பயம் வெறும் கற்பனையில்லை

அகிரா குரசேவா படங்களில் அதிகம் பேசப்படாத படம்,  1955ல் வெளியான I Live In Fear , இதே படம் Record of a Living Being என்ற தலைப்பிலும் வெளியாகி உள்ளது,  அணுஆயுத வீச்சால் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகியில் பல லட்சம் மக்கள் அழிவிற்கு உள்ளானார்கள், யுத்தம் முடிந்து பல ஆண்டுகளுக்குப் பின்னும் அணுஆயுதங்கள் குறித்த பயம் ஜப்பானின் எளிய மனிதர்கள் மனதிலிருந்து மறையவேயில்லை என்பதை மிக வலிமையாக, உண்மையாக குரசேவா இப்படத்தில் சொல்லியிருக்கிறார், செவன் சாமுராயின் வெற்றிக்குப் பிறகு இது போல ஒரு படத்தை எடுத்திருக்கிறார் என்பது அவரது மேதமையின் சான்று

எல்லோரும் ஒரு நாள் சாகப்போகிறவர்கள் தான், இதில் எதற்காக அணுஆயுதம் பற்றி நீ இவ்வளவு பயந்து கொண்டிருக்கிறாய் என்று  நகஷிமாவிடம் ஒருவன் கேட்கிறான்,

அதற்கு அவர் உறுதியான குரலில் சொல்கிறார்

நான் சாவைக்கண்டு பயப்படவில்லை, ஆனால் காரணமேயில்லாமல் அணுஆயுதம் வீசிக் கொலை செய்யப்படுவதை ஏற்றுக் கொள்ளமுடியாது , அது தான் என் பிரச்சனை என்கிறார்

பயம் போன்ற உள்ளார்ந்த உணர்ச்சியை மையப்படிமமாகக் கொண்டு ஒரு முழுநீள திரைப்படத்தை குரசோவா போன்ற ஆளுமைகளால் தான் உருவாக்க முடியும், அவரது அணுகுமுறையில் மனநல மருத்துவரின் நிதானமும், கூர்ந்த அக்கறையும் , கலைஞனின் ஆவேசமும் பெருங்கோபமும், நோயுற்ற குழந்தையின் இயலாமையும், தாய்மையின் அன்பும் ஒன்று கலந்திருக்கிறது

அணுஆயுதம் என்பது ஒரு குறியீடு, ஒவ்வொரு தேசத்திலும் அது போல மக்களை அச்சுறுத்தக்கூடிய பயம் ஏதோவொன்றிருக்கிறது, சாமான்ய மனிதன் தன் உயிரை காத்துக் கொள்ள இனம்தெரியாத பயத்தோடு தினம் தினம் செத்துப்பிழைத்து வாழ்க்கையைக் கடத்துகிறான்,

வரலாற்றின் போக்கில் இருபதாம் நூற்றாண்டு பேரழிவின் காலம், இரண்டு உலக யுத்தங்கள், லட்சக்கணக்கான மக்களின் உயிரிழப்பு, இதுவரை மனிதநாகரீகம் கண்டறியாத புதிய ஆயுதங்கள், அதை பயன்படுத்தி வெடித்த பேரழிவு, வன்முறை,  எனக் கல்வியும் விஞ்ஞானமும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட்டதை விடவும் அழிவை உண்டாக்குவதற்கே அதிகம் செலவிடப்பட்டிருக்கிறது, இந்நிலையில் பேரழிவிற்குக் காரணமானவர்களுக்கு எதிராக உலகெங்கும் கலைஞர்கள்  குரல் கொடுத்திருக்கிறார்கள்,

வேடிக்கையான கோமாளி போல தன்னை முன்னிறுத்திய சார்லி சாப்ளின் ஹிட்லரை எதிர்த்து தி கிரேட் டிக்டேட்டரை உருவாக்கியதும், ஆலன் ரெனே நைட் அண்ட் பாக் இயக்கியதும் போன்றதே அகிரா குரசோவாவின் இப்படமும். சமூக அவலத்திற்கு எதிராக திரையில் எழுப்பட்ட  உரத்த குரலே இப்படம்

மனித மனதினுள் ஆழமாக வேர்விட்டுள்ள மரணபயம் குறித்து  நுட்பமாக குரசேவா ஆராய்கிறார், அதன் காரணமாக பார்வையாளன், தன் மனதிலுள்ள பயத்தின் பட்டியலை கண்டுகொள்வதுடன், தனது அகப்பிரச்சனைகள் குறித்து மறுபரீசிலனை செய்யவும் துவங்குகிறான்

பயம் வெறும் கற்பனையில்லை, அது ஒரு ஆழமான உணர்ச்சி,  சொற்களில் வெளிப்படுத்தமுடியாத தத்தளிப்பு, மனம் துவண்டு போய்விடும் துயரநிலை,   மனிதர்களின் பயத்தைப் பட்டியலிடவே முடியாது, ஒவ்வொரு மனிதனும் ஏதோவொன்றினைப் பற்றி உள்ளுக்குள் பயந்து கொண்டுதானிருக்கிறான்,

