பிரமிளின் ஒவியங்கள்

கவிஞர் பிரமிள் நவீன கவிதையின் தனிப்பெருமை ஆளுமை என்பதோடு  அவர் ஒரு அசாத்தியமான ஒவியர், அவரது கோடுகளில் வெளிப்படும் தெறிப்பும் வலிமையும் விஷேசமானது, அவர் தன்னை வரைந்து கொண்ட ஒவியமும் அவரது நூலின் முகப்புச் சித்திரமாக வந்துள்ள ஒன்றிரண்டு ஒவியங்களையும் தவிர அவரது முழுமையான ஒவியங்கள், சிற்ப வேலைபாடுகள் இதுவரை தனித்துக் காட்சிக்கு வைக்கபடவேயில்லை, அவற்றை காலசுப்ரமணியம் பாதுகாத்து வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன்,

அவர் வரைந்த ஒவியங்களை நான் பார்த்திருக்கிறேன், வான்கோவின் கோடுகளில் உள்ள தெறிப்பைப் போல பிரமிளின் கோடுகளும் வசீகரமானவை, அவர் ஒவியம் வரைவதற்கு தேவையான வண்ணங்களை வாங்கச் செல்லும் போது கூடவே செல்வேன், உலகின் சிறந்த ஒவியங்கள் குறித்துப் பேசிக் கொண்டே வருவார்,  இந்தியக் கலைமரபு பற்றி அவருக்கு ஆழமான புரிதல் இருந்தது, இந்தியாவில் நுண்கலைகளின் வரலாறு முழுமையாகப் பதிவு செய்யப்படவேயில்லை, உலகின் மிகச்சிறந்த சிற்பங்கள், ஒவியங்களைக் கொண்ட ஒரு தேசம் அதை கண்டுகொள்ளாமல் வீணடிக்கிறது, மதிப்பு தெரியாமல் சிதைத்துவருகிறது என்ற ஆதங்கம் அவரிடமிருந்தது

அவர் ஒவியம் வரைவதை ஆன்மீக வெளிப்பாட்டின் ஒரு அம்சம் என்றே கருதினார்,  அதிகாலையில் உட்கார்ந்து வரைந்து கொண்டிருப்பார், பாதியில் ஏதோ கவனம் பிசகியது போல கைவிட்டு அப்படியே எழுந்து போய்விடுவார், யாராவது ஒவியங்களைக் கேட்டால் தரமாட்டார், ஆனால் கேலி செய்யும் மனநிலை கொண்டிருந்தால் பேனாவை வாங்கி எளிய கோடுகளில் கையில் உள்ள காகித்த்தில் படம் வரைந்து தருவார், அவரது பெயரை எழுதும் விதம் கூட சித்திரவடிவமாகவே இருக்கும், சீனக்களிமண்ணை வைத்து சிற்பங்கள் செய்வதிலும் அவருக்கு நல்ல தேர்ச்சியிருந்தது. வண்ணங்களின் தனித்துவம் குறித்தும் அவற்றை இயற்கையின் ரகசியங்களாக எப்படி உணர்ந்து கொள்வது என்பதைப் பற்றியும் நிறையப் பேசியிருக்கிறார்,

அந்த நாட்களில் எழுத்தாளர் மா. அரங்கநாதன் நடத்திக் கொண்டிருந்த முன்றில் புத்தகக் கடை ரங்கநாதன் தெருவில் இருந்தது, மாலைநேரங்களில் அங்கே பிரமிள் வருவார், அவருக்கும் அரங்கநாதனின் பையன் மகாதேவனுக்கும் நெருக்கமான நட்பு இருந்தது,

அந்தக் கடை ஒரு இலக்கிய சந்திப்பு வெளியாகவே இருந்த்து, அதன் சில கடைகள் தள்ளி எழுத்தாளர் கோபி கிருஷ்ணனும் உளவியலாளர் சபியும் இணைந்து ஒரு மனநல ஆலோசனை மையம் நடத்திக் கொண்டிருந்தார்கள், ஆகவே கோணங்கி விக்ரமாதித்யன், யூமாவாசுகி, அஜயன்பாலா, என பலரும் முன்றிலுக்கு அடிக்கடி வந்து போவார்கள், மகாதேவன் வழக்கறிஞராகப் பணியாற்றுகிறவர், ஆகவே அவர் கோர்ட் முடிந்து வரும் போது அவரைக் காண பிரமிள் வருவார், அவர்கள் இருவரும் மிகுந்த தோழமையோடு பேசிக் கொண்டிருப்பார்கள்

