பார்த்தேன் படித்தேன்

ருஷ்டியின் Midnight’s Children நாவலை வாசித்திருக்கிறேன், அது எனக்கு அவ்வளவு ஈர்ப்புடையதாகயில்லை, ஆனால் சில நாட்களுக்கு முன்பாகத் தீபா மேத்தா இயக்கத்தில் அதைப் படமாகப்பார்த்தேன், படம் எனக்குப் பிடித்திருந்தது, மறுபடியும் அந்த நாவலை படிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன், தீபா மேத்தா நாவலுக்கு மிக நெருக்கமாகப் படமாக்கியிருக்கிறார்,

ருஷ்டியின் சமீபத்தைய புத்தகமான Joseph Anton அவர் மீது பட்வா விதிக்கபட்ட நாளில் துவங்கி அவர் தப்பியோடிய நிகழ்வுகளை முழுமையாகப் பதிவு செய்திருக்கிறது,

மரணம் துரத்தும் ஒரு எழுத்தாளனின் அக,புறநெருக்கடிகள், குழப்பங்கள், வலி, தனிமை யாவும் மிக அற்புதமாக இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது,

ஒரு நாளில் அவரது வாழ்க்கை இருப்பிடத்திலிருந்து பிடுங்கி வீசப்படுகிறது, பத்திரிக்கையாளர்கள், புகைப்படக்கலைஞர்களால் துரத்தப்படுகிறார், போக்கிடமின்றி ஒரு சிறிய அறையில் ஒளிந்து கொண்டு தனிமையில் இருட்டறையில் யாருமில்லாமல் தானும் தனது எழுத்தும் குறித்து ருஷ்டி வேதனைப்படுகிறார், எழுத்து குறித்து அவருக்குள் புதிய கதவுகள் திறக்கின்றன, இலக்கியம், அதன் வலிமை, அதற்காகத் தன் வாழ்வை அழித்துக் கொண்ட கலைஞர்கள் எனச் சகலரும் நினைவிற்கு வருகிறார்கள், ருஷ்டியின் இந்த நினைவுத்தொகுப்பு நேரடியாக, எளிமையாக, அதே சமயம் தன்னைத் தானே பகடி செய்யும் குரலில் எழுதப்பட்டிருக்கிறது

ருஷ்டியின் முக்கியமான புத்தகம் இதுவே என்பேன்

•••

சிலநாட்களுக்கு முன்பாகப் பாம்பாட்டிச் சித்தன் என்ற கவிஞரை தேவதச்சனுடன் கோணங்கி வீட்டில் சந்தித்தேன், பாம்பாட்டிச் சித்தனை அவரது நூல் வெளியீடு அன்று ஒரு முறை மதுரை புத்தகக் கண்காட்சியில் பார்த்திருக்கிறேன், அவரது கவிதைகளை அதிகம் வாசித்தவனில்லை, அன்று கவிதை குறித்தும் எழுத்தாளனின் இயங்குதளம் குறித்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம், விடைபெறும் போது தனது கவிதை தொகுப்பினை அனுப்பி வைப்பதாகச் சொன்னார், நேற்று அவரது கவிதை தொகுப்பு இஸ்ரேலியம் என் கையில் கிடைத்தது,

பொதுவாக நான் அதிகம் கவிதைகள் வாசிப்பவனில்லை, இரவில் இஸ்ரேலியம் தொகுப்பினை வாசிக்கத் துவங்கினேன், வழக்கமான கவிதை மொழியில் இருந்து விடுபட்டு தனியான மொழியும், பார்வையும் கொண்டிருந்த இக்கவிதைகள் எனக்குப் பிடித்திருந்தன, குறிப்பாகக் கூடங்குளம் சாஸ்தா கவிதையைச் சமகாலத்தில் வெளியான முக்கியமான கவிதை என்பேன்,

கோணங்கி அந்தக் கவிதையைக் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு அரங்கில் வாசித்ததாகக் குறிப்பிட்டார், அறிவியலும் நாட்டார் கடவுளும் ஒன்றிணைந்த ஒரு புதிய கவிதைவெளியை உருவாகியிருக்கிறது, இக்கவிதையின் வரும் கடவுள் தமிழ்கவிதை மரபில் வந்த கடவுள்களிடமிருந்து பெரிதும் மாறுபட்டவர்,

பாம்பாட்டி சித்தனின் கவிதை உலகம் அறிவியலின் மீது குவியம் கொண்டிருக்கிறது, தனிம அட்டவணையில் இருந்து தனது கவிதையினைத் துவங்கும் இவர் தமிழில் வித்தியாசமானதொரு கவிதையுலகினை உருவாக்கி வருகிறார், ஒரு முழுக் கவிதை தொகுப்பையும் ஒரே மூச்சில் என்னால் வாசிக்க முடியாது, இதில் நான் வாசித்த பத்து கவிதைகளும் எனக்குள் சுழன்றபடியே இருக்கின்றன,

பிரைமோ லெவி இது போன்ற ஒரு முயற்சியைப் புனைகதைபரப்பில் நிகழ்த்தியிருக்கிறார், கவிதையில் கின்ஸ்பெர்க், மற்றும் மரியானே மூர் இது போன்ற விநோதஉலகினை கவிதையில் இடம்பெற முயற்சி செய்திருக்கிறார்,  தமிழில் இவர் கையாளும் தளம் மிகவும் புதியது,

ஸ்க்ரோடிங்கரின் பூனை

—————————————–

நான்கு வழித்தடங்களோடு

பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்த

நெடுஞ்சாலையை பார்வையிட்டது பூனை

கரையும் ஒவ்வொரு நொடியிலும்

ஏதேனும் ஒரு தடத்தில்

ஒரு வாகனம் பாய்ந்தோடுவதை

பூனையின் தலை ஊசலாய்

கண்காணித்தது.

தேவைகள் உந்த

பூனை நெடுஞ்சாலையின்

குறுக்கே நுழைந்தது…

நெடுஞ்சாலையை கடக்கும் போது

பூனை உயிர் இழக்கலாம்

அல்லது நெடுஞ்சாலையை கடந்தபின்

பூனை உயிரோடிருக்கலாம்

ஆனால்

நெடுஞ்சாலையின் குறுக்கே

பிரவேசிக்கும் கணத்தில்

அது ஓர் உயிரற்ற உயிருள்ள பூனை

– பாம்பாட்டிச் சித்தன் (இஸ்ரேலியம் தொகுப்பிலிருந்து)

ஸ்க்ரோடிங்கரின் பூனை என்ற இயற்பியல் கோட்பாடினை தெரிந்தவர்கள் இந்தக் கவிதையை கூடுதலாக ரசிக்க முடியும்.

•••

கறுத்தடையான் எழுதிய ஆகாசமாடன் என்ற சிறுகதை தொகுப்பினை மணல்வீடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது, நண்பர் ஹரி கிருஷ்ணன் இந்த நூலை எனக்கு அனுப்பியிருந்தார், பயணத்தின் போது படித்து முடித்தேன், கறுத்தடையான் முக்கியமான சிறுகதைகளை எழுதியிருக்கிறார், இந்தக் கதைகளின் சிறப்பு நேரில் சொல்வது போன்ற கதை சொல்லும் முறை, மற்றும் உக்கிரமும் கோபமும் கலந்த வெளிப்பாடு, கடும்பு என்ற கதை எனக்கு பிடித்திருந்தது, இதனை ஜி, நாகராஜன் கதைஉலகின் இன்னொரு வடிவம் என்றே சொல்ல வேண்டும்

சிறுகதைகளில் இன்று புதிய தளங்களில் அற்புதமாக எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் பலர் வரத்துவங்கியிருக்கிறார்கள், குறிப்பாக லக்‌ஷ்மி சரவணக்குமார்., பவா செல்லத்துரை, சந்திரா, குமார் அம்பாயிரம், அஜயன் பாலா, ஸ்ரீராம், எஸ் செந்தில்குமார்,போகன்,திசேரா,போன்றவர்களைச் சொல்வேன், இவர்களுடன் கறுத்தடையான் முக்கியமானவராக இணைந்திருக்கிறார், இவர் ஒரு நாடககலைஞர், முருகபூபதியின் மணல்மகுடி நாடகக்குழுவில் இணைந்து நடித்து வருகிறார்.

••

0Shares
0