பயம் ஒரு அரூபமிருகம், அது மனதிற்குள்ளே ஒளிந்து கொண்டு சதா குரல் கொடுத்தபடியே இருக்கிறது, பயம் பீடித்த மனிதன் தன்னை அகச்சிக்கலுக்கு உள்ளாக்கிக் கொள்வதோடு தன்னைச் சுற்றிய மனிதர்களையும் அந்த வலைக்குள் இழுத்துக் கொள்ள விரும்புகிறான், பயத்திலிருந்து விடுபடுவது அறிந்து மேற்கொள்ள வேண்டிய உளவியல் செயல்பாடு, அதற்கு மருத்துவம் மட்டும் போதாது, சில வேளைகளில் சமூகமாற்றங்களும் தேவைப்படுகிறது,

இந்த எண்ணங்களின் திரட்சி போலவே படத்தின் திரைக்கதை அமைக்கபட்டிருக்கிறது, வழக்கமான குரசோவா படத்தில் காண்பது போன்று இதிலும் அழுத்தமான கதாபாத்திரங்கள் முன்னிறுத்தப்படுகிறார்கள், தொஷிரே மிபுனே கிஷி நகஷிமா என்ற முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், மிபுனேயின் ஆகச்சிறந்த படங்களில் இதுவும் ஒன்று,

இப்படத்தில் குறைவான கதாபாத்திரங்கள், நேர்கோட்டில் நகரும் திரைக்கதை, உணர்ச்சிகளை பிரதானமாக வெளிப்படுத்தும் நடிப்பு, சீரான ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு, உள்ளார்ந்த வேதனையின் வெளிப்பாடு போல ஒலிக்கும் இசை, என யாவும் சிறப்பாக ஒன்றிணைந்துள்ளன,

படம் டாக்டர் ஹரடாவின் பல்மருத்துவமனையில் துவங்குகிறது, அதற்கு முந்திய டைட்டில் காட்சிகளில் டோக்கியோ நகரின் இயக்கமும் அதில் விரைந்து செல்லும் மக்களின் பரபரப்பும் காட்டப்படுகிறது,

டாக்டர் ஹரடா ஒரு சிறுவனின் பல்லைப் பரிசோதனை செய்து கொண்டிருக்கிறார், அவருக்குப் போன் வருகிறது, ஹரடாவின் மகன், தனது தந்தை குடும்ப நீதிமன்றத்தில் ஒரு ஆலோசகராகப் பணியாற்றுவதால் அடிக்கடி நீதிமன்றம் போக வேண்டிய அவசியமிருக்கிறது என்று இன்னொரு நோயாளியிடம் சொல்லுகிறான்

குடும்பப் பிரச்சனைகள் என்பது வெளியே தெரியாமல், தொந்தரவு தரக்கூடிய பல்வலி போன்றதே, அவற்றைத் தானே தீர்த்துக் கொள்ள முடியாத போது ஒரு மருத்துவர் போல மூன்றாம் நபரின் தலையீடு தேவையாக உள்ளது

டாக்டர் ஹரடா குடும்ப நல வழக்குகளைத் தீர்ப்பதை விரும்பி செய்கின்றவராகயிருக்கிறார், இன்றைய குடும்பங்கள் எந்தப் பிரச்சனையையும் தங்களுக்குள் பேசிக் கொள்ள இயலுவதில்லை, ஒருவர் முன்பு மற்றவர் மனம்விட்டு பேசித் தங்கள் பிரச்சனைகளைப் பகிர்ந்து கொண்டால் பெரும்பான்மை சிக்கல்கள் எளிதாகத் தீர்ந்து போய்விடும்,  ஆனால் அதைச் செய்வதற்கு எவருக்கும் விருப்பமில்லை என்கிறார் ஹரடா

குடும்ப நீதிமன்றத்தில் ஒரு புதிய வழக்குவிசாரணைக்கு டாக்டர் ஹரடா அழைக்கபடுகிறார், கோடைகாலத்தின் உக்கிரமான பகல்பொழுது, புழுக்கமும் வெக்கையும் கொண்ட சிறிய அறையில் அந்த விசாரணை நடைபெறுகிறது, நீதிபதிகளும், வழக்கில் கலந்து கொள்ள வந்திருப்பவர்களும் கைவிசிறியை வீசிக் கொண்டேயிருக்கிறார்கள்,

மனிதர்கள் தங்கள் நெருக்கடியில் இருந்து விடுபட தங்களைத் தானே குளிர்ச்சி செய்து கொள்ள வேண்டியது அவசியம் என்பதைச் சொல்வது போலவே விசிறி வீசும் காட்சிகள் தொடர்ந்து இடம் பெறுகின்றன, அவை கோடை வெப்பத்தில் இருந்து விடுபடும் முயற்சி என்பதைத் தாண்டி பலநேரங்களில் கதாபாத்திரங்களின் மனநிலையை வெளிக்காட்டும் உத்தியாகவே உள்ளன.

நகஷிமா என்ற வயதான தொழில் அதிபருக்கு எதிராக அவரது குடும்பம் வழக்கு தொடர்ந்துள்ளது, நகஷிமாவாக தொஷிரே மிபுனே நடித்திருக்கிறார், அவரது நரைத்த தோற்றம், முகத்திற்கு பொருந்தாத கண்ணாடி, அடர்த்தியான புருவம், விலகிய தாடை, கோணிப்போன உதடு, பயமும் கோபமுமான முகபாவம், நரம்புகள் புடைத்துக் கொள்ள கைநடுக்கத்துடன் விசிறி வீசும் முறை என அவர் பதற்றத்தின் உச்சத்தில் இருப்பதை ஆரம்ப காட்சியிலே சுட்டிக்காட்டப்படுகிறது,

