2021 ஆகஸ்ட் காலச்சுவடில் வெளியான எனது குறுங்கதை

எத்தனையோ திருடர்களையும் போக்கிரிகளையும் பிச்சைக்காரர்களையும் சீட்டாடிகளையும் தனது கதைகளில் எழுதி மக்கள் மனதில் நிலைபெறச் செய்திருக்கிறாரே பஷீர் அவர் ஏன் தன்னைப் பற்றி ஒரு கதை கூட எழுதவில்லை என்ற ஏக்கம் கள்ளன் யூசுப்பிற்கு நீண்டகாலமாக இருந்தது,
அவன் தான் வைக்கம் முகமது பஷீரின் பர்ஸை பிக்பாக்கெட் அடித்தவன். அதில் சில்லறைக் காசுகளைத் தவிரப் பணம் ஏதுமில்லை என்று தெரிந்து அவரிடமே திரும்பக் கொண்டு போய்க் கொடுத்தவன். அவனது திறமையைப் பாராட்டினாரே அன்றிப் பஷீர் அவனைக் கதையில் எழுதவில்லை.
அவன் இதைப்பற்றிப் பேசுவதற்காகச் சிலதடவை பஷீரை சந்தித்திருக்கிறான். ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் பஷீர் அவனிடம் தொழில் விருத்தியாக நடக்கிறதா என்று நலம் விசாரிப்பாரே அன்றிக் கதை எழுதுவதைப் பற்றிப் பேசவே மாட்டார். என்ன மனிதர் இவர் அற்ப திருடர்களை, மீசையில்லாத போக்கிரிகளை, பூனையைத் திருடும் அற்பர்களைப் பற்றி எழுதுகிறார். நமக்கு என்ன குறைச்சல் என்று யூசுப் அவரிடம் மாஷே என்னையும் ஒரு கதையில் நீங்கள் எழுத வேண்டும் என்று கோரிக்கை வைத்தான்
அதற்குப் பஷீர் சிரித்தபடியே “சகாவே.. ஒரு திருடன் கதைக்குள் வருவது சாமானிய விஷயமில்லை. அதற்கு ஸ்பெஷலாக ஏதாவது விஷயம் இருக்க வேண்டும். “
அதைக் கேட்ட யூசுப் “என்ன செய்யணும் மாஷே.. சகா ஈஎம்எஸ் மூக்குக் கண்ணாடியைத் திருடி வரட்டுமா. இல்லை மகாராணியின் பல்செட் வேண்டுமா. ஜங்ஷனில் நிற்கும் ஜார்ஜ் மன்னர் சிலையைத் திருடிக் கொண்டு வர வேண்டுமா சொல்லுங்கள்“ என்றான்.
அதைக்கேட்ட பஷீர் “இதுவெல்லாம் சோட்டா திருடன் செய்யும் வேலை. அதைவிடப் பெரிய வேலை செய்யணும். உனக்கு முகமது முதலாளியின் சின்னமகள் சபீதாவை தெரியுமா..சுத்தமான பேரழகி. அவளது ஒரு முத்தத்தைத் திருடி வர முடியுமா.“.எனக்கேட்டார்.
அதைக் கேட்ட யூசுப் சொன்னான். “அது கஷ்டம் மாஷே. வேண்டுமானால் அவளையே தூக்கிக் கொண்டு வருகிறேன்.“
“அது கடத்தல்காரன் வேலை“ என்று மறுத்தார் பஷீர். “ஸ்ரீதரன் நாயரின் மனைவி இருக்கிறாளே.. அவளைப் பார்த்திருக்கிறாயா.. பெயர் அப்சரா. மாம்பழம் போலக் கன்னமிருக்குமே. அந்தச் சுந்தரியின் கனவுகளில் ஒன்றை திருடிக் கொண்டுவர முடியுமா“ என்று கேட்டார்.
கள்ளன் யூசுப் “கஷ்டம்“ என உதட்டைப் பிதுக்கினான். “நீ ஒரு உதவாக்கரை.. கோழி திருடும் நாராயணி இருக்கிறாளே.. தெரியும் தானே.. என் வீட்டிலே மூன்று கோழிகளைத் திருடிப் போயிருக்கிறாள். அவளது மூக்குத்தியைத் திருடி வர முடியுமா.“.எனக்கேட்டார் பஷீர்.
“அது முடியும் மாஷே. மூக்குத்தியைக் கொண்டு வந்தால் கதை எழுதுவீர்கள் தானே“
“கட்டாயம் எழுதுவேன். கோழி திருடும் நாராயணியும் கள்ளன்யூசுப்பும் என்று தலைப்பு வைக்கிறேன். போதுமா.“என்றார்.
“இது போதும். மூக்குத்தியோடு வருகிறேன். என்று சொல்லி யூசுப் சலாம் வைத்துப் போனான். இரண்டு மாதங்களுக்குப் பிறகு யூசுப்பை பேருந்தில் பஷீர் பார்த்தபோது உதட்டைப் பிதுக்கி இன்னும் காரியம் நடக்கவில்லை என்று ஜாடையாகச் சொன்னான். பின்பு ஒரு மழைநாளில் அவர் வீட்டிற்கு வந்து பெண்கள் விஷயத்தில் நமது திட்டங்கள் தோற்றுவிடுகிறது என்று சலித்துக் கொண்டான். இப்படியாக எட்டு மாதங்களும் பதிமூன்று நாட்களும் கடந்தபிறகு ஒரு இரவு அவன் மூக்குத்தியோடு வந்திருந்தான்.
“சபாஷ். நீ உண்மையிலே பெரிய கள்ளன் தான். யாரையும் கிட்ட நெருங்க விடாத நாராயணியின் மூக்குத்தியைத் திருடிவிட்டாயே“ என்று பாராட்டினார்.
யூசுப் தயக்கத்துடன் சொன்னான்.
“நான் திருடவில்லை மாஷே. அவளே கொடுத்துவிட்டாள்“.
“இது என்ன புதுக்கதை“ என்று கேட்டார் பஷீர். “நாராயணி வெளியே தான் நிற்கிறாள் வரச்சொல்லவா“ என்று கேட்டான் யூசுப். வரச்சொல் என்றார் பஷீர். தெருச்சண்டையில் கில்லாடியும் கோழி திருடுபவளுமான முரட்டுப் பெண் நாராயணி தலையில் முக்காடு போட்டுக் கொண்டு வெட்கத்துடன் நின்றிருந்தாள். பஷீருக்கு விஷயம் புரிந்துவிட்டது.
•••