புல்லினைக் கடக்கும் காற்று

ஒனா நோ கோமாச்சி (Ono no Komachi) எனும் ஜப்பானியப் பெண் கவிஞரின் பெயரை ஒரு அரிசிக்கு வைத்திருக்கிறார்கள் என்று கேள்விபட்டேன்,

தானியம் ஒன்றுக்குக் கவிஞரின் பெயரை வைத்திருப்பதைப் பற்றி யோசித்துக் கொண்டேயிருந்தேன், ஒரு கவிஞனுக்குக் கிடைக்கும் பொருத்தமான கௌரவம் அதுவெனத் தோன்றியது

கோமாச்சி எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண் கவிஞர்,  பேரழகி, இன்றும் ஜப்பானில் ஒப்பற்ற அழகு கொண்ட பெண்ணைக் கோமாச்சியாக இருக்கிறாள் என்றே குறிப்பிடுகிறார்கள்,

ஒனா நோ கோமாச்சி பற்றிய சுயவிபரக்குறிப்புகள் அதிகம் கிடைக்கவில்லை, ஆனால் அவள் அரச சபைப்பெண்ணாக இருந்திருக்கிறாள் என்ற ஒரு குறிப்பு மட்டுமே கிடைத்துள்ளது,

தனிமையை, பொங்கும் காமத்தை, அடக்கி வைக்கபட்ட காதலைப் பாடுவதில் கோமாச்சி தனிச்சிறப்பு பெற்றிருக்கிறார், காதலன் கைவிட்ட நிலையில் வறுமையில், முதுமையில் பிச்சையெடுத்தபடியே அலைந்து திரிந்தார் கோமாச்சி என்றும்  ஒரு கதையிருக்கிறது. இவளது கதாபாத்திரத்தை முதன்மைப்படுத்தி ஜப்பானிய நோ நாடகம் ஒன்று நிகழ்த்தப்பட்டிருக்கிறது,

கோமாச்சியின் 36 கவிதைகள் ஜப்பானியப் பெண்கவிஞர்கள் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன

கோமாச்சியின் கவிதைகளை வாசிக்கையில் சங்கால பெண்கவிஞர்களின் கவிதை போலவே இருக்கிறது, பிரிவும் தவிப்பும் மேலோங்கிய பெண்ணின் காதலைப்பாடுகின்றன இந்தப் பாடல்கள்

புல்லினை கடந்து செல்லும் காற்றைப் போலவே தன்னை காதல் தன்கட்டிற்குள் இல்லாமல் ஆக்குகிறது, காதலின் வருகையில் தனது மொத்த இருப்பும் அதிர்ந்து போகிறது, காதல் ஒரு எரிதழல், அதன் சீற்றம் தனது மார்புகளை வெடிக்க வைக்கிறது என்று காதலின் சீற்றத்தை பாடுகிறார் கோமாச்சி

சித்திரத்தில் உள்ள மயில்

கூவுவதில்லை, நினைவில்

உள்ள நீ

என்னுடன் பேசாதது போலவே.

•••

பூக்கள் நினைவுபடுத்துகின்றன

கோடை முடிந்துவிட்டதென

காத்திருப்பதில் பயனில்லை இனி நான்

என்பதையும்

••

காதல் என்பது

அக்கறை எனும் சங்கிலியால்

நம்மை பிணைத்துக் கொள்வதன்றி

வேறில்லை

••

உதிர்தலில் நிறைவு பெறுகின்றன

பூக்கள்

சிலவேளை மரணத்தில் நிறைவு

காண்கிறார்கள் காதலுற்ற பெண்கள்

••

நீ பிரிந்து சென்ற

பிறகு கனவில் கூட

பெய்வதில்லை

மழை

•••

கனவிலோ

உன்னைத் தேடி நீண்ட பாதைகளில்

கால் ஒய்ந்து போக நடக்கிறேன்

விழிப்பிலோ

உன்னைக் காண

ஒரு அடி முன்நகரவில்லை

•••

0Shares
0