நகஷிமாவின் இரண்டு மகன்கள், மகள், அவரது வயதான மனைவி, மருமகன் என யாவரும் ஒன்று திரண்டிருக்கிறார்கள், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றசாட்டு அவர் காரணமேயில்லாமல் அணுஆயுதங்களை நினைத்து அதிகம் பயப்படுகிறார், அதன் காரணமாக முன்பு ஒருமுறை பூமியின் மேலே பாதுகாப்பாக வாழ முடியாது என்று பூமிக்கு அடியில் பதுங்கு குழி போல ஒரு வீடு அமைத்து வாழப்போவதாக நிறைய பணம் செலவழித்தார், அது வீணாகிப் போய்விட்டது,

தற்போது ஜப்பானில் வாழ்ந்தால் என்றாவது மறுபடியும் அணுஆயுதம் வீசி தாக்கிவிடுவார்கள், ஆகவே நாட்டை விட்டே வெளியேறி பிரேசலுக்கு போய் அமைதியாக வாழ விரும்புவதாகச் சொல்கிறார், அதற்காக குடும்பச் சொத்துகளை விற்றுவிட்டு யாவரையும் தன்னோடு அழைத்துப் போகத் திட்டமிடுகிறார்

அணுஆயுதம் வீசப்பட்டு பத்து ஆண்டுகளுக்குப் பிறகும் அதை நினைத்துப் பயந்து கொண்டேயிருப்பது ஒரு பைத்தியக்காரத்தனம், அது நகஷிமாவிற்கு அதிகமாகவே இருக்கிறது, ஆகவே அவரது முட்டாள்தனமான நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தி அவரை பைத்தியம் என்று அறிவிக்க வேண்டுகிறார்கள்,

நகஷிமா தனது பயம் வெறும் கற்பனையில்லை, அது வாழ வேண்டும் என்ற உயிராசை, ஜப்பானில் உள்ள அத்தனை மனிதர்களுக்குள்ளும் அணுஆயுதம் குறித்த பயம் ஒளிந்திருக்கிறது, அதை நான் பகிரங்கமாக வெளிப்படுத்துகிறேன், மற்றவர்கள் அடக்கி வைத்துக் கொண்டிருக்கிறார்கள், இத்தனை லட்சம் மக்கள்  உடல் கருகி செத்துப்போன பிறகு எப்படி பயமில்லாமல் வாழ முடியும், அணுஆயுதங்களை ஏன் மனிதர்கள் கண்டுபிடித்தார்கள், அந்த மடத்தனமான செயலுக்குப் பிறகு சாதாரண மனிதன் எப்படி நிம்மதியாக வாழமுடியும் என்று  கோப்படுகிறார்

எதற்காக பிரேசலுக்குப் போக விரும்புகிறீர்கள் என்று கேட்கிறார்கள், அதற்கு நகஷிமா அங்கே தான் காடுகள் அதிகம், எவரது கண்ணிலும் படாமல் நிம்மதியாக ஒளிந்து வாழ முடியும் என்கிறார்,

நீதிபதிகள் அவரது எண்ணங்கள் யாவும் வீண்கற்பனை என்கிறார்கள், ஆனால் டாக்டர் ஹரடா அது உண்மையான பயம், தன் வயதை ஒத்த அத்தனை பேருக்கும் அந்த பயம் மனதிற்குள் இருக்கிறது, ஆகவே இது ஒரு விசித்திரமான வழக்கு, இதில் அவசரப்பட்டு முடிவு செய்யக்கூடாது என்கிறார்,

தங்களுக்குள்ளாகப் பேசி தீர்த்து விஷயத்தை முடித்துக் கொள்ள வேண்டியது தான் என்று நீதிபதி ஆலோசனை சொல்கிறார், அதற்கு இந்த பைத்தியகார மனிதர் யார் சொல்வதையும் கேட்க மாட்டார் என்று மூத்தமகன் முறைக்கவே, அவனை அனைவரின் முன்பாக கொதித்துப் போய் தாக்குகிறார் நகஷிமா

குடும்பம் அவரை விலக்கிவைக்கிறது, அவரது முதுகிற்குப் பின்னால் கேலி பேசுகிறது, ஆனால் அவர்  தனது தொழிற்சாலையை விற்றுவிட்டு எப்படியாவது பிரேசலுக்கு போய்விடுவதற்கு தொடர்ந்து முயற்சி செய்து கொண்டேயிருக்கிறார்

இந்த நிலையில் அவரது மற்ற மனைவிகள் அவர்களின் பிள்ளைகள் பற்றிய காட்சிகள் தொடர்கின்றன, அந்தக் குடும்பங்களின் மீது அவர் காட்டும் இயல்பான பாசமும், அவர்களுக்குத் தொடர்ந்து பணஉதவி செய்துவரும் அன்பும் சுட்டிக் காட்டப்படுகிறது, அவர்களையும் தன்னோடு பிரேசலுக்கு வந்துவிடும்படியாக அழைக்கிறார் நகஷிமா, ஆனால் அவர்கள் மறுத்துவிடுகிறார்கள்

ஒரு காட்சியில் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும் போது மழை  பெய்யத் துவங்குகிறது, அதன் காரணமாக திடீரென பலத்த மின்னல் வெட்டுகிறது, பயந்து போன நகஷிமா ஒடிப்போய் குழந்தையின் படுக்கையில் ஒளிந்து கொள்கிறார், படுக்கையில் கிடந்த குழந்தை வீறிட்டு அழத்துவங்குகிறது,

