பீகாக் ஒரு சிறிய நகர்புறம். அங்கே ரயில் தண்டவாளத்தை ஒட்டிய வீடு. தனிமையான சுற்றுப்புறம். ஒரு வீட்டின் கதவு லேசாகத் திறக்கபடுகிறது. வெளியே கிடந்த நாளிதழை ஒரு பெண் அவசரமாக எடுத்துக் கொண்டு கதவை மூடிக் கொள்கிறாள்.
அவள் தனியே சமையல் செய்கிறாள். வீட்டை சுத்தம் செய்கிறாள். துவைத்த துணிகளை வெளியே காயப்போடுகிறாள். சமைத்த உணவை ஒரு மேஜையில் எடுத்து வைக்கிறாள். கண்ணாடி ஜன்னல் வழியாக அடுத்த வீட்டு பிள்ளைகள் பள்ளிக்கு கிளம்புவதை ரகசியமாக வேடிக்கை பார்க்கிறாள். ஒரு குடும்ப தலைவியின் காலை நேரம் போலவே அந்த காட்சிகள் நீள்கின்றன.
அவள் எங்கோ வெளியே கிளம்ப முயற்சிப்பவள் போல ஒரு குறிப்பு எழுதி குளிர்சாதன பெட்டியில் வைத்துள்ள இரவு உணவின் மீது வைத்துவிட்டு கதவை தள்ளிக் கொண்டு அடுத்த அறையினுள் போகிறாள். கண்ணாடி முன்பாக நின்றபடியே தன்னை பார்த்து கொண்டிருக்கிறாள்.
பிறகு மெல்ல தனது தலையில் உள்ள விக்கை கழட்டுகிறாள். முகத்தில் உள்ள லிப்ஸ்டிக்கை துடைக்கிறாள். உடைகளை மாற்றிக் கொள்கிறாள். மறுநிமிசம் அது ஒரு ஆண் என தெரிய வருகிறது. நம்பவே முடியவில்லை. பெண்ணின் சாயலே இப்போது இல்லை.
அந்த ஆண் மிக இயல்பாக அலுவலகம் கிளம்புகிறான். மேஜையில் எடுத்து வைத்திருந்த உணவை அமைதியாக சாப்பிடுகிறான். அந்த பெண் காயப்போட்டிருந்த துணிகள் காற்றில் ஆடுகின்றன. கதவை மூடிக் கொண்டு அவன் அலுவலகம் கிளம்பி செல்கிறான். ஒரே ஆள் காலையில் எழுந்து பெண்ணாக உருமாறி சமையல், வீட்டு வேலைகள் செய்து முடித்துவிட்டு அதே ஆள் ஆணாக உடைமாற்றிக் கொண்டு வேலைக்கு செல்வதில் துவங்குகிறது பீகாக் திரைப்படம். (Peacock – Michael Lander )
ஆண் பெண் என இரண்டு நிலைகளில் ஒரே ஆளே தனித்து வாழும் சிக்கலைப் பேசுகிறது பீகாக். அற்புதமான ஒளிப்பதிவு. ஆகச்சிறந்த நடிப்பு, சீராக நகரும் கதை சொல்லல், மிக குறைவான பாத்திரங்கள் என்று படம் வெகு இயல்பாக உருவாக்கபட்டிருக்கிறது. ஆண் பெண் என்று இரண்டு வேஷங்களில் Cillian Murphy நடித்திருக்கிறார். இதுவரை பெண் வேஷமிட்டவர்கள் அதை கேலிக்குரிய விஷயமாகவே பெரிதும் கையாண்டிருந்தார்கள். இந்த படம் மட்டுமே பெண்ணாக உருமாறுவதற்கு ஆழமான உளவியல் காரணத்தை சொல்கிறது.
ஜான் வங்கி ஒன்றில் அலுவலராக வேலை செய்கிறான். அவனது அம்மா இறந்து போன பிறகு பல வருசமாக தனிமையில் வாழ்கிறான். சிறுவயதில் இருந்து தன்னை எதற்கும் உபயோகமில்லாதவன் என்று வீட்டோர் திட்டி அவமானப்படுத்தியது அவன் மனதில் ஆழமாக பதிந்து போயிருக்கிறது. அம்மாவின் அன்பு மட்டுமே அவனது ஆறுதல். அம்மா இறந்து போன பிறகு அது போன்ற அன்பிற்காக ஏங்குகிறான். அலுவலகத்தில் ஜான் யாருடனும் பேசுவதில்லை. நடுக்கமும் பயமும் கொண்டவனாக இருக்கிறான்.
அவன் மனது சதா துக்கத்திலும் வேதனையிலும் உழன்று கொண்டிருக்கிறது. அதிலிருந்து விடுபடவே அவன் பெண் உருக் கொள்கிறான். பெண்ணாக மாறிய நிலையில் அவன் தன்னை மறந்துவிடுகிறான். அவன் மனது ஜானின் நினைவுகளை முற்றிலும் துண்டித்துவிடுகிறது. தான் வேறு ஆள் என்றே நம்புகிறான். ஆனால் ஜானுக்கு தான் பெண்ணாக உருமாறுகிறோம் என்பது நன்றாக தெரிகிறது. மாறிய பிறகு நடப்பதை தன்னால் கண்ட்ரோல் செய்ய முடியவில்லை என்பதையும் உணர்கிறான். ஆகவே வீட்டை அடைத்து கொண்டு தனியாக பெண் உரு கொள்வதும் ஆணாக மாறுவதுமாக அவனது நாட்கள் கடந்து போகின்றன.
ஒரு நாள் அவன் வீட்டின் அருகில் ஒரு ரயில்விபத்து நடக்கிறது. அப்போது ஜான் பெண்ணாக உருக் கொண்டிருக்கிறான். அந்த விபத்தில் அவன் காயம்படாமல் தப்புகிறான். அண்டை வீட்டார் அப்போது தான் ஜான் வீட்டில் ஒரு பெண் இருப்பதை காண்கிறார்கள். அந்த பெண் யார் என்று விசாரிப்பதற்குள் அவள் உள்ளே ஒடிவிடுகிறாள்.
சில நிமிசங்களில் பயந்து வெளிறிய முகத்தோடு ஜான் வெளியே வருகிறான். அந்தப் பெண்ணை பற்றி எதையும் பேச மறுக்கிறான். அண்டைவீட்டார் அது அவனது மனைவி என்று சொல்கிறார்கள். அந்த பொய்யை ஜான் உறுதிபடுத்த அந்த பெண்ணின் பெயர் எம்மா என்றும் அது தனது மனைவி என்று நடிக்க துவங்குகிறான். இப்போது எம்மாவாக அவன் தைரியமாக வெளியே வருகிறான்.
ஜானிற்கு தெரிந்த பெண்ணான மேகிக்கு உதவி செய்கிறான். அந்த நகரின் மேயர் மனைவியோடு சேவை செய்வதை பற்றி பேசுகிறான். யாவருக்கும் எம்மாவை பிடிக்கிறது. இது ஜானிற்கு மிகுந்த சிக்கலாகி போகிறது. உடனே அவன் ஜானாக உருமாறி எம்மா செய்வது தனக்குபிடிக்கவில்லை. அவளோடு பழக வேண்டாம் என்று அவள் சந்திக்கின்றவர்களை திட்டுகிறான். எம்மாவை பற்றி மோசமாக கத்துகிறான்.
அவ்வளவு நல்ல பெண்ணான எம்மாவை ஏன் ஜான் இப்படி நடத்துகிறன் என்று ஒருவருக்கும் தெரியவில்லை. இதன் இடையில் மேகிக்கு உண்மை தெரிந்துவிடுகிறது. அவள் இதை எப்படி சமாளித்தாள். ஜான் இந்த அகச்சிக்கலில் இருந்து எப்படி வெளிவந்தான் என்பதையே படம் விவரிக்கிறது.
Cillian Murphy தாழ்மையுணர்ச்சி கொண்ட அலுவராகவும் எம்மா என்ற இளம்பெண்ணாகவும் இரண்டு வேடங்களிலும் மிக அற்புதமாக நடித்திருக்கிறார். அதிலும் எம்மா முதன்முறையாக மேகியை வீட்டில் கொண்டு போய்விடுவதற்காக கார் ஒட்டும் காட்சியும், மேயரின் மனைவியோடு பேசியபடியே காரில் வரும் காட்சியும் மறக்கமுடியாதவை.
மேகியின் குழந்தையை ஒரு ஆள் முட்டாள் என்று திட்டுகிறான். அதை பார்த்து கொண்டிருந்த எம்மா ஒரு போதும் குழந்தைகளை திட்டாதீர்கள். அது அவர்களை எவ்வளவு பாதிக்கும் என்று உங்களுக்கு தெரியாது என்று வருத்ததோடு சொல்கிறாள். அது தான் ஜான் எம்மாவாக உருமாறியதற்கான ஆதார காரணம். பிறழ்வு மனப்பாங்கில் இருந்து இது போன்ற செயல்கள் உருவாகின்றன என்ற போதும் மனத்தில் பால்யத்தின் நீங்காத ஏக்கங்களும் அவமானங்களுமே நம்மை உருமாற்றுகின்றன என்பதை படம் அழகாக சுட்டிக்காட்டுகிறது.
பீகாக் படத்தின் விளம்பரங்களில் அந்த பெண் என்ன செய்கிறாள். என்ன நினைக்கிறாள் என்று அவனுக்கு மட்டுமே தெரியும். காரணம் அவன் தான் அந்த பெண் என்று குறிப்பிடப்படுகிறது. இது தான் இரண்டு வரிகளில் கதை சொல்வது என்பது. ஒரு சிறுகதையளவு உள்ள சம்பவங்களை தொய்வில்லாத திரைக்கதையால் அழுத்தமாக விவரித்திருக்கிறது பீகாக்.
படத்தில் ரயில் விபத்து காட்சியொன்று இடம் பெறுகிறது. ஆரம்ப காட்சியில் வீட்டின் பின்புலத்தில் ரயில் ஒடும் சப்தம் கேட்கிறது, பின்பு எதிர்பாராமல் ரயில் தண்டவாளத்தை விட்டு தடம்புரண்டு வீட்டின் மீது மோதி நிற்கிறது. காட்சிபடுத்தலின் வழியே இந்த சம்பவம் அழகாக கதையை முன்நகர்த்துகிறது. ரயில் மோதலின் பிறகு அங்கே சிறார்கள் விளையாடிக் கொண்டிருப்பதை எம்மா கண்ணாடி வழியாக பார்க்கிறாள். அப்போது அவள் முகத்தில் காணப்படும் ஏக்கம் சொற்களற்றது.
எம்மா உலகை அன்பு செய்ய விரும்புகிறாள். ஜான் உலகில் இருந்து தன்னை துண்டித்துகொள்ள விரும்புகிறான். இந்த இரண்டு முனைகளுக்கு நடுவே ஊசாலடுகிறது அவன் மனம்.
பாலின திரிபு பற்றிய படங்கள் சமகால உலக சினிமாவில் அதிகம் வரத்துவங்கியுள்ளன. இப்படம் பாலின திரிபு பற்றியதில்லை. மாறாக பெண்ணாக மாறுவதன் வழியே ஜான் எவ்வளவு அமைதி கொள்கிறான். பிறரை நேசிக்கிறான் எனபதை பற்றியது. ஜான் தன்னை மறந்து எம்மாவாக உருமாறி வெளியே மகிழ்ச்சி கொள்ளும் தருணங்களில் இசை கூடவே உருமாறுகிறது. பெரும்பான்மை காட்சிகளில் இசை ஜானின் மனநிலை மாற்றத்தை அழகாக கூடவே வெளிப்படுத்துகிறது.
காட்சிகளில் இயல்பான குறைந்த வெளிச்சமே பயன்படுத்தபட்டிருக்கிறது. ஏதாவது ஒரு இருள் மூலை காட்சிகளில் இருந்து கொண்டேயிருக்கிறது. வீட்டிற்குள்ளிருந்து வெளியே பார்க்கும் ஒரு காட்சி வெளியில் இருந்து பார்க்கும் போது எப்படி மாறுகிறது என்பதை பல இடங்கள் அழகாக வெளிப்படுத்துகின்றன.
எம்மாவை போலவே மேகியும் சிறப்பான கதாபாத்திரம். அவள் தன் குழந்தையுடன் தனித்து வாழ்கிறாள். முதன்முறையாக அவள் வீட்டிற்கு எம்மா வருகிறாள். அன்றிரவு அவள் வேலை செய்யும் கடைக்காரன் பணம் கொடுத்து அவளுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வருகிறான். எம்மா முன்னால் தனது நிஜவாழ்க்கை அம்பலமாகிவிட்டதே என்று மனது உறுத்துகிறது. ஆனால் அதை மறைத்து கொண்டு இயல்பாக இருப்பதை போல அவள் சிகரெட் பிடிக்கிறாள். அப்போது அவளை அறியாமல் கண்கள் கலங்குகின்றன. மன்னித்துவிடு எம்மா. நான் இப்படி தான் வாழ்கிறேன் என்று சொல்லி அவள் கலங்குகிறாள். அவளுக்காக எம்மா மேற்கொள்ளும் உதவிகளும் அவள் குழந்தை மீது எம்மா காட்டும் அக்கறையும் அசலாக உருவாக்க பட்டிருக்கிறது.
மனம் கண்டறியமுடியாத விசித்திரங்களை உருவாக்க கூடியது. பாதி கற்பனையிலும் பாதி நிஜத்திலுமாகவே பலரும் வாழ்கிறோம். நமது கற்பனைகளே நம்மை முன்னெடுத்து செல்கின்றன. அதே நேரம் கடந்த காலம் மறக்கவே முடியாத வலியாக, அடையாளபொருளாக கூடவே இருந்து கொண்டுமிருக்கிறது. மனதின் கடிவாளங்கள் பலநேரங்களில் நமது கைகளில் இருந்து நழுவிப்போய்விடுகின்றன.
காப்காவின் கதையில் ஒரு மனிதன் உறங்கி விழிக்கும் போது ஒரு கரப்பான்பூச்சியாக உருமாறிவிடுகிறான். அவன் மனது அப்படியே இருக்கிறது. ஆனால் உடல் மாறிவிட்டது. அதில் அடையும் சிக்கல்கள் விவரிக்கபடுகின்றன. மகாபாரதத்தில் ஒரு விருட்சம் குறிப்பிடப்படுகிறது. அதன் நிழலில் யாராவது தங்கினால் மறுநிமிசம் அவர்கள் உருமாறிவிடுவார்கள். அப்படி ஆணாக இருந்து பெண்ணாக மாறிய ஒருவனை பற்றிய கதையை பாரதம் விவரிக்கிறது. நாரதர் ஒரு முறை புராதன குளமொன்றில் இறங்கி குளித்து கரைúறும் போது பெண்ணாக உருமாறிவிடுகிறார் என்கிறது புராணம். இப்படி ஆண் பெண் உருமாற்றம் குறித்து உலகெங்கும் கதைகள் உள்ளன. அதன் உச்சபட்சமாக அர்த்தநாரீஸ்வரர் என்று பாதி ஆணும் பாதி பெண்ணும் கொண்ட உருவத்தை இந்திய புராணீகம் உருவாக்கியிருக்கிறது.
Some Like It Hot, Tootsie, Mrs. Doubtfire, Big Momma`s House போன்ற படங்கள் ஆண் பெண்ணாக உருமாறி செய்யும் வேடிக்கைகள் நிறைந்தது. இது போலவே Boys Don`t Cry ,Connie and Carla போன்றவை பெண் தன் அடையாளத்தை ஆணாக உருமாறிக் கொண்டு செய்யும் சாகசங்கள், காதலை முன்வைப்பவை. இவை ஆண் பெண் புறத்தோற்றங்களின் மீது உருவான புனைவுகள். ஆனால் மனரீதியாக ஆண் பெண்ணாக உணர்வதும் தன்னை பெண்ணாகவோ, ஆணாகவோ அடையாளம் கண்டு கொண்டு. அதில் ஏற்படும் உளைச்சல்கள், அவமதிப்புகளை சொல்லும் படங்கள் சமீபமாக அதிகம் வரத்துவங்கியுள்ளன.
ஜேன் ஆண்டர்சன் இயக்கிய Normal திரைப்படம் .பாலினமாற்றம் குறித்த ஆழ்ந்த அக்கறையை கொண்டிருக்கிறது. திருமணமாகி இருபத்தைந் வருசங்கள் மனைவியோடு பிரச்சனையில்லாத வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்த ரே ஆப்பிள்வுட் ஒரு நாள் தன் மனைவியிடம் தான் பெண்ணாக உருமாற விரும்புவதாகவும் இத்தனை வருசம் தனக்குள் இருந்த பெண்தன்மையை மூடி மறைத்து நடித்தது தன்னை தானே ஏமாற்றிக் கொள்வதை போலிருக்கிறது. ஆகவே அறுவை சிகிட்சை செய்து தான் பெண்ணாக உருமாற போவதாக சொல்கிறார்.
அவர் மனைவி அதிர்ச்சி அடைகிறாள். சிறுவயதில் இருந்தே தான் பெண்ணாக மாற ஆசைக்கொண்டு பெண் போல உடைகள் உடுத்திக் கொண்டு பெண் போல நடந்து கொள்வதை ரகசியமாக செய்து வந்ததாகவும் குறிப்பிடுகிறார். மனைவிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ரே ஆப்பிள்வுட் தனது விருப்பபடி அறுவை சிகிட்சை செய்து பெண்ணாக மாறிவிடுகிறார். அதன் பிறகு அவரை எப்படி நடத்துவது என்ற குழப்பம் வீட்டில் துவங்கி அலுவலகம், நண்பர்கள் வட்டம் என எங்கும் நீள்கிறது. பெண்ணாக மாறியதன் காரணமாக அவர் சந்திக்கும் அவமானங்கள், கேலி கிண்டல்கள் ஒரு பக்கமும் மறுபுறம் அவருக்கு கிடைக்கும் புதிய நட்புமாக படம் நீள்கிறது.
ஹிட்ச்காக்கின் சைக்கோ திரைப்படத்தில் வரும் கொலையாளியின் ஆதார மனபிரச்சனையே பீகாக் படத்திலும் விவரிக்கபடுகிறது. ஆனால் வன்முறை கொலை என்று திகில் ஊட்டுவதிலிருந்து விலகிய இதன் அழுத்தமும் தனித்துவமும் மனதின் இருண்ட தாழ்வாரங்களில் நம்மை கூடவே பயணிக்க வைக்கிறது என்பதே இதன் சிறப்பு.
**