பீதோவனின் காதல்.


இசைமேதை பீதோவனின் காதலைப்பற்றிய Immortal Beloved  என்ற திரைப்படத்தை நேற்றிரவு பார்த்தேன். பீதோவன் எனக்கு விருப்பமான இசைக்கலைஞர். சென்னைக்கு வந்த நாட்களில்  ஏதேதோ அறைகளில் தங்கியிருந்த போது பல இரவுகள் என்னுடன் துணையிருந்தவர் பீதோவன். அவரது இசைக்கோர்வைகளை வாக்மேனில் விடிய விடிய கேட்டுக் கொண்டிருந்திருக்கிறேன். அவர் வழியாகவே நான் மேற்கத்திய இசையின் முக்கிய கலைஞர்கள் பலரை கேட்க பழகினேன். 



மேற்கத்திய இசை பற்றி எந்த முறையான பரிச்சயமும் இன்று வரை எனக்கு கிடையாது. வெறுமனே இசை கேட்க கூடியவன் மட்டுமே. அதுவும் விருப்பமான மனநிலையில் என்றாவது கேட்பதோடு சரி.



1994ம் ஆண்டு என்ன செய்வது என்று புரியாமல் தடுமாற்றத்துடன் சென்னையில் அலைந்த பொழுதில் பகல் எப்படியாவது கடந்து போய்விடும். ஆனால் இரவு உருவாக்கும் தனிமை கொடியது. அது நரம்புகளில் பயத்தையும் வலியையும் ஏற்றக்கூடியது. அது போன்ற நிலையில் மொசார்ட், பாக், பீதோவன், விவால்டி ஆகிய நால்வரையும் மாறி மாறி கேட்பேன்.



அறையின் சுவர்களில் இருந்து உதிரும் காரைகள் போல மனதில் இருந்த பயம் மெல்ல உதிர துவங்கும். எங்கிருந்தோ ஆழமான நம்பிக்கை மனதில் பீறிட துவங்கும். இசை போல மனிதனை சாந்தம் கொள்ள வைக்கும், ஆறுதல்படுத்தும் கலைவேறு எதுவும் உலகில் இல்லை. இன்றும் விருப்பமான இசையை கேட்கும் போது மனது கொள்ளும் சந்தோஷமும் களிப்பும் சொற்களால் விவரிக்கமுடியாதது.



பீதோவனை பற்றி அதிகம் வாசித்தது கிடையாது. ஒரு முறை நூலகத்தில் இருந்து அவரது கடிதங்களை எடுத்து வந்து வாசித்தேன். அது என்னை வசீகரிக்கவேயில்லை. ஆனால் பீதோவனின் சங்கீதம் எனக்குள் ஒரு பீதோவனை உருவாக்கியிருந்தது. அந்த சித்திரம் மிக வலிமையானது. என்றும் மாறாதது. ஆகவே பீதோவனை பற்றிய திரைப்படம் என்பதால் மிகுந்த விருப்பத்துடன் பார்க்க துவங்கினேன்.



இசைக்கலைஞர்களை பற்றிய திரைப்படங்களில் ஆகச்சிறந்ததாக நான் எப்போதும் கொண்டாடுவது அமேதியஸ். (Amadeus) மிலாஸ் போர்மெனின் இயக்கத்தில் உருவான மொசார்ட்டின் வாழ்க்கை வரலாறு அது. மொசார்டின் இசைக்கோர்வைகளுடன் அற்புதமான ஒளிப்பதிவும், வாழ்நாள் முழுவதும் மொசார்ட்டை வெறுத்து ஒதுக்கிய இசைக்கலைஞரைர் சாலேரியின் பார்வையில் இருந்து கதை சொல்லும் முறையும், கவித்துவமான வசனங்களும் அமேதியஸ் படத்தை உலகின் சிறந்த திரைக்காவியங்களில் ஒன்றாக என்றைக்கும் வைத்திருக்கிறது.



