தானாஸிஸ்: நீங்கள் ஒரு நாவலை எழுதிக் கொண்டிருக்கும் போது, முந்தைய நாள் எங்கே நிறுத்தினீர்களோ அங்கிருந்தே தான் எப்பொழுதும் தொடர ஆரம்பிப்பீர்களா?
பாவிக்: இல்லை. நான் ஒருபோதும் இந்த விதமாக எழுதுவதில்லை. வெவ்வேறான கதை நிகழ்வுகள் இருக்கின்றன. மெதுவாக அவையெல்லாம் ஒரு வரைச்சட்டகத்திற்குள் பொருந்திக் கொள்கின்றன. மனக் கணக்கு என்ற ஒன்றை மட்டும் சார்ந்து எழுதுகிறேன் –

ஒரு நாவலுக்கென அதற்கேயுரிய வாழ்க்கை இருக்கிறது (அவர் ஒரு சிறிய, பச்சை நிற நோட்டுப்புத்தகத்தைத் தனது காற்சட்டைப் பையிலிருந்து வெளியே எடுக்கிறார். அதனுடைய அட்டையின் மேல் கையால் ஏதோ எழுதி வைத்திருக்கிறார்). இது என்னுடைய புதிய புதினம். கான்ஸ்ட்டாண்ட்டி நோபிலில் கடைசிக் காதல் (Last Love in Constatinople). இப்படித்தான் என்னுடைய புதிய நாவல் உருவாகிறது. இந்தச் சிறிய நோட்டுப் புத்தகத்தில் புதிய நாவல் தொடர்பாய் என் மனதில் தோன்றும் எண்ணங்களையெல்லாம் எழுதி வைக்கிறேன்; தவிரப் பதிவு செய்து வைக்கத்தக்க வற்றையும் எழுதி வைக்கிறேன். Dictionary of the Khazars நாவலுக்கு இது போல ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஒரு நோட்டுப் புத்தகம் வைத்திருந்தேன்.
தானாஸிஸ்: இந்தச் சிறிய நோட்டுப்புத்கத்தின் ஒரு சொற்றோடரை வெற்றுத்தாள் ஒன்றில் உங்களால் எழுதிக் காட்ட முடியுமா?
பாவிக்: ஏன் கூடாது? இதோ – என்னுடைய வருங்காலப் புத்தகத்தின் ஒரு வாக்கியத்தை உங்களுக்குத் தந்து விட்டேன். ஒருவர் நாவலை எப்படி உருவாக்குகிறார் என்பதைப் புரிந்து கொள்ள நீங்கள் அந்தப் புத்தகத்தின் மூச்சுக்காற்றை உணர வேண்டியது அவசியம். ஒவ்வொரு புத்தகமும் சுவாசிக்கிறது. ஒரு நாவலானது மிகச் சரியாக ஒரு குழந்தை பிறப்பதைப் போலவே உருவாகிறது. சிறிய பச்சைநிற நோட்டுப்புத்தகம் பிறக்கப்போகும் ஒரு நாவலின் கருதான். வேறெதுவுமில்லை.
தானாஸிஸ்: அது மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் எப்படி அறிந்து கொள்கிறீர்கள்?
பாவிக்: உங்களுக்கு வாசகரை அலுப்படையச் செய்வதில் விருப்பமில்லையென்றால் நீங்கள் அவனுடைய மூளையின் பரஸ்பரம் ஒன்றுக்கொன்று வேறுபட்ட பல்வேறு மட்டங்களோடு உரையாடலை நிகழ்த்த வேண்டும். அவனுடைய அறிவு, உள்ளுணர்வு, உணர்ச்சிகள், கற்பனைத் திறன், அவனுடைய உள்ளார்ந்த மற்றும் வெளிப்படையான நோக்கங்கள் ஆகிய எல்லாவற்றுடனும் உரையாட வேண்டும்., அவ்விதமாக இயங்கினால் உங்களுடைய புத்தகம் ஒரு மனிதவுயிரைப் போல் மூச்சு விடும். அதை நான் உணர்ந்திருக்கிறேன்.
தானாஸிஸ்: போர்ஹெஸ் இங்கேயிருக்கும் பட்சத்தில் அவரைக் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள விரும்புவது எதுவாக இருக்கும்? அவரைப் பார்த்து நீங்கள் என்ன கேட்பீர்கள்?
பாவிக்: ஒன்றுமில்லை. அதற்குப் பதிலாய் அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருப்பதே எனக்கு விருப்பமான விஷயமாக இருக்கும்.
– அட்சரம் இதழிலிருந்து