ஜுனியர் விகடன் இதழில் எனது இந்தியா என்ற புதியதொடர் ஒன்றினை எழுத இருக்கிறேன், இது அடுத்த இதழ் முதல் வெளியாகிறது
அது குறித்த விளம்பரம் வெளியாகி உள்ளது
••
எனது இந்தியா
வரலாறு என்ற பறவைக்கு கடந்த காலம் நிகழ்காலம் என்ற இரண்டு சிறகுகள் இருக்கிறது, அது நிகழ்காலம் எனும் வானில் பறந்து கொண்டிருக்கிறது, பறத்தலின் ஊடே எத்தனையோ இறகுகள் உதிர்ந்தாலும் மறுபடியும் முளைத்துக் கொண்டேதானிருக்கிறது. எப்போதும் போல பறவையும் முன்னெடுத்து பறந்து கொண்டேதானிருக்கிறது.
மன்னர்களின் வாழ்க்கை மட்டும் சரித்திரமில்லை, சாமான்ய மக்களின் வாழ்வும் சாதனைகளும் சரித்திரமே, அதை வரலாற்று நூல்கள் பதிவு செய்வதேயில்லை, வரலாற்று இடைவெளிகளை எழுதுதலும், வரலாற்றை புதிய கண்ணோட்டத்தில் வாசித்தலும் நம்காலத்தின் முக்கிய தேவையாக உள்ளது
நிகழ்காலப்பிரச்சனைகளைப் புரிந்து கொள்ள வரலாற்றின் தேவை இன்றியமையாதது, சரித்திரம் என்பது முடிந்துபோன ஒன்றில்லை, அது நிகழ்காலத்தினைத் தீர்மானிக்கும் ஒரு உந்துசக்தி. ஒரு கொந்தளிப்பு.
இந்திய வரலாறு புனைகதைகளை விடவும் அதிகத் திருப்பங்களும் உணர்ச்சிபூர்வமான சம்பவங்களும் நிரம்பியது
இந்தியாவின் கடந்தகாலம் அதன் நிகழ்காலத்தின் ஊடே மேகங்களாக அலைந்து கொண்டேயிருக்கிறது,
நினைவின் திட்டுகளாக அலையும் அந்த மேகங்களை அடையாளம் காண்பதும், அதன் வழியே சமகால நிகழ்வுகளின் பின்புல உண்மைகளை அறிந்து கொள்வதுமே இந்தத் தொடரின் முக்கிய நோக்கம்.
இது இந்தியாவின் பெருமை கூறும் வரலாறு இல்லை,
இந்தியா மறந்த வரலாறு, இந்திய மக்கள் அறியாத வரலாறு, ஒடுக்கப்பட்ட, மறைக்கப்பட்ட சரித்திரத்தின் இருண்ட பக்கங்களை அடையாளப்படுத்தும் முயற்சி.
அவ்வகையில் இது வரலாறு உருவான வரலாறு.
ம்யூசியத்திலும் ஆவணக்காப்பங்களிலும் முடங்கிக் கிடந்து காலத்தின் தூசிபடிந்த பக்கங்களைப் புரட்டி நான் அறிந்து கொண்டதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்
••
