புதிய சிறுகதை. நவம்பர் 6. 2025
திவான் பூந்தானம் அந்தக் கடிதத்தைத் திரும்பவும் படித்துப் பார்த்தார். கொச்சியிருந்து ரெசிடெண்ட் வில்லியம் டக்ள்ஸ் அதனை அனுப்பியிருந்தார்.
அதில் இந்தியாவின் பேரரசியும் இங்கிலாந்தின் மகாராணியுமான விக்டோரியா கால்மூட்டு வீக்கத்தால் அதிகம் வலியை அனுபவித்து வருவதாகவும் அதற்கு வைத்தியம் செய்வதற்காக நெல்லியடி ஆசான் மாடப்பனை உடனே லண்டன் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கூடவே. தேவையான பச்சிலைகள் மற்றும் உதவியாளர்களை அனுப்ப வேண்டும். அவசரக் காரியம். என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

நெல்லியடி எங்கேயிருக்கிறது என்று திவானுக்குத் தெரியவில்லை. அவர் கடிதம் கொண்டுவந்தவனை அனுப்பிவிட்டுத் தங்கள் குடும்ப வைத்தியர் ராமேந்திரனை கையோடு அழைத்துக் கொண்டுவரும்படி பணிக்கரை அனுப்பி வைத்தார்.
இங்கிலாந்து அரண்மனையில் இல்லாத வைத்தியர்களா, வெள்ளைக்காரனுக்குத் தெரியாத வைத்தியமா, எதற்காக இங்கேயிருந்து ஒரு வைத்தியனை அழைக்கிறார்கள். அதுவும் நெல்லியடி ஆசானை. எனத் திவானுக்கு யோசனையாக இருந்தது.
அதே நேரம் மேல்மலை மருத்துவத்தின் புகழ் இங்கிலாந்து வரை போயிருக்கிறதே என்று மகிழ்ச்சியாகவும் இருந்தது.
திவானாக இருந்தும் இதுவரை அவரே லண்டன் போனதில்லை. ஆனால் எங்கோ மலையில் வாழும் ஒரு வைத்தியனுக்கு அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது என்று அவரது மனதிற்குள் பொறாமையும் எழுந்தது.
வைத்தியர் ராமேந்திரன் தோற்றத்தில் துறவியைப் போலிருந்தார். சாய வேஷ்டி, ஈரிழைத் துண்டு, படிய வாறிய தலை. ஐம்பது வயதிருக்கும். அதற்குள் தலை முற்றிலும் நரைத்துவிட்டிருந்தது. ஆள் மெலிந்து ஒடுங்கியிருந்தார். காதில் தங்க கடுக்கன். இடதுகாதின் நுனி பிளவுபட்டிருந்தது. இரண்டு கைகளையும் கூப்பி வணங்கிய வைத்தியர் ராமேந்திரன் சந்தன இலையில் வைத்து எதையோ நீட்டினார். அது தேன்மாவு. அதை எப்படிச் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அதன் தித்திப்பு நிகரில்லாதது. அதுவும் ஒரு மருந்துப் பொருள் தான். பெரியவர்களைப் பார்க்கச் செல்லும் போது அந்தத் தேன்மாவை தருவது வழக்கம். திவான் தேன்மாவை வழித்து வாயிலிட்டுக் கொண்டார். இனிப்பு நாவிலிருந்து இறங்கி தொண்டைக்குள் கரைந்தது. நாக்கு அந்தத் தித்திப்பிற்கு ஏங்கியது போலச் சப்புக் கொட்டியது
“நெல்லியடி எங்கே இருக்கிறது“ என்று கேட்டார் பூந்தானம்
“மேல்மலையில. காவுக்கரைக்குப் பக்கத்தில்“ என்றார் ராமேந்திரன்
அந்த இடத்தில் காட்டுக்கோவில் ஒன்று இருந்தது. ஆண்டிற்கு ஒரு முறை மன்னர் அங்கே சென்று வழிபடுவது வழக்கம். என்பதைத் திவான் அறிந்திருந்தார்.
“அங்கே மாடப்பன்னு ஒரு வைத்தியன் உண்டா“ என்று கேட்டார் பூந்தானம்
“நெல்லியடி ஆசானா“ என்று கேட்டார் ராமேந்திரன்
“ஆமாம்“ எனத் தலையசைத்தபடியே “அந்த ஆளை தெரியுமா“ எனக்கேட்டார்
“முறிவு வைத்தியத்தில் அவரை மிஞ்சின ஆள் இல்லை. தளியல் அரண்மனைக்கு அவரு தான் வைத்தியர்“.
