உலகப் புத்தகக் கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக புதுடெல்லி சென்று இப்போது தான் திரும்பினேன்,
1500க்கும் மேற்பட்ட புத்தகக் கடைகள், நாள் ஒன்றுக்கு ஐந்து மணி நேரம் புத்தகங்களுக்கு ஊடாக சுற்றியலைந்தேன், பிரகதி மைதானில் 14 வளாகங்களில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது, உலக மொழிகளில் பெரும்பான்மையினர் இங்கே தங்களது புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருந்தார்கள், குழந்தைகளுக்குத் தனிப்பிரிவு அமைக்கபட்டிருந்தது.
இந்திய சினிமா குறித்த கருத்தரங்கம், மொழிபெயர்ப்பு குறித்த கருத்தரங்கம், பிறமொழி படைப்புகளுக்கான உரிமை பெறுவது என்று தினம் ஒரு நிகழ்வு நடைபெற்றது
நான் டெல்லி தமிழ்சங்கத்திலும், ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்திலும், பிபிசியிலும் ,புதுடெல்லி வானொலியிலும் பேசினேன்,
தேவகுமார், கணேஷ், நபீஸ், பிடல், ரமேஷ், ஜெயகுமார், குருமூர்த்தி, ஷாஜகான், ஜான் சுந்தர் என்று இணக்கமான நண்பர்களுடன் புதுடெல்லியின் வீதி வீதியாக சுற்றியலைந்தது அற்புதமான அனுபவமாக இருந்தது.
மிதமான குளிரும் வெயிலுமாக பிப்ரவரி மார்ச் மாதங்களில் புதுடெல்லி ரம்மியமாக இருக்கிறது,
இந்த முறை பழங்குடிகளின் இலக்கியங்களாக நிறையத் தேடி வாங்கினேன், சமகால உலக கவிதைத் தொகுப்புகள், உருது, ஒடிசா, பாகிஸ்தான், நேபாளம், ஆப்கான், கொங்கணி, பிரெஞ்சு சிறுகதைத் தொகுப்புகளும், செக் மற்றும் பிரேசில் நாவல்கள் சிலவும் வாங்கினேன், யுவான்சுவாங்கின் பயணம் குறித்த ஆயிரம் பக்கத்திற்கும் மேலான அரிய நூல் ஒன்று கிடைத்தது,
இந்தியப் பிரிவினை பற்றிய இலக்கியபதிவுகளான நாவல்கள், மலையேற்றம், மற்றும் நுண்ணோவியங்கள் குறித்த புத்தகங்கள், அறிவியல் புனைகதைகள், புதிய மாங்கா காமிக்ஸ், சமகால ஜப்பானிய சீன புனைகதைகள், சீனமரபுக் கவிதைகள், போர்த்துகீசிய இந்திய கடலோடிகளின் கடிதங்கள், சிந்துசமவெளி பற்றிய ஆய்வுகள், பாஷனின் நாடகங்கள், காஷ்மீரத்து பழங்கதைகள், நோபல் பரிசு பெற்ற சிறுகதைகளின் தொகுப்பு, போர்ஹேயின் நேர்காணல்கள் தொகுப்பு, இப்படி நூற்றுக்கும் அதிகமான புத்தகங்களை வாங்கியிருக்கிறேன்,
மிர்ஸா காலிப்பின் உருது கஜல்கள், பழைய ஹிந்திப்பாடல்கள், தாகூரின் புகழ்பெற்ற திரைப்படங்கள், சமகால பிரெஞ்சு மற்றும் ருஷ்யத் திரைப்படங்கள், உலகப்புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் பற்றிய டிவிடி என ஒரு வருசம் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் படிப்பதற்கும் தேவையானவற்றை வாங்கியிருக்கிறேன், முறையாக நேரம் ஒதுக்கி இவற்றை முடிக்க வேண்டும்
புத்தகக் கண்காட்சியில் மட்டுமின்றி பழைய டெல்லியின் புத்தக கடைகளிலும், சாலையோர புத்தக கடைகளிலும், பழைய புத்தக கடைகளிலும் தேடி வாங்கியிருக்கிறேன்
பத்துநாட்கள் காலைமுதல் இரவு பனிரெண்டு வரை புத்தகங்களைத் தேடுவது, நுண்கலைகளுக்கான ம்யூசியம் போவது, இசைகேட்பது, சினிமா பார்பபது, மொகலாய உணவகங்களைத் தேடிச் செல்வது என மெட்ரோ ரயிலில் ஊர் சுற்றியது மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது
எவ்வளவோ முறை டெல்லியில் சுற்றியிருக்கிறேன், ஒவ்வொரு முறையும் மனதிற்குத் தோன்றுகிறது, டெல்லி ஒரு மாபெரும் கல்லறை தோட்டம், இங்கே பலநூற்றாண்டுகால புதைமேடுகள் இருக்கின்றன, நிராசையான ஆவிகள் பல ஊரில் அலைந்து கொண்டுதானிருக்கின்றன,
காதலிப்பவன் கூட ஒரு புதைமேட்டின் பின்புறம் தான் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறான், அந்த நகரின் விதியை அதிகார அரசியலே முடிவு செய்கிறது,
பழைய டெல்லிக்கும் புது டெல்லிக்குமான இடைவெளி இரண்டு நூற்றாண்டுகளுக்கான இடைவெளி போலிருக்கிறது, இரண்டும் மாறுபட்ட இரண்டு உலகங்கள்,
காலத்தின் பிரம்மாண்டமான திறந்த புத்தகம் ஒன்றைப் போலவே டெல்லி இருக்கிறது, ஒவ்வொரு முறை பயணம் செய்கையிலும் அதன் சில பக்கங்களை வாசிப்பதாகவே உணர்கிறேன்
டெல்லி எனும் முடிவில்லாத புத்தகம் வாசிப்பவனையும் ஒரு கதாபாத்திரமாக்கிவிடுகிறது, இந்த நகரில் யார் என்ன கதாபாத்திரம், எவர் வெற்றி அடையப்போகிறார், யார் வெளியேறப்போகிறார் என்று யாருக்குமே தெரியாது, அது ஒரு மர்ம விதி, சுழலும் சூதாட்டப்பலகையை போல நகரம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
ஹுமாயூன் கல்லறை பக்கம் ஒரு இடத்தில் வானில் நூற்றுக்கணக்கான கழுகுகள் சுற்றிக் கொண்டிருப்பதைக் கண்டேன், வேறு எந்த நகரிலும் இது போன்ற ஒரு காட்சியைக் காணமுடியாது,
கழுகுகளின் ஆவேச நடனம் போலவே அமைந்திருந்தது.
இத்தனை கழுகுகள் எதைத் தேடிக் கொண்டிருக்கின்றன எனத் தெரியவில்லை,
ஆனால் அவை வானில் வளையமிடுவதை காண்பது விசித்திரமான அனுபவமாக இருந்தது.
••