பாரீஸில் கால்வினோ

இதாலோ கால்வினோவின் Hermit in Paris படித்துக் கொண்டிருந்தேன், அவரது வாழ்வில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள், அவரது நேர்காணல். மற்றும் பயண அனுபவங்களின் தொகுப்பு நூலிது. கால்வினோவின் புனைவெழுத்தை போலவே அவரது கட்டுரைகளும் மிகச் சுவாரஸ்யமானவை.

கதை சொல்லும் முறையைப் புத்துருவாக்கம் செய்தவர்களில் கால்வினோ முக்கியமானவர், இவரது Invisible Cities மிக விருப்பமான புத்தகங்களில் ஒன்று.

ஒரு எழுத்தாளனுக்கு அவன் வாழும் நகரம் எவ்வளவு முக்கியமானது என்பது குறித்துக் கால்வினோ The Writer and the City எனச் சிறு குறிப்பு ஒன்றை எழுதியிருக்கிறார், அதில் அவர் டூரின் நகரை பற்றிக் குறிப்பிடும் போது அது எழுத்தாளர்கள் வாழ்வதற்கான ideal city எனக் கூறுகிறார்.

காரணம் அந்த நகரில் நிகழ்காலம் பெரியதாக முன்நிற்கவில்லை, கடந்தகாலத்தின் வலிமையும் எதிர்காலத்திற்கான பாய்ச்சலும் கூடுதல் கவனம் கொள்கிற ஊராகயிருக்கிறது என்கிறார்.

எனக்குச் சென்னையைப் பற்றி எப்போதுமே அப்படியான ஒரு எண்ணம் உண்டு, இந்த நகரில் நிகழ்காலத்தை விடக் கடந்தகாலமே வலிமையானதாகயிருக்கிறது.

ஒரு பக்கம் எதிர்காலச் சென்னை விஸ்வரூபமாக வளர்ந்து வந்தபோதும் அதன் அசுரவளர்ச்சியை உணர முடியாத அளவு கடந்தகாலம் நம்மைப் பின்னிழுத்துக் கொண்டிருக்கிறது. அதே நேரம் சென்னையின் கடந்தகாலம் பாதுகாக்கபடவோ, கொண்டாடப்படுவதோயில்லை, கைவிடப்பட்ட கல்லறைத்தோட்டம் போலேவே இருக்கிறது

நிகழ்காலச் சென்னை என்பது ஒரு பயணிகள் தங்குமிடம் போலவே இருக்கிறது, அது தான் நகரின் இயல்பு, யார் வருகிறார்கள், யார் போகிறார்கள் எதுவும் தெரியாது. எதற்கு வருகிறார்கள், ஏன் வெளியேறுகிறார்கள் ஒன்றும் புரியாது, மாயவிதி ஒன்றின் அசுரக்கைகள் இந்த நகரை ஆட்டுவைக்கிறதோ எனத்தோன்றுகிறது

ஒவ்வொரு நகரமும் அதன் இயல்பின் காரணமாக ஏதாவது ஒரு கலையைத் தனது பிரதான வெளிப்படாகக் கொள்ளும் என்பார்கள்.

சென்னை நகரம் சினிமாவை தான் தனது முக்கிய வெளிப்பாடாகக் கொண்டிருக்கிறது, காரணம், இரவு பகல் பேதமில்லாமல் சினிமா ஒடிக்கொண்டேயிருக்கிறது, சினிமா பாடல்கள் ஒலிக்காத வீடுகளேயில்லை, சினிமாவை பற்றிப் பேசாத ஒரு மனிதனைக்கூடக் காணமுடியாது.

இதற்குச் சென்னையில் சினிமா தயாரிக்கபடுவது மட்டும் காரணமில்லை, சினிமாவை தனது சகலவெளிப்பாடுகளிலும் உயர்த்திப்பிடித்திருப்பதே முக்கியக் காரணம், எத்தனையோ எழுத்தாளர்கள், இசைக்கலைஞர்கள், ஒவியர்கள், ஆளுமைகள், கலைஞர்கள் இங்கே வாழ்ந்திருக்கிறார்கள், ஆனால் அவர்கள் கண்டுகொள்ளபடுவதேயில்லை.

சென்னையை விட அதிகச் சினிமா மோகம் கொண்ட ஆந்திராவில் கூட இப்படியில்லை, ஹைதராபாத்தில் சினிமா என்பது அதன் ஒருபகுதி மட்டுமே, சென்னை அப்படியானதில்லை.

