புத்தகங்கள்

அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது

கடலோடியின் வாழ்வில் துவங்கி, புத்தபிக்குவின் தேடுதல்வரையான இந்த சிறுகதைகள் தமிழில் இதற்கு முன் எழுதப்படாத ஒரு கதைப்பரப்பை, சொல்மொழியை உருவாக்குகின்றன.

ஆணும்பெண்ணும் ஒரே கூரையின்கீழ் வாழ்ந்தபோது எவ்வளவு இடைவெளிவும், புதிர்மையும் கொண்டிருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டுகின்றன.

கதைகளின் வழியாக வெளிப்படும் குரல் நகர வாழ்வின் அபத்தத்தையும், வெளிவேஷத்தையும், அர்த்தமற்ற தினசரிவாழ்வின் பசப்புகளையும் கேலி செய்கின்றது. அந்தக் கேலி நம்மைச் சிரிக்க செய்யும் அதே நேரத்தில் குற்றவுணர்வு கொள்ளவும், நிம்மதியற்றுப் போகவும் செய்கிறது என்பதே இக்கதைகளின் தனிச்சிறப்பு.

வெளியீடு : உயிர்மை பதிப்பகம்


இருள் இனிது ஒளி இனிது

உலக சினிமாவில் ஓவியர்கள். இசைக்கலைஞர்கள் எழுத்தாளர்களின் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களை முன்வைத்து நிறைய படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன அதுபோன்ற அயல்மொழி திரைப்படங்கள் சிலவற்றை இந்தத் தொகுப்பு அடையாளப்படுத்துகிறது.

மாற்று சினிமா குறித்து தீவிரமான முனைப்பும் அக்கறையும் உருவாகி வரும் சமகால தமிழ்ச் சூழல், அனிமேஷன் திரைப்படங்களின் முக்கியத்துவம் மற்றும் வரலாற்று பிரக்ஞை கொண்ட திரைப்படங்கள் குறித்தும் இந்த நூல் விரிவாகப் பேசுகிறது.

வெளியீடு : உயிர்மை பதிப்பகம்


காண் என்றது இயற்கை

இந்தக் கட்டுரைகள் இயற்கை குறித்த ஆழ்ந்த புரிதலை ஏற்படுத்துகின்றன. நாம் எவ்வளவோ முறை கண்டு விலகிபோனக் இயற்கைக்காட்சிகளை நின்று அவதானித்து துல்லியமாக அடையாளம் காட்டிப் புரிந்துகொள்ள வைக்கின்றன. இயற்கை குறித்த ஈடுபாடும் லயிப்புமே அகவிடுதலையின் ஆதார உணர்வுகள் இன்பதைச் சுட்டிக்காட்டுகின்றன, இயற்கை எப்போதுமோ கற்றுத்தருகிறது. எல்லா வடிவத்திலும் நம்மைக் களிப்புறச் செய்கிறது அதன் அடையாளமே இந்த கட்டுரைத் தொகுதி.

வெளியீடு : உயிர்மை பதிப்பகம்


குறத்தி முடுக்கின் கனவுகள்

ஜி – நாகராஜன், புதுமைபித்தன், ஹெப்சிய ஜேசுதாசன், சம்பத் வண்ணதாசன், சரத், சந்திரர், வைக்கம் முகமது பஷீர் என்று நீளும் இந்த மறுவாசிப்புக் கட்டுரைகள் நவீன இலக்கிய படைப்புகள் சார்ந்த புதிய வாசிப்ப் அனுபவத்தையும் அணுகுமுறையும் வெளிபடுத்துகின்றன.

புத்தக வாசிப்பு என்பது வெறும் நிகழ்வல்ல. மாறாக, அது கற்றுகொள்ளும் தொடர் இயக்கம்.

நவீன இலக்கியம் சார்ந்த இந்த அறுவாசிப்பு நாம் கவனம் கொள்ளத் தவறி முக்கிய நூல்களை மீண்டும் அடையாளப்படுத்துகிறது. தீவிர வாசகன் தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டிய முக்கிய படைப்புகளை அடையாளம் காட்டும் சிறப்பான நூல் இது.

வெளியீடு : உயிர்மை பதிப்பகம்


செகாவின் மீது பனி பெய்கிறது

தமிழ் நவீன இலக்கியத்தை உருவாக்கியதில் ரஷ்ய இலக்கியங்களுக்கு முக்கிய பங்கிருக்கிறது. டால்ஸ்டாய் தஸ்தாயெவ்ஸ்கி,கார்க்கி, செகாவ், கோகல், புஷ்கின். துர்கனேவ், லேர்மன்தேவ், குப்ரின், கோரலங்கோ, சிங்கிஸ், ஜந்மாதவ் என்று நீளும் ரஷ்ய இலக்கியப்படைப்புகளே தமது ஆதர்சம் எனும் எஸ். ராமகிருஷ்ணன் அது குறித்து தமது ஆழ்ந்த புதிதலையும் அனுபவத்தையும் இந்த நூலின் வழியே வெளிப்படுத்தியிருக்கிறார்.

வெளியீடு : உயிர்மை பதிப்பகம்


நகுலன் வீட்டில் யாருமில்லை

Fables and Parables எனும் குறுங்கதை வடிவம் உலகெங்கும் ஒரு தனித்த இலக்கிய வகைமையாக எழுதப்பட்ட போதும் தமிழில் அத்தகைய முயற்சிகள் போதுமான அளவு நடைபெறாத சூழலில் எஸ்.ராமகிருஷ்ணனின் இந்தக் குறுங்கதைகளின் தொகுப்பு வெளிவருகிறது. இக்கதைகள் குறுங்கதைகளுக்கே உரிய கச்சிதத்துடனும் படிமத்தன்மையுடனும் எழுதப்பட்டடுள்ளன. மிகக் கூர்மையான அங்கதத்தினையும் தத்துவ நோக்கையும் வெளிப்படுத்தும் இக்கதைகள் மரபான நம்பிக்கைகள், தொன்மங்கள், கவித்துவமான உருவகங்கள் வழியே நவீன வாழ்வு குறித்து தீவிரமான பிரக்ஞையைக் கொண்டிருக்கின்றன. இதில் ஒன்றிரண்டைத் தவிர மற்றவை முதல்முறையாக இந்தப் புத்தகத்தில்தான் அச்சேறுகின்றன.

