காலம் செல்வம் எனும் செல்வம் அருளானந்தம் எழுதியுள்ள பனிவிழும் பனைவனம் நூலை வெளிவருவதற்கு முன்பாகவே வாசித்தேன். மிகவும் அற்புதமாக எழுதியிருக்கிறார். முக்கியமான புத்தகம்.

இந்த எழுத்து துன்பமும் இன்பமும் வலியும் பகடியும் நிறைந்த ஒரு நினைவு கூரல்.என முன்னுரையில் சச்சிதானந்தன் சுகிர்த ராஜா குறிப்பிடுவது மிகப் பொருத்தமானது. படிக்கும் போது சிரிப்பையும், நூலை வாசித்து முடிக்கும் போது கண்ணீரையும் வரவழைத்த அசலான எழுத்து.

யாழ்ப்பாணத்தைக் கொண்டாடும் இந்த நூல் அதன் அரசியல் மாற்றங்கள். பண்பாட்டு நினைவுகள். மற்றும் மறக்கமுடியாத மனிதர்களின் வாழ்க்கையை மிக நுண்மையாகச் சித்தரித்துள்ளது. வரலாற்று நிகழ்வுகள் ஒரு சாமானிய மனிதனை எப்படிப் பாதிக்கிறது. அவன் என்னவாக மாறுகிறான் என்பதை மிக நேர்மையாகச் செல்வம் பதிவு செய்திருக்கிறார்.
கனடாவில் வாழும் செல்வம் காலம் என்ற இலக்கிய இதழை நடத்திவருகிறார். தீவிர வாசிப்பாளர். இலக்கியப் பற்றாளர்.
இதன் வெளியீட்டுவிழா விரைவில் சென்னையில் நடைபெற உள்ளது
.இந்நூலைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிடுகிறது