொன்றின் இதழ் மகுடத்திலும் ததும்பத் ததும்ப நிறைந்த பனிநீர். நெடுநேரம் அவற்றைக் கண் குளிரப் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு மலர்கள் மேல் இரக்கம் உண்டாயிற்று. பனிநீரை நான் வடித்துக் கொண்டால் அவற்றின் வனப்பும் தளதளப்பும் குறைந்துவிடுமே என்று தயங்கினேன். ஆனால் என் வயது பெண்கள் எல்லோரையும் விட அழகி ஆகவேண்டும் என்ற விருப்பமே முடிவில் வென்றது.

நீல மலருக்கு முன் மண்டியிட்டு அதிலிருந்த பனிநீரை ஜாக்கிரதையாகக் கிண்ணத்தில் வடித்துக் கொண்டேன். திடீரென்று பக்கத்தில் பார்த்தேன். அங்கே இன்னும் பூச்செடி ஒன்று இருந்தது. ஆனால் அது கோணலாக வளர்ந்திருந்தது. அதன் அருகே, அது தழைக்கவிடாமல் தடுத்தவாறு நீட்டியிருந்தது ஒரு பெரியகல். அந்த மலர் மன வேதனையால் தலை கவிழ்ந்தது போலவும் பனிநீரை அல்ல, கண்ணீரைச் சிந்துவது போலவும் எனக்குத் தோன்றியது. கல்லைப் புரட்டி அகற்ற முயன்றேன், ஆனால் நான் முழுபலத்துடன் கல்லை ஆட்டி அசைத்துப் பெயர்த்து நகர்த்தினேன். அக்கணமே அது முன்பு கிடந்த இடத்தில் அப்பாடா என்று பெருமூச்சு விடுவது போன்ற ஓர் ஒலி எனக்குக் கேட்டது.

குபுக்’ ‘குபுக்’ கென்ற மெல்லிய சப்தம் உண்டாயிற்று. எழில் நிறைந்த இந்த உலகைக் கண்டு பரவசம் அடைந்த தெளிந்த விழி ஒன்று என்னை நோக்குவது போல் இருந்தது. துாயக் குளிர் நீர் மலையின் மார்பகத்தில் நந்து பொங்கி வந்தது. பறகு வரவர அதிகமாகக் களகளத்துக் கொண்டு சுரந்து பெருகியது புதிய மலை காற்று. இந்தக்காட்சியைக் கண்ணாறக் காண எனக்கு வாய்த்தது. நான் வீடு திரும்பியபோது சூரியன் உயரே வந்துவிட்டது.

மலையடிவாரத்தில் என் தாயாரைக் கண்டேன். வேறெரு சமயமாயிருந்தால் அம்மாவிடமிருந்து தக்கபடி செம்மையாகக் கிடைத்திருக்கும் எனக்கு. ஆனால் இப்போது புது ஊற்று பெருகத் தொடங்கிய செய்தியைத் தூரத்திலிருந்தே அவளுக்கு அறிவித்தேன்.

நீ என்ன வேண்டிக்கொண்டாய்?” என்று கத்தினாள் அம்மா.

“நான் என்ன வேண்டிக் கொண்டிருக்க வேண்டும்?”

“புதிய ஊற்று பொங்கத் தொடங்குவதைக் காண மிகுந்த அதிர்ஷ்டசாலிகளுக்குத் தான் வாய்க்கும் என்று நான் உன்னிடம் சொல்லவில்லையா? இப்படி வாய்ப்பது நிரம்ப அபூர்வம். புது ஊற்று பெருகுவதைக் காணப் பவன் ஏதேனும் வேண்டிக்கொண்டால் அவனுடைய வேண்டுதல் பலிக்கும். இந்த வாய்ப்பை நீ நழுவ விட்டாய். வா வேகமாகப் போவோம். அங்கே இன்னும் நேரம் கடந்துவிடவில்லையோ என்னவோ!”