வெளியீடு : உயிர்மை பதிப்பகம்


பதினெட்டாம் நூற்றாண்டின் மழை

கதை என்பது ஒரு ரகசியமான புதிர் விளையாட்டு. நாம் அந்த விளையாட்டில் பாதியில் கலந்து கொள்கிறோம். பாதியில் விலகியும் விடுகிறோம். அதற்குள் என்ன நடக்கிறது? ஏதொவொரு சம்பவத்தையோ, நிகழ்வையோ, கதாபத்திரத்தினயோ பின்தொடர்ந்து செல்கிறோம். நினைவுகள், சமிக்ஞைகள், உணர்வெழுச்சிகள், அறிந்த, அறியாத நிலக்காட்சிகள் தோன்றி மறைகின்றன. சொற்களின் வழியே உருவான ஒரு உலகை நாம் நிஜ உலகோடு அடையாளப்படுத்துகிறோம். பொருத்திப் பார்க்கிறோம் புரிந்துகொள்கிறோம். அல்லது தவற விடுகிறோம். கதைகள் தான் சொல்ல வந்த விஷயத்தை மட்டுமே புரியவைப்பதில்லை. அவை புலன்களோடு விளையாடுகின்றன. புலன்களைக் கிளர்ந்து எழச் செய்கின்றன. அல்லது ஒடுக்குகின்றன. வாழ்வனுபவம் உருவாக்காத நினைவுகளை நமக்குள் உருவாக்குகின்றன.

எல்லோரது கதைகளின் அடியிலும் சுயசரிதையின் மெல்லிய நீரோட்டம் ஓடிக்கொண்டிருக்கிறது. அது எழுத்தாளன் மட்டுமே அறிந்த நதி.

இது எஸ்.ராமகிருஷ்ணனின் எட்டாவது சிறுகதைத் தொகுதி.

வெளியீடு : உயிர்மை பதிப்பகம்


பெயர் இல்லாத ஊரின் பகல் வேளை

நவீன மனிதகுல வரலாறு புலம் பெயர்வுகளின் வரலாறாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. அறிவியலும் தொழில் நுட்பமும் காலம், இடம் சார்ந்த இடைவெளிகளை அழித்துவரும் அதே சமயம் அரசியல், சமூக, பொருளியல் காரணிகளால் மனிதர்கள் இடம் பெயர்வதும் பல்வேறு கலாசார குழப்பங்களுக்கு ஆளாவதும் கடந்த நூற்றாண்டிலும் இந்த நூற்றாண்டிலும் பெரும் மனித அனுபவமாக மாறிவிட்டது. கலைகளும் இலக்கியங்களும் இந்த அனுபவத்தை தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றன. மனிதர்களின் அலைந்துழலும் வாழ்வின் ரகசியங்களைச் சொல்லும் எஸ்.ராமகிறிஷ்ணனின் இக்கதைகள் சிதறுண்டுபோன நவீன மனித வாழ்க்கை குறித்த காட்சிகளை முன்வைக்கின்றன. இக்கதைகள் வாசிப்போம் சிங்கப்பூர் இயக்கத்திற்க்காக பிரத்யேகமாக தேர்ந்தேடுத்து தொகுக்கப்பட்டவை.

வெளியீடு :வாசிப்போம் சிங்கப்பூர், உயிர்மை பதிப்பகம்


சித்திரங்களின் விசித்திரங்கள்

நவீன ஓவியம் குறித்து அறிந்து கொள்ள விரும்புகின்றவர்களுக்கும், சினிமாவிற்கும் ஓவியத்திற்குமான தொடர்பைப் புரிந்து கொள்ள ஆசைப்படுகின்றவர்களுக்கும், ஓவியத்தின் பின் உள்ள கதைகளை, ஓவியனின் வாழ்வை உணர்ந்து கொள்ள முற்படுகின்றவர்களுக்குமான எளிய அறிமுகமே சித்திரங்களின் விசித்திரங்கள்.

இன்றைய சினிமா அதன் ஒளிப்பதிவு முறையில் அதிகம் ஓவியங்களின் பாதிப்பு கொண்டதாக இருக்கிறது. புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்கள் ஸ்டேரெரோ, வில்மாஸ் சிக்மண்ட், நிக்விஸ்ட், கார்டன் வில்லிஸ் போன்றவர்கள் தங்களது உந்து சக்தியாக ஓவியர்களையே குறிப்பிடுகிறார்கள்.

சித்திரங்களின் விசித்திரங்கள் தீராநதியில் தொடராக வெளிவந்து பரந்த வாசகர்களின் கவனத்தைப் பெற்றது.

வெளியீடு : உயிர்மை பதிப்பகம்


வாசக பர்வம்

ஒரு வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் இடையிலான உறவு மௌனங்களும் பதற்றங்களும் நிரம்பியவை. அந்த வாசகனே ஒரு படைப்பாளியாகவும் இருக்கும்போது அந்த உறவு மனோரீதியாகவும் மொழிரீதியாகவும் எண்ணற்ற அலைகளை உருவாக்குகிறது. எஸ் . ராமகிருஷ்ணன் இந்த நூலில் தான் எதிர்கொண்ட படைப்பாளுமைகள் குறித்த அற்புதமான சித்திரங்களை உருவாக்குகிறார். அவை தகவல்களாலோ வாழ்க்கை விபரக்குறிப்புகலாலோ ஆனவையல்ல. மாறாக அந்த எழுத்தாளர்கள் தனது ஆளுமையைக் கடந்து சென்றவிதம் குறித்த கவித்துவம் மிகுந்த பதிவுகள் இவை. அந்தப் பதிவுகளினூடே அவர் அந்தப் படைப்பாளிகளின் முதன்மையான சாராம்சமான படைப்புகள் குறித்த மிக நுண்மையான அவதானங்களையும் வெளிப்படுத்துகிறார். தமிழில் ஒரு எழுத்துக்கலைஞன் தனது முன்னோடிகள் குறித்து எழுதிய ததும்பச் செய்யும் வரிகள் இவை.

வெளியீடு : உயிர்மை பதிப்பகம்


கோடுகள் இல்லாத வரைபடம்

திசைதெரியாத கடலில் சூரியனையும் நட்சத்திரங்ககளையும் துணையாகக் கொண்டு பயணம் செய்த கடலோடிகள் எண்ணிக்கையற்ற விசித்திரங்களைக் கண்டிருக்கிறார்கள். வாசனை திரவியங்கள் வாங்கவும், வணிக வழிகளை உண்டாக்கவும், பௌத்தம் கற்றுக்கொள்ளவும் என வேறு வேறு நோக்கம் கொண்ட பலர் நாடோடிகளாக, பயணிகளாக கடல், மலையறியாமல் சுற்றியலைந்திருக்கிறார்கள். வதைபட்டிக்கிறார்கள். நிலக்காட்சிகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

அப்படி உலகைச் சுற்றிவந்த பிரசித்தி பெற்ற யாத்ரீகர்களான யுவான்சுவாங், பாஹியான், வாஸ்கோட காமா, அல்பெருனி, மார்கோ போலோ உள்ளிட்ட பதிமூன்று பயணிகளைப் பற்றியது கோடுகள் இல்லாத வரைபடம்.
இலக்கற்று ஊர்சுற்றித் திரியும் என் பயணங்களுக்கு இவர்களையே முன்னோடிகளாகக் கொள்கிறேன். அந்த வகையில் என் முன்னோடிகளைப் பற்றிய அறிமுகமும் நினைவுப்பகிர்தலுமே இந்தக் கட்டுரைகள்.

வெளியீடு : உயிர்மை பதிப்பகம்


காற்றில் யாரோ நடக்கிறார்கள்

என் கட்ரைகள் எளிமையானவை. அவை ஒரு வாசகன் அல்லது பார்வையாளன் என்ற முறையில் என் மனதின் பிரதிபலிப்புகளை, நான் உள்வாங்கிக் கொண்ட விஷயங்களை முன்வைக்கின்றன. ஆனால் இவை வெறும் ரசனையின் பிரதிபலிப்புகள் மட்டுமில்லை. அதைத் தாண்டிய தளங்களை கவனத்திற்கு உட்படுத்துகின்றன.

என் தனிமையைப் பகிர்ந்து கொண்ட இந்தப் புத்தகங்கள், சினிமா, இசை போன்றவை உங்களுக்குள் நிரம்பியுள்ள தனிமையையும் போக்கக்கூடும் என்ற பகிர்தலே இந்தக் கட்டுரைகளின் அடிப்படை.
இதில் பெரும்பான்மை என் இணையதளத்தில் வெளியானவை. அத்தோடு கல்குதிரை, கணையாழி, அட்சரம் போன்ற இலக்கிய இதழ்களிலும், விகடன், குமுதம், தினமணி, சண்டே இந்தியன் போன்ற வார இதழ்களிலும் வெளியானவை.

வெளியீடு : உயிர்மை பதிப்பகம்


ஆலீஸின் அற்புத உலகம்

இரவானது எங்கிருந்தோ ஒரு வண்ணத்துப் பூச்சியைப் போல தன் மென்சிறகுகளை அசைத்தபடி நம் உறக்கத்தினுள் புகுந்து கொள்கின்றன கனவுகள். சிறுவயது கனவுகளால் நிரம்பியது. கனவு ஒரு பள்ளத்தாக்கு அதன் ஆழம் நாம் கண்டறிய முடியாதது. அங்கு நம் குரல் நம்முன்னே எதிரொலிக்கின்றது. தாவங்களும், பறவைகளும், மிருகங்களும், நாமும் கனவில் ஒரே பாஷையில்தான் பேசுகின்றோம். கதைகள் கனவுகளாகவும், கனவுகள் கதைகளாகவும் உருமாறிக்கொண்டிருந்த நாட்கள் அவை.

பத்து வயதில் ஆலீஸின் உலகத்தை வாசித்தேன். ஆலீஸைப் போலவே அன்று நானும் ஒரே நாளில் வளர்ந்து விட்டது போலிருந்தது. அவளைப் போலவே பேசவும், யோசிக்கவும் ஆசையாகயிருந்தது. வீட்டில், கிணற்றடியில், வேப்ப மரத்தின் மீது, கோவில்படிக்கட்டில், வகுப்பறையில் என எத்தனை இடங்களில் வாசித்த போதும் ஆலீஸ் அலுக்கவேயில்லை. ‘ஆலீஸின் அற்புத உலகம்’ குழுந்தைகளுக்கான புத்தகம் மட்டுமல்ல. எந்த வயது மனிதர் வாசிக்கும்போது அவரைக் குழுந்தையாக்கிவிடும் மாயக் கண்ணாடி அது.
எளிமையாகவும், அதே நேரம் லூயிகரோலின் பகமடியும், கேலியும் சிதைந்துவிடாமல் மொழியாக்கம் செய்ய முயற்சித்திருக்கிறேன்.

வெளியீடு : விஜயா பதிப்பகம்


ஆதலினால்

சில நாட்களின் முன்பாக பேருந்தில் தாகமிகுதியால் அழுது கூக்குரலிடும் குழுந்தையொன்றை கண்டேன். பயணிகளில் எவரும் அந்தக் குழுந்தைக்கு தாங்கள் வைத்திருந்த குடி தண்ணீரில் இருந்து ஒருமடங்கு தருவதற்கு முன் வரவில்லை. வெயிலும் நெருக் கடியும் தாங்கமுடியாமல் குழுந்தை அழுகிறது. அதன் குரல் எவர் செவியையும் தாக்கவில்லை செல்பேசிகளில் உரையாடிய படியும், தினசரி பேப்பர்களை வாசித்தபடியும் மக்கள் இயல்பாக பயணம் செய்கிறார்கள். குழுந்தையின் கிராமத்து தாய் தண்ணீரை சுமந்து வர மறந்து போனவளாக விழிக்கிறாள். குரல் சோர்ந்த குழுந்தை அழுகையை நிறுத்தி விம்மிக் கொண்டு மட்டும் இருந்தது. குடி தண்ணீரை விலைக்கு வாங்கி பாதுகாப்பாக அடுத்தவர் அருந்தி விடாமல் கொண்டு செல்லும் இந்த அரிய மனிதர்களோடுதான் சேர்ந்து வசித்துக் கொண்டிருக்கிறேன்.

இந்தக் குற்றவுணர்வுதான் என்னை எழுதச் செய்கிறது. என்னை சுற்றிய உலகம் ஆயிரக்கணக்கான மனிதர்களை அவர்களின் அடையாளத்தை அழித்து கழிப்பறை புழுக்கள் போல அலைந்து திரிய விட்டிருக்கிறது. பிழைப்பிற்காக வந்தேறியவர்கள் தங்கள் அவமானங்களையும், அவமதிப்புகளையும் தாங்கிக் கொண்டு கவிழ்ந்ந்த தலையோடு ஏதாவது செய்து வாழ்ந்துவிட முடியும் என்று முட்டிமோதுகிறார்கள்.

நம்மைச் சுற்றிய மனிதர்களில் நம் கவனம் செல்லாத சிலரின் மீதான என் அக்கறைகளே இந்தக் கட்டுரைகள்.

வெளியீடு : விஜயா பதிப்பகம்


அதே இரவு அதே வரிகள்

எஸ். ராமகிருஷ்ணன் நடத்திய அட்சரம் இலக்கிய இதழில் வெளியான மொழிபெயர்ப்புகளின் தேர்ந்தெடுத்த தொகை நூல் இது.

நோபல் பரிசு பெற்ற படைப்பாளிகளின் நேர்காணல்கள், நோபல் பரிசு ஏற்புரைகள், உலக இலக்கிய கட்டுரைகள், மொழிபெயர்ப்பு கதைகள் ஆகியவை இதில் இடம் பெறுகின்றன. இதில் மார்க்வெஸ், இசபெல் ஆலண்டே, போர்ஹோ, குந்தர் கிராஸ், மிலாராட் பாவிக், மிலன் குந்தேரா, காப்கா, தஷ்தாஎவ்ஸ்கி, மாபௌஸ், ஜோசேசரமாகோ, கென்சுபரோ ஓயி, ஏ.கே.ராமானுஜம் உள்ளிட்ட பல உலகப் புகழ்பெற்ற படைப்பாளிகளின் படைப்புகள் இதில் இடம் பெற்றுள்ளன.

இந்தத் தொகுப்பின் வழியே உருவாகும் படைப்பனுபவமும் கருத்தாக்கங்களும் மிகுந்த மன எழுச்சியை உருவாக்குகிறது. உலக இலக்கியத்தின் ஆதாரமான சுருதியை கோடிட்டுக்காட்டுகிறது.

வெளியீடு : உயிர்மை பதிப்பகம்


கேள்விக்குறி

உலகில் இதுவரை கோடான கோடிக் கேள்விகளும் பதில்களும் தோன்றி மறைந்திருக்கின்றன. மனித சந்தேகங்கள், வலிகள், துக்கங்கள், பிரமிப்பு, மறதி முட்டாள்தனம், புரியாமை இவைதான் எல்லாக் கேள்விகளுக்கும் விதைகளாக இருக்கின்றன.

வாழ்க்கை ஏற்படுத்தும் காயங்களிலிருந்து உருவாகும் எளிய வினாக்களையே நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ‘என்னை ஏன் யாருமே புரிஞ்சிக்க மாட்டேங்கிறாங்க?’, ‘எதுக்கெடுத்தாலும் ஏன் பொய் சொல்ல வேண்டியது இருக்கு?’, ‘இந்தக் காலத்துல யாரை நம்ப முடுயுது சொல்லுங்க?’, ‘என்னைப்பத்தி என்னதான் நினைச்சுட்டு இருக்கீங்க?’, ‘என்னை ஏன் எவனுமே மதிக்க மாட்டேங்கிறான்?’… என இவை போன்று, வாழ்வு எழுப்பும் எண்ணிக்கையற்ற வினாக்கள் மனதில் ஆழமான வலியை உருவாக்குகின்றன.
உண்மையில், ஒவ்வொரு மனிதனும் நூற்றுக்கணக்கான கேள்விகளைச் சுமந்துகொண்டுதான் இருக்கிறான். சிறியதும் பெரியதுமான பதிலற்ற கேள்விகள் ஒரு நீருற்றைப் போல நமக்குள் பொங்கியபடியே இருக்கின்றன. கேள்வியில்லாத மனிதர்களே இல்லை. கேள்வி ஒரு சாவி. அதன் வழியாகத் திறக்கப்படும் கதவுகளின் எண்ணிக்கை அதிகம்.

வெளியீடு : உயிர்மை பதிப்பகம்


மலைகள் சப்தமிடுவதில்லை

எழுத்து – வாழ்க்கை என்ற இரண்டு எதார்த்தங்களுக்கு இடையே உருவான எஸ்.ராமகிருஷ்ணனின் மன உலகைச் சித்தரிப்பவை இந்தக் கட்டுரைகள்.

இந்த உலகில் கனவுகள், வாதைகள், கசப்புகள், ஆச்சரியங்கள் அழிக்கமுடியாத புதிர்கள் என எண்ணற்ற வண்ணங்கள் நிரம்பி இருக்கின்றன.
புனைவுகள் உருவாக்கும் ரகசியத் தடங்களும் அன்றாட உலகின் சிடுக்குகளும் இந்தக் கட்டுரைகள் எங்கும் பதிவாகின்றன. எழுத்து தரும் அமைதியின்மைகள், மனிதர்களின் வினோதங்கள், நவீன வாழ்க்கை முறையின் கோளாறுகள் என வெவ்வேறு தளங்களில் சஞ்சரிக்கும் இக்கட்டுரைகள் ஆழமான கேள்விகளையும் உரையாடல்களையும் வாசகனின் மனதில் உருவாக்குகின்றன.

வெளியீடு : உயிர்மை பதிப்பகம்


பேசத்தெரிந்த நிழல்கள்

இவை சினிமா குறித்த விமர்சனக் கட்டுரைகள் அல்ல. உலக சினிமாவையும், தமிழ் சினிமாவையும் தொடந்து பார்க்கும் ஒரு பார்வையாளனின் குறிப்புகள் அல்லது அவதானிப்புகள் என்று சொல்லலாம்.

கோட்பாடுகள், தத்துவங்கள் மற்றும் ஆழ்ந்த விமர்சனச் கூறுகளை முன்வைத்து இவை எழுதப்படவில்லை. என்னை பாதித்த சில படங்கள், அதற்கான காரணங்கள், அதிலிருத்து மீளும் நினைவுகள், நான் சந்தித்த சில திரை நட்சத்திரங்கள், அவர்கள் குறித்த ஞாபகங்கள், இவையே இந்தக் கட்டுரைகளின் அடிநாதம்.

