மகத்தான மந்திரிகுமாரி

தமிழ்சினிமாவில் கதாநாயகன் என்ற புனிதபிம்பத்தை முற்றிலும் மாற்றிய இரண்டு திரைப்படங்கள் மந்திரிகுமாரி, மற்றும் ரத்தக்கண்ணீர். இரண்டையும் பத்து முறைகளுக்கு மேலாகப் பார்த்திருப்பேன்.

மந்திரிகுமாரி 1950ல் வெளியானது. ரத்தக்கண்ணீர் 1954 ம் ஆண்டு வெளியாகி உள்ளது. இரண்டின் கதாநாயர்களும் தன்னுடைய விருப்பதின் பாதையில் தன்னை உருவாக்கி கொண்டவர்கள்.

மந்திரி குமாரியில் வரும் பார்த்திபன் கொலை, கொள்ளைகளை விரும்பிச் செய்கிறான். கொலை தனது கலை என்று உரத்து சொல்கிறான். ரத்தகண்ணீரில் வரும் மோகன் வெளிநாட்டில் படித்து திரும்பிவந்து குடும்பம் சமூகம் இரண்டு தளத்திலும் உள்ள கட்டுபாடுகள்,ஒழுக்கவிதிகள், மூடநம்பிக்கைகளை எதிர்க்கிறான். சமூகத்தை கடுமையாக்க் கேலி செய்கிறான்.

இருவருமே காதலிக்கிறார்கள். திருமணமும் செய்து கொள்கிறார்கள். திருமணத்தின் பிறகும் அவர்கள் இயல்பு மாறிவிடவில்லை. தொழுநோயுற்ற போதும் மோகன் கடவுளிடம் தஞ்சம் புகவில்லை. அது போலவே மந்திரிகுமாரியில் சிறைப்பட்டு மரணதண்டனைக்காக காத்திருந்த போதும் பார்த்திபன் மாறிவிடவில்லை. அவன் பதிபக்தியைக் கேலி செய்கிறான். இந்த இரண்டு கதாபாத்திரங்களும் ஒரே கருத்துருவின் இரட்டையர்களைப் போலவே இருக்கிறார்கள்.

இரண்டு படங்களுமே திராவிட இயக்க கருத்துக்களைத் திரையில் நேரடியாகப் பேசுகின்றன. மதத்தின் பெயரால் நடைபெறும் மூடநம்பிக்கைகளை விவாதிக்கின்றன. அவ்வகையில் திராவிட இயக்க அரசியல் தமிழகத்தில் வேர் ஊன்ற செய்வதற்கு  இருபடங்களும் முக்கியக் காரணிகளாக இருந்திருக்கின்றன.

மந்திரிகுமாரி வெளியான அதே காலகட்டத்தில் நாகையா நடித்த ஏழைபடும்பாடு வெளியானது, இந்தபடம் விக்டர் க்யூகோவின் லே மிசரபிள் நாவலை மையமாக கொண்டு உருவாக்கபட்டது. அதுவும் ஒரு திருடனைப் பற்றியே பேசுகிறது. அவன் மனம் திருந்திய திருடன். ஏழ்மை அவனைத் திருட செய்கிறது. அவன் தனது திருட்டிற்காக மனம் கலங்குகிறான். மீட்சிக்காகப் போராடுகிறான், அவனை தமிழ்சமூகம் தனது அடையாளமாக அங்கீகரிக்கவேயில்லை

இந்தியாவில் சினிமா அறிமுகமான காலத்தில் இருந்தே புராணங்களும் இதிகாசங்களும் தான் அதன் கதைக்களமாக இருந்திருக்கிறது. அரிச்சந்திரா சத்யவான் சாவித்ரி, பஸ்மாசுர மோகினி லங்கா தகனம், பக்த விதுரன், நள தமயந்தி, என உருவான மௌனப்படங்கள் இந்திய சினிமாவை கோவில்கலைகளில் ஒன்றாகவே மாற்றியிருக்கிறது.

இந்திய மக்கள் திரை அரங்கின் வழியாகவே  கடவுள் எப்படிப் பேசுவார். எப்படி நடந்து கொள்வார் என்பதை அறிந்து வைத்திருக்கிறார்கள். சினிமா நாட்டார்மரபில் இருந்த கதைகளையோ. அல்லது மக்கள் வரலாற்றினையோ கவனம் கொள்ளவேயில்லை. சமகாலப் பிரச்சனைகளை  முதன்மைப்படுத்தவேயில்லை. புராணம் மற்றும் தொன்மம் சார்ந்த மிகை கற்பனைதன்மையில் இருந்து இந்திய பாபுலர் சினிமா இன்று வரை விடுபடவேயில்லை. அந்தக் குறையே இன்றும் சினிமாவை முற்றிலும் வணிகமான ஒன்றாக மாற்றி வைத்துள்ளது.

