எல்லாக் கலைகளைப் போலவே சண்டையிடுதலும் ஒரு கலையே என்கிறார் பௌத்த துறவி போதி தர்மா.
எனது பள்ளி வயதில் என்டர் தி டிராகன் திரைப்படத்தைப் பார்த்தேன். ஆங்கில படங்கள் திரையிடுவற்கு என்றே மதுரையில் சில திரையரங்குகள் இருந்தன. பெரும்பான்மை பார்வையாளர்கள் அடித்தட்டு மக்கள். ஆங்கிலம் அறியாதவர்கள். தினசரி உழைப்பாளிகள்
ஆனால் அவர்களுக்கு சாப்ளினும்,கிரிகிரிபெக்கும், கிளார்க் கேபிளும், பட் ஸ்பென்சரும் மர்லின் மன்றோவும், ஆட்ரி ஹெபர்னும், உர்சுலா ஆண்ட்ருஸ்சும் நன்றாக பரிச்சயமாகியிருந்தார்கள். கைதட்டி ரசித்தார்கள்
சில திரைப்படங்களுக்கு அரங்க வாசலில் கதைச்சுருக்கம் எழுதி வைத்திருப்பார்கள். அந்தக் கதையை படித்துவிட்டு படம் பார்க்க செல்வதால் எளிதாக படத்தோடு ஒன்றிவிட முடியும். பெரும்பான்மையான ஹாலிவுட் படங்கள் மதுரையில் திரையிடப்பட்டன. கௌபாய் வகை படங்கள் வெற்றிகரமாகவே ஒடின. ஹிட்ச்காக்கிற்கு தனித்த ரசிகர்கள் இருந்தார்கள். ஆனால் என்டர் தி டிராகன் வருவதற்கு முன்பு வரை புருஸ்லீயை எவருக்கும் தெரியாது. அது போன்ற அதிரடிச் சண்டைகளை திரையில் ரசிகர்கள் பார்த்ததுமில்லை. என்டர் தி டிராகன் அதற்கான விருந்து போலானது
சலிக்காமல் திரும்ப திரும்ப அந்த ஒரே படத்தை பலரும் பத்து முறைகளுக்கு மேலாக பார்த்தார்கள். புருஸ்லீ போன்ற மெலிந்த உடல் கொண்டவர்கள் அந்த படத்தில் அடைந்த புத்துணர்வும் நம்பிக்கையும் மிகப்பெரியது. வீதிக்கு வீதி புருஸ்லீகள் உருவாகத் துவங்கினார்கள். அரங்கில் ஒவ்வொரு காட்சியிலும் விசில் சப்தம் பறந்தது. சண்டையில் புருஸ்லீயின் வேகம் மற்றும் தாக்குதல் முறைகள் தேநீர் கடைகளின் அன்றாட விவாதப்பொருளாக இருந்தது. ஒரே படத்தில் புருஸ்லீ மக்களின் மறக்கமுடியாத நாயகன் ஆனார். புருஸ்லீ படம் போட்ட் பனியன் அணிவது பெருமைக்குரிய ஒன்றாக மாறியது,
திரைக்கு வெளியில் மதுரை நகரில் ஆங்காங்கே கராத்தே பள்ளிகள் துவக்கபட்டன.
என்டர் தி டிராகனில் புருஸ்லீ பயன்படுத்திய Nunchuck கருவியை ஆங்காங்கே மாணவர்கள் சுழற்றிக் கொண்டு அலைந்தனர். கராத்தே போட்டிகள் நடத்தபட்டன. பிளாக் பெல்ட் ஆசான்கள் உருவானர்கள். பார்த்துக் கொண்டிருந்த ஒன்றிரண்டு வருசங்களில் ஒரு திரைப்படத்தின் வழியே அறிமுகமாகிய ஒரு கலை சிறுகிராமம் வரை வேரோடி விட்டது. இன்று பாலர் பள்ளிகளில் கூட கராத்தே கற்றுதரப்படுகிறது.
உலகெங்கும் கராத்தே, குங்பூ, ஜ÷டோ பள்ளிகள் புதிது புதிதாக உருவாவதற்கும், யுத்தகலையின் மீது இளைஞர்கள் அளவற்ற விருப்பம் கொள்வதற்கும் சினிமாவே காரணமாக இருந்துள்ளது. ஆசிய சினிமாவின் முக்கிய பாதிப்பாக இதைக் கருதுகிறேன். இன்றும் யுத்தக்கலை பயிலும் மாணவர்களுக்கு நாயகனாக இருப்பவர் புருஸ்லீயே.
