இவை சினிமா குறித்த விமர்சனக் கட்டுரைகள் அல்ல. உலக சினிமாவையும், தமிழ் சினிமாவையும் தொடர்ந்து பார்க்கும் ஒரு பார்வையாளனின் குறிப்புகள் அல்லது அவதானிப்புகள் என்று சொல்லலாம்.
கோட்பாடுகள், தத்துவங்கள் மற்றும் ஆழ்ந்த விமர்ன கூறுகளை முன்வைத்து இவை எழுதப்படவில்லை. என்னை பாதித்த சில படங்கள், அதற்கான காரணங்கள், அதிலிருந்து மீளும் நினைவுகள். நான் சந்தித்த சில திரை நட்சத்திரங்கள் அவர்கள் குறித்த ஞாபகங்கள் இவையே இந்த கட்டுரைகளின் அடிநாதம்.
ஆஸ்திரேலியாவிலிருந்து வெளிவரும் உதயம் இதழிலும் உயிர்மையிலும் இதில் பெரும்பான்மை கட்டுரைகள் எழுதப்பட்டன. மற்றவை எனது இணைய தளத்தில் வெளியானவை.
இன்று உலக சினிமா குறித்து பல்வேறு தளங்களில் தொடர்ந்து எழுதப்படுவதும் விவாதிக்கபடுவதும் நடந்து வருகிறது. இன்னொரு பக்கம் குறும்படங்கள், ஆவணப்படங்கள் என்று சிறிய முயற்சிகள் மிகுந்த கவனம் பெற்று வருகின்றன. சினிமா குறித்து அறிந்து கொள்ள தீவிர வாசகன் எப்போதுமே தயாராக இருக்கிறான்
என்னை பாதித்த சில படங்களை அந்த வாசகனின் பார்வைக்கு முன்வைக்க விரும்பியதே இதை எழுதுவதற்கான உந்துதல். எனது ரசனை தான் இதன் ஒரே அளவு கோல். என் ரசனை ஒரு நாளில் உருவானதில்லை.
நான் சந்திக்கும் ஒவ்வொருவருக்குள்ளும் தமிழ்சினிமா சார்ந்து தனிப்பட்ட நினைவுகள் இருக்கின்றன. அவை பெரும்பாலும் சினிமாவை தாண்டியவை. யாரோடு எங்கே ஒரு படத்தை பார்த்தோம். ஏன் அந்த படம் நினைவில் இருக்கிறது. ஏன் அந்த பாடல் இன்றைக்கும் பிடித்திருக்கிறது என்பதற்கு ஒவ்வொருவரிடமும் ஒரு காரணமிருக்கிறது. அந்த நினைவுகள் தான் சினிமாவை மீதான தீராத விருப்பத்திற்கு காரணமாக இருக்கிறது. என்னிடமும் அப்படி சொல்லி தீராத நினைவுகள் இருக்கின்றன.
***
இந்த நூலை தமிழ் சினிமாவின் தனித்துவமிக்க கலைஞரும். தேசிய விருது பெற்ற இயக்குனரான பாலா வெளியிடுகிறார். இதை பற்றி தமிழகம் அறிந்த நாடகக்கலைஞரும் வீதி நாடக இயக்கத்தின் முன்னோடியும், இடது சாரி சிந்தனையாளருமான திரு. பிரளயன் பேசுகிறார்.
***
நூல் வெளியீடு. டிசம்பர். 13. மாலை 5.30 மணி. பிலிம்சேம்பர். அண்ணாசாலை. சென்னை.
பேசத்தெரிந்த நிழல்கள் பக்கம்: 144 விலை:85