பூமியின் மாற்றங்கள்

Humans now change the Earth and its systems more than all natural processes combined – Anthropocene

ANTHROPOCENE: The Human Epoch என்ற டாகுமெண்டரி திரைப்படத்தைக் கண்டேன். இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் ஆறு கண்டங்களில் 20 நாடுகளுக்குப் பயணம் செய்து மனிதர்கள் பூமியில் ஏற்படுத்தியுள்ள சுற்றுச்சூழல் தாக்கத்தை ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். வியப்பூட்டும் காட்சிகளும் அதிர்ச்சி தரும் தகவல்களும் நிரம்பிய அரிய ஆவணப்படமிது.  இப் படத்தை உருவாக்க நான்கு ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார்கள்.

கென்யாவின் நைரோபியில் தந்தங்களுக்காக ஆயிரக்கணக்கில் யானைகள் வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்டிருக்கின்றன., யானைத் தந்தம் விற்பது தடைசெய்யப்பட்டிருந்த போதும் கள்ளத்தனமாகக் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. கடத்தல்காரர்கள் வைத்திருந்த நூற்றுக்கணக்கான யானைத்தந்தங்களை மீட்கும் ஒரு பகுதி இந்த ஆவணப்படத்தில் காட்டப்படுகிறது.

மீட்கப்பட்ட யானைத்தந்தங்களை ஒன்றின் மீது ஒன்று அடுக்கி கோபுரம் போகலாக்குகிறார்கள். முடிவில் அந்தத் தந்தங்கள் யாவும் தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் தீயிட்டுக் கொளுத்தப்படுகின்றன. உலகில் இப்படி ஒரு நிகழ்வு இதன் முன்பு நடைபெற்றதில்லை என்பதால் அதைச் சிறப்பாக ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். கென்யாவின் வனக்காவல்துறையில் பணியாற்றும் ஒரு பெண் ஊழியர் தந்தங்கள் மனிதர்களுக்கானவையில்லை. அவை யானைகளுக்கு மட்டுமே சொந்தமானவை எனக்கூறும் நேர்காணல் மிகச்சிறப்பாக உள்ளது.

இது போலவே உலகின் மிகவும் மோசமான சுற்றுச்சூழல் பாதிப்பு கொண்ட ரஷ்யாவின் நோரில்ஸ்க் நகரில் நடைபெறும் உலோகத் திருவிழாவில் மக்கள் கலந்து கொண்டு சுரங்கப் பணிக்கான இயந்திரங்களைப் பார்வையிடுவதும். சுரங்கள் நிரம்பிய நோரில்ஸ்கின் இயல்பு வாழ்க்கை பற்றியும் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.

உலகின் மிக நீண்ட குகை ரயில் பாதை திறப்பு விழா பற்றியும் அதனுள்ளே ரயில் செல்லும் பயணத்தையும் மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

சீலேயின் அட்டகாமா பாலைவனத்தில் லித்தியம் கிடைக்கிறது. இன்று உலகெங்கும் பயன்படுத்தப்படும் மின்கலங்களுக்கு லித்தியமே மூலப்பொருள் என்பதால் லித்தியம் எப்படிக் குளங்களில் தேக்கி வைக்கப்பட்டு சூரிய வெப்பத்தால் ஆவியாக்கப்படுகிறது என்பதைக் காணும் போது இயற்கையின் வியப்பையும் மனிதர்கள் எந்த அளவு இயற்கை வளங்களை உறிஞ்சிப் பணமாக்குகிறார்கள் என்பதும் தெளிவாக உணரமுடிகிறது

நிலக்காட்சிகளை இதுவரை யாரும் இத்தனை சிறப்பாகப் படமாக்கியதில்லை என்றே சொல்வேன்.

சீனாவில் கடல் சீற்றத்தைக் கட்டுப்படுத்த தடுப்புச் சுவர் உருவாக்குகிறார்கள். அது ஒரு அரணாகப் பலப்படுத்தப்பட்டுள்ளது  இந்தப் பணியில் வேலை செய்கிறவர்கள் இருபது ஆண்டுகளாகக் கடற்கரையை இப்படிக் காங்கிரீட் பாளங்களைக் கொண்டு தடுப்பு அரண் அமைத்து வருவதைச் சொல்கிறார்கள்.

இது போலவே ஜெர்மனியில் இதுவரை உருவாக்கப்பட்ட இயந்திரங்களில் மிகப் பெரியதாக ஆயிரம் கைகால்கள் கொண்ட ராட்சச மிருகம் போன்ற  ஒரு இயந்திரம் சுரங்கப்பணியில் பயன்படுத்தப்படுகிறது. அந்த இயந்திரம் மனிதர்களின் பேராசையின் மொத்த உருவம் போலவேயிருக்கிறது

சிற்பி மைக்கேல் ஆஞ்சலோ தனது பளிங்கு சிலைகளுக்கான பளிங்கைத் தேடி எடுத்த கராராவினை பற்றிய பகுதி முக்கியமானது. கராராவின் பளிங்கு குவாரியில் பளிங்குக் கற்கள் வெட்டி எடுக்கப்படும் விதமும் அதற்கான இயந்திரங்களும் பெரும் பாளம் பாளமாக இயற்கை கூறுபோட்டு விற்கப்படுவதையும் காணும் போது பதைபதைப்பாகவே உள்ளது

சுரங்கத்தில் ஒரு பளிங்குத் தொகுதியைப் பிரித்தெடுக்க முந்தைய காலங்களில் 20 நாட்கள் ஆனது , ஆனால் இன்றுள்ள தொழில்நுட்பம் ஒரே ஒரு நாளில் அவ்வளவு பளிங்கு பாறைகளையும் வெட்டி எடுத்துவிடுகிறது என கராரா தொழிலாளி கூறுகிறார். நவீனத் தொழில்நுட்பம் இயற்கை அழிப்பதற்கு எவ்வளவு உதவிகரமாக இருக்கிறது என்பதன் நேரடி சாட்சியமது.

சுயலாபங்களுக்காக மனிதர்கள் இயற்கையைச் சூறையாடி வருகிறார்கள். இதன் பாதிப்பு மிகமோசமாகப் பருவமாறுதல்களில் வெளிப்படுகிறது. எதிர்காலத் தலைமுறையினருக்குப் பசுமையான உலகை மனிதர்கள் விட்டுப்போகவில்லை. பெருமரங்களை இயந்திரங்கள் வெட்டி வீழ்த்தும் காட்சி இந்த ஆவணப்படத்தில் உள்ளது. வான் நோக்கி உயர்ந்து நின்ற மரங்கள் வெட்டித் தள்ளப்படுகின்றன. அந்த மரம் சரிந்து விழும் போது மனிதர்கள் மீதான நம்பிக்கையும் சேர்ந்து விழுவது போலவேயிருக்கிறது

எண்பத்தைந்து சதவீத காடுகள் மனித பயன்பாட்டின் மூலம் அழிக்கப்பட்டுள்ளன அல்லது சீரழிந்துள்ளன. என்கிறது இந்த ஆவணப்படம்

தொடர்ந்து வரும் காலநிலை மாற்றம் நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை மிகமோசமாகப் பாதிக்கிறது. புவி வெப்பமடைதல் காரணமாகப் பனிப்பாறைகள் உருகுகின்றன, கடல் மட்டங்கள் உயருகிறது. அரிய உயிரினங்கள் அழிந்து போகின்றன. அத்தோடு வெள்ளம், வறட்சி மற்றும் சூறாவளி போன்ற கடுமையான வானிலை நிகழ்வுகள் ஏற்படுவதற்கும் புவிவெப்பமடைதலை காரணமாகிறது.

இந்த ஆவணப்படம் பூமியின் மீது மனிதர்கள் ஏற்படுத்திய பல்வேறு விதமான சுரண்டல்கள் மற்றும் மாற்றங்களை விரிவாக எடுத்துச் சொல்கிறது. . இயக்குநர்கள் ஜெனிபர் பைச்வால் மற்றும் நிக்கோலஸ் டி பென்சியர், புகைப்படக் கலைஞர் எட்வர்ட் பர்டின்ஸ்கியுடன் சேர்ந்து இந்த அரிய ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்

ஏறக்குறைய 10 ஆண்டுக்கால ஆராய்ச்சிக்குப் பிறகு, ஆந்த்ரோபோசீன் என்ற விஞ்ஞானிகளின் குழு புவியில் ஏற்பட்டுள்ள சூழலியல் மாற்றங்களை, பாதிப்புகளைக் கணக்கிட்டு புவியின் எதிர்காலம் குறித்த கேள்வியை எழுப்பியது. அதன் அடிப்படையில் தான் இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இதே ஆவணப்படக் குழுவினர் முன்னதாக Manufactured Landscapes (2007) Watermark (2014) என இரண்டு ஆவணப்படங்களை உருவாக்கியுள்ளார்கள்.

பூமியிலுள்ள இயற்கை வளங்களைக் காக்க வேண்டியது நம் அனைவரின் கடமை, அதை செய்யத்தவறினால் இயற்கையின் சீற்றம் மிகமோசமாக இருக்கும்  என்பதை இந்தப்படம் அழுத்தமாகச் சொல்கிறது.

0Shares
0