எட்டுமணி அளவில் பிரமிள் அறைக்கு கிளம்பும் போது அவர் கூடவே கிளம்பிப் போய்விடுவேன்,  மேற்குமாம்பலம் வழியாக நடந்து பெரியார் சாலையை நோக்கிப் போவோம், சில வேளைகளில் வழியில் ஒரு வார்த்தை கூட பேசமாட்டார், சில நாள் வழியெல்லாம் ஏதாவது கேலி பேசியபடியே வருவார், அவரது மனநிலை மிகுந்த ஊசலாட்டம் கொண்டது,

அவரது ஆங்கிலம் மிக கவித்துவமானது, எங்காவது சந்திப்பது என்று முடிவு செய்து கொண்டால் சிறிய குறிப்பு எழுதி முன்றிலில் கொடுத்துவிட்டுப் போயிருப்பார், அந்த ஆங்கிலகுறிப்பில் வெறும் தகவல் மட்டுமிருக்காது, அதுவே சிறிய கவிதை போலிருக்கும்,

அமெரிக்க தூதரக்த்தில் உள்ள நூலகத்திற்கு அவரோடு தினமும் செல்வேன். Edward Hopper ஒவியங்களின் மீது அவருக்கு ஈடுபாடு உண்டு,  அவரைப்பற்றி ஜான் அப்டைக் எழுதியுள்ள குறிப்பை ஒரு முறை வாசிக்க சொல்லியதோடு காப்பரின் புகழ்பெற்ற ஒவியமான Nighthawksயை பற்றி ஒரு மணி நேரம் விரிவாகப்பேசிக் கொண்டேயிருந்தார், அதன் பிறகு தான் காப்பரின் ஒவியத்தின் மகத்துவத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது,

ஆனந்தகுமாரசாமியின் கலைகுறித்த பார்வைகள் மீது அவருக்கு விருப்பமும் இருந்தது, விமர்சனமும் இருந்தது, அதை அடிக்கடி  சுட்டிக்காட்டிப் பேசுவதோடு இந்திய கலைகளின பின் இயங்கிய மனம் எப்படிப்பட்டது, கலையை வெறுமவெளிப்பாட்டு வடிவம் என்று இந்தியர்கள் ஏற்றுக் கொள்வதில்லை, அது ஒரு சூட்சுமவிஷயம், ஒவியம் சிற்பம் உள்ளிட்ட கலைகளை உள்வாங்கிக் கொள்வதற்கும் உருவாக்குவதற்கும் தீவிரமான ஆன்மீகப்பயிற்சி அவசியமானது என்று சொல்வார்,

பிரமிள் வண்ணங்களைத் தேர்வு செய்யும் போது குழந்தையின் மனநிலை கொண்டவராக மாறிவிடுவதைக் கண்டிருக்கிறேன், வண்ணங்களை உபயோகிப்பதை விடவும் அதை ஒன்றோடு ஒன்று கலந்து புதிய நிறக்கலவையை உருவாக்கி பார்ப்பதில் அவரது மனது அதிக குதூகலம் கொள்ளும், அப்படி உருவாக்கிய ஒரு கருநீலத்தை வியந்து பார்த்தபடியே என்னை அழைத்து காட்டியிருக்கிறார். வண்ணங்களை உருவாக்குவது போன்றது தான் கவிதையும், அங்கே சொற்கள் புதிய நிறம் கொண்டுவிடுகின்றன என்று சொன்னார்.