படத்தின் ஒரு காட்சியில் சலேரி சொல்லும் வசனமிருக்கிறது. அவர் மொசார்ட்டின் சிரிப்பை பற்றிய தன் நினைவை பகிர்ந்து கொள்வது போன்றது காட்சி. அது மொசார்டின் சிரிப்பல்ல, கடவுளின் சிரிப்பு. கடவுள் தன்னை மொசார்டின் வழியாகவே உலகிற்கு வெளிப்படுத்திக் கொள்கிறார். அந்த இசை ஒரு கருணை. யாவரையும் தழுவிச் செல்லும் பெருங்கருணை என்று சொல்வார்.  அந்த உணர்ச்சி படம் முழுவதும் நிரம்பியிருக்கும்.



அமேதியஸ் படம் தந்த புத்துணர்வும் இசைஎழுச்சியும் பலவருசங்களாகியும் மனதில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. அந்த ஆசையில் தான் பீதோவனை பற்றிய படத்தையும் பார்க்க துவங்கினேன். பீதோவனை பற்றிய இந்த படத்தை புரிந்து கொள்வதற்கு அவரது வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
**
உலகை சந்தோஷப்படுத்த முயன்ற பலரும் சொந்த வாழ்க்கையில் மாறாத துயரோடு தானிருந்திருக்கிறார்கள். தனிமையும் ஆறாத மனதுயரமுமே அவர்களின் சிருஷ்டிக்கு ஆதார காரணமாக இருந்திருக்கிறது



பீதோவனின் வாழ்க்கையும் அப்படிபட்டதே. ஒரு வகையில் மொசார்ட் தான் பீதோவனின் உருவாக்கத்திற்கு காரணம். ஐந்து வயதில் இசைமேதையாக மொசார்ட் அங்கீகாரம் பெற்றது. வியன்னாவில் உள்ள பல இசைக்குடும்பங்களுக்கு பொறாமையும் உந்துதலையும் உருவாக்கியது. பீதோவன் பராம்பரியமான இசைக்குடும்பத்தை சேர்ந்தவர். அவரது அப்பா ஒரு பாடகர். அவர் தன்னுடைய பையனும் மொசார்ட் போல ஒரு இளம் மேதையாக வர வேண்டும் என்பதற்காக பகலிரவாக அவரை பியானோ படிக்க வைத்தார்.



அத்தோடு பீதோவனின் வயதை மறைத்து காட்டி ஏமாற்றி முதல் இசைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கிறார். அந்த நிகழ்ச்சியில் பீதோவனால் எதையும் சாதிக்க முடியவில்லை. வீடு வந்துசேர்ந்த அப்பா அந்த கசப்பை தாங்க முடியாமல் பீதோவனின் கைவிரல்களிலே அடிக்கிறார். மண்டியிட சொல்லி பிரம்பால் கை ஒடியும் மட்டும் அடிக்கிறார். இறந்து போன தனது தம்பியின் வயது மற்றும் அடையாளங்களுடன் தான் ஏன் இசைநிகழ்ச்சி நடத்த வேண்டும் என்ற எரிச்சல் பீதோவனின் இசைத்திறனை வெளிப்படுத்த முடியாத மனத்தடையை உருவாக்கியது.



குடிகாரரான அவரது அப்பா விடாப்பிடியாக தன் மகனை இசையில் ஈடுபடுத்தினார். கற்றுக் கொள்வதில் ஆர்வமும் தனித்திறனும் கொண்டிருந்த பீதோவன் வேறுவேறு இசைக்கலைஞர்களிடம் இசை பயிலத் துவங்கினார். பீதோவன் வீட்டில் ஏழு குழந்தைகள் பிறந்து அதில் நான்கு பேர் இறந்து போனார்கள். பீதோவனின் தாய் மட்டுமே அவரை புரிந்து கொண்டு ஒரு தோழனை போல நடத்தியதாக கடிதம் ஒன்றில் பீதோவன் தெரிவிக்கிறார்.



சிறுவயதில் மனதில் படிந்த கசப்புணர்வு மற்றும் இயலாமை அவரது வாழ்நாள் முழுவதும் அவரை வதைத்து கொண்டேயிருந்தது. மூர்க்கமான மனநிலையில் எப்போதும்  கோபமும் ஆத்திரமும் கொண்டவராகவே அவர் வளர்ந்து வந்தார். உதவி தொகை வழியாக இசை கற்று தன் மேதைமையை வெளிப்படுத்திய பீதோவன் சில ஆண்டுகாலம் பிரபல இசைமேதை ஹைடனிடம் இசை பயின்றார்.



வியன்னாவில் பீதோவனின் இசைத்திறனுக்கான அங்கீகாரம்கிடைக்க துவங்கியது. அதே வேளையில் குடிகார அப்பா மெல்ல ஒடுங்கி போக துவங்கினார். வீட்டின் பொறுப்பு பீதோவனின் தலையில் விழுந்தது. கடன் மற்றும் அன்றாட செலவிற்கான அல்லாடல் அவரை வாட்டியது. அந்த வலியில் இருந்து தான் அவரது உன்னத சங்கீதம் பிறந்தது.



பீதோவனுக்கு அதிக நண்பர்கள் இல்லை. அவர் உணர்ச்சிவசப்படக்கூடியவராக இருந்ததால் எவரோடும் எளிதாக சண்டையிட்டார். அத்தோடு தன்னை தேடி வரும் இசைவாய்ப்புகளை அவர் எளிதில் ஏற்றுக் கொள்வதேயில்லை.
வாலிபம் அவருக்குள் காதலுக்கான ஏக்கத்தை உருவாக்கியது.  Giulietta Guicciardi  என்ற சீமாட்டிக்கு இசை கற்பிக்க சென்ற பீதோவன் அவள் அழகில் மயங்கி அவளை காதலிக்க துவங்கினார். அவளுக்கும் பீதோவன் மீதான காதல் அதீதமாக இருந்தது.


அவளுக்காகவே  மூன்லைட் சோனடா என்ற இசைக்கோர்வையை பீதோவன் எழுதினார். அந்த காதல் அவரது இசையுணர்வை கொந்தளிக்க செய்தது. அவளை மணந்து கொள்ள விரும்பினார். ஆனால் வசதியான அவளது தந்தை பீதோவனை அவமானப்படுத்தி அனுப்பவே அந்த காதல் முறிந்து போனது. அந்த பெண்ணை மறப்பதற்காக வேசைகளிடம் தஞ்சம் புகுந்தார். மித மிஞ்சிய குடி அவரை இசையிலிருந்து விலக்கியே வைத்திருந்தது.



இந்த நிலையில் அவரது சகோதர்களில் ஒருவரான காஸ்பர் ஜோனா ரீஸ் என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ள முயன்றார். அந்த பெண் நடத்தை கெட்டவள் என்று அந்த திருமணத்தை பீதோவன் தடுத்த நிறுத்த முயற்சித்தார். ஆனால் பீதோவனை மீறி காஸ்பர் ஜோனாவை திருமணம் செய்து கொண்டார். அது பீதோவனை ஆத்திரமூட்டியது. எந்த இசைத்திறனும் இல்லாமல் சிப்பந்தியாக வாழ்ந்து கொண்டிருந்த காஸ்பரை அவர் வெறுத்து ஒதுக்க துவங்கினார்



நெப்போலியனின் எழுச்சி மானுடவிடுதலையின் அடையாளம் என்று பெருமிதம் கொண்ட பீதோவன் நெப்போலியனை பாராட்டி ஒரு இசைக்கோர்வையை உருவாக்கினார். ஆனால் அவர் நினைத்தது போலின்றி நெப்போலியனும் அதிகார ஆசையில் சிக்கி வழக்கமான மன்னர்களில் ஒருவரை போலானது அவரை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது. உடனே தனது இசைக்கோர்வையில் இருந்த நெப்போலியன் பெயரை அழித்து சிதைத்தார்.



இந்த நாட்களில் அவரது காது கொஞ்சம் கொஞ்சமாக கேட்கும் திறனை இழந்தது. இசை நிகழ்ச்சிகளை அவரால் நடத்த முடியவில்லை. அடுத்தவர் என்ன பேசுகிறார் என்பதை கேட்கும் திறன் அவரை விட்டு போனது. ஆகவே அவர் ஒரு நோட்டு ஒன்றை கையில் கொண்டு போக துவங்கினார். அவரோடு பேச விரும்புகின்றவர்களை அதில் எழுதி காட்ட சொன்னார்.



செவித்திறன் குறைந்து போன ஒருவரால் எப்படி இசையமைக்க முடியும் என்று எல்லோரும் ஏளனம் செய்தார்கள். ஆனால் பீதோவன் இசையமைப்பது ஒரு மனிதனின் அகவெளிப்பாடு. அதற்கு கேட்கும் திறன் அவசியமில்லை என்று சொல்லியதோடு ஆகச்சிறந்த இசைக்கோர்வைகளை எழுதவும் துவங்கினார்.



ஆனாலும் வாழ்நாள் முழுவதும் காது கேளாமை அவரை தொடர்ந்து பரிகசித்தபடியே இருந்தது. ஒரு முறை இசைநிகழ்ச்சியில் அவர் சக கலைஞர்களால் அவமதிக்கபட்ட போது அங்கே இசை கேட்க வந்திருந்த அன்னா மரியா எரோடி என்ற சீமாட்டி அவரை தன்னுடன் அழைத்து சென்று தங்க வைத்து ஆறுதல் படுத்தினாள். அவள் மீது பீதோவனுக்கு காதல் உருவானது. அவளோ கணவனை பிரிந்து குழந்தைகளுடன் வாழ்பவள். அவள் சில ஆண்டுகாலம் பீதோவனை பராமரித்து அவரது மனக்கொந்தளிப்பை அமைதிப்படுத்தினாள். அந்த நாட்கள் தன் வாழ்வில் மிக மகிழ்ச்சியாக இருந்த தருணங்கள் என்று பீதோவனே குறிப்பிடுகிறார்.



இதற்கிடையில் அவரது கடைசி சகோதரன் தெரசா என்ற வேலைக்கார பெண்ணை  காதலித்து திருமணம் செய்ய முயற்சித்தான்.. அந்த திருமணம் அவனை படுகுழிக்குள் தள்ளிவிடும் என்று பீதோவன் எச்சரித்த போதும் அவரை மீறி திருமணம் செய்து கொண்டான். தொடர்ந்த அவமதிப்புகள் மற்றும் சுயவேதனை அவரை நிலை குலைய செய்தது. அவரது ஒரே துணையாக இருந்தது இசை  மட்டுமே. இசையால் அவருக்கு கிடைத்த நண்பர்களும் புரவலர்களும் அவரை பாதுகாத்தார்கள். ஆனால் அவர்களால் பீதோவனின் துயரை பங்கு போட்டுக் கொள்ள முடியவில்லை.



பீதோவன் ஆறாத வலியோடு எப்போதும் தனிமையிலே இருந்தார். அதிகம் அவர் புதிய இசைக்கோர்வைகளை எழுத வில்லை. அந்த நாட்களில் அவருக்கு இன்னொரு பெண்ணோடு ரகசியமான காதல் உருவானது. அவளை சந்திக்க கால்ஸ்பெர்க் என்ற இடத்திற்கு சென்றார். அவளுக்காக உருகி உருகி ஒரு காதல் கடிதத்தை எழுதினார். அந்த பெண் யார் என்ற சர்ச்சை இன்று வரை இருந்து கொண்டேயிருக்கிறது. அந்த முகம் அறியாத காதலி அவரை கண்டு கொள்ளவேயில்லை. அந்த ஆத்திரம் அவரது மனச்சீற்றத்தை அதிகமாக்கியது.


இதற்கிடையில் பீதோவனின் சகோதரன் காஸ்பர் காசநோயால் இறந்து போனான். அவன் மரணத்தின் முன்பாக தன் மகன் கார்லின் காப்பாளராக தன் மனைவியையும் பீதோவனையும் நியமித்து போனான். பீதோவனுக்கு காஸ்பரின் மனைவியை பிடிக்காது என்பதால் அவளை விட்டு அவளது பையனை பிரிக்க முயற்சித்து நீதிமன்றம் சென்றார். பல ஆண்டுகாலம் வழக்கு நடந்தது. முடிவில் அந்தபையன் பீதோவன் பொறுப்பில் வளர்க்கபட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.


கார்லை தனது சொந்த மகன் போலவே ஆசையுடன் வளர்த்தார். அவனை இசைமேதையாக்க ஆசை கொண்டார். அவனுக்கோ இசையில் ஆர்வமேயில்லை. பீதோவனின் கட்டாயத்தால் அவன் பியானோ கற்றுக் கொண்டான். அவரது கட்டுபாட்டிற்குள்ளாகவே வளர்ந்தான். அவனது அம்மா மறுபடியும் நீதிமன்றத்திற்கு சென்று போராடினாள். கார்லை தன் பொறுப்பில் வைத்துக் கொள்வதற்கான பீதோவன் பெரிய போராட்டத்தை நிகழ்த்த வேண்டியிருந்தது.


அந்த நாட்களில்அவர் புதிய இசை எதையும் உருவாக்கவில்லை. குடி மட்டுமே அவரது துணை.   காரல் வளரத் துவங்கினான். அவனிடம் தான் எதிர்ப்பார்த்த இசை திறமை இல்லை என்பது பீதோவனை வருத்தபட செய்தது. ஆனால் அவர் விடாமல் அவனை இசையில் ஈடுபடுத்தினார். அவனோடு பயணம் செய்தார். தன்னை கட்டுபாட்டிற்குள்ளாக வைத்து கொடுமைபடுத்துவதாக உணர்ந்த கார்ல் அதை தாங்க முடியாமல் அவனது அம்மாவை சந்திக்கவும் பீதோவனை விட்டு விலகி போகவும் முயன்றான்.


அதன்படி ஒரு நாளிரவு வீட்டை விட்டு ஒடினான். அவனை துரத்தி பிடித்து வந்தார் பீதோவன்.கார்லை தன்னிடமிருந்து பிரிக்க அவனது அம்மா முயற்சிப்பதாக புகார் கொடுத்து அவளை கைது செய்ய முயன்றார். இந்த சிக்கல் அவரது நிம்மதியை முற்றிலும் கெடுத்தது. இந்த நாட்களில் ஜெர்மனிய கவி கதேயுடன் நெருங்கி பழகினார்.அவரது நட்பால் பீதோவனின் சிந்தனைகள் மாறத்துவங்கின.



கார்ல் பீதோவனின் நெருக்கடியை தாங்க முடியாமல் ஒரு நாள் தற்கொலை செய்து கொள்வதற்காக துப்பாக்கியுடன் மலை ஒன்றுக்கு தப்பி போய் தன்னை தானே சுட்டுக் கொண்டான். ஆனால் உயிர் போகவில்லை.  காயத்துடன் உயிர் பிழைத்தான். அதை காரணம் காட்டி அவனது அம்மா கார்லை தன் பொறுப்பில் கொண்டு வந்தாள். பீதோவன் கார்லை இழக்க விரும்பால் அவனை தேடி சென்றார். அவனோ தன்வாழ்நாளில் இனி ஒரு போதும் பீதோவனை சந்திக்க விரும்பவில்லை என்று அவமானப்படுத்தி அனுப்பி வைத்தான்.



இனி தன்னை நேசிக்க யாருமில்லை என்ற வருத்தம் அவரை வாட்டியது. மிச்சமிருக்கும் தன் வாழ்நாளை அவர் இசையிடம் தஞ்சம் புகுந்தார். உடல்உபாதைகள் அவரை நோயாளியாக்கியது. ஆனாலும் அவர் பசியோடு நோயோடு இசைக்கோர்வைகளை எழுதிக் கொண்டேயிருந்தார். மருத்துவர்கள் சொன்ன எதையும் கேட்கவில்லை. உடல் நலிவடைய துவங்கியது.



பீதோவனின் சகோதரன் தன்னோடு வந்து இருக்கும்படியாக அவரை அழைத்தான். ஒரே இரவில் அவனோடு சண்டையிட்டு பண்ணை வீட்டிலிருந்து வெளியேறி மிதமிஞ்சி குடித்தபடியே குளிரில் நடுங்கியபடியே வீதியில் கிடந்தார்.  போகின்ற வருகின்றவர்கள் பிச்சைகாரனை போல அவரை ஏளனம் செய்து காலால் உதைத்து மகிழ்ந்தனர். தன்னை மீறிய துக்கத்துடன் இரவெல்லாம் சாலையில் விழுந்து கிடந்த பீதோவனை அவரது நண்பர்கள் வீட்டிற்கு தூக்கி வந்தார்கள்.