எங்கே மறுபடியும் அணுகுண்டு போட்டுவிட்டார்களோ என்ற அவரது அச்சம் முகத்தில் கொப்பளிக்கிறது, அந்தவலியும் பதைபதைப்பும் அணுஆயுத தாக்குதல் எவ்வளவு ஆழமாக ஒருவரை பாதித்திருக்கிறது என்பதை  துல்லியமாகக் காட்டுகிறது, அது நகஷிமாவின் உணர்ச்சிகள் மட்டுமில்லை,ஒட்டுமொத்த ஜப்பானிய மக்களின் ஆதார உணர்ச்சியும் அதுவே தான்,

பிள்ளைகள் தன்னைப் புரிந்து கொள்ள மறுக்கிறார்களே என்று நகஷிமா தொடர்ந்து கோபபடுகிறார், நீதிமன்ற அறிவுரைகளை மீறி அவர் தன்னிஷ்டம் போல நடப்பதாக பிள்ளைகள் மறுபடியும் புகார் சொல்கிறார்கள், இந்த நாடகத்தின் ஊடே மௌனமாக, நிழல்போல அவரை நேசிக்கும் மகளும், ,இளம்மனைவியும், குழந்தைகளும் வந்து போகிறார்கள்

படத்தில் எனக்கு மிகவும் விருப்பமான கதாபாத்திரம் அதிகம்  பேசாத நகஷிமாவின் வயதான மனைவி, அவரது பெயரில் தான் நீதிமன்றத்தில் புகார் அளிக்கபட்டிருக்கிறது,

ஒரு பக்கம் பிள்ளைகளின் நலன், மறுபக்கம் பிடிவாதமான தனது கணவன், இருவருக்கும் இடையில் அந்தப் பெண்மணி படும் அல்லலும், அவரது உடல்மொழியில் வெளிப்படும் படபடப்பும், நீதிமன்றத்திலே வெடித்து அழுவதும், கணவர் மயங்கி விழுந்தவுடன் அடையும் வேதனையும் அவரை மறக்கமுடியாத ஒரு கதாபாத்திரமாக்கிவிடுகிறது

நகஷிமா விரும்பியது போலவே பிரேசிலில் இருந்து ஒருவர் தனது பண்ணை வீட்டை விற்பதற்காக டோக்கியோ வந்து சேர்கிறார், அவர் தனது சினிமா புரொஜெக்டரை எடுத்துக் கொண்டு நகஷிமாவின் வீட்டிற்கு வந்து, சுவரில் தனது பண்ணையை பற்றிய ஒரு குறும்படத்தை திரையிட்டுக் காட்டுகிறார், அந்த காட்சியில் நகஷிமா அடையும் சந்தோஷம் அளவில்லாதது, தனது கனவுலகம் கைவசமாகப்போகிறது என்று அவர் உடனடியாக தனது சொத்தை விற்றுப் பண்ணை வீட்டை வாங்க முயற்சிக்கிறார்,

இதற்கிடையில் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க நாள் குறிக்கிறது, அந்தக் காட்சி மிகுந்த கவித்துவமாக படமாக்கப்பட்டிருக்கிறது, அப்பா பயந்து போய் நீதிமன்றத்திற்கு வராமல் போய்விடுவார் என்று ஒரு மகன் சொல்கிறான், ஒருவேளை அப்பா ஜெயித்துவிட்டால் உடனே மேல்முறையீடு செய்து அவரை முடக்கிவிட வேண்டும் என்று இன்னொரு மகன் ஆலோசனை சொல்கிறான், அப்போது நீதிமன்றத்தின் வராந்தையில் நடந்து வரும் நகஷிமா தனது பிள்ளைகள் மனைவி உள்ளிட்ட அத்தனை பேருக்கும் ஆளுக்கு ஒரு குளிர்பானம் வாங்கி வந்து தந்து அதை குடிக்கச் சொல்கிறார்,

தன்மீது வழக்கு தொடுத்திருந்தாலும் அவர்கள் தன்பிள்ளைகள், தனது மனைவி என்ற அவரது உள்ளார்ந்த அன்பின் நெகிழ்ச்சியாக அக்காட்சி உள்ளது,  அவர்கள் அதை தயக்கத்தோடு குடிக்கிறார்கள், தனது ஸ்டிராவைத் தூக்கி எறிந்துவிட்டு மனதிற்குள் உள்ள கோபத்தை தணித்துக் கொள்வது போல கடகடவென குளிர்பானத்தை குடித்துவிட்டு குடும்பத்தை கனிவோடு பார்க்கிறார் நகஷிமா, அந்த ஒரு காட்சியில்  அவர் குடும்பத்தை எந்த அளவு நேசிக்கிறார் என்பது அழகாக காட்சிப்படுத்தபட்டிருக்கிறது

இன்னொரு காட்சியில் ரயிலில் வரும் நகஷிமாவைச் சந்திக்கும் டாக்டர் ஹரடா அவரோடு மனம் விட்டுப் பேச விரும்புகிறார், ஆனால் நகஷிமா விலகி போகிறார், துரத்திப் போய் பேசிய போது, தனக்கு அநியாயம் வழங்கித் தன்னை மனநிம்மதியற்று நடுத்தெருவில் அலையவிட்டது அவர்களே என முகத்திற்கு நேராகவே குற்றம் சாட்டுகிறார், டாக்டர் ஹரடாவின் மனசாட்சி அதற்காக வருந்துகிறது, அவர் நகஷிமாவின் பயம் தனக்கும் இருப்பதை ஒத்துக் கொள்கிறார், அதன் பிறகு டாக்டர் ஹரடாவின் இயல்புலகம் உருமாற ஆரம்பிக்கிறது,

நகஷிமா குழந்தையை கையில் வைத்து உறக்க வைக்கும் வேறுஒரு காட்சியிருக்கிறது, அதில் ஒருவன் பேப்பரில் வெளியான அணுவீச்சு பற்றிய செய்தியை வாசித்து காட்டுகிறான், பிறந்த குழந்தையொன்று அணுஆயத வீச்சால் உடல் கருகி கரிக்கட்டை போலான தகவலும் அணுகுண்டிவீச்சில் பலியானவர்களின் எண்ணிக்கை பற்றியும் அக்கட்டுரையில் விரிவாக எழுதப்பட்டிருக்கிறது,

தன் கையில் உறங்கும் பிள்ளையை எதை நம்பி வாழ வைப்பது, யார் இருக்கிறார் அவனைக் காப்பாற்ற என்பது போல இறுக்கமாகப் பொத்தி வைத்துக் கொள்கிறார் நகஷிமா, தாய் குழந்தையை வாங்கிக் கொள்கிறாள், அவர் பதற்றத்தோடு அந்த நாளிதழை பிடுங்கி கிழித்துப் போட்டுவிட்டு சொல்கிறார்

ஆணுஆயுதவீச்சை பற்றி வாசிக்கும் எவராலும் பயமில்லாமல் வாழ முடியாது, அணுஆயுதங்கள் மனிதனின் தவறான கண்டுபிடிப்பு.

இதே மனநிலையின் மறுபக்கம் போல உறக்கமில்லாமல் டாக்டர் ஹரடா அணுஆயுத தாக்குதல் பற்றிய The Ash of Death, புத்தகத்தை வாசித்துவிட்டு தன் மகனிடம் சொல்கிறார்

ஹிரோஷிமா சம்பவத்திற்கு பிறகு பயமில்லாமல் ஜப்பானில் ஒருவரும் வாழவே முடியாது,

மகன் அதைகேட்டபடியே ஜன்னலை மூடுகிறான், தானும் எழுந்து போய் ஜன்னலை மூடி திரைச்சீலையைப் போடுகிறார், அவ்வளவு தான் தனிமனிதனால் செய்யமுடிந்தது, தான் ஒதுக்கி வாழ்வதை தவிர வேறு வழிகளே இல்லாமல் போய்விட்டது என்பதை அழுத்தமாகச் சொல்கிறார் குரசோவா

பிரேசிலில் உள்ள பண்ணை வீட்டினை வாங்க பணம் திரட்டும் போது இளம்மனைவி தான் சேமித்து வைத்த பணத்தை தரும் காட்சியில் நகஷிமாவிற்கும் அவருக்குமான உள்ளார்ந்த அன்பும் அக்கறையும் சிறப்பாக காட்சிபடுத்தபட்டிருக்கிறது,

அதிக கஷ்டப்பட்டும் போதுமான பணம் திரட்ட முடியவில்லை என்றதும் பிரேசிலின் நிலஉரிமையாளர் பணம் ரெடியானவுடன் நீங்களே ஒரு முறை பிரேசலுக்கு வந்து பண்ணையை பார்த்துவிட்டு, பிறகு வாங்கி கொள்ளுங்கள் என்று விமானத்தில் நாடு திரும்புகிறார், அவர் செல்லும் விமானத்தை ஒடுதளத்திற்கு வெளியே நின்றபடியே ஆசையோடு நகஷிமா பார்த்துக் கொண்டிருக்கும் காட்சி நம்மை நெகிழச்செய்கிறது

பண்ணை வீட்டை வாங்குவதற்காகச் சேர்த்த பணத்தை பிள்ளைகளிடம் திரும்பக் கொடுக்கிறார் நகஷிமா, அவரது பணம் இனி தங்களுக்குத் தேவையில்லை, கோர்ட் தலையிட்டு தானே உரியதைப் பெற்று தரும் என்று மூத்தமகன் சொல்லியதும் நகஷிமா தன்னை சொந்த குடும்பமே வெறுக்கிறதே என ஆவேசமாக பாய்ந்து அவனை அடிக்கிறார், மற்றவர்கள் தடுக்கிறார்கள், அவரது பயம், இயலாமை, கோபம், அத்தனையும் ஒன்று சேர்ந்து மயங்கி விழுகிறார்

வீட்டிலே சிகிட்சை அளிக்கபடுகிறது, இந்நிலையில் அவரது தொழிற்சாலை தீ வைக்கபடுகிறது, தொழிலாளர்களில் ஒருவன் அவரை மறித்து, முதலாளியான நீங்கள் மட்டும் பிரேசிலுக்குத் தப்பி போய் விட்டால் நாங்கள் என்னவாவது என்று கேட்கிறான்,

தனது சுயநலத்தை உணர்ந்த நகஷிமா தலையில் அடித்துக் கொண்டு மண்டியிட்டு தன்னை மன்னித்துவிடும்படியாக கெஞ்சுகிறார்,  தன்னோடு அவர்களையும் பிரேசில் அழைத்துப் போக விரும்புவதாகச் சொல்கிறார்

தீவிபத்திற்கு அவரே காரணம் எனச் சிறையில் அடைக்கபடும் நகஷிமாவிடம் ஒரு கைதி பேசாமல் நீங்கள் வேறு கிரகத்திற்கு தப்பி போய்  பயமில்லாமல் வாழலாமே என்று கேலி செய்கிறான், அவரிடம் சலனமேயிருப்பதில்லை, அது ஒன்று தான் இனி சாத்தியம் என்பது போல அவரது முகம் இறுகிப் போயிருக்கிறது

உலகில் எங்கு ஒடி ஒளிந்தாலும் அணுஆயுத்திடம் இருந்து தப்பிப்போக முடியாது என்று இன்னொரு காட்சியில் நகஷிமாவின் மருமகன் கத்துகிறான்,

இனி என்ன செய்வது என்று தெரியாத தடுமாற்றத்துடன் நிலைகுலைந்து போகிறார் நகஷிமா

முடிவில் அவருக்கு மனநிலை சரியாக இல்லை என்று சொல்லி மனநலக் காப்பகம் ஒன்றில் சேர்க்கப்படுகிறார், அவரைப் பார்வையிட வந்த டாக்டர் ஹரடா படியில் கிழே இறங்கிப் போகையில் முதுகில் குழந்தையைச் சுமந்தபடியே அவரது மகள் அப்பாவைக் காண்பதற்காக அவரது அறையை நோக்கி போய்க் கொண்டிருக்கிறாள்,

ஒரே பிரேமில் டாக்டர் படியில் கிழே இறங்கிப்போவதும் மகள் மேலே ஏறி வருவதும் அற்புதமாகப் படமாக்கபட்டிருக்கிறது,

மனநலகாப்பகத்திற்கு வெளிய உள்ள உலகம், அதன் அதிகாரம் யாவும் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்கிறது, அதன்காரணமாக தனிமனிதரான நகஷிமா பாதிக்கபட்டு தனிமையில் முடங்கிக் கிடக்கிறார், இதில் யார் உண்மையான பைத்தியம் என்ற கேள்வியுடன், மகளின் வழியே நகஷிமா ஒருவேளை ஆறுதல் அடையக்கூடும் என்ற சிறு நம்பிக்கையை மட்டுமே மிச்சம் வைத்து  படத்தை அகிரா குரசோவா நிறைவு செய்கிறார்

••

ஒரே வேளையில் மூன்று கேமிராக்களைப் பயன்படுத்திப் படமாக்கி உள்ளதால்  நடிப்பவர்கள் யதார்த்த உலகிற்குள் நடமாடுவது போல இயல்பாக இருக்கிறார்கள் யாரும் கேமிராவை முதன்படுத்துவதேயில்லை, அது போலவே மனக்கொந்தளிப்பை  வெளிப்படுத்தும் மாறுபட்ட கோணங்கள், அண்மைகாட்சிகள் சிறப்பாக படமாக்கபட்டிருக்கின்றன, நகஷிமாவின் வாழ்வை நாம் எட்டிப்பார்ப்பது போன்ற நம்பகத்தன்மையே படத்தின் ஆதார பலம்

படமெங்கும் பின்புலத்தில் ஒரு சைரன் ஒலி கேட்டபடியே இருக்கிறது, அது எதன் எச்சரிக்கை என்று துல்லியமாகத் தெரியாத போதும், அந்த ஒலி அவர்களின் சிதைவுற்ற மனநிலையின் வெளிப்பாடு போலவே உணர முடிகிறது,

இன்னொரு காட்சியில் போர்விமானம் சீறிட்டு கிளம்பி போவது போன்ற ஒசை வீட்டின் அருகாமையில் கேட்டுக் கொண்டேயிருக்கிறது,  இயல்பான வாழ்வு சிதைந்து போய் புறநெருக்கடிகளுக்குள் சிக்கிக் கொண்டு வாழ்கிறார்கள் என்பதை அடிக்கோடிட்டு காட்டுவது போலவே அக்காட்சி உள்ளது

இந்தப் படத்தை பார்த்தபோது நினைவூட்டிய இன்னொரு படம் ஜான் ஆபிரகாம் இயக்கிய செரியச்சண்டே குருரகிருதயங்கள், அதில் போலீஸிற்கு பயந்து கொண்டு தென்னைமரத்தில் ஏறிக் கொண்டு இறங்காமல் பயந்து சாகும் செரியச்சன் கதாபாத்திரம் நகஷிமாவோடு ஒப்பிடக்கூடியது, இருவரும் பயத்தால் தீவிரமாகப் பீடிக்கபட்டிருக்கிறார்கள், அவர்கள் பயத்தை மற்றவர்கள் புரிந்து கொள்ளாமல் கேலி செய்கிறார்கள், இருவரது பயமும் அதிகாரத்தால் ஏற்படுத்த பட்டது,

நகஷிமாவின் கதாபாத்திரம் பலவிதஙகளில் ஷேக்ஸ்பியரின் கிங் லியரை நினைவுபடுத்துகிறது, லியர் அரசனும் உள்ளுறப் பயப்படவே செய்கிறான், அதிலிருந்தே தன்னை யார்  அதிகம் நேசிக்கிறார்கள் என்று கேட்கிறான், அவனது பயம் எதிர்காலம் குறித்தது, அவனும் குடும்பத்தால் புறக்கணிக்கபடுகிறான், கோமாளி ஒருவனே அவனுக்கு இறுதிவரை துணையாக இருக்கிறான், அந்த நிலை தான் நகஷிமாவிற்கும் ஏற்படுகிறது.