மௌனப்பட காலத்தில் சினிமா பார்ப்பது பாவம், அது மனித மனதில் தீய எண்ணங்களை உருவாக்கிவிடும் என்ற நம்பிக்கையை மதம் உருவாக்கி மக்களைத்  தடுத்து வைத்தது.  காலமாற்றத்தில் அதே மதம்  கடவுளின் அருட்கதைகள், திருவிளையாடல்களை பெருவாரியான மக்களின் நம்பிக்கை வடிவமாக மாற்றுவதற்கும் சினிமாவைப் பயன்படுத்த முயற்சி செய்து வெற்றியும் பெற்றது.

தமிழ்சினிமாவிற்கும் மதஅடையாளங்களுமான உறவும் எதிர்ப்பும் தனித்து விரிவாக அறிய வேண்டிய ஒன்று

மந்திரிகுமாரி தமிழ் இலக்கிய மரபிலிருந்து உருவானதொரு  திரைப்படம். ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான  குண்டலகேசியே இதன் மூலம். மூன்று தமிழ்காப்பியங்கள் பெண்களை முக்கியக் கதாபாத்திரமாகக் கொண்டு உருவாக்கபட்டவை. கண்ணகி, மணிமேகலை, குண்டலகேசி ஆகிய மூன்று பெண்களும் தனித்துவமானவர்கள்.

குண்டலகேசி ஒரு பௌத்த காப்பியம். அழிந்து போன அந்தக் காவியத்தின் பத்தொன்பது பாடல்கள் மட்டுமே இன்று வாசிக்க கிடைக்கின்றன. தேரிகதையில் வரும் புத்த பிக்குணியான குண்டலகேசியின் கதையை அடிப்படையாகக் கொண்டு இக்காப்பியம் உருவாக்கபட்டிருக்கிறது. தம்மபதத்தில் இக்கதை பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது.

திருடர்களை முக்கியக் கதாபாத்திரமாக கொண்டு கதை சொல்வது இந்திய நாட்டார்கதைமரபில் தொன்று தொட்டுவரும் ஒன்றே. திருடர்கள் பெரும்சாகசக்கார்களாகவும், திருடுவதன் மூலம் அவர்கள் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்தார்கள் என்றும் நாட்டார்கதைகள் சுட்டிக்காட்டுகின்றன. மனம் திருந்திய திருடனைப் பற்றிய கதைகள் பௌத்த கதைமரபில் காணப்படுகிறது. அந்த வகையின் தொடர்ச்சியே குண்டலகேசி காப்பியம்,  குண்டலகேசி என்றால் சுருண்ட கூந்தலை உடையவள் என்பதே பொருள்.

குண்டலகேசி காப்பியத்திலிருந்து மந்திரிகுமாரி திரைக்கதை எப்படி மாறிவந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ள அதன் காப்பியக் கதையை வாசித்து அறிய வேண்டியது அவசியம்.

குண்டலகேசி காப்பியம் திருடனைக் காதலித்த ஒரு இளம்பெண்ணைப் பற்றியது. பூம்புகாரில் உள்ள செல்வமிக்க வணிக குடும்பத்தில் பிறந்த அவள் தோழிகளுடன் பூபந்து விளையாடிக் கொண்டிருந்த போது பந்து தவறிப்போய் சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு ஆணின் மீது விழுகிறது. குண்டலகேசி குனிந்து பார்க்கும் போது அவனும் திரும்பிப் பார்க்க, முதல்பார்வையில் அவளுக்கு அந்த ஆணைப் பிடித்துப் போய்விடுகிறது. அவன் யாரென விசாரிக்கத் துவங்குகிறாள்.

அவன் பெயர் காளன், மந்திரியின் மகன் என்றும் அவன் ஒரு திருடன்  கொலையாளி, கொள்ளைக்காரன் என்பதால்  மரணதண்டனை நிறைவேற்ற  கொண்டு போகபடுகிறான் என்றும் தகவலை அறிகிறாள்.

பெற்ற தந்தையே இந்த தண்டனையை விதித்து அவனைக் கொல்ல அனுமதித்துள்ளார் என்பது அவளை வியப்பூட்டