பனியில் சிந்திய குருதி.

மெக்சிகோவைச் சேர்ந்த இயக்குனரான அலெஹாந்த்ரோ கான்சலஸ் இனாரித்து (Alejandro González Iñárritu) அமரோஸ் பெரோஸ், பாபேல், 21 கிராம்ஸ் போன்ற சிறந்த படங்களைத் தந்தவர். சென்ற ஆண்டு அவரது இயக்கத்தில் வெளியான BIRD MAN ஆஸ்கார் விருதைப் பெற்றது.

தற்போது அவரும் டிகாப்ரியோவும் இணைந்து The Revenant என்ற மிகச்சிறந்த படம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். 2015 கிறிஸ்துமஸ் அன்று இப்படம் வெளியாகியுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்குள் இப்படத்தை மூன்றுமுறை பார்த்துவிட்டேன்.

கரடி தாக்கி உயிர்பிழைத்த வேட்டைக்காரன் Hugh Glassன் கதையைப் படமாக்கியிருக்கிறார்கள். 190 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவமது.

இனாரித்துவின் படங்கள் மாறுபட்ட கதைக்களன்களை, வலிமையான கதாபாத்திரங்களை, உணர்ச்சிப்பூர்வமான வெளிப்பாட்டினை முன்வைப்பவை. கதை சொல்லும் முறையில் தனித்த அழகியல் கொண்ட திரைப்படங்கள். அமரோஸ் பெரோஸ், பாபேல்  இரண்டும் நான்லீனியர் திரைக்கதைகளுக்கான சிறந்த உதாரணங்கள்.

புறக்கணிக்கபட்ட, போராடுகிற, வலி மிகுந்த கதாபாத்திரம் ஒன்றின் கதையின் தான் இனாரித்து எப்போதும் படமாக்கத் தேர்வு செய்கிறார். குறிப்பாக வாழ்க்கைக்கும் மரணத்திற்குமான ஊசலாட்டம் அவரது கதையின் மையப்புள்ளியாக அமைகிறது. Amores perros , 21 Grams , Babel ஆகிய மூன்று படங்களையும் Death Trilogy என்றே சினிமா விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஆரம்ப காலத்தில் இனராத்து ரேடியோ ஜாக்கியாக வேலை செய்திருக்கிறார், பின்பு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரித்துள்ளார், அந்த நாட்களில் மெக்சிக திரைக்கதை ஆசிரியரான Guillermo Arriagaவோடு நட்பு ஏற்பட்டது. அதன் மூலம் திரைப்படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டத் துவங்கினார். இவரது முதல்படம் அமோரஸ் பரோஸ். இந்தத் திரைக்கதையை இருவரும் இணைந்தே எழுதினார்கள். பல்வேறு சர்வதேச விருதுகளைப் பெற்ற இந்தத் திரைப்படம் இனாரித்துவை உலகசினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக அடையாளம் காட்டியது.

பேர்ட்மேன் படத்தின் பெரும்பான்மைக் காட்சிகள் ஒரே அரங்கிற்குள் எடுக்கபட்டவை. அதற்கு முற்றிலும் மாறாக The Revenant ல் பெரும்பான்மை காட்சிகள் உறைபனி பிரதேசத்தில், காடுகளுக்குள் படமாக்கியிருக்கிறார் இனாரித்து.

ஆஸ்கார் விருது பெற்றுள்ள மிகச்சிறந்த ஒளிப்பதிவாளரான இமானுவேல் லுபெஸ்கி இப்படத்தின் ஒளிப்பதிவாளர். பேர்ட்மேன் படமும் இவர் ஒளிப்பதிவு செய்ததே,

கனடாவின் -25C குளிரில் ஒன்பது மாதங்கள் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. லுபெஸ்கி இயற்கை ஒளியில் மட்டுமே படமாக்க விரும்பியதால் படப்பிடிப்பு குழு பெரும் சிரமங்களைச் சந்தித்திருக்கிறது. ஆனால் அந்தக் காட்சிகளைப் பார்வையாளர்கள் திரையில் காணும் போது அடையும் வியப்பும் சந்தோஷமும் தங்கள் வலியை மறக்க செய்துவிட்டன என்கிறார் இனாரித்து.

Michael Punke நாவலை மையமாக கொண்டு திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. பெரிய திருப்பங்கள், திகைப்புகள், தாவுதல்கள் இல்லாத திரைக்கதை. ஊறைபனியின் ஊடே உயிர்தப்பிய பயணம் போலவே கதை நகர்கிறது.