அதே நேரம் சினிமாவில் இருப்பவர்களை ஏளனமாகக் கருதுவதும் கண்டபடி பேசுவதும் அவர்களுக்கு வீடு வாடகைக்குத் தர மறுத்து, இரண்டாம் தர பிரஜைகள் போல நடத்துவதும் தொடர்ந்து இருந்து கொண்டேயிருக்கிறது. இந்த முரணும் சென்னையின் இயல்பு தானோ.

Hermit in Paris நூலில் உள்ள நேர்காணல் ஒன்றில் தனது ஆதர்ச எழுத்தாளராக ஹெமிங்வேயை குறிப்பிடும் கால்வினோ, தனக்கு இப்போது ஹெமிங்வே போதுமானவராகயில்லை, ஆகவே தாமஸ் மானை நோக்கி நகர்ந்து போகிறேன், எனது விருப்பமான எழுத்தாளர்களில் பலர் பத்தொன்பதாம் நூற்றாண்டினைச் சேர்ந்தவர்கள், பின்னோக்கி போவது எனக்குப் பிடித்தேயிருக்கிறது என்கிறார்

தனது அமெரிக்கப்பயணத்தைப் பற்றிச் சிறுசிறு சம்பவங்களின் மூலம் சுவாரஸ்யமாக விவரிக்கும் கால்வினோ அமெரிக்காவில் எந்த விருந்திற்குப் போனாலும் பெருகிவரும் லஞ்சம் மற்றும் பணம் பண்ணும் பேராசை பற்றியே பேசிக் கொள்கிறார்கள், அதிகார துஷ்பிரயோகம், ஊடகங்களின் பரபரப்பு இவை தான் முக்கிய விவாதப்பொருளாக உள்ளன என்கிறார்.

ஐம்பது ஆண்டுகளில் இதே விஷயம் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது.

கால்வினோ அமெரிக்காவில் கண்ட அதிசியங்களில் ஒன்று கலர் டெலிவிஷன், முதன்முறையாகக் கலர் டெலிவிஷன் பார்த்தபோது ஏற்பட்ட வியப்பில் இதை மூன்றாவது உலகநாடுகளில் அறிமுகம் செய்ய வேண்டும் எனச் சிபாரிசு செய்திருக்கிறார்

கால்வினோ ஏன் அப்படிச் சொன்னார் எனத்தெரியவில்லை, ஆனால் இதன் விளைவு இத்தனை மோசமாக இருக்கும் என அவர் உணர்ந்திருக்கமாட்டார் என்றே தோன்றுகிறது

தனக்குக் கம்யூனிஸ்ட் சித்தாந்தம் மீதான விருப்பம் எப்படி உருவானது என்பதையும் தான் ஏன் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக ஆனேன் என்பதையும் பற்றி Political Autobiography of a Young Man என்றபகுதியில் தெளிவாகக் குறிப்பிடுகிறார், எழுத்தாளர்கள் கட்டாயம் அரசியலில் ஈடுபட வேண்டும் எனக்கூறும் கால்வினோ, பாசிசத்தின் நிழலில் தான் வளர்ந்த பால்யகாலம் பற்றித் துல்லியமாக விவரிக்கிறார்.

Hermit in Paris என்ற கட்டுரை அவரது பாரீஸ் நகர வாழ்க்கையைப் பற்றியது, பாரீஸ் குறித்த தனது கற்பனைகள் பிரெஞ்சு நாவல்களில் இருந்து துவங்கியது எனக்கூறும் கால்வினோ அது வரலாற்றின் சாட்சியாக உள்ள நகரம் என்கிறார்

கவிஞர்களும் எழுத்தாளர்களும் ஒவியர்களும் நிரம்பிய அந்த நகரம் கலைகளின் தாயகம். ம்யூசியம், கேலரி இரண்டிலும் செலவழிக்க நேரம் போதாது. கடந்தகாலத்தில் எதையாவது இழந்துவிட்டதாக நாம் உணர்ந்தால் அதைத் திரும்பப் பெற பாரீஸ் போக வேண்டும், அங்கே அது நிச்சயம் கிடைத்துவிடும், சிறுவயதில் பார்க்க ஆசைப்பட்டுக் காணமுடியாமல் போன பல திரைப்படங்களைப் பாரீஸில் கண்டதாக வியந்து கூறும் கால்வினோ பாரீஸின் உள்ளும் புறமும் பற்றி இக்கட்டுரையில் உணர்ச்சிபூர்வமாக விவரிக்கிறார்

கால்வினோவின் குடும்பம், பள்ளிவயது நினைவுகள், அரசியல்செயல்பாடுகள், இலக்கிய ஈடுபாடு, வாசிப்பு ரசனை என விரிந்து செல்லும் இந்த நூல் கால்வினோவின் ஆளுமையைப் புரிந்து கொள்வதற்கான சாளரமாகும்

•••

0Shares
0