ஒவியம், சிற்பம், கவிதை, உலகஇலக்கியம், உலக சினிமா, தத்துவம், ஆன்மீகம் என்று அவரது அக்கறையும் ஈடுபாடும் விரிந்த தளங்களில் இயங்கியது, பிரமிளுக்கு மிகவும் விருப்பமான திரைப்படங்களில் ஒன்று  blade runner.  அமெரிக்க தூதரகத்தினுள் உள்ள சிறிய திரைஅரங்கில் வாரம் ஒன்றோ இது போன்ற படங்களை திரையிடுவது வழக்கம், அப்படி பிளேடு ரன்னர் திரையிடப்பட்ட நாட்களில் இருமுறை அவரோடு அந்த படத்தை பார்த்திருக்கிறேன், அதைப்பற்றி மிகவும் வியந்து சொல்லுவார்,

அறிவியல்புனைகதைகள் குறித்து அவருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது, தேடித்தேடி வாசித்தார், டிரிவேனியன் (Trevanian) என்ற ஒரு எழுத்தாளரின் புத்தகங்களை வாசிக்க சிபாரிசு செய்த்தோடு அந்த எழுத்தாளர் யார் என்றே அதன் பதிப்பாளருக்குத் தெரியாது, அவர் தனது அடையாளத்தை மறைத்துக் கொண்டு ரகசியமாக செயல்படுகின்றவர் என்று அவரைப்பற்றி நிறைய சுவாரஸ்யமான தகவல்களை சொன்னார், அவர் தந்த Eiger Sanction. Loo Sanction ஆகிய இரண்டு நாவல்களையும் வாசித்து பார்த்தேன், துப்பறியும் கதைகளின் பின்புலத்தில் உள்ள மாறுபட்ட நாவலது,  எப்படி டிரிவேனியனை கண்டுபிடித்தீர்கள் என்று கேட்டால் பதில் சொல்லாம்ல் சிரிப்பார்.

ஒரு முறை அவருக்கு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஒன்று தேவைப்பட்டது, அதை எடுப்பதற்காக கோடம்பாக்கத்தில் உள்ள ஸ்டுடியோ ஒன்றுக்கு என்னையும் அழைத்துக் கொண்டு போனார்,  பாலத்தின் அடியில் உள்ள சிறிய ஸ்டுடியோ அது, நாங்கள் போன நேரம் கடையின் உரிமையாளர் இல்லை, ஒரு பதின்வயது பையன் இருந்தான், அவன் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ தானே வந்து உட்காருங்கள் என்று ஸ்டுலைக்காட்டினான்,

பிரமிள் என்னிடம் மௌனியின் சில்அவுட் புகைப்படம் ஒன்று இருக்கிறது பார்த்திருக்கிறீர்கள் தானே என்று கேட்டார், ஆமாம் என்று சொன்னேன், அது போல ஒன்று எடுத்துக் கொண்டால் எப்படியிருக்கும் என்றார், மறுநிமிசம் அந்த பையனிடம் என்ன கேமிரா வைத்திருக்கிறான், அஙகே என்ன லைட் இருக்கிறது, கண்ணாடியில் ஒருவரை நிறுத்தி புகைப்படம் எடுப்பதற்கு அவனுக்குத் தெரியுமா என்று ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்துவிட்டார்,

அந்தப் பையனுக்கு எதுவும் தெரியவில்லை, அவன் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்திலே கவனமாக இருந்தான், ஒரு மணி நேரம் பேசி அவனுக்கு புகைப்படக்கலையின் ரகசியங்களை கற்றுத்தந்து முடிவில் அவன் சில்அவுட் புகைப்படம் ஒன்றை எடுத்தான், அதை மறுநாள் வாங்கப் போனபோது சரியாக வரவில்லை, இந்த முறை கடையின் உரிமையாளர் இருந்தார், அவரோடு இது பற்றி பேசி மறுமுறை புகைப்படம் எடுக்க வேண்டும் என்றார்,

கரண்ட் இல்லை மாலை வாருங்கள் என்று அவர் சொல்லியபிறகு புகைப்படக்க்லையில் புதிய உத்திகள் என்ன வந்திருக்கிறது என்று கடைக்காரருடன் விவாதித்துவிட்டு திரும்பினார், மாலை அந்த புகைப்படத்தை எடுத்துக் கொண்டாரா என்று தெரியாது, அப்படி கவனித்தில் வைத்துக் கொண்டு கேட்டால் கூட அது பற்றி பதில் தரமாட்டார், மனநிலை மாறியிருக்கும்

அவருக்குள் சதா ஒரு படைப்பு மனநிலை கொந்தளித்துக் கொண்டேயிருந்த்து, மைடாஸ் மன்னன் எதைத் தொட்டாலும் பொன்னாகிவிடுவதை போல அவர் எதை வாசிக்க ஆரம்பித்தாலும் எழுத்திலோ, நுண்கலையிலே படைப்பாக்க முயற்சித்தாலும் அது தனித்துவமிக்கதாக உருவாகிவிடுவதே இயல்பு,

இவ்வளவு படைப்பு வீரியத்தோடு இருந்த அவரது தினசரி வாழ்க்கை மிகுந்த நெருக்கடியானதாகவே இருந்தது, தனது வாழ்க்கைப்பாடுகள் குறித்து அவர் யாரிடமும் பேசிக் கொண்டதில்லை, காலசுப்ரமணியன் போன்ற சில நண்பர்கள் அவரது நிலை அறிந்து கூடவே இருந்து உதவி செய்து வந்தார்கள், அதைப்பற்றியும் யாரிடமும் பேசியதில்லை, பொருளாதார நெருக்கடியை அவர் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பது தான் உண்மை

அவரைப்போல சென்னை நகரில் நடந்து திரிந்த ஒரு எழுத்தாளரை காணவே முடியாது, காலை கோடம்பாக்கத்தில் பெரியார் சாலையின் பின்பக்கம் இருந்த அவரது அறையில் இருந்து கிளம்பி நடந்தே அடையாரில் உள்ள ஜே, கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷன் மையத்திற்கு செல்வார், அங்கிருந்து திரும்ப நடந்து மைலாப்பூரில் உள்ள சாய்பாபா கோவில், பிறகு அங்கிருந்து நடந்து திநகரில் உள்ள முன்றில் கடை, பிறகு அங்கிருந்து கோடம்பாக்கம் வரை நடை, இப்படி நாள் முழுவதும் நடந்து கொண்டேயிருந்தார், சாலையோரம் உள்ள பிச்சைகாரர்கள், நடைபாதை வாசிகளோடு அவருக்கு நட்பிருந்த்து, சிலர் அவரை அடையாளம் கண்டு பேசுவார்கள்,

சாப்பாட்டில் அவருக்கு பெரிய கவனமே கிடையாது, சாதத்தில் காய்கறிகளை சேர்த்து கலந்து சாப்பிடுங்கள் என்று  ஒருமுறை குழந்தை சாப்பிடுவதை போல எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து சாப்பிடச் சொன்னார், அவரது கவிதைகள் குறித்தும் அதிகம் பேசிக் கொண்டவரில்லை, நெருக்கமான சில வேளைகளில் கவிதையின் புரியாமை பற்றி கேலி செய்வதுண்டு,

மற்றபடி அவரது மனநிலை குழந்தையின் வியப்பும் ஞானியின் தெளிவும் கொண்டதாகவே எப்போதும் இருந்து வந்தது, ஆயி புத்தகத்தின் முகப்பாக அவர் வரைந்துள்ள ஒவியமும் அவரது கவிதைத் தொகுப்பின் பின் அட்டையில் உள்ள அவரது ஒவியமும், நட்சத்திரவாசிகளுக்கு அவர் வரைந்த ஒவியங்களுமே காட்சிக்கு கிடைக்கின்றன, சாது அப்பாதுரையார் உருவச்சிலை, காவேரி மண்சிலை அவர் உருவாக்கிய ஒருசிலை சிலைகளை நண்பர்களுக்கு பரிசாகத் தந்திருக்கிறார், இன்று வரை அவர் வரைந்த அரிய ஒவியங்கள் மற்றும் சிற்பங்களின் முக்கியத்துவம் உணரப்படவேயில்லை

தாகூர், டி.எச்.லாரன்ஸ் என்று புகழ்பெற்ற எழுத்தாளர்கள் ஒவியர்களாகவும் இருந்திருக்கிறார்,அவர்களது எழுத்து அடைந்த கவனத்தை ஒவியங்கள் அடையவேயில்லை, அது தான் பிரமிள் விஷயத்திலும் நடந்திருக்கிறது

••••

0Shares
0