1823ம் ஆண்டுக் கேப்டன் ஆண்ட்ரு ஹென்றி தலைமையில் வேட்டையாடும் குழு லூசியானாவின் அடர்ந்த காட்டிக்குள் தோலிற்காக மிருகங்களை வேட்டையாடிக் கொண்டிருக்கிறார்கள், அப்போது திடீரென ஏரிகரா என்ற பூர்வகுடி இனத்தைச் சேர்ந்தவர்கள் மறைந்திருந்து தாக்கத் துவங்குகிறார்கள். அந்தத் தாக்குதலில் பலர் அம்பு பட்டுச் சாகிறார்கள்.

வேட்டைக்குழுவில் ஒருவனான ஹு கிளாஸ் தனது ஆட்களுடன் பதில் தாக்குதலை மேற்கொள்கிறான். இரண்டுபக்கமும் பலத்த மோதல் நடக்கிறது. பூர்வகுடி இந்தியர்களின் தாக்குதலைச் சமாளிக்கமுடியாமல் ஹென்றியும் அவனது ஆட்களும் தப்பியோடுகிறார்கள்.

அவர்களை ஏரிகரா பூர்வகுடிகள் துரத்துகிறார்கள். தப்பியோடும் வழியில் ஒரு இடத்தில் ஹு கிளாஸ் குட்டிகளுடன் வரும் கரடி ஒன்றிடம் மாட்டிக் கொள்கிறான். அவனைக் கரடி ஆவேசமாகத் தாக்குகிறது.

ஒரே ஷாட்டில் எடுக்கபட்ட அக்காட்சி படத்தின் ஆகச்சிறந்த ஒன்று. எப்படி அதைப் படமாக்கினார்கள் என்பதைப் பற்றி வாசித்து அறிந்த போது வியப்பின் உச்சத்திற்கே சென்றுவிட்டேன்.

ஸ்டண்ட் நடிகர்களின் உதவி கொண்டு அந்தக் காட்சி படமாக்கபட்டிருக்கிறது. நிஜமாகக் கரடி ஒருவரை தாக்கும் வீடியோவை துணையாகக் கொண்டு அது போலவே இந்தக் காட்சியைப் படமாக்கியிருக்கிறார்கள். பின்பு CG உதவியால் கரடியை ஒன்றிணைத்து நிஜமான தாக்குதல் போல உருவாக்கியிருக்கிறார்கள், கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தின் உயரிய சாதனை இக்காட்சி.

ஹு கிளாஸ் கரடியோடு போராடுகிறான், அவனை அடித்துக் கிழித்துப் போடும் கரடி, முடிவில் அவனது மூச்சினைப் பரிசோதித்துவிட்டு இறந்துவிட்டான் என நினைத்து விலகிப்போகிறது.

முறிந்த கையோடு எழுந்து அவன் கரடியைச் சுடுகிறான், குண்டடிபட்ட கரடி ஆத்திரமாகி அவன் மீது பாய்கிறது, அதைக் கத்தியில் குத்திக் கொல்கிறான். அவன் மீதே விழுந்து கரடி இறந்து போகிறது. கொட்டும் பனியில் கரடி தன்மீது விழுந்துகிடக்கப் பலத்த காயங்களுடன் சாகும் நிலையில் கிடக்கிறான் ஹு கிளாஸ் , மறுநாள் அவனை வேட்டைக்குழு கண்டுபிடிக்கிறது.

இனி அவன் உயிர்பிழைப்பது கடினம் என உணர்ந்த போதும் காப்பாற்றித் தூக்கிச் செல்கிறார்கள், அவர்களின் பயணம் தொடர்கிறது. நடைப்பிணமாக உள்ள ஹு கிளாஸை தூக்கிக் கொண்டு வேகமாகச் செல்ல முடியவில்லை,

அந்தப் பயணத்தில் உடல்முழுவதும் காயம்பட்டுப் பேச்சுவராமல் போன நிலையில் முகபாவங்களைக் கொண்டு தனது உணர்ச்சிகளை டி காப்ரியோ வெளிப்படுத்துவது அபாரம். இந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் அவருக்குத் தான். டி காப்ரியோவின் மிகச்சிறந்த படமிது.