வெளியீடு : உயிர்மை பதிப்பகம்


யாமம் நாவல்

எண்ணற்ற உள் மடிப்புகள் கொண்ட இரவாகவும் அற்புத த்தின் தீராத வாசனையாகவும் உருக்கொள்ளும் யாமம் பல நூறு ஆண்டுகளின் சரித்திரத்தின் வழியே மனித அந்தரங்கத்தின் புதிர் மிகுந்த கதையினை எழுதுகிறது. கீழத்தேய மரபின் வினோதங்கள் மிகுந்த ரகசியங்களும் மேற்குலகின் நவீனத்துவ நீரோட்டமும் ஒன்றையொன்று கடந்து செல்லும் ஒரு காலகட்டத்தை பின் புலமாகக் கொண்ட இந்நாவல் யதார்த்தம் புனைவு என்ற எல்லைகளைக் கடந்து கவித்துவத்தின் அதீத மன எழுச்சியை உருவாக்குவதுடன் அழிவுகள், வீழ்ச்சிகளுக்கு இடையேயும் பெருகும் வாழ்வின் பரவசங்களையும் மகத்துவங்களையும் விவரிக்கிறது.

வெளியீடு : உயிர்மை பதிப்பகம்


எப்போதுமிருக்கும் கதை நேர்காணல்களின் தொகுப்பு

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வெவ்வேறு இலக்கிய இதழ்களில் வெளியான நேர்காணல்களின் தொகுப்பு இது. தொடரும் உரையாடலின் வழியே படைப்பிலக்கியம் குறித்தும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான அவதானிப்புகள் மற்றும் விமர்சனங்களை பகிர்ந்து கொள்கிறார். இந்த நேர்காணல்கள் படைப்பாளியின் தனிப்பட்ட பார்வைகள் என்பதைத் தாண்டி புனைக்கதை குறித்த ஆழ்ந்த விசாரணையை முன் வைக்கின்றன. புதியதொரு கதையியலை நோக்கி வாசகனை அழைத்துச் செல்லும் முனைப்பும் உலக இலக்கியத்தின் பரந்த வாசிப்பு அனுபவமும் முழுமையாக வெளிப்படுகின்றன என்பதே இந்த நேர்காணல்களின் சிறப்பம்சம்

வெளியீடு : உயிர்மை பதிப்பகம்


அயல் சினிமா கட்டுரைகள்

உலக சினிமாவின் புதிய திசையை அடையாளம் காட்டும் இந்நூல் கொரியா, பிரான்ஸ், ருஷ்யா, ஹாங்காங்க், மெக்சிகோ, சீனா, இத்தாலி, ஸ்பெயின், நியூசிலாந்து, அமெரிக்கா என பத்து முக்கிய தேசங்களின் இளம் இயக்குனர்களையும் அவர்களது முக்கிய திரைப் படங்களையும் ஆராய்கிறது.
சினிமா வெறும் நுகர் பொருள் என்பதைத் தாண்டி கலாச்சாரம் மற்றும் சமூக அரசியல் மாற்றங்களை நுட்பமாகப் பதிவு செய்யும் வடிவமாகத் தன்னை எப்படி உருவாக்கிக் கொள்கிறது என்பதையே இந்தக் கட்டுரைகள் விவரிக்கின்றன.சமகால உலக சினிமாவைப் புரிந்து கொள்ளவும் தமிழ் சினிமாவில் புதிய மாற்றங்களை உருவாக்கவும் விரும்பும் அனைவருக்கும் மிக நெருக்கமானது இந்நூல்.

வெளியீடு : உயிர்மை பதிப்பகம்


என்றார் போர்ஹே கட்டுரைகள்

லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் தனிப்பெரும் ஆளுமையான ஜோர்ஜ் லூயி போர்ஹேயை அறிமுகம் செய்கிறது இந்நூல். புனைவின் எல்லையற்ற சாத்தியங்களை தனது எழுத்தில் உருவாக்கிக் காட்டிய போர்ஹே கவிதை , தத்துவம், விஞ்ஞானம், கணிதம், மெய்த்தேடல், மிகை கற்பனை என்று பல்வேறு தளங்களிலும் இயங்கிய படைப்பாளி. நூற்றாண்டுகளாக மனித மனம் கடந்து வந்த புதிர்களும் அடைந்த எழுச்சியும் சந்தோஷமும் அற்புதமும் இவரது படைப்பின் வழியே மீள் உருவாக்கம் செய்யப் பட்டுள்ளன. இந்திய மனதோடு மிக நெருக்கமான உறவு கொண்டுள்ள போர்ஹே கீழ்திசை நாடுகளின் புனைவிலக்கியத்தின் மீது உலகின் கவனத்தைத் திருப்பியவர். இந்நூல் போர்ஹேயின் வாழ்வையும் புனைவையும் தமிழ் வாசகனுக்கு மிக எளிய முறையில் விவரிக்கின்றது.

வெளியீடு : உயிர்மை பதிப்பகம்


கிறுகிறுவானம் குழந்தைகளுக்கான நாவல்

சிறுவர்கள் பல நேரம் தனக்குப் பிடித்த விஷயங்களை யாரோடு பேசுவது எனப் புரியாமல் தன் நிழலோடு , ஆட்டுக்குட்டிகளோடு, அணிலோடு, ஏன் நட்சத்திரங்களோடு கூட பேசத் தொடங்கி விடுவார்கள். அப்படியொரு உரையாடல்தான் இந்தக் கதை. குழந்தைகளுக்கான இந்த நாவல் ஒரு கிராமத்து சிறுவனது பால்ய நாட்களைப் பற்றியது. அவனது பள்ளி வயது நினைவுகள் அவன் குரல் வழியாகவே சொல்லப் படுகிறது.

வெளியீடு : பாரதி புத்தகாலயம்


பதேர் பாஞ்சாலி நிதர்சனத்தின் பதிவுகள் கட்டுரைகள்

ஒரு திரைப்படத்தை எப்படி அணுகுவது என்பதற்கான சில சாத்தியங்களை உருவாக்குவதே இந்தப் புத்தகத்தின் நோக்கம். அதை நோக்கியே இந்த பதிவுகள் அமைந்திருக்கின்றன. பதேர் பாஞ்சாலி படம் வெளியாகி 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு உலகம் முழுவதும் சத்யஜித்ரே கௌரவிக்கப் பட்டார். அதை நினைவு கொள்ளும் விதமாகவும், ஒர் அரிய இந்திய சினிமாவைப் புரிந்து கொள்வதற்கான எனது எத்தனிப்பாகவும் இந்த நூலை கருதுகிறேன்.

வெளியீடு : உயிர்மை பதிப்பகம்


அரவான் நாடகங்கள்

இந்த நாடகங்கள் வாழ்வைத் தீவிர நிலையில் எதிர்கொள்ளும் தருணங்களின் வெளிப்பாடு. தனக்குத் தானே ஒரு மனிதன் உரையாடிக்கொள்ளும் நெருக்கடியிலிருந்துதான் நாடகம் பிறக்கிறது. அதிகார்த்தை எதிர் கொள்வதும் வரலாற்றை, கலாச்சார புனைவுகளை கட்டுடைப்பதும், மனப்பிறழ்வுகளின் மீது மையம் கொள்வதும் என இந்த நாடகங்கள் புதிய நிகழ்வெளிக்கான சாத்தியங்களை உருவாக்குகின்றன.

வெளியீடு : உயிர்மை பதிப்பகம்


இலைகளை வியக்கும் மரம் கட்டுரைகள்

எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகள் அவரது கதைகளைப் போலவே மிக நுட்பமானவை . ஊர் சுற்றுதல், கவிதைகள், நாட்டார் இலக்கியம், இலக்கிய ஆளுமைகள், தினசரி வாழ்வின் குறிப்புகள், என்று பல்வேறு தளங்களில் இயங்கும் இந்த பதிவுகளின் அடித்தளமாக இருப்பது எதிலும் தேங்கி விடாத படைப்பாளியின் முடிவற்ற தேடல். தினசரி வாழ்வின் ஊடாக வெளிப்படும் அற்புத கணங்களை அடையாளம் காண்பதிலும், இயற்கையின் தீண்ட முடியாத தனிமையை எதிர் கொள்வதிலும் கவிதையின் ரகசியச் செயல் பாட்டிலும் அலைவு கொள்ளும் இந்தக் கட்டுரைகள் புதிய வாசிப்பு அனுபவத்தை உருவாக்கக் கூடியவை.

வெளியீடு : உயிர்மை பதிப்பகம்


தேசாந்திரி கட்டுரைகள்

பள்ளிக்கூடமும் புத்தகங்களும் வாழ்வைக் கற்றுத் தந்ததை விட அதிகமாக இயற்கை கற்றுத் தந்திருக்கிறது. என் வீட்டின் வாசலில் நிற்கும் வேம்பு தான் எனது முதல் ஆசான். ஆறுகளிடமிருந்தும, வனத்திடமிருந்தும, மலைகளிடமிருந்தும்.. ஏன் , எறும்புகளிடமிருந்தும்கூட எத்தனையோ கற்றுக் கொண்டு இருக்கிறேன். எனது பயணங்களிலிருந்து நான் கற்றுக் கொண்டும், பின்பற்றுவதும் நினைவில் வைத்திருப்பதும் குறித்த பதிவுகளே இந்தப் புத்தகம்.

வெளியீடு : விகடன் பிரசுரம்


நடந்து செல்லும் நீரூற்று
சிறுகதை தொகுப்பு

அன்றாட வாழ்வின் சொல்லப்படாத துக்கங்களும் தொடப்படாத தனிமைகளும் இக்கதைகளை ஆற்றுப்படுத்த முடியாத கேவல்களின் சித்திரங்களாக மாற்றுகின்றன. ஆழம் காண முடியாத இருளில் உடைந்த மனோரதங்களுடன் வாழ்வைக் கடந்து செல்லும் இக்கதைகளின் பாத்திரங்கள் யார் மீதும் எந்தப் புகார்களும் கொண்டவை அல்ல. மாறாக அவை தம் மறைவிடங்களில் தீமைகளின் இடையறாத பேச்சினைக் கேட்டபடி இருக்கின்றன.

வெளியீடு : உயிர்மை பதிப்பகம்


விழித்திருப்பவனின் இரவு கட்டுரைகள்

நவீன உலக இலக்கியத்தின் வரைபடத்தை உருவாக்கிய மகத்தான படைப்பாளிகளின் புதிர்ப்பாதைகளைப் பற்றிப் பேசுகிறது இக்கட்டுரைகள்.
இப்படைப்பாளிகள் குறித்த பொதுவான இலக்கியப் பிம்பங்களை தாண்டி அவர்களது கனவும் பைத்திய நிலையும் கொண்ட வேட்கைகளை, தேடல்களை விரிவாகப் பதிவு செய்யும் இக்கட்டுரைகள் உயிர்மை இதழில் தொடராக வெளி வந்து பெரும் கவனத்தையும் வரவேற்பையும் பெற்றன.

வெளியீடு : உயிர்மை பதிப்பகம்


கதாவிலாசம் கட்டுரைகள்

கல்வெட்டுகள், சரித்திரத்தை காலம் கடந்தும் வெளிப்படுத்திக் கொண்டிருப்பதைப்போல வாழ்வின் சாரத்தை, கதைகள் வரிகளாக மாற்றி நம் மனதில் எழுதி விடுகின்றன. இந்தக் கதா வரிகள் காலத்தில் அழிக்க முடியாதவை. தண்ணீரைப் போல சதா ஓடிக்கொண்டே இருக்கக் கூடியவை. உடலில் மச்சத்தைப் போல கதைகளும் ஒட்டிக் கொண்டுதான் இருக்கின்றன. எந்த இடத்தில் எந்த வடிவில் என்பது ஒவ்வெருவரும் கண்டறிய வேண்டியது.
எனக்கு விருப்பமான சில கதைகளையும் அந்தக் கதைகளை எழுதியவர்களையும் கதைகளின் வழியே நான் அடைந்த தருணங்களையும் பகிர்ந்து கொள்ள ஏற்பட்ட ஆசையே கதாவிலாசம்

வெளியீடு : விகடன் பிரசுரம்


ஏழுதலை நகரம் சிறார் நாவல்

வயதும் படிப்பும் வளர வளர வேறு வேறு உலகங்களில் சுற்றியலைந்து ஏதோ எழுதிப் படித்து இன்று ஒரு எழுத்தாளனாக உருவாகியிருக்கிறேன். ஆனாலும் பரணில் தூக்கி எறிந்த விளையாட்டுப் பொம்மை போல சிறு வயது கதைகள் தூசு படிந்துக் கிடப்பதை ஒரு நாளில் கண்டுணர்ந்தேன். ஒரு எழுத்தாளனாக நாவல்கள் எழுதுவது, உலக இலக்கியம் பற்றி எழுதுவது இவை யாவையும் தாண்டி எனது பால்ய கால கதைகளின் சாலையில் கொஞ்சம் சுற்றி வர வேண்டும் என்ற ஆசை துளிர்க்கத் துவங்கியது. அப்படித்தான் இந்தக் குழந்தைகளுக்கான நாவலை எழுதத் துவங்கினேன்.

வெளியீடு : விகடன் பிரசுரம்


உறுபசி நாவல்

நவீன வாழ்க்கை முறை உருவாக்கும் ஒவ்வொரு மனிதச் சித்திரத்தின் மீதும் கசப்பின் வண்ணங்கள் நிறைந்த ஒரு கோப்பை எப்போதும் கைதவறி கவிழுந்து விடுகிறது . இப்போது அந்த சித்திரத்திற்கு அர்த்தமோ வடிவமோ இல்லை. சம்பவத்தையோ சம்பத் போன்ற எண்ணற்ற சிதைந்த சித்திரங்களையோ மனிதனைப் பற்றிய எந்த சட்டகத்திலும் மாட்ட இயலாது. இந் நாவல் முழுக்க முழுக்க உலர்ந்த சொற்களால் சொல்லப்படுகிறது. வேர்களும் அடையாளங்களும் அழிந்த வறண்ட மனிதப் பிம்பம் நம்மை நிம்மதி இழக்க வைக்கிறது.

வெளியீடு : உயிர்மை பதிப்பகம்


எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் சிறுகதை தொகுப்பு

நவீன தமிழ் சிறுகதையில் புதிய போக்குகளை உருவாக்கிய எஸ்.ராமகிருஷ்ணனின் முழுமையான சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. காலத்தால் புறக்கணிக்கப்பட்டு சாம்பல் படிந்து கிடக்கும் கிராமங்களையும் நகரங்களை நோக்கி இடம் பெயர்ந்தவர்களாக தனிமையும்
துயரமுமாக அலைவுறும் விளிம்பு நிலை மனிதர்களையும் எஸ்.ராமகிருஷ்ணன் படைப்புகள் எங்கும் காண முடிகிறது. கதை சொல்லலில் பல புதிய சாத்தியங்களை உருவாக்கும் இவரது மிகு புனைவும் கவித்துவ மொழியும் தமிழ்க் கதையாடலில் மிகத் தனித்துவமானது. ராமகிருஷ்ணனின் சிறுகதைகள் புதியதொரு தமிழ் புனைவியலை உருவாக்கு கின்றன என்பதே அதன் சிறப்பம்சம்.

வெளியீடு : கிழக்கு பதிப்பகம்


உலக சினிமா கட்டுரைகள்

சில ஆண்டுகளுக்கு முன்பாக என் நண்பரும் புனே திரைப்படக்கல்லூரியில் படித்த இயக்குனருமான சொர்ணவேலுவுடன் அவரது கிராமத்தில் தங்கியிருந்த போது பகல் முழுவதும் சினிமா பற்றிய பேச்சாகவே நீண்டது. அப்போது அவர் உலக சினிமா பற்றிய ஒரு அறிமுகப் புத்தகத்தை கொண்டு வரலாம் என்ற யோசனையைத் தெரிவித்தார். அது எனக்கும் விருப்பமானதாகவே இருந்தது. ஆனால் இதனை ஒருவர் எழுதுவதை விடவும் பல்வேறு கட்டுரைகள், நேர்முகங்கள் சிறந்த படங்கள், தேவையான தகவல்கள் என்று வரையறுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து உலக சினிமாவின் மீது ஈடுபாடு கொண்ட சில நண்பர்களை இந்தப் பணியில் இணைத்துக் கொண்டேன். இரண்டாண்டுகள் இதற்கான மொழி பெயர்ப்பும் தகவல்களும் திரட்டப் பட்டன. முடிவில் இதனை ஒருங்கிணைத்து திருத்தங்கள் செய்து கொண்டேன். இப்படித்தான் உலக சினிமா சாத்தியமாகியது.

வெளியீடு : கனவுப் பட்டறைம்


ஆலஸின் அற்புத உலகம் சிறுவர் நூல்

மழைத் துளியைப் போல எப்போதுமே புதிதாகயிருக்கிறது ஆலஸின் அற்புத உலகம். இது வியப்பும் மர்மமும் நிறைந்த ஒரு மாயக் கனவு. உலகின் சிறந்த பத்து புத்தகங்களில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது இந் நூல். சிரித்த படியே காற்றில் மறைந்து வேடிக்கை காட்டும் செஷாயர் பூனையைப் போல வாக்கியங்களின் ஊடாக புன்னகையைத் தோன்றி மறையச் செய்வதுதான் இதன் சாதனை.

வெளியீடு : கனவுப்பட்டறை


துணையெழுத்து கட்டுரைகள்

ஒவ்வொரு மனிதனும் கண்ணுக்குப் புலப்படாத ஒரு சிறகைக் கொண்டிருக்கிறான்.
அது அவனை ஒரு வயதிலிருந்து இன்னொரு வயதிற்கு மெதுவாகக் கொண்டு செல்கிறது. துக்கத்திலிருந்து சந்தோஷத்திற்கு, அறியாமையிலிருந்து விழிப்புக்கு, அறிந்ததிலிருந்து ஞானத்திற்கு என அதன் சிறகுகள் அசைந்த படிதான் இருக்கின்றன. ஜென் கவிதையொன்றில் மலைகள் நீந்திக் கொண்டிருக்கின்றன. ஆறு சலனமற்று இருக்கிறது என்று ஒரு வரி இருக்கிறது. அதுதான் வாழ்வின் அரூபமான பயணம்.

துணையெழுத்தின் வழியாக என் வாழ்வை நானே அவிழ்த்துப் பார்த்துக்கொண்டேன்.

வெளியீடு : விகடன் பிரசுரம்


பால்ய நதி சிறுகதை தொகுப்பு

கதைகளிடமிருந்து தெரிந்து கொள்ள எவ்வளவோயிருக்கின்றது. பின்னிரவு நேரத்தின் நட்சத்திரங்களைப் போல எங்கோவொரு ஆழத்திலிருந்து கதைகள் மின்னிக்கொண்டிருக்கின்றன. இக்கதைகள் பெரிதும் நிலக்காட்சிகளின் மீது உருவாகியவை வெறுங்கையை மூடினாலும் திறந்தாலும் உள்ளே எதுவும் அற்று இருப்பது ஆச்சரியமில்லையா எனக்கொள்ளும் மன நிலையே இக்கதைகளை எழுதச் செய்திருக்கிறது.