புரூஸ்லீயின் என்டர் தி டிராகன் திரைப்படம் உருவாக்கிய எழுச்சி எளிதில் மறக்க கூடியதில்லை. அது ஒரு திரைப்படம் என்பதைத் தாண்டி ஆசியவீரக்கலை மரபினை மீள்உருவாக்கம் செய்து மக்களின் விருப்ப பயிற்சியாக மாற்றியது. சினிமா தயாரிப்பில் உலகின் மூன்றாவது இடத்தில் உள்ளது ஹாங்காங். நூறு வயதான ஹாங்காங் சினிமாவை புருஸ்லீ யுகம். அதற்கு பிந்திய சினிமா என்றே இரண்டாக பிரித்து கொள்ளலாம். ஏனென்றால் ஹாங்காங் சினிமாவை உலகறிய செய்தவர் புருஸ்லீ.
புருஸ்லீயைப் பற்றிய விமர்சனக் குறிப்பு ஒன்றில் அவர் போர் செய்யும் புத்தன் என்றொரு வாசகத்தைக் கண்டேன். மிகப் பொருத்தமான அடையாளமது. புருஸ்லீயின் சாகசம் வெற்று வன்முறையில்லை. மாறாக அதன் பின்புலத்தில் பௌத்த தத்துவம் உள்ளடங்கியிருக்கிறது.
யுத்தகலையாக அறியப்படும் குங்பூ, கராத்தே, டெக்வான்டோ போன்றவை வெறும் தற்காப்பு கலைகள் மட்டுமில்லை. அதன் பின்னே அறநெறிகளும் தியானமும் உடலின் சூட்சுமங்களை புரிந்து கொள்ளும் நுட்பமும் காற்று தண்ணீர் நெருப்பு என்று இயற்கையை வெறும்புறவடிவமாக மட்டுமே அறிந்ததில் இருந்து விலகி அதன் ஆழ்நிலைகளை புரிந்து கொள்ள உதவும் எத்தனிப்புகளும் இருக்கின்றன. இந்த வீரக்கலைகளின் பிதாமகன்களாக இருந்தவர்கள் பௌத்த துறவிகள். ஆயுதம் எடுக்காத சண்டைகள் என்று துறவிகள் இதை வகைப்படுத்துகிறார்கள். உடல் குறித்த விழிப்புணர்வை இக்கலைகளே முன்னெடுத்து சென்றன.
ஆசிய சினிமாவில் யுத்தகலை திரைப்படங்கள் (martial arts films) என்று விசேச பிரிவே உள்ளது. சீனா, ஜப்பான், கொரியா ஹாங்காங் ஆகிய நான்கிலிருந்தும் மார்ஷல் ஆர்ட்ஸ் திரைப்பட வகையில் மட்டும் ஆண்டிற்கு நூற்றுக்கும் மேலான படங்கள் வெளியாகின்றன. அதற்கென தனித்த பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இதில் ஹாங்காங் சினிமாவே முன்னோடி. புரூஸ்லீ, ஜாக்கி சான், ஜெட்லி, டோனிஜா என்று அதிரடி நாயகர்களுக்கென விசேசமான ரசிகர்கள் தமிழ்நாட்டிலும் அதிகமிருக்கிறார்கள்.
தன்னை புருஸ்லீயாக கற்பனை செய்து கொள்ளாத இந்திய கதாநாயகர்களே இல்லை. புருஸ்லீயின் வரவு காலைத் தூக்கவே முடியாத பல நடிகர்களை சண்டையிட்டு காட்டும்படியான நெருக்கடியை உருவாக்கியது. தமிழ் தெலுங்கு ஹிந்தி என்று பேதமில்லாமல் முன்ணணி கதாநாயகர்கள் கராத்தே உடைகளுடன் தன்னுடைய தொப்பை சரிய பாய்ந்து பாய்ந்து சண்டையிட்ட அபத்தம் மறக்கமுடியாத நகைச்சுவையாக நிரம்பியது.
இன்றும் வெற்றி பெற்ற பெரும்பான்மை கேளிக்கை சினிமாக்களில் புருஸ்லீயின் வேகம் மற்றும் அடிமுறைகள் காணப்படுகின்றன. இளைஞர்களின் அறை சுவர்களில் மேற்கத்திய இசைக்கலைஞர்களின் போஸ்டர்களை விடவும் அதிகம் புரூஸ்லியின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. இன்றும் புருஸ்லியின் சினிமா பார்வையாளனுக்கு உடலையே ஆயுமாக்கும் வித்தையை கற்று தந்தபடிதானிருக்கிறது.
தன் மகத்தான வெற்றியை, அதன் பாதிப்பிலிருந்து உருவான அடுத்த தலைமுறை இளைஞர்களை புருஸ்லீக்கு தெரியாது. அவர் இறந்த பிறகே என்டர் தி டிராகன் படம் வெளியானது. தான் அடையவிரும்பிய ஒப்பற்ற சாகசநாயகன் பிம்பத்தை புருஸ்லீ அந்த ஒரே படத்தில் அடைந்தார். ஆசியநாடுகளை நோக்கி ஹாலிவுட்டின் பார்வையைத் திரும்ப செய்த முதல் வெற்றி அதுவே. அந்த வெற்றியிலிருந்து தான் இன்றுவரை ஆசிய கதாநாயகர்கள் ஹாலிவுட்டினை நோக்கி சென்றபடி இருக்கிறார்கள். அதிலிருந்து தான் அமெரிக்க சினிமா ஆசியாவின் கேளிக்கை படங்களை உற்று நோக்கவும் உருமாற்றிக் கொள்ளவும் துவங்கியது.
மார்ஷல் ஆர்ட்ஸ் படங்களை பொதுவில் ஹாங்காங் சினிமா என்றே அடையாளப்பெயர் சூட்டுகிறார்கள். காரணம் பெரும்பான்மை யுத்தகலைபடங்கள் ஹாங்காங்கில் இருந்து உருவானதே.
புருஸ்லீ தனது தாக்குதல் முறைகளை விவசாயிகளின் தற்காப்பு கலைகளிலிருந்தே எடுத்துக் கொண்டார். Nunchuck கருவி கூட சீன விவசாயிகள் தங்களை எதிரிகளிடமிருந்து தற்காத்து கொள்வதற்காக உருவாக்கிய ஆயுதமே. இதை புருஸ்லீ பயன்படுத்தும் போது சுழன்று அடிக்கும் வேகமும் அதன் விசையும் உக்கிரமானதாக இருந்தன. சென்னையில் ஆனந்த் தியேட்டரில் திரையிடப்பட்ட என்டர் தி டிராகன் ஒரு ஆண்டுகாலம் வெற்றிகரமாக ஒடியிருக்கிறது. உலகெங்கும் இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பு ஒன்று போலவே இருந்தது.
புருஸ்லீயின் வாழ்க்கை அவர் படங்களை போலவே மிதமிஞ்சிய வேகமும் சொல்லபடாத வலியும் கொண்டது. புருஸ்லீ அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் 1940 வருசம் பிறந்தார். அவரது அப்பா லீ ஹோ சூன் ஒரு ஒபரா பாடகர் மற்றும் நடிகர். ஹாங்காங்கை சேர்ந்த அவர் தன் மனைவியுடன் ஒரு இசைக்குழுவோடு அமெரிக்காவில் சுற்றுபயணம் செய்து கொண்டிருந்தார். அந்த நாட்களில் தான் புருஸ்லீ பிறந்தார். இசைபயணம் முடியவே புருஸ்லீ பிறந்த சிலமாதங்களில் அவர்கள் மீண்டும் ஹாங்காங் திரும்பினார்கள்.
புருஸ்லீக்கு வீட்டில் Lee Jun Fan எனும் சீனபெயரை சூட்டினார்கள். அது பெண் பெயர். ஆண்பிள்ளையை தீவினை தெய்வங்கள் பற்றிக் கொண்டுவிடும் என்று பயந்து பெண் பெயரை சூட்டினார்கள் என்று புருஸ்லீயின் மனைவி லிண்டா குறிப்பிடுகிறார். அவருக்கு புருஸ் என்ற ஆங்கில பெயரை சூட்டியவர் அவரது மருத்துவர். அந்த பெயர் பல வருசங்களுக்கு வீட்டில் பயன்படுத்தபடவேயில்லை. பள்ளி நாட்களில் அந்த பெயர் அவரோடு ஒட்டிக் கொண்டுவிட்டது. புருஸ்லீ சிறுவயதிலே நடனம் பாட்டு என்று பயிற்சி பெற துவங்கினார். குழந்தை நட்சத்திரமாக திரைப்படத்தில் தோன்றி நடித்துள்ளார்.
நடனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட புருஸ்லீ உள்ளுர் நடனப்போட்டி ஒன்றில் வெற்றி பெற்று சிறந்த நடனக்காரராக அறியப்பட்டார். படிப்பில் ஆர்வமில்லை. ஆகவே குத்துசண்டைப் பயிற்சியில் ஈடுபட துவங்கினார். சந்தையில் ஒரு நபரோடு ஏற்பட்ட வம்புசண்டையில் அவரை புருஸ்லீ பலமாக தாக்கிவிடவே காவலர்களிடம் சிக்கி கொண்டார். தொடர்ந்த தெருச்சண்டைகள், வம்புகள் என்ற லீயின் அன்றாட வாழ்க்கையைச் சகித்து கொள்ள முடியாமல் அவரது அப்பா அமெரிக்க அனுப்பி வைத்தார்
தனது பதினெட்டாவது வயதில் கையில் நூறு டாலருடன் ஹாலிவுட் சினிமாவில் ஒரு நடிகராகிவிட வேண்டும் என்ற கனவு ஒரு பக்கமும் யுத்தகலையில் சாதனைநாயகன் ஆக வேண்டும் என்று ஆசை மறுபக்கமுமாக அமெரிக்கா சென்றிறங்கினார். தனக்கு விருப்பமான மார்ஷல் ஆர்ட்ஸ் பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்ளத் துவங்கியதோடு வாஷிங்டன் பல்கலை கழகத்தில் நாடகத்துறையில் பட்டம் பெறுவதற்காக சேர்ந்தார்.
அங்கே லிண்டா என்ற பெண்ணுடன் அவருக்கு காதல் உருவானது. அவளையே திருமணம் செய்து கொண்டார். கல்லூரி படிப்பை பாதியில் விட்டுவிட்டு யும் என்ற ஆசானிடம் யுத்தகலை படிப்பதற்காக ஒக்லாண்டிற்கு இடம் மாறினார். புருஸ்லீயை உருவாக்கியதில் முக்கிய பங்கு யும்மிற்கு இருக்கிறது. கடந்த ஆண்டு யும்மின் வாழ்க்கை வரலாறு Ip Man என்ற படமாக வெளிவந்திருக்கிறது. யும்மிடமிருந்தே அவர் சண்டையிடுவதன் புதிய முறைகளையும் நுட்பங்களையும் கற்றுக் கொண்டார்.
யும் சண்டை பயிற்சிக்கு உடல் கட்டுபாடு மட்டும் போதாது தகர்க்க முடியாத மனவுறுதியும் வாழ்க்கை குறித்து ஆழ்ந்த ஞானமும் வேண்டும் என்பதை புருஸ்லிக்கு கற்றுக் கொடுத்தார். அது கடைசிவரை புருஸ்லீ சண்டையிடுவதற்கான அடிப்படை தத்துவமாக அமைந்திருந்தது.
புருஸ்லீயின் படம் ஒன்றில் ஒரு காட்சியிருக்கிறது. ஒருவன் மிகுந்த வேகத்துடன் புருஸ்லீயை தாக்க கைகளை முகத்திற்கு நேராக கொண்டுவருவான். புருஸ்லீயின் கண்கள் அவனை சலனமில்லாமல் பார்த்து கொண்டிருக்கும். நீ பயப்படவில்லையா என்று அவன் கேட்பான். அதற்கு புருஸ்லீ நீ என்னை அடிக்கவில்லையே. முகத்தினை கைதொடாத வரை எதற்காக பயப்பட வேண்டும் என்று கேட்பார். அது தான் அவர் கற்றுக் கொண்ட புத்தசாரத்தின் வெளிப்பாடு.
நாம் அடிபடுவதற்கு முன்பாக பயந்துவிடுகிறோம். அதுவே பிரச்சனை. அது போல வலியை ஒரு போதும் புருஸ்லீ காட்டிக் கொள்வதேயில்லை. சண்டையிடும் போது அவரது உடல் வெட்டுபட்டு குருதி கசிகிறது. ஆனால் அவரது முகத்தில், கண்களில் வலியின் சிறு சுவடு கூட தெரிவதேயில்லை
திரையில் புருஸ்லீ கற்று தரும் பத்து எளிய உண்மைகள் ஆழ்ந்து புரிந்து கொள்ளப்பட வேண்டியவை. 1) எதிரியிடம் உன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாதே. 2)தாக்கபட வேண்டிய இடத்தை நோக்கி உன் கண்களை நகர்த்தாதே. 3)சண்டையை எப்போதும் நீ துவக்காதே. 4)எதிலிருந்தும் உனக்கானதை கற்றுக்கொள், 5) சண்டையிடுவதில் அவசரம் காட்டாதே அது பலவீனமானது. 6)அடிபட்டு விழுவது தவறில்லை. அதன் சுவடே இல்லாமல் எலாஸ்டிக் போல உடனே எழுந்து சண்டையிடு. 7)பலம் உன் உடலில் இல்லை. மனதில் தானிருக்கிறது. 8)போராளியின் ஒரே துணை மௌனம் மட்டுமே. 9)தன்னை வெளிப்படுத்திக் கொள்வதே கலை. சண்டையும் ஒரு தன்வெளிப்பாடே.10) மூச்சை உற்று நோக்கி பழகு. சீராக்கு. சண்டையிடுவதற்கு அதுவே ஆதாரம்.
புருஸ்லீயின் தனித்துவதற்கு காரணம் மனம் உடல் இரண்டையும் அவர் தன்கட்டுக்குள் வைத்திருந்தது. உடலைக் கட்டுவது தான் சண்டையிடுவதன் அடிப்படை என்று புரிந்து கொண்ட புருஸ்லீ அதற்காக மிக தீவிரமான பயிற்சிகளை மேற்கொண்டார். காய்கறிகள் பழங்களை அதிகமாக உட்கொண்டார். தின்பண்டங்களை அறவே ஒதுக்கி வைத்தார். ஒரு நாளைக்கு ஆறுமைல் தூர ஒட்டம். இரண்டு மணி நேர அடிப்படை உடற்பயிற்சி, ஒரு மணி நேர சிறப்பு சண்டை பயிற்சி. ஒரு மணி நேரம் வேகமாக சைக்கிள் ஒட்டுவது. அரை மணி நேர விசேச மூச்சு பயிற்சி என்று நாளின் பாதி அவருக்கு பயிற்சியிலே செலவானது.
தான்பெற்ற பயிற்சிகளை கொண்டு அமெரிக்க மாணவர்களுக்கான கராத்தே பயிற்சிபள்ளிகளை துவங்கி நடத்திய புருஸ்லீ கராத்தே போட்டிகளை ஏற்பாடு செய்து அதற்கு சிறப்பு கவனத்தை உருவாக்க முயன்றார். 1971 ல் தொலைக்காட்சி தொடரில் பங்குபெற துவங்கிய புருஸ்லீ நடிகராக அடையாளம் காணப்பட ஆரம்பித்தார். திரைப்பட முயற்சிகளுக்காக அவர் ஹாங்காங் திரும்பி வந்து அங்கே கோல்டன் ஹார்வெட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து The Big Boss என்ற படத்தில் நடித்தார்.
அந்த படம் அவர் நினைத்ததுபோலவே நல்ல வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக Fist of Fury படமும் பெரிய வெற்றியை அடைந்தது. தொடர்ந்து தான் நடிக்கும் படங்களில் தனது கதாபாத்திரம் மற்றும் சண்டை பயிற்சிகள் திரைக்கதை என யாவையும் புருஸ்லீயே மேற்கொள்ள துவங்கினார். அந்த ஈடுபாட்டின் சாதனையாக அமைந்தது Way of the Dragon. இந்த தொடர்வெற்றிகளே அவர் ஹாலிவுட்டின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் உடன் இணைந்து என்டர் தி டிராகன் உருவாக்க காரணமாக இருந்தது.
என்டர் தி டிராகனை இயக்கியவர் Robert Clouse. . ஒளிப்பதிவு Gilbert Hubbs. ஒரு தீவில் நடைபெறும் போட்டி சண்டைக்காக செல்லும் புருஸ்லீ அங்கே நடைபெறும் போதை மருந்து கடத்தல் மற்றும் குற்றவுலகை அடையாளம் காண்பதும் அதற்கு காரணமாக இருந்த ஹான் என்ற எதிர்நாயகனை வீழ்த்தி வெற்றி காண்பதுமே கதையின் மையம். ஜேம்ஸ்பாண்ட் படங்களின் கதை சொல்லும் முறையும் அடுத்தடுத்த திருப்பங்களும் கொண்டது. இந்த படம் பெரும் பொருட்செலவில் ஹாங்காங்கில் உருவாக்கபட்டது. படத்திற்காக புருஸ்லீ சண்டைகாட்சிகளை விசேசமாக படமாக்கினார். குறிப்பாக இப்படத்தில் அவர் கால்களை பயன்படுத்தி சண்டையிடும் விதம் அபாரமானது. அவரது உதை மின்னல் போன்றிருந்தது. அது போலவே கண்ணாடி சூழ்ந்த அறையில் அவர் சண்டையிடுதும் அதன் பிரதிபலித்து மறையும் உருவங்களும் நாட்கள் கடந்து மனதில் அப்படியே நிற்கின்றன.
இந்த படத்தில் ஜாக்கிசான் சண்டை பயிற்சியாளர்களில் ஒருவராக வேலை செய்திருக்கிறார். ஒரு காட்சியில் புருஸ்லீயிடம் அடிவாங்குகிறார். படப்பிடிப்பின் போது புருஸ்லீ. பலத்த காயமடைந்தார் நிஜமான கண்ணாடிகளை உடைத்தில் அவை அவரது உடலில் பாய்ந்தன. தான் விரும்பியது போல சண்டைகள் இன்னும் உக்கிரமாக அமையவில்லை என்ற ஆதங்கம் புருஸ்லீக்கு கடைசிவரை இருந்தது. ஆனால் அது தான் அவரது சண்டையிடும் முறையின் உச்சம் என்கிறார்கள் திரைவிமர்சகர்கள்.
என்டர் தி டிராகனிற்கான டப்பிங் நடந்து கொண்டிருந்த போது எதிர்பாரமல் உடல் நலிவுற்ற புருஸ்லீ அதை பொருட்படுத்தாமல் தனது அடுத்த படத்திற்காக ஆயுத்த பணியினை தொடர்ந்து மேற்கொள்ள துவங்கினார். தலைவலி காரணமாக அவர் எடுத்து கொண்ட மாத்திரையின் ஒவ்வாமை காரணமாக அவரது மரணம் நேர்ந்தது என்று மருத்துவ பரிசோதனைகள் கூறுகின்றன. ஆனால் புருஸ்லீ மர்மமாக விஷம் கொடுத்து கொல்லப்பட்டார். அதன் பின்னால் மாபியாவின் கை உள்ளது என்றும் பரவலாக பேசப்பட்டது. தனது முப்பத்தி மூன்றாவது வயதில் இறந்து போன புருஸ்லீ இந்த தலைமுறையிலும் சாகச நாயகனாக போற்றப்படுகிறார். அவரை கௌரவிக்கும் விதமாக முழு உருவச்சிலையொன்றை சில ஆண்டுகள் முன்பாக திறந்து வைத்திருக்கிறார்கள்.
புருஸ்லீ ஏற்படுத்தி மாற்றம் ஹாங்காங் சினிமாவில் அதுவரை B Grade Movies எனப்பட்ட சண்டை படங்களை முக்கிய கேளிக்கை சினிமாவாக உயர்த்தியது. புருஸ்லீயின் எதிர்பாராத மரணத்தின் பிறகு அவரது இடத்தை யார் நிரப்ப போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது. அப்படியொரு வீரனை தேடி ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனங்கள் அலைந்தன. அந்த இடத்தை பூர்த்தி செய்ய நுழைந்தவர் தான் ஜாக்கி சான்.
அவரும் சிறுவயதில் இசைப்பள்ளியில் படித்தவர். நடனம், இசை நுண்கலை என்று வளர்ந்து சிறுவயதிலே நல்ல பாடகராக அறியப்பட்டவர். முறையான கல்விபடிப்பு இல்லாத போதும் தனது கலைத்திறன் வழியாக தன்னை அடையாளப்படுத்தி கொள்ள துவங்கினார்.
பீகிங் ஒபரா ஸ்கூலில் படித்த ஜாக்கி சான் அது ஒரு விநோத உலகமாக இருந்ததையும் அங்கே எல்லா கலைகளையும் தன்னால் கற்றுக் கொள்ள முடிந்ததையும் குறிப்பிடுகிறார். சண்டை பயிற்சியாளராக தன் வாழ்க்கையை துவக்கிய ஜாக்கி சான் புருஸ்லீ படித்த அதே ஆசானான யும்மிடம் தானும் யுத்தகலையை கற்றுக்கொண்டார். தனக்கு பிடித்தமான நகைச்சுவை நடிகரான பஸ்டர் கீட்டனின் நகைச்சுவையை தனது சண்டையிடுதலோடு இணைந்து கொண்ட ஜாக்கி புருஸ்லீ போலவே ஹாங்காங் சினிமாவில் இருந்தே தனது திரை வாழ்வை துவக்கினார்.
புருஸ்லீயிடம் இல்லாத நகைச்சுவை உணர்வும்; வேடிக்கையாக சண்டையிடும் முறைகளும், இசை பின்புலமும் ஜாக்கிசானை தனித்த கலைஞனாக அடையாளம் காட்டின. சிறுவயதில் தான் சந்தித்த வறுமை, மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை திரையின் அடிநாதமாக கொண்ட ஜாக்கி புருஸ்லீ விட்ட இடத்திலிருந்து தனது வளர்ச்சியை துவக்கினார். அவரது படங்களின் தொடர்ந்த வெற்றி உலகெங்கும் அவருக்கான பார்வையாளர்களை உருவாக்கியது. ஹாங்காங் சினிமாவை உலக அரங்கில் கவனிக்க வைத்தவர் இவரே.
இந்த இருவரோடு Gordon Liu நடித்து 1978ல் வெளியான 36th Chamber Of Shaolin படம் உலகெங்கும் வசூலில் சாதனைகள் செய்தது. இவை தான் 1980 வரையான ஹாங்காங் சினிமாவின் மீதான மேற்கத்திய சினிமாவின் கவனத்திற்கான ஆதார புள்ளிகள். அதிரடி சண்டைபடங்களாக இந்த பின்புலத்தில் அடுத்தடுத்து நிறைய படங்கள் வெளியாகின. அதில் சில பெரிய வெற்றியும் பெற்றன.
ஹாங்காங் ஒரு பக்கம் யுத்தகலை சார்ந்த படங்களை உருவாக்கியதோடு கூடவே அமானுஷ்யம், திகில் படங்களும் மாபியாவின் நிழல்உலகினை பற்றி படங்களையும் உருவாக்க துவங்கியது. குற்றவுலகின் நாயகர்களை திரையில் கொண்டாட துவங்கியது ஹாங்காங் சினிமாவே. அதை தான் அமெரிக்க சினிமா பின்னாளில் வளர்த்து எடுத்தது. இந்த உந்துதல்கள் தான் இன்றுவரை இந்திய சினிமாவில் ரௌடியை நாயகனாக்கும் படங்களுக்கு ஆதாரமாக உள்ளது.
பிரிட்டனின் காலனி ஆட்சியில் இருந்து சீனாவிடம் கைமாற்றப்பட்ட ஹாங்காங் எப்போதுமே இரண்டு மாறுபட்ட அடையாளங்கள் கொண்டது. சீனாவின் ஒரு பகுதியாக அது இருந்த போதும் அது சீன சட்டங்களை பின்பற்றவில்லை. பிரிட்டனின் சட்டங்களையே பின்பற்றுகிறது. சீன மக்கள் அதிகம் வசித்த போதும் சீன கலாச்சாரங்களிலிருந்து மாறுபட்டது ஹாங்காங் கலாச்சாரம். கல்வி கலாச்சாரம், கேளிக்கை என்று யாவிலும் ஹாங்காங் தனித்துவமானது. சீன சினிமாவினை மாற்றியமைத்தது ஹாங்காங்கில் இருந்து உருவான படங்களே.
இதற்கான முக்கிய காரணம் சீனாவில் இருந்தது போன்ற அரசியல் நெருக்கடிகள் தணிக்கைகள் இங்கே கிடையாது. சுதந்திரமான வெளிப்பாட்டு உணர்வினை கொண்ட ஹாங்காங் சினிமா தடையில்லாமல் பாலியல் மற்றும் அரசியல் கருத்துகளை அனுமதித்தது. நெருக்கடியான வாழ்க்கை ஏற்படுத்தும் மன அழுத்ததிலிருந்து வெளிவர ஹாங்காங்வாசிகளுக்கு இருந்த பிரதான புகலிடம் திரை அரங்குகளே. ஆகவே சினிமா அவர்களின் முக்கிய கேளிக்கையாக அமைந்தது.
ஹாங்காங் கேளிக்கை சினிமாவின் முதன்மை இயக்குனர் ஜான்வூ. (John Woo) இவர் ஹாங்காங், அமெரிக்கா இரண்டிலும் மாறிமாறி படங்களை இயக்குகிறார். ஆக்ஷன் படங்களின் வழிகாட்டி என்று கொண்டாடப்படும் ஜான்வூ அமெரிக்க சினிமாவில் கதாநாயகர்களின் பிம்பத்தை மாற்றியமைத்தார். இவரது Broken Arrow, Face/Off, Mission:Impossible 2 மூன்றும் குற்றபின்புலத்தை மையமாக கொண்ட கதைகள். வணிக ரீதியாக இவை பெரிய வெற்றியை பெற்றவை.
தனது எல்லா நாயகனுக்குள்ளும் புருஸ்லீயே ஒளிந்திருக்கிறான் என்று ஒரு நேர்காணலில் ஜான்வூ குறிப்பிடுகிறார். சென்ற ஆண்டு ஜான்வூ இயக்கி வெளியான வரலாற்று திரைப்படமான Red Cliff. இரண்டு பாகங்களாக நான்கு மணி நேரத்திற்கும் மேல் ஒடக்கூடியது. ஒரு சரித்திரம் படம் எப்படி உருவாக்கபட வேண்டும் என்பதற்கு அத்தாட்சியாக உள்ளது இப்படம். சீன வரலாற்றின் முக்கிய திருப்பம் ஒன்றினை மையமாக கொண்ட இந்த படம் கடற்போரினை காட்சிபடுத்துகிறது. பிரம்மாண்டமும், நுட்பமும், மிகையற்ற நடிப்பும் கொண்ட படமது.
கேளிக்கை சினிமாவிலிருந்து விலகி ஹாங்காங்கின் கலாச்சார மாற்றங்கள், மற்றம் சமகால அரசியல், சமூக நெருக்கடிகள், ஆண்பெண் உறவில் ஏற்படும் சிக்கல் மற்றும் பாலியல் கவர்ச்சிகள் சார்ந்த கலைப்படங்கள் 1990களுக்கு பிறகு அதிகம் உருவாக துவங்கின. இன்றைய ஹாங்காங் சினிமாவின் முக்கிய இயக்குனர்கள் மூவர். இதில் Wong Kar-wai முதலானவர். இவரது In the Mood for Love திரைப்படம் இசையும் ஒளிப்பதிவும் சேர்ந்து எழுதிய திரைக்கவிதை. வெகு அற்புதமான படம். உலக திரைப்பட விழாவில் பல முக்கிய விருதுகள் பெற்றதோடு வொங்கர் வாய் ஹாலிவுட்டின் நம்பிக்கை இயக்குனர்கள் வரிசையில் சேர்த்து கொண்டாடப்படுகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளியான வொங் கர் வாயின் முக்கிய படங்கள் அத்தனையும் நான் பார்த்திருக்கிறேன். இன்றைய சினிமாவின் புதிய அழகியலை உருவாக்கும் முன்முயற்சிகள் அவை.
இரண்டாவது இயக்குனர் Andrew Lau. சில ஆண்டுகாலம் ஒளிப்பதிவாளராக பணியாற்றி அதிலிருந்து இயக்குனரானவர். இவரது Infernal Affairs திரைப்படம் மார்டின் ஸ்கார்சசியால் The Departed என மறுஉருவாக்கம் செய்யப்பட்டு ஆஸ்கார் பரிசு பெற்றுள்ளது.
மூன்றாவது முக்கிய இயக்குனர் Fruit Chan. திரைக்கதை ஆசிரியராக அறிமுகமான இவர் ஹாங்காங் மக்களின் வாழ்க்கையை யதார்த்தமாக படமாக்குகிறார். தொழில்முறை சாராத நடிகர்களை பயன்படுத்தி சிறிய பொருட்செலவில் தானே தயாரித்து இயக்கும் இவரது Hollywood Hong-Kong, Durian Durian போன்ற படங்கள் உலகதிரைப்பட விழாக்களில் சிறந்த படமாக விருது பெற்றுள்ளன.
ஹாங்காங்கின் இன்றைய இளைஞன் தனது அடையாளம் குறித்த குழப்பங்களுடன் தான் வாழ்கிறான். பெருநகர கலாச்சாரம் மேற்குலகை போலவே ஹாங்காங்கையும் அதீதமாக பற்றிக் கொண்டிருக்கிறது. கட்டுபாடில்லாத நகர்பெருக்கம், அடையாளமின்மை. மலிந்து போன குற்றங்கள். பாலியல் பிறழ்வுகள், எதிலும் பற்றிக் கொள்ள முடியாதவெறுமை, வணிகமயமாகிப் போன மதசடங்குகள் என்று கலவையான சமூக மாற்றங்கள் சினிமாவிலும் எதிரொலிக்கின்றன.
தொழில்நுட்ப ரீதியாக அமெரிக்கத் திரைப்படங்களுடன் போட்டியிடும் அளவிற்கு திறமையான கலைஞர்கள் உருவாகி வருகிறார்கள். ஹாலிவுட் சினிமா ஹாங்காங்கின் அசுரவளர்ச்சியை எப்படி எதிர்கொள்வது என்று புரியாமல் தத்தளிக்கிறது. சில இயக்குனர்கள், நடிகர்களை தன்னோடு அரவணைத்து கொள்கிறது.
பிரிட்டனின் கலாச்சார மரபிலிருந்து துண்டிக்கபட இயலாமலும் அதே நேரம் சீன பராம்பரியம் மற்றும் நவீன மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டும் ஹாங்காங் தத்தளித்து கொண்டிருக்கிறது. அதன் இயல்பிலே இரண்டு எதிர்தன்மைகள் ஒன்று கலந்திருக்கின்றன. அது தான் இன்றைய ஹாங்காங் சினிமாவின் நிஜமாகவும் வெளிப்படுகிறது.
***