வேட்டைக்குழு ஹு க்ளாஸை தூக்கிக் கொண்டு மெதுவாக நகர்ந்து போகிறது. குழுவில் இருந்தவர்கள் எங்கே தாங்கள் மறுபடியும் பூர்வகுடி இந்தியர்களிடம் மாட்டிக் கொள்வோமோ எனப் பயப்படுகிறார்கள்

ஹு கிளாஸ் சாகும் தருவாயில் இருக்கிறான், அவனை நாமே சுட்டுக் கொன்றுவிடுவோம் என ஆலோசனை சொல்கிறான் வேட்டைக் குழுவில் ஒருவனாக உள்ள ஜான் பிட்ஜெரால்ட்.

அதை ஏற்றுக் கொண்ட ஹென்றி, கிளாஸை கொல்ல துப்பாக்கி எடுக்கிறான், ஆனால் கொல்ல மனம் வரவில்லை. ஆகவே இரண்டு பேரை ஹு க்ளாஸிற்கு உதவியாக அவன் இறக்கும் வரை துணையிருக்கும்படியாக விட்டுப் போகிறான். அதில் ஒருவன் ஹு க்ளாஸின் மகன் ஹௌக். மற்றவன் பிரிட்ஜர். அவர்கள் மூவரும் கொட்டும்பனியில் தனித்து விடப்படுகிறார்கள்.

ஹு க்ளாஸை பிடிக்காத பிட்ஜெரால்ட் அவனைக் கொல்ல முயற்சிக்கிறான், அந்தக் கொலைவெறி தாக்குதலும் அதை எதிர்கொள்ள முடியாமல் ஹு கிளாஸ் தவிப்பதும் நம்மை உலுக்கிவிடுகின்றன, இந்தத் தாக்குதலில் ஹு க்ளாஸின் மகன் ஹௌக் பிட்ஜெரால்டினால் கொல்லப்படுகிறான். தன் கண்முன்னே மகன் கொல்லபடுவதைக் கண்ட போதும் அதை வெளிப்படுத்தமுடியாமல் தவிக்கிறான் கிளாஸ்.

பிட்ஜெரால்ட் தன்னோடு பிரிட்ஜரை அழைத்துக் கொண்டு கிளம்பிவிடுகிறான் தனித்துவிடப்படும் கிளாஸ் மிகுந்த சிரமத்துடன் ஊர்ந்து செல்ல ஆரம்பிக்கிறான், பின்பு கட்டையை ஊன்றி நடந்து காட்டிற்குள் தப்பிப் போகிறான். தனது காயங்களுக்குத் தானே மருந்திட்டுக் கொள்கிறான். பசியும் குளிரும் அவனை வதைக்கின்றன. குளிர்தாங்கமுடியாமல் நெருப்பு கூட்டி சூடேற்றிக் கொள்கிறான். காட்டுகிழங்கைத் தோண்டிச் சாப்பிடுகிறான்.

மீண்டும் அவனைப் பூர்வகுடி இனத்தவர்கள் அடையாளம் கண்டு துரத்துகிறார்கள். அவர்களிடமிருந்து தப்பிக்கப் பனி ஆற்றில் குதிக்கிறான். ஆறு அவனை அடித்து இழுத்துக் கொண்டு போகிறது. ஒரு இடத்தில் மரக்கட்டையைப் பற்றிக் கொண்டு தப்பி வரும் கிளாஸ் நெருப்பு மூட்டி பூர்வகுடி இந்தியர்களில் ஒருவன் எருதைக் கொன்று சாப்பிட்டுக் கொண்டிருப்பதைக் காண்கிறான், அவனிடம் யாசித்து எருதின் பச்சைமாமிசத்தை வாங்கிப் பசியில் அப்படியே கடித்துத் தின்று பசியாறுகிறான்.

அவர்கள் இருவரும் ஒன்றாகப் பயணிக்கிறார்கள். ஒரு இடத்தில் பிரெஞ்சு குழு ஒன்றால் தூக்கிவரப்பட்ட ஏரிகரா இனக்குழுவின் தலைவன் மகளைக் கிளாஸ் காப்பாற்றுகிறான். குதிரை ஒன்றைத் திருடி தப்பிப் போகிறான். அவனைத் திரும்பவும் துரத்துகிறார்கள்.

குதிரையோடு மலை உச்சியிலிருந்து தாவுகிறான். கிழே விழுந்த குதிரை இறந்து போகிறது. கொட்டும் பனியின் குளிரைத் தாங்க முடியாமல் இறந்து போன குதிரையின் குடலை அள்ளி வெளியே போட்டுவிட்டு அந்த உடலுக்குள் நுழைந்து படுத்துக் கொள்கிறான்.

சில நாட்களுக்குப் பிறகு கிளாஸ் உயிரோடு இருப்பதை அறிந்த ஹென்றி தனது ஆட்களை அனுப்பித் தேடுகிறான், அவர்கள் கிளாஸைக் கண்டுபிடிக்கிறார்கள். காப்பாற்றப்பட்டு உயிர்பிழைக்க வைக்கபடும் கிளாஸ் நடந்த உண்மைகளைச் சொல்கிறான், அத்துடன் தனது மகனைக் கொன்ற பிட்ஜெரால்டை பழிவாங்க துடிக்கிறான்.

இதற்கிடையில் பிட்ஜெரால்ட் தப்பிப் போய்விடுகிறான், அவனைத் தேடி பனிப்பிரதேசத்தினுள் ஹென்றியுடன் புறப்படுகிறான். உறைபனியில் மறைந்திருந்த பிட்ஜெரால்ட் ஹென்றியை கொன்றுவிடுகிறான். தந்திரமான வழியில் பிட்ஜெரால்டினை கண்டுபிடித்துச் சண்டையிடுகிறான் கிளாஸ்.

ஆவேசமாக அந்தச் சண்டை நிகழ்கிறது. முடிவில் பிட்ஜெரால்டினைக் கொல்கிறான் கிளாஸ். படத்தின் இறுதிகாட்சியில் க்ளாஸின் இறந்து போன மனைவி அவன் முன்னே தோன்றுகிறாள். அவளது மரணத்திற்கும், மகன் ஹௌக்கின் மரணத்திற்கும் காரணமாக இருந்தவனைப் பழிவாங்கிவிட்டேன் என்பது போலக் கிளாஸ் அவளை ஏக்கத்துடன் பார்த்தபடியே இருக்கிறான், ஒரு வார்த்தை கூடப் பேசாமல் அவளது உருவம் அவனைவிட்டு மறைகிறது.

சாவின் விளிம்பை தொட்ட ஒருவன் உறை பனிப்பிரதேசத்தில் மேற்கொள்ளும் சவாலான பயணமும், உயிர்வாழ்வதற்காக அவன் சந்திக்கும் நெருக்கடிகளும் அவனது பழிவாங்கும் தீவிரமும் வலிமையான காட்சிகளின் மூலம் சிறப்பாக வெளிப்படுத்தபட்டுள்ளன. படத்தொகுப்பும், இசையும், ஒப்பனையும் சிறப்பாக அமைந்துள்ளன.

இப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது நினைவில் இரண்டு திரைப்படங்கள் வந்து போயின. ஒன்று As Far as My Feet Will Carry Me என்ற ஜெர்மானியத் திரைப்படம் சைபீரிய சிறையில் இருந்து தப்பிப் பயணிக்கும் ஒரு கைதியின் முடிவில்லாத பயணத்தை விவரிக்கிறது. அதிலும் உறைபனியில் மாட்டிக் கொண்ட ஒரு மனிதன் உயிர்வாழ்வதற்காக எப்படி எல்லாம் போராடுகிறான் என்பது காட்சிப்படுத்தபட்டிருக்கிறது

மற்றொன்று ரஷ்யத்திரைப்படம் Story of a Real Man. பரீஸ் பொலெவோய் எழுதிய உண்மை மனிதனின் கதை என்ற நாவலை மையமாகக் கொண்டது.

இரண்டாம் உலகப்போரில் கலந்துகொண்ட ரஷ்ய விமானப்படை விமானி விபத்திற்குள்ளாகி பனிபிரதேசத்தில் விழுகிறான், கால் உடைந்த நிலையில் பதினெட்டு நாட்கள் அவன் எப்படி உயிர்தப்பி வாழ்கிறான், எதிரிகளை எப்படித் தாக்குகிறான் என்பதை நாவல் விவரிக்கிறது, இப்படத்திலும் கரடி தாக்குதல் நடைபெறுகிறது. நாவலின் முடிவில் காப்பாற்றபட்டு இராணுவமருத்துவ மனைக்குக் கொண்டுவரப்பட்டு விமானிக்கு மரக்கால் பொருத்தபடுகிறது

இந்த இரண்டு படங்களுக்கும் இனாரித்துவின் படத்திற்கும் நேரடியாக ஒரு தொடர்புமில்லை, ஆனால் ஒரே விதமான அனுபவத்தின் வேறுவேறுபக்கங்களை இந்தத் திரைப்படங்கள் வெளிப்படுத்துகின்றன

தோலிற்காக விலங்குகளை வேட்டையாடும் குழுவும் பூர்வகுடி இனத்தவர்களும் மோதிக் கொள்ளும் போது அதிலிருந்து கிளாஸ் தப்புகிறான், அது அவன் மரணத்திலிருந்து தப்பிக்கும் முதற்புள்ளி. அடுத்ததாக அவனைக் கரடி மிகமோசமாகத் தாக்குகிறது, அதிலிருந்தும் உயிர்பிழைக்கிறான். மூன்றாவதாக அவனைப் பிட்ஜெரால்ட் கொல்ல முயற்சிக்கிறான். அதிலிருந்தும் அவன் உயிர்பிழைக்கிறான். பசியோடு ஊர்ந்து செல்லும் அவன் குளிர்தாங்கமுடியாமல் செத்துப்போயிருக்கக் கூடும், அதிலிருந்தும் உயிர் பிழைக்கிறான். முடிவில் பிட்ஜெரால்டினை தேடி கொல்வதற்காகப் போகையிலும் அவனுக்குப் பதிலாக ஹென்றியே இறந்து போகிறான், இப்படிப் படம் முழுவதும் சாவு கிளாஸை பின்தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. அவன் தப்பி வாழ்ந்து கொண்டேயிருக்கிறான்.

அவனது வாழ்க்கையின் அர்த்தம் தன் மனைவியையும் மகனையும் கொன்றவனைப் பழிவாங்குவதில் நிறைவு பெறுகிறது, அதன் குறியீடாகவே கடைசிக்காட்சியில் இறந்து போன அவனது மனைவி அவன் முன்பாகத் தோன்றுகிறாள், படம் முழுவதும் கிளாஸை இயக்கும் உந்துசக்தியாக அவனது கடந்த கால நினைவுகள் உள்ளன, குறிப்பாகக் கிளாஸின் ஊர் தாக்கபட்டு அவன் கண்முன்னால் மனைவி கொல்லப்படுவதும், வீடுகள் தீக்கரையாக்கபடுவதும், மகனின் சாவும் அவனை உயிர்வாழும்படியாகத் தூண்டுகின்றன.

இப்படத்தின் உருவாக்கம் இயக்குனர் டேவிட் லீனின் காட்சிக்கோணங்களை, அழகியலை பல இடங்களில் நினைவுபடுத்தியது. பெரிதும் லோ ஆங்கிள் காட்சிகள், சில இடங்களில் திரையில் நாம் வேட்டையாடும் குழுவின் நாசியையும், அதில் வெளிப்படும் மூச்சில் தெறிக்கும் பனித்தூசியையும் நெருக்கமாக உணர்கிறோம். கேமிரா டிகேப்ரியோ கூடவே அலைந்து கொண்டிருக்கிறது. நகரமுடியாத அவனது தவிப்பை, மகனை இழந்த துயரத்துடன் தவிக்கும் மனவேதனையைக் காட்சிபடுத்தும் போது கேமிராவும் நிலை கொள்ள மறுக்கிறது, தடுமாறுகிறது. குறிப்பாக டிகேப்ரியோவின் முகபாவங்களைத் துல்லியமாகக் காட்சிப்படுத்தியுள்ளது அபாரம்.

குதிரையில் துரத்தப்படும் காட்சிகளும், பனியில் ஒளிரும் சூரியனும், ஆற்றில் விழுந்து உயிர்தப்பியோடுவதும், குதிரையின் வயிற்றில் இருந்தபடியே பனியை வெறித்துப் பார்ப்பதும், நெருப்பு மூட்டி அமர்ந்து வானை காண்பதும், முடிவற்ற உறைபனியில் ஒற்றை ஆள் ஊர்ந்து போவதும் எனக் கேமிரா நிலக்காட்சிகளின் வலிமையை நமக்குத் துல்லியமாக உணர்த்துகிறது. இயற்கை தான் வலிமையான எதிரி. அதை வென்று கடப்பது எளிதில்லை என நமக்குப் புரியவைக்கிறது கேமிரா.

இப்படம் ஒரு spiritual drama. தன்னை பொறுத்தவரை கிளாஸ்  “a man, a beast, a saint, a martyr, a spirit” என்கிறார் இனாரித்து.

புத்தாண்டின் துவக்கத்தில் இப்படி ஒரு படம் வந்திருப்பது மிகுந்த சந்தோஷத்தையும் உத்வேகத்தையும் ஏற்படுத்துகிறது.

•••

0Shares
0