வெளியீடு : உயிர்மை பதிப்பகம்


நெடுங்குருதி நாவல்

வேம்பலையின் மீது படர்ந்திருப்பது யாராலும் தீர்க்க முடியாத சாபத்தின் துர்கனவு. தலைமுறைகளாக இக் கனவை கடந்து கொண்டிருக்கும் மனிதர்களின் வாதைகளும் ஏக்கங்களும் நிலை கொள்ள முடியாத தத்தளிப்புகளும் ஆசா பாசங்களின் இருளும் வெளிச்சமும் இந் நாவலின் முடிவற்ற குருதிப் பெருக்காகின்றன. பொருளற்ற வாழ்வும் மரணமும் தங்கள் வசியக் குரலால் வேம்பலையை நோக்கி மனிதர்களை அழைத்துக் கொண்டே இருக்கின்றன. ஒரு பிரமாண்டமான கனவின் திரை மீது அறியப்படாத யதார்த்தம் ஒன்றை எழுதுகிறது இந் நாவல்.

வெளியீடு : உயிர்மை பதிப்பகம்


வாக்கியங்களின் சாலை கட்டுரைகள்

இந்த நூற்றாண்டின் சிறந்த படைப்பாளிகளான ஜோர்ஜ் லூயி போர்ஹே, மார்க்வெஸ், இடாலோ கால்வினோ, நபகோவ், ரில்கே, யாசுனாரி கவாபத்தா, ஹெர்மன் ஹெஸ்ஸே, காஃப்கா, லூயி பிராண்டலோ, மார்சல் புரூஸ், சி.எஸ் லூயிஸ், ஜாக் லண்டன், ஸ்டீவன் ஹாகின்ஸ், லூயி பிஷர், தார்கோவெஸ்கி, லூயி கரோல் இவர்களின் முதன்மையான புத்தகங்கள் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகள் அடங்கியது இந் நூல்.

வெளியீடு : அட்சரம்


வெயிலைக் கொண்டுவாருங்கள் சிறுகதை தொகுப்பு

பாதரசத்தைப் போல எவர் கையிலும் வசப் படாமலும் சதா அழகு காட்டி உருண்டோடியபடியுமாய் இருக்கிறது கதை என்னும் அபூர்வ திரவம். அன்றாடப் பிரச்சினைகளே கதை என்னும் காலனியக் காமாலை எங்கும் நிரம்பி வழியும் சூழலில் கதை என்பது ஒர் அறிதல் முறையெனக் கொள்ளவும பின் நவீனப் புனைவியலுக்கான கதை மொழியை உருவாக்கவும் முனையும் இக்கதைகளை அதி கதைகள் என அழைக்கலாம். புலன் சார் புனைக் கதைகளாய் இருக்கும் இந்த Modern fables தமிழில் புதிய கதையாடலை உருவாக்க முனைகின்றன.

வெளியீடு : அடையாளம்


உப பாண்டவம் நாவல்

இந்திய மனதின் தொன்மையான நினைவுகள் மகாபாரதத்தின் வழியே கதைகளாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அந்த நினைவுகளின் ஊடாக மனிதர்களின் தீராத போராட்டமும் ஏக்கங்களும் பீறிடுகின்றன. காலத்தின் உதடுகள் என்றும் முணுமுணுத்துக் கொண்டிருக்கும் அந்த மகா காவியத்தின் இடைவெளிகளை தனது கதை சொல்லலின் வழியே புத்துருவாக்கம் செய்திருக்கிறது இந்நாவல். உப கதா பாத்திரத்திரங்களின் வழியே அறியாத கதையும் வெளிப்படுத்தப் படாத துக்கமும் புனைவுருவாக்கம் கொண்டிருக்கின்றன. அவ்வகையில் இது நவீன தமிழ் இலக்கியத்திற்கு பெருமை சேர்க்கும் தனித்துவமான நாவலாகும்.வங்காளம், மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் தற்போது மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.

வெளியீடு : விஜயா பதிப்பகம்


காட்டின் உருவம் சிறுகதை தொகுப்பு

மூப்படைந்த, ஏற்கனவே எல்லோருக்கும் பரிச்சயமான இந்த உலகிற்கு, அதன் விந்தைக்கு, நுட்பத்திற்கு மிகத் தாமதமாக வந்த சேர்ந்தவன் நான். எனக்கு முன்பே கதை உலகு புராதனமானது. இதில் எப்போதும் சொல்பவனின் குரலோடு புதிய உருக்கொள்கின்றன கதைகள்.

இது எனது இரண்டாவது சிறுகதை தொகுதி.

வெளியீடு : அன்னம்


வெளியில் ஒருவன் சிறுகதை தொகுப்பு

எனது முதல் சிறுகதைத் தொகுப்பு.

வெளியீடு : சென்னை புக்ஸ்.ம்


தாவரங்களின் உரையாடல் சிறுகதை தொகுப்பு

எழுத்தின் இரு நாக்குகளான காலம், வெளி தீண்டிப் பிறந்தவை இக்கதைகள். தினசரி வாழ்வின் திரைக்குப் பின்னே நடமாடும் உருவங்கள் கண் வசமாகின்றன. யாவர் இரவிலும் பூனையாக நடமாடி அலைகிறது கனவு. வரிகளுக்கு ஊடே வாழ்வின் பேராறு நிசப்தமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

வெளியீடு : தாமரைச் செல்வி பதிப்பகம்


சிறிது வெளிச்சம்

விகடனில் தொடராக வெளியாக பல்லாயிரம் வாசகர்களின் விருப்பத்திற்குரிய புத்தகம், வாழ்க்கை அனுபவங்களும் உலக சினிமா அனுபவமும் ஒன்றிணைந்த புத்தகம்.

வெளியீடு : விகடன் பிரசுரம்


கால் முளைத்த கதைகள்

சிறுவர்களுக்கான கதைகள், இயற்கை குறித்து உலகம் முழுவதும் ஆதிவாசிகள் சொன்ன கதைகளின் தொகுப்பு.

நம்பிக்கையின் பரிமாணங்கள்

ருஸ்தம் பருச்சாவின் ஆங்கில புத்தகத்தின் தமிழாக்கம், மதம் அதிகாரம் இரண்டிலும் நம்பிக்கை எப்படி முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை பற்றியது.


நம் காலத்து நாவல்கள்

உலக இலக்கியத்தை அறிந்து கொள்வதற்கான முக்கிய புத்தகம், உலகின் சிறந்த புத்தகங்கள்.இலக்கியவாதிகள் பற்றிய ஆழமான கட்டுரைகளின் தொகுப்பு

வெளியீடு : உயிர்மை பதிப்பகம்