அம்மாவின் அருகாக நடந்தவாறு நான் வழியில் சிந்தனை செய்தேன், என்ன வேண்டிக்கொள்வது என்று. எனக்கோ, எத்தனையோ ஆசைகள் இருந்தன. நான் அழகி ஆக வேண்டும், ஆய்ஷாத்திடம் இருப்பது போன்ற குஞ்சம் வைத்த நாகரிக நீல உடை எனக்கும் இருக்க வேண்டும், முந்தாநாள் நான் ஊற்றருகே உடைத்துவிட்ட குடத்தைப் பற்றி அம்மாவுக்குத் தெரியக்கூடாது என்று எத்தனையோ ஆசைகள். ஆனால் எல்லாவற்றையும் விடத் தீவிரமான, பெரிய ஆசை அப்பா வீட்டுக்குத் திரும்பி வர வேண்டும் என்பது தான். அம்மா ஊற்றருகே மண்டியிட்டு. மெலிந்த கைகளை வானை நோக்கி உயர்த்தியதும் நான் கிசுகிசுத்தேன்: “ஊற்றே. என் வேண்டுதல் பலிக்கச் செய்! என் தகப்பனார் வீட்டுக்குத் திரும்பி வரட்டும்!”

“இறந்தவர்கள் 2 பிரித்து எழுவதில்லை!” என்று சொல்லி விட்டு தலை வணங்கி, “அல்லாவே, இந்த உலகில் போர்கள் மறுபடி மூள விடாதே! எங்கள் ஆண்களைக் காப்பாற்று!” என்று இறைஞ்சினாள். அகலத்திறந்த அவளுடைய சாம்பல் நிற விழிகளிலிருந்து பெருத்த கண்ணீர்த் துளிகள் சொட்டி பொங்கும் ஊற்றில் கலந்தன. என் நெஞ்சு பதைத்தது. அம்மா இவ்வளவு சோர்ந்து தளர்ந்ததை முன்பு ஒரு போதும் நான் கண்டதில்லை.

புல்வெட்டியின் அரிவாளுக்கு முன் இளம் புல் போல், “போர்” என்ற இந்தப் பயங்கரச் சொல்லுக்கு முன் அவள் நடுநடுங்கினாள். நான் அம்மாவைத் தழுவிக்கொண்டு அழுதேன். அன்று பகல் முழுவதும் என் மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. முட்டை ஓட்டை உடைத்து விடுதலை பெறத் துடிக்கும் பறவை குஞ்சுபோல் நெஞ்சு படபடத்தது, ஏதோ சொல்ல ஆசை உண்டாயிற்று. என்ன என்பதுதான் எனக்கே தெரியவில்லை.

மாலையில் நான் மேஜை அருகே அமர்ந்து ஒரு கவிதையை எழுதி முடித்தேன். ‘சமாதான பதாகை” என்று அதற்கு மகுடமிட்டேன். உடனேயே தாயாருக்கும் சகோதரிக்கும் அதைப் படித்துக் காட்டினேன். அவ்வளவுதான், என் மதிப்பு “எட்ட முடியாத உயரத்துக்கு” வளர்ந்துவிட்டது.

அம்மா தன்னுடைய வெல்வெட் உடையை எனக்குப் பொருந்தும்படி மாற்றித் தைப்பதில் முனைந்தாள் (இப்படிப்பட்ட “மேதை” பழைய சீட்டி உடை அணிந்து வளைய வருவது நாகரிகக் குறைவாக அவளுக்குப்பட்டது போலும்). மறுநாள் காலையில் நான் பள்ளிக்கூடம் செல்கையில் என் தங்கை நுத்ஸலாய் சாலையில் நிற்கக் கண்டேன். அவள் ஒரு பையனுடன் சச்சரவிட்டுக் கத்திக் கொண்டிருந்தாள்: “என் வழிக்கு வந்தாயோ, தெரியும் சேதி! என் அக்காள் கவியாக்கும்!” இடை வேளையில் மேல் வகுப்பு மாணவ மாணவிகள் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள். ஒரு வாரத்திற்கெல்லாம் என் கவிதை பள்ளிக்கூடச் சுவரொட்டிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டது.

அதன் பிறகு மலைகளில் எத்தனையோ புதிய ஊற்றுக்கள் பொங்கிப் பெருகியிருக்கின்றன. எனது எத்தனையோ கவிதைகள் பதிப்பிக்கப்பட்டுவிட்டன. ஆனால் பள்ளிக்கூடச் சுவரொட்டிப் பத்திரிகையில் என் கவிதை முதன் முதல் வெளியான போது எனக்கு ஏற்பட்ட பேருவகையும் பெருமையும் என் நினைவில் யாவற்றிலும் பெரிதாகவும் ஒளி வீசுவதாகவும் எப்போதும் திகழும்.

(நன்றி: ரஷ்ய பெண் எழுத்தாளரான பாஸீ அலீயெவா “மண்கட்டியை காற்று அடித்துப் போகாது” நாவலுக்கு எழுதிய முன்னுரை.)

0Shares
0