“அந்த ஆளை உடனே கூட்டிகிட்டு வரணும். அரசாங்க உத்தரவு. சாம்பனை அழைச்சிட்டு உடனே புறப்படுங்க“
“எஜமான் மன்னிக்கனும். நான் இப்போ பத்திய காலத்தில இருக்கேன். என் மூத்தமகன் பத்மநாபனை அனுப்பி வைக்குறேன். பல்லக்குக் கொண்டு போகணுமா. “
“வேண்டியதில்லை. அந்த ஆள் வைத்தியன் தானே. மட்டக்குதிரை ஒண்ணு கொண்டு போய் அதுல கூட்டிவந்தா போதும். நாலு தீவட்டிகள் கூடப் போகட்டும். ராத்திரியானாலும் நடத்திக் கூட்டிவந்துருங்க“
“ஆகட்டும். ஆனா மாடப்பன் ஒரு காட்டுயானை. அதைக் காட்டை விட்டு வெளியே கொண்டுவர முடியாது. நாம உத்தரவு போட்டா உடனே வந்திர மாட்டார்“
“காட்டுயானையைக் கூப்பிடுறது இங்கிலாந்து மகாராணி. எவ்வளவு பெரிய கொம்பனா இருந்தாலும் போய்த் தான் ஆகணும். அந்த ஆளுக்குப் படிப்பு உண்டா. லிகிதம் படிப்பானா. “
“நான் ஆளை நேர்ல கண்டதில்லை. ஏடு அறியாத ஆசான் உண்டா “ எனக் கேட்டார் ராமேந்திரன்.
“இந்த உத்தரவை காட்டி அழைச்சிட்டு வரணும். வெள்ளிக்கிழமை காலைக்குள்ளே அவன் இங்கே நிக்கணும்“
வைத்தியர் ராமேந்திரன் தலையை ஆட்டிக் கொண்டார். நெல்லியடி ஆசானின் புகழ் சீமை வரை எப்படிச் சென்றது என்ற குழப்பத்துடன் தனது வீடு நோக்கி நடந்தார். இங்கிலாந்து மகாராணிக்கு வைத்தியம் செய்தால் தங்க காசுகளாகப் பெறலாம். அதில் நாமும் ஒரு மாளிகை கட்டிக் கொண்டு சுகமாக வாழலாம் என்ற எண்ணம் அவரது மனதில் தோன்றி மறைந்தது. அதிர்ஷ்டம் யாரைத் தேடி எப்போது வரும் என யாருக்குத் தெரியும் எனத் தனக்குள் முணுமுணுத்தபடியே அவர் வீட்டை அடைந்தார்.
••
பத்மநாபன் தலைமையில் அவர்கள் ஆறு பேர் மேல்மலையை நோக்கிப் புறப்பட்டார்கள். இரண்டு நாள் பயணத்தின் பிறகு அவர்கள் கொட்டுப்பாறைக்கு வந்திருந்தார்கள். அங்கிருந்துதான் அடர்ந்த காடு துவங்குகிறது. பருத்து உயர்ந்த மரங்கள். விசித்திரமான ஒலிகள். தரையிறங்க முடியாமல் தடுமாறும் வெயில். மந்திகளின் தாவல்.. காட்டினுள் செல்ல இரண்டு பாதைகள் தெரிந்தன. அவர்களை வழிநடத்தி கூட்டிவந்த மூப்பன் சொன்னான்
“வடக்குப் பாதை மனுசங்களுக்கு. தெற்குப் பாதை தெய்வங்களுக்கு. அதுல மனுசன் நடக்கக் கூடாது“
“தெய்வம் நடந்து வருமா “என்று கேட்டான் கொச்சன்
“மனுஷ காரியங்கள் எல்லாத்தையும் தெய்வங்களும் செய்யும். தெய்வங்களுக்கும் பசி உண்டு. போகம் உண்டு. சாவு மாத்திரம் கிடையாது “என்றான் மூப்பன்.
அவர்கள் மனிதர்கள் நடப்பதற்காக உருவாக்கபட்ட வடக்குப் பாதையில் நடந்தார்கள். நெடிதுயர்ந்த மரங்கள். ஈரக்காற்றில் இலைகளின் சலசலப்பு. காட்டுக்கோழிகளின் அவசர ஒட்டம். திறந்த வாயைப் போலிருந்த பாறைகள். அவர்கள் நெல்லியடியை நோக்கி மெதுவாக, மூச்சிரைக்க நடந்தார்கள். ஆறு பேர்களில் ஒருவன் நடக்கும் போதே கண்ணில் பட்ட இலைகளைப் பறித்து எறிந்தபடியே வந்தான். இன்னொருவன் யானையைப் பற்றிய பயத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தபடியே நடந்தான்.