துயரம், பிரிவின் வலி இரண்டும் அவருக்குள் கொந்தளித்துக் கொண்டிருந்தது. அந்த வலியில் இருந்து விடுபட புதிய இசைக்கோர்வையை உருவாக்கினார். அது தான் அவரது மாபெரும் சாதனையான 9வது சிம்பொனி. அந்த சிம்பொனி நிகழ்ச்சி நடத்துவதில் எதிர்பாராத சிக்கல்கள் வந்தன. ஆனால் அதை மிறி நிகழ்ச்சி நடந்து மாபெரும் வெற்றி பெற்றது. இசை ரசிகர்கள் ஆரவாரம் செய்து கைதட்டினார். எந்த சப்தமும் பீதோவன் காதில் விழவில்லை. அவர் இசை தன்னை ஆறுதல் படுத்துகிறது. தனது காயங்களை ஆற்றுகிறது என்று முணங்கியபடியே சபைக்கு தலைதாழ்த்தி வணக்கம் சொன்னார்.



பீதோவனின் இறுதிநாட்கள் வேதனை நிரம்பியவை. அவர் நண்பர்களை கூட தன்னை விட்டு துரத்தி விட்டார்.  . தனது முன்னோடி இசைக்கலைஞர்களின் இசையை கேட்பதற்காக ஒரேயொரு இளம் இசைக்கலைஞனை தன்னோடு வைத்துக் கொண்டார்.  நுரையீரல் பாதித்து மருத்துவ சிகிட்சைகள் நடைபெற்றன. அவர் மரணத்தை நெருங்குவதை அறிந்த அவரது புரவலர்கள், நண்பர்கள் அவரை தேடி வர துவங்கினார்கள். கடைசி பரிசாக மதுப்புட்டிகளை அனுப்பினார்கள். தாமதமான பரிசு என்று முணங்கியபடியே  பீதோவன் 1827 மார்ச் 12 ல் இறந்து போனார். அவரது இறுதி நிகழ்ச்சியில் இருபதாயிரம் பேர் கலந்து கொண்டார்கள்.



பீதோவனின் இசை மீது மிகுந்த பற்று கொண்ட ஷீபெர்ட் என்ற இசைக்கலைஞர் பீதோவன் உடலை சுமந்து சென்றவர்களில் ஒருவர். வியன்னாவில் பீதோவன் அடக்கம்  செய்யப்பட்டார். அவரது மறைவிற்கு பிறகே அவரது இசைக்கோர்வைகள் உலகெங்கும் கொண்டாடப்பட்டன. பீதோவன் சங்கீதத்தின் தனிப்பெரும் ஆளுமையாக அடையாளம் காணப்பட்டு இன்றும் சிறப்பிக்கபடுகிறார்.
**
Immortal Beloved      படம் பீதோவனின் வாழ்க்கை வரலாற்றை விவரிப்பதில்லை மாறாக அவரது ரகசிய காதலை பற்றியதாகவே மையம் கொள்கிறது. அமேதியஸ் படத்தின் துவக்கம் போல இந்த படமும் துவங்குகிறது
மரணப்படுக்கையில் உள்ள பீதோவன் சங்கீதம் கேட்கும் முதல்காட்சியில் படத்தின் இசைவளமை நமக்கு பரிச்சயமாகிவிடுகிறது.  பீதோவன் மரணமும் அதை தொடர்ந்த இறுதி அஞ்சலியும் கடந்து செல்கின்றன.



பீதோவனின் சகோதரன் அவரது சொத்துகள் யாவிற்கும் உரிமை கொண்டாடுகிறான். ஆனால் பீதோவனின் நண்பரும் உதவியாளருமான ஆன்டன் சிண்ட்லெர் ஒரு இழுப்பறையில் இருந்து பீதோவனின் கடிதம் ஒன்றை கண்டு எடுக்கிறார். அது அவரது கடைசி உயில் என்று குறிப்பிடப்படுகிறது. அதில் தன்னுடைய சொத்துகள் யாவும் தன்னை நேசித்த பெண்ணிற்கு என்று குறிப்ப்பிடப்பட்டிருக்கிறது. அத்துடன் அந்தபெண்ணிற்கு எழுதப்பட்ட கடிதம் ஒன்றும் காணப்படுகிறது.


சிண்ட்லெர் அந்த பெண் யார் என்று தேடத்துவங்குகிறான். சிட்டிசன் கேன் போன்ற கதை சொல்லும் முறை. சிண்ட்லரின் பயணங்களின் வழியே பீதோவனின் கடந்த காலம் விவரிக்கபடுகிறது.  குறிப்பாக பீதோவனுக்கும், குயிலியேட்டா என்ற சீமாட்டிக்குமான காதல் பகுதி மிக அற்புதமானது.


அதிலும் அவளுக்காக அவளது வீட்டில் பீதோவன் மூன்லைட் சோனடோ என்ற இசைக்கோர்வையை உருவாக்கும் காட்சியும். அந்த இசையின் பின்புலத்துடன் அவர்கள் இருவரும் மரங்கள் அடர்ந்த ஒரு சாலையில் ஒருவரையொருவர் காதல் மீறிமுத்தமிட்டபடியே செல்வது கவித்துவமான காட்சிகள். அது போல தனக்கு காது கேட்காது என்ற உண்மையை ஒத்துக் கொண்டு நாம் ஏதாவது பேச விரும்பினால் இசையின் வழியாகவே பேசிக் கொள்ளலாம் என்று அவர் தனது மனதின் வெளிப்படாக பியானோவை குறிப்பிடுவதும் நுட்பமான காட்சி


படத்தின் மிக மிக சிறப்பான ஒரு காட்சி. பத்து வயது சிறுவனான பீதோவன் குடிகார அப்பாவின் துரத்தலில் இருந்து தப்பி இரவில் ஒரு குளத்திற்கு ஒடி வருகிறான். அந்த குளத்தில் நட்சத்திரங்கள் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன. அவனும் அந்த குளத்தில் இறங்குகிறான். நட்சத்திரங்களுடன் சேர்ந்து மிதக்கிறான். ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள் ஒளிர்கின்றன. அது அப்படியே விரிந்து விரிந்து லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் கொண்ட பெருவெளியில் ஒரு புள்ளியாக தானும் பீதோவன் ஒளிர்ந்து கொண்டிருக்கிறார். அவரது இருப்பு பிரபஞ்சத்தின் பிரிக்க முடியாத அம்சம் என்பது போல அந்த காட்சி புலப்படுத்துகிறது. அந்த காட்சியின் இசையும் இரவில் ஒளிரும் விந்தையும் என்றும் மறக்க முடியாதவை.



பீதோவனான நடித்துள்ள கிரே ஒல்ட்மேன் மிக சிறப்பாக நடித்திருக்கிறார். காது கேளாத. மனமூர்த்தம் கொண்ட ஒரு இசைக்கலைஞன் கதாபாத்திரத்தை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தில் பீதோவன் வாசிக்கும் அத்தனை இசைபகுதிகளையும் கிரே ஒல்டுமேன் முறையாக பயிற்சி எடுத்து தானே படத்தில் வாசித்திருக்கிறார். அந்த அளவு அர்ப்பணிப்பு உள்ள நடிகர் அவர்.


பீதோவனின் ரகசிய காதலி யார் என்ற தேடுதல் வழியாக கதை பயணிப்பதால் இசை கூடவே பயணம் செய்கிறது. நிலகாட்சிகள், மழை குளிர் பனி கோட்டை அரண்மனை என்று காட்சிகள் மாறிக் கொண்டேயிருக்கின்றன. பீதோவனின் இசை பனிபோல ஈரமும் வசீகரமுமாக பின்தொடர்கிறது. ஒரு வகையில் பீதோவனின் இசை தான் படத்தின் ஆதாரம்.


தன் சகோதனின் பிள்ளை மீது பீதோவன் காட்டும் அன்பும் அவன் மீதுள்ள உரிமையை நிலை நாட்ட அவர்மேற்கொள்ளும் போராட்டமும் நுட்பமாக படமாக்கபட்டுள்ளது. ஒரு காட்சியில் அந்த சிறுவனின் தலையை தன் விரல்களால் தடவியபடியே அவனை பீதோவன் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கும் காட்சி வருகிறது. அதில் வெளிப்படும்அவரது பாசமும்அன்பும் நிகரற்றது.


ஆனால் வீழ்ச்சி அவரோடு பகடையாக துவங்குகிறது. தொடர்ந்த ஏமாற்றங்களை சந்திக்கிறார். உடல் நலிவுறுகிறார். வலியோடு உள்ள அவருக்காக மருத்துவரை அழைத்து வரவா என்று கார்ல் ஒரு காட்சியில் கேட்கிறான். எனக்கு மருத்துவர்தேவையில்லை. கொஞ்ச நேரம் பியானோ வாசித்தால் என்னுடைய நோய் விலகி போய்விடும் என்கிறார் பீதோவன்.



கார்ல் அவரை விட்டு ஒடிப்போன இரவில் மதுக்கடைகளில் கார்ல் கார்ல் என்று கத்தியலையும் போதும் பெண்களுடன் குடித்து உல்லாசமாக உள்ள கார்லை அடித்து இழுத்து வரும் காட்சியிலும், பீதோவன் என்ற இசைக்கலைஞன் உள்ளே பால்யத்திலிருந்து யாராலும் நேசிக்கபடாத ஒரு இதயம் துடிப்பதை உணர முடிகிறது. கார்லின் அப்பாவை சிறுவயதில் தான் அதிகம்நேசித்தேன். அவன் என்னை புரிந்து கொள்ளவேயில்லை என்று இன்னொரு காட்சியில் பீதோவன் சொல்கிறார். அவரது சொந்த வாழ்க்கையின் பாடுகள் அவரை நிலை குலைய செய்கிறது. ஒரே மீட்சி இசை மட்டுமே.


இசை அவரை கடைசி நிமிசம் வரை  கூடவேயிருந்தது. புகழ்பெற்ற அந்த ஒன்பதாவது சிம்பொனியை வாசிக்கும் காட்சியில் பார்வைகள் அடையும் கிளர்ச்சி உண்மையானது. நூற்றாண்டுகளை தாண்டி அந்த இசையின் வல்லமை மனதை உருக்கவே செய்கிறது.


யார் அந்த ரகசிய காதலி என்ற சர்ச்சை முடிவில்லாமல் இன்றும் தொடரும் சூழலில் இப்படத்தில் அவள் பீதோவனின் சகோதரனின் மனைவி ஜோனா என்றும் கார்ல் பீதோவனின் பிள்ளை என்பதால் தான் அவர் அவனை தன்னோடு வைத்துக் கொள்ள போராடுவதாகவும் இறுதிகாட்சிகள் சொல்கின்றன. அதை நிருபணம் செய்ய எந்த சான்றும் அவர்களிடம் இல்லை. படத்தின் இயக்குனரான பெர்னார்ட் ரோஸ் அது தன்னுடைய கண்டுபிடிப்பு என்கிறார். பீதோவனை பற்றிய புனைவுகளில் இதுவும் ஒன்று என்றே ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது


படம் முழுவதும் பீதோவனின் இசை வழிந்தோடுகிறது. பீதோவன் என்ற அந்த உன்னத கலைஞனின் தவிப்பும்,  நிறைவேறாத ஆசைகளும்  காட்சிகளாக நம்மை பற்றிக் கொள்கின்றன.


 படம் முடிந்த பிறகு நீண்ட நேரம் பீதோவனின் முக்கிய இசைக்கோர்வைகளை தேடி எடுத்து கேட்டுக்கொண்டிருந்தேன். அந்த இசையின் துள்ளலுக்குள் ஒரு கலைஞனின் மனத்துயர் ஒளிந்திருப்பது நினைவில் வந்தபடியே இருந்தது.



கலையின் இயல்பு மனிதர்களை ஆற்றுபடுத்ததுதே என்பார்கள். பீதோவன் அந்த வகையில் என்றென்றும்  மனிதர்களுக்கு மீட்பு தரும் மாபெரும் இசை ரட்சகனே.


***

0Shares
0