அழுத்தமான சமூகப்பிரச்சனையை பேசும் இப்படம் நான்கு தளங்களில் செயல்படுகிறது,

தனிமனிதனைச் சமூகப்பிரச்சனைகள் எந்த அளவு பாதிக்கின்றன, மென்னுணர்வு கொண்ட மனிதர்கள் பிரச்சனைகளால் உளப்பாதிப்பு அடையும் போது அரசும் அதிகாரமும் அதற்கு என்ன பதில் சொல்லப்போகிறது, இது போன்ற சமூகப்பிரச்சனைகளுக்கு என்ன தான் முடிவான தீர்வு என்ற கேள்வியை எழுப்புகிறது ஒரு தளம்,

ஏன் குடும்பப் பிரச்சனைகள் தங்களுக்குள் தீர்த்துக் கொள்ள முடியாமல் போகிறது, சொந்தபிள்ளைகள் அப்பாவிற்கு எதிராக வழக்காடுவதும், கணவன் மனைவி எதிர்நிலை கொள்வதும், நீதிமன்ற நடவடிக்கைகளில் திருப்தியடையாமல் தொடர்ந்து மேல்முறையீடுசெய்து கொண்டே போவதும் எதனால் ஏற்படுகிறது, உண்மையில் நாம் பணத்தை மட்டும் தான் நேசிக்கிறோமா என ஆராய்கிறது மறுதளம்,

ஒவ்வொரு மனிதனும் தானும் தன் குடும்பமும் மட்டும் பிரச்சனையில் இருந்து தப்பிப் போனால் போதும் என்று சுயநலமாக யோசிப்பது சரிதானா, சமூக கடமைகளை மறந்து போய்விட்ட வாழ்க்கை அர்த்தமற்றதில்லையா என்ற கேள்வி எழுப்புகிறது மூன்றாவது தளம்

ஒன்றை ஆழமாக மனதில் உள்வாங்கிக் கொள்வதன் பெயர் பைத்தியக்காரத்தனமா, என்றால் அந்தப் பைத்தியக்காரத்தனம் யாருக்குத் தானில்லை, பின்பு ஏன் சிலரை மட்டும் மனநலமற்றவர் என்று குடும்பமும் சமூகமும் ஒதுக்கித் தனிமைப்படுத்துகிறது, சமூகம் மேற்கொள்ளும் பைத்தியக்காரத்தனங்களை விட தனிநபரின் செயல்பாடுகள் பெரியதா என்ன, அதை ஏன் ஒருவரும் சுட்டிக்காட்டுவதில்லை, என்று நான்காவது தளம் கேட்கிறது

இந்த நான்கு தளங்களுக்குள் அகிரா குரசேவா தனது படத்தை விவாதிக்கிறார் . சில வேளைகளில் நாம் ஒரு டாகுமெண்டரி படத்தைப் பார்ப்பது போலவே இருக்கிறது, ஒருவேளை அவரது நோக்கமே அதுவாகத் தானிருக்ககூடும், உண்மையை எந்த சாயமும் பூசாமல் நாம் கண்டுகொண்டிருக்கிறோம் என்று பார்வையாளர்களை உணர வைக்க விரும்பி இந்தப் பாணியை கையாண்டிருக்க கூடும்

இப்படத்திலும் மனிதனின் சுயநலமே அவனது சகல பிரச்சனைகளுக்கும் மூலகாரணம் என்ற குரசேவாவின் தொடர்ச்சியான எண்ணம் வெளிப்படுகிறது

செவன் சாமுராயில் வெளிப்படையாகத் தென்படும் கொள்ளைகாரர்கள் மக்களை வாழ விடாமல் பயமுறுத்துகிறார்கள், ஆனால் இதிலோ அணுஆயுதம் என்ற அரூபம் அந்தப் பயத்தை உருவாக்குகிறது, இரண்டிலும் மீட்சி அடைவது எப்படி என்ற கேள்வியே முதன்மையாக  உள்ளது,

செவன் சாமுராயில் பயத்திலிருந்து மீள்வதற்கு எதிர்த்துப் போராடுவது என்ற வழியை மக்கள் தேர்வு செய்கிறார்கள், அதற்காக தொழில்முறை சாமுராய்கள் அழைத்து வரப்படுகிறார்கள், பெரும் போராட்டத்தின் முடிவில் உயிர்பலி தந்து கிராமம் மீட்கப்படுகிறது, மீண்டும் ஒரு இயல்பான வாழ்க்கை துவங்குகிறது

இதிலோ நகஷிமாவின் இயல்பான வாழ்க்கை அழிக்கபட்டு படத்தின் முடிவில் மனநலக் காப்பகத்தில் சேர்க்கபடுகிறார், அணுஆயுதம் பற்றிய பயம் மனிதர்களை நிச்சயம் மனநோயாளி ஆக்கிவிடும் , அதற்கு மாற்று வழி அணுஆயுதங்களை முற்றிலும் கைவிடுவது மட்டுமே, ஆனால் அதற்கு எந்த நாடும் தயாராகயில்லை,

அணுஆயுதங்களின் பாதிப்பு மனித உயிர்களோடு விளையாடுவது என்று அறியாமல் அரசியல் காரணங்களுக்கான பகடையாகப் பயன்படுத்தபடுகிறது, அது வெறும் அரசியல் பிரச்சனையில்லை, தன் எதிர்காலம் குறித்துச் சிந்திக்கும் ஒவ்வொரு தனிநபரும் கவலைப்பட வேண்டிய முக்கியப் பிரச்சனை என்று குரசேவா சுட்டிக்காட்டுகிறார்

படம் முழுவதும் மிபுனேயின் நடிப்பு ஒளிர்கிறது, தன் வயதை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ள வயதான கதாபாத்திரத்திற்காக நடைஉடையை, முகபாவங்களை, குரலை, உணர்ச்சிவெளிப்பாட்டின் தீவிரங்களை முற்றிலும் உருமாற்றிக் கொண்ட  மிபுனே உலகின் சிறந்த நடிகர் என்பதை உறுதிசெய்கிறார்.