அவர்கள் நெல்லியடிக்கு வந்த போது மதியமாகியிருந்தது. அங்கே வெயில் தெரியவில்லை. மழைக்குப் பிந்திய வானமூட்டம் போன்ற வானிலை. உயரமான இரண்டு மூங்கில் கொட்டகைகள் தென்பட்டன. அது தான் நெல்லியடி ஆசானின் வைத்தியசாலை. தைலம் காய்ச்சும் வாசனை காற்றில் மிதந்து வந்தது.

கொழுந்துவிட்டெரியும் நெருப்பின் முன்னால் நெல்லியடி ஆசான் நின்றிருந்தார். ராவு என்ற பணியாள் பெரிய கொப்பரை ஒன்றில் தைலம் காய்ச்சி கொண்டிருந்தான். ஆசான் ஆறரை அடிக்கும் மேலான உயரம். அடர்ந்த தாடி. பெரிய புருவங்கள். உறுதியான உடற்கட்டு. கையில் வெண்கல காப்பு. மடித்துச் சொருகிய வேஷ்டியிலும் எண்ணெய் பிசுக்கேறியிருந்தது. கொதித்துக் கொண்டிருந்த தைலமணத்தை நுகர்ந்தபடியே அடுப்பின் முன்னால் நின்றிருந்தார். தன்னைத் தேடி வந்திருந்தவர்களை அவர் கண்டுகொள்ளவேயில்லை.
பத்மநாபன் தான் கொண்டு வந்திருந்த கடிதத்தை அவர் முன்னே நீட்டினான். அவனையே படித்துக் காட்டச் சொன்னார். அவன் படிப்பதை ஆசான் காது கொடுத்துக் கேட்டது போலவே தெரியவில்லை
“திவான் உத்தரவு. ஆசான் உடனே கிளம்பணும்“ என்றான் மூப்பன்..
“தைலம் காய்ச்சி முடிக்க ஏழு நாள் ஆகும். அதுவரைக்கும் எங்கேயும் வர முடியாது. புறப்படுங்க“
“இங்கிலாந்து மகாராணி கூப்பிடுறாங்க. ராஜாங்க உத்தரவு“ என்றான் பத்மநாபன்
“ மகாராணின்னா என்ன தங்கத்துல உடம்பு செஞ்சிருக்கா, நோயாளி தான் என்னைத் தேடி வரணும். நான் எந்த நோயாளியும் தேடிப் போக மாட்டேன்“. என்றார் ஆசான்
“ மகாராணிக்கு வைத்தியம் செய்தா சொர்ண காசுகள் கொட்டும்“ என்றான் பத்மநாபன்
“ தங்கத்தை நாய்பீயா நினைக்கிறவன் நானும். அது எனக்கு வேண்டியதில்லை.. “
“உங்களைக் கையோட அழைச்சிட்டு போகாட்டி திவான் எங்களை அடிச்சே கொன்னுடுவார்“ என்றான் ஒரு பணியாள்
“வர முடியாதுனு திவான்கிட்ட சொல்லிடுங்க. நீங்க கிளம்பலாம்“
இதற்கு மேல் அவரைப் பேசி அவரைச் சமாதானம் செய்ய முடியாது. அவர்கள் ஏமாற்றத்துடன் புறப்படத் தயரான போது ஆசான் சொன்னார்
“கொச்சு.. இவங்களுக்குக் கஞ்சி கொடுத்து அனுப்பி வை“
அவர்கள் பசியாறிவிட்டு தான் கிளம்பினார்கள். ஆனால் இப்படி மகாராணியின் உத்தரவை ஒரு முறிவு வைத்தியர் மறுப்பதைத் திவானால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த மறுப்பை அவர் ரெசிடெண்ட்டிற்குக் கடிதம் எழுதி தெரிவித்தால் அவரது பதவி போய்விடும் என்ற பயமிருந்தது.
தானே நேரில் போய் நெல்லியடி ஆசானை அழைத்து வருவதாக முடிவு செய்தார். அவர் புறப்படும் நாளில் துணைக்கு மூன்று பல்லக்குகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இருபது காவல்வீர்ர்கள் சகிதமாகத் திவான் மேல்மலைக்குப் புறப்பட்டார். அப்போது திவானின் அம்மா தனக்கு ஆசானிடம் கேட்டு மருந்து வாங்கி வரும்படி சொன்னார். நேரம் காலம் தெரியாமல் அம்மா இப்படிக் கேட்பது அவருக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. என்றாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் தலையாட்டினார்.
அவர்கள் பயணம் துவங்கிய இரண்டாம் நாள் மழை ஆரம்பமானது. அது போன்று வேகமான, ஆவேசமாகக் காற்றுடன் சேர்ந்து அடித்த மழையை அவர்கள் கண்டதில்லை. வழியில் இருந்த திங்களூரில் தங்கினார்கள். மூன்று பகலிரவுகள் மழை நீடித்தது. நான்காம் நாளின் காலையில் வெயிலைக் கண்ட போது திவான் உடனே புறப்படும் படியாகச் சொன்னார்
அவர்கள் நெல்லியடிக்குச் சென்றபோது ஆசான் மூலிகை சேகரிக்க மறிகுத்தான் பாறைக்குப் போய்விட்டதாகச் சொன்னார்கள். அங்கே வெளியாட்கள் போகமுடியாது. ஆகவே அவர் திரும்பி வரும்வரை திவான் நெல்லியடியிலே காத்திருந்தார்.
சுகமான காற்றும், சுவையான சாப்பாடும். பச்சிலை சாறுகளும் அவரது கோபத்தைத் தணித்திருந்தன. ஒன்பது நாட்கள் அவர்கள் காத்திருந்தார்கள். பத்தாம் நாள் காலையில் நெல்லியடி ஆசான் வந்திருந்தார். அவரது முகத்தில் இருந்த பொலிவு கைகூப்பி வணங்கும்படியாக இருந்தது.
திவான் முன்னால் ஒரு இலையில் கருநெல்லிக்கனி ஒன்றை வைத்து நீட்டியபடியே ஆசான் சொன்னார்
“இது உங்க அம்மைக்கு.. தாரமங்களம் குடும்பத்து லட்சுமியம்மா தானே உங்கம்மை. இதைச் சாப்பிட்டா அவங்க நோவு சரியாகிடும்“
தான் கேட்பதற்கு முன்பாக எப்படி அவருக்கு மனதில் இருந்த விஷயம் தெரிய வந்தது எனப் புரியாமல் திவான் திகைத்துப் போனார்.
திவான் கேட்பதற்கு முன்பாகவே நெல்லியடி ஆசான் சொன்னார்
“எம்மான் வந்த காரியம் அறிவேன். என்னை மன்னிக்கணும்.. எங்க வம்சத்துல யாரும் கடல்கடந்து போனதில்லை. போகவும் கூடாது. இந்த மலையை விட்டு நாங்க கீழே வர முடியாது. வரக்கூடாது. “
“மகாராணியோட உத்தரவு. அதை மறுக்க முடியாது மாடப்பா. “ என்று உறுதியான குரலில் சொன்னார்.
“காட்டானை மண்டி போடாது எம்மான். “ என்று உறுதியான குரலில் சொன்னார் நெல்லியடி ஆசான்.
“அரசாங்க உத்தரவை மீறினா.. கைது பண்ணி கூட்டிட்டு போக வேண்டியிருக்கும்“
“ஆனைகளுக்குப் பறக்கத் தெரியும். ஆனா அது பறக்குறதை விரும்புறதில்லை எம்மானே“
“முதலையா இருந்தாலும் சிலவேளை கரைக்கு வந்து தான் ஆகணும் மாடப்பா. நிலத்துல முதலையைப் பிடிச்சி வாயை கட்டிரலாம். “
“வைத்தியன் மனசு வைக்காமல் மருந்து வேலை செய்யாது எம்மான்“ என்றார் ஆசான்
“அதை பற்றி எனக்குத் தெரியாது. உன்ன கப்பல்ல ஏற்றி அனுப்பி வைக்க வேண்டியது தான் என்னோட பொறுப்பு. வேண்டிய மூலிகையை எடுத்துட்டுக் கிளம்பு “
“ இடும்பு உடைஞ்சி ஒரு தச்சன் என்னை நம்பி வைத்தியசாலைல கிடக்கான். அவனைச் சொஸ்தமாக்கணும். “
“மாகாராணியை விட அவன் ஒண்ணும் பெரிய ஆள் இல்லை மாடப்பா. கொசுவும் ஆனையும் ஒண்ணாகிராது. “
“கொசுவுக்கும் ஆனைக்கும் ஒரு உசிரு தான் எம்மானே.. மாகாராணியா இருந்தாலும், இடும்பு உடைஞ்ச தச்சனா இருந்தாலும் ஒரு உசிரு தானே “
“எதிர்வாதம் பேசாதே மாடப்பா. உன்னை எப்படிக் கொண்டு போறதுனு எனக்குத் தெரியும்“
“எம்மானே நான் நினைச்சா. இப்பவே உங்க வாயைக் கட்ட முடியும். உங்க படையோட காலை கட்ட முடியும்“
“இந்த மந்திர தந்திரம் எல்லாம் என்கிட்ட நடக்காது மாடப்பா“
“மந்திரம் இல்ல எம்மானே. வைத்தியம். சூட்சுமம். “
“அதையும் பாத்துடுவோம்“ என அவர் தனது படைவீர்ர்களிடம் நெல்லியடி ஆசானின் கையும் காலையும் கட்டி காட்டுப்பன்றியை கொண்டு போவது போலக் கீழே கொண்டு போகும்படி உத்தரவிட்டார்
நெல்லியடி ஆசான் தரையில் கிடந்த கோழி இறகு ஒன்றை கையில் எடுத்து வேகமாக ஊதினார். அந்த இறகு திவானின் கழுத்தில் பட்டு அவரது கண்கள் நிலைகுத்திப்போயின. அவரால் பேச முடியவில்லை. அடுப்பு எரிக்கப் போட்டிருந்த சுள்ளி ஒன்றை எடுத்து அவர் படைவீர்ர்களின் காலில் அடித்தார் அவர்கள் வாழை மரம் வெட்டப்பட்டு விழுவது போலத் தரையில் விழுந்தார்கள். அதே சுள்ளியை கொண்டு திவானின் இடுப்பில் ஒரு அடி அடித்தார்.
திவானும் அவரது ஆட்களும் அதே இடத்தில் நகர முடியாமல் கிடந்தார்கள் பல்லக்குத் தூக்குகள் மட்டும் மலையை விட்டு கிழே இறங்கிப் போனார்கள். நெல்லியடி ஆசான் திவானையும் அவரது ஆட்களையும் தூக்கி தனது வைத்தியசாலையின் மேற்கு பகுதியில் போடும்படி சொல்லிவிட்டு தச்சனுக்கான மருந்தை தயார் செய்ய ஆரம்பித்தார்
மேற்கு கொட்டகையில் கிடத்தப்பட்ட திவான் மற்றும் ஆட்கள் தன்னுணர்வின்றி இருந்தார்கள். அவர்களுக்கு இரண்டு வேளை கஞ்சியை வாயில் புகட்டினார்கள். இருவேளை அவர்கள் தலையில் ஏதோவொரு எண்ணெய் தேய்த்தார்கள். எவராலும் பேசவோ, நடக்கவோ முடியவில்லை
பல்லக்குத் தூக்கிகள் திவான் மாளிகைக்குச் சென்று சொன்ன செய்தியால் அவரது குடும்பமே பயந்து போனது.. திவானின் மைத்துனர் கோபாலன் உடனடியான பிரிட்டீஷ் ரெசிடென்டைக் காணுவதற்காகக் கொச்சிக்குப் பயணம் மேற்கொண்டார்.
மூன்று நாட்களுக்குப் பின்பு ரெசிடெண்ட் வில்லியம் டக்ளஸை நேரில் கண்டு நடந்த விஷயங்களைச் சொன்ன போது அவரால் நம்ப முடியவில்லை.
“திவான் இப்போதும் மேல்மலையில் தானிருக்கிறாரா“
“அவரது வாயை கட்டிவிட்டார்களாம். ஒரு அடி எழுந்து நடக்க முடியவில்லை என்கிறார்கள் “ என்று வருத்தமான குரலில் சொன்னார் கோபாலன்
இங்கிலாந்து மகாராணி அழைத்து ஒரு வைத்தியன் போக மறுக்கிறான். அழைக்கப் போனவர்களின் கைகால்களை முடக்கிவிட்டிருக்கிறான் என்பது டக்ளஸை கோபம் கொள்ளச் செய்தது
18வது ரெஜிமெண்டை அனுப்பி அந்த வைத்தியனை கைது செய்து இழுத்து வரும்படியாக உத்தரவு பிறப்பித்தார்.
