இன்று எனது பிறந்த நாள். பல வருசங்கள் பிறந்த நாள் அன்று வீட்டில் இல்லாமல் சுற்றி அலைந்திருக்கிறேன். சாலையோர கடைகளில் தனியே உணவருந்திவிட்டு பகிர்ந்து கொள்ள யாருமின்றி தனித்திருந்த நாட்கள் அவை.
பள்ளி காலங்களில் பிறந்த நாள் வருவதற்கு ஆண்டின் துவக்கத்திலிருந்தே நாட்களை எண்ணிக்கொண்டேயிருந்ததை நினைக்கையில் வேடிக்கையாக இருக்கிறது. அன்றைய குதுôகலம் புத்தாடை பரபரப்பு இன்றில்லை.
ஆனால் விருப்பமான நண்பர்கள், மனைவி குழந்தைகளுடன் சேர்ந்து கொண்டாட பண்டிகைகளை விட பிறந்த நாளே சரியானதாக படுகிறது.
என் மீதும் என் எழுத்தின் மீதும் அன்பும் அக்கறையும் கொண்ட நண்பர்கள், வாசகர்கள், சக எழுத்தாளர்கள். குடும்பத்தினர் மற்றும் இயற்கையின் பெருங்கருணை யாவிற்கும் இந்த நிமிசத்தில் நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். உங்களின் தீராத அன்பு தான் என்னை இயக்குகிறது. மேம்படுத்துகிறது.
தனித்து வானில் பறக்கும் பறவையை விட கூட்டமாக ஒரே லயத்துடன் சேர்ந்து பறக்கும் பறவைகள் எப்போதும் வசீகரமாக இருக்கிறது. அப்படியான சேர்த்து பறத்தலை வாழ்வில் சாத்தியமாக்கிய அனைத்து உள்ளங்களுக்கு என் நிறைந்த நேசத்தையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்கிறேன்.
உலகெங்கும் இதே நாளில் பிறந்த நாள் கொண்டாடும் முகம் அறியாத மனிதர்கள் அத்தனை பேர்களுக்கும் வாழ்த்து சொல்ல விரும்புகிறேன்.
அதே நேரம் எனக்கு நானே வாழ்த்து சொல்லிக் கொள்ளவும் விரும்புகிறேன்.
இந்த மகிழ்ச்சியில் எனக்கு விருப்பமான ஒரு கவிதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
காற்றில் வாழ்வைப் போல
வினோத நடனங்கள் புரியும்
இலைகளை பார்த்திருக்கிறேன்
ஒவ்வொரு முறையும்
இலையைப் பிடிக்கும் போது
நடனம் மட்டும் எங்கோ
ஒளிந்து கொள்கிறது
– தேவதச்சன்.