தீவிரமான சமூகசிந்தனை கொண்ட இப்படம் மிகப்பெரிய தோல்வி அடைந்தது, ஜப்பானிய மக்கள் குரசேவாவிடமிருந்து இது போன்ற ஒரு படத்தை எதிர்பார்க்கவில்லை என்று ஒதுக்கினார்கள்,

உலகம் முழுவதுமே நல்ல படத்தை எடுப்பதும் அதற்கான அங்கீகாரத்தைப் பெறுவதும் எளிதானதில்லை போலும், அகிரா குரசேவா இதனால் பெரிய ஏமாற்றம் அடைந்தார், ஆனால் பெர்லின் திரைப்படவிழாவில் இப்படம் திரையிடப்பட்ட போது மிகுந்த வரவேற்பு கிடைத்ததுடன் மிகச்சிறந்த படம் என்ற அங்கீகாரமும் உருவானது

செவன் சாமுராய் போலவே இதிலும் நீண்ட காட்சிகளாக குரசேவா படமாக்கியிருக்கிறார், நீதிமன்றக் காட்சியில் மூன்று நடுவர்களும் பேசிக் கொள்ளும்போது ஏற்படும் காட்சிக்கோணங்களின் மாறுதலும் அவர்களின் விவாதமும், நகஷிமாவோடு யாவரும் பிரேசிலுக்கு போவதற்குச் சம்மதியுங்கள் என்று குடும்பத்திடம் அவரது மனைவி மன்றாடும் காட்சியும், தொழிலாளர்கள் முன்பாக மண்டியிட்டு தனது தவற்றை உணரும் நகஷிமாவின் இயலாமையும், நோயுற்ற அப்பாவைக் காணமுடியாமல் வெளியே காத்திருக்கும் இரண்டாம் தாரத்தின் மகனுடைய தவிப்பும், என நெகிழவைக்கும் காட்சிகள் பார்வையாளனை உலுக்கிவிடுகின்றன.

படத்தில் வரும் ஆண்கள் யாவரும் உணர்ச்சிவசப்படுகிறார்கள், பெண்கள் தங்களின் இயல்பான எண்ணங்களைக் கூட வெளிப்படுத்த முடியாமல் ஒடுங்கிப் போயிருக்கிறார்கள், அது ஜப்பானிய சமூகத்தில் மட்டுமில்லை உலகம் முழுவதும் ஒன்று போலதானிருக்கிறது போலும்,

வசிப்பிடத்திலிருந்து வெளியேறிப்போகும் வலியும் வேதனையும் மற்றவர்களை விட எனக்குத் தான் அதிகம், ஆனால் நானே பிறந்துவளர்ந்து தொழில் செய்த டோக்கியோவை விட்டு வெளியேறிப் போக விரும்புகிறேன், காரணம் உயிர்வாழ்வது முக்கியமானது, அதற்காக சொந்த ஊரை விட்டுப் போவதை தவிர்க்கமுடியவில்லை என்று நகஷிமா கூறுவது ஜப்பானிற்கு மட்டும் பொருந்தக்கூடிய ஒன்றில்லை,

படம் முழுவதும் ஊடாடும் மிதமிஞ்சிய வெக்கையும் காற்றோடமில்லாத புழுக்கமும் காலத்தின் குறியீடு போலவே இருக்கிறது, உறவுகள் பொய்த்துப் போன காலத்தில் நாம் வாழ்கிறோம், பணமே குடும்ப உறவுகளை ஒன்றிணைத்து வைத்திருக்கிறது, பணத்தை அடைவதற்காக பிள்ளைகள் தகப்பனுக்கு எதிராக நடந்து கொள்வதும், அறம் வீழ்ச்சியுற்ற சமூகச்சூழலில் பைத்தியமாக இருப்பதே பாதுகாப்பானது போலும் என உணர வைப்பதும் படத்தின் உச்சநிலை

நகஷிமா தனிநபரல்ல, அவர் நம் காலத்தின் குறியீடு, அவருக்குள் உருவான பயத்தைப் போல, வன்முறை குறித்தும், இனம், மொழி, மதம், சாதி சார்ந்த அடையாளங்களால் உருவான பேதங்கள் குறித்து நமக்குள்ளும் பயம் வேரூன்றி இருக்கிறது, அந்த பயம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டேயிருக்கிறது, இதிலிருந்து விடுபவது தனிநபர் மேற்கொள்ளும் முயற்சிமட்டுமில்லை, சமூகமே இதற்கான மாற்றை உருவாக்க வேண்டியிருக்கிறது, அதுவரை நகஷிமா போல ஒரு மனிதன் பயத்தில் நத்தை போல தனக்குள்ளாக சுருண்டு கொண்டுதானிருப்பான், அவனை சமூகம் கேலி செய்து கொண்டுதானிருக்கும்.

**

0Shares
0