நூறு துப்பாக்கி வீரர்கள் குதிரையில் மேல்மலையை நோக்கிப் புறப்பட்டார்கள். ஆண்டர்சன் அவர்களுக்குத் தலைமை தாங்கினான். நெல்லியடி ஆசானைப் பிடிக்கச் செல்லும் படைப்பிரிவை கிராமவாசிகள் வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
கைது உத்தரவினை செயல்படுத்துவதற்குள் திவானும் படைவீர்ர்களும் மலையை விட்டு கிழே கொண்டு வரப்பட்டிருந்தார்கள். அவர்கள் எப்படி வீடு திரும்பினார்கள். யார் கொண்டுவந்துவிட்டது எனத் தெரியவில்லை. ஆனால் திவான் வீடு திரும்பிய போது அவருடன் ஒலைப்பெட்டியில் கொஞ்சம் பச்சிலைகள் இருந்தன. அதை இரண்டு நாள்கள் குளிர்ந்த தண்ணிரில் இரவெல்லாம் ஊற விட்டு குடிக்க வேண்டும் என்ற உத்தரவும் எழுதி வைக்கபட்டிருந்தது.
அதன்படியே இரண்டு நாட்கள் குளிர்ந்த தண்ணீரை குடித்துச் சுயநினைவு கொண்டார் திவான். அவரது படைவீர்ர்களும் சுகமடைந்தார்கள். நெல்லியடி ஆசானின் மீது பயங்கரக் கோபம் வந்த போதும் அவரது திறமையைக் கண்டு வியப்பும் ஏற்பட்டது. நீண்ட தூக்கத்தின் பின்பு விழித்துக் கொண்டது போல அவரது உடல் புத்துணர்வு கொண்டிருந்தது.

இதற்குள் பதினெட்டாம் ரெஜிமெண்ட் மேல்மலையினுள் துப்பாக்கி சகிதம் பயணிக்கத் துவங்கியிருந்தது. அவர்கள் நெல்லியடிக்குச் சென்ற போது வைத்தியசாலையில் எவருமில்லை. ஆசானையும் அவரது பணியாளர்களையும் காண முடியவில்லை. அவர்கள் எங்கே மறைந்தார்கள் என்று தெரியாமல் பதினெட்டாவது ரெஜிமெண்ட் காடு முழுவதும் தேடினார்கள். அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. வைத்தியசாலையைத் தீவைத்து எரித்தார்கள். மூலிகை மணம் காடெங்கும் பரவியது.
மகாராணிக்கு வைத்தியம் செய்வதற்காக அழைக்கபட்ட நெல்லியடி ஆசான் இறந்து விட்ட காரணத்தால் மாற்று ஏற்பாடு செய்து கொள்ளவும் என ரெசிடெண்ட் டக்ளஸ் இங்கிலாந்திற்குக் கடிதம் அனுப்பி வைத்தார்.
ஆசானால் உடல் நலமாகி மீண்டும் தச்சுவேலைக்குத் திரும்பிய கோவிந்தன் தனக்கு வாழ்க்கை கொடுத்த ஆசானுக்காக ஆறரை அடி உயரத்தில் நிஜமாகக் கண்முன்னே நிற்பது போன்ற மரச்சிற்பம் ஒன்றை உருவாக்கினான். அதனை ஒரு மாட்டு வண்டியில் ஏற்றி மேல்மலைக்குக் கொண்டு சென்றான். எரிக்கபட்ட வைத்தியசாலையின் முன்பாக அந்த மரச்சிற்பத்தை நிறுவினான். பின்பு ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் மலைக்குச் சென்று அதனை வழிபட்டு வரத் துவங்கினான்.
நெல்லியடி ஆசான் மேல்மலையின் ஆயிரமாயிரம் மூலிகை செடிகளில் ஒன்றாகத் தானும் உருமாறிவிட்டார் என்றே மக்கள் நம்பினார்கள். அதன் பிந்திய காலத்தில் மேல்மலைக்கு மூலிகை பறிக்கச் செல்கிற நாட்டு வைத்தியர் எவராக இருந்தாலும் நெல்லியடி ஆசானை மனதில் வணங்கினால் மட்டுமே அவர்களுக்குத் தேவையான மூலிகையைக் கண்ணில்படும் என்றும் அவரே அதனை அடையாளம் காட்டுகிறார் என்றொரு நம்பிக்கை உருவானது.
விசித்திரங்களால் நிரம்பியதே காடும் அதன் வாழ்க்கையும். அதன் ஒரு வடிவமாகவே நெல்லியடி ஆசானும் எஞ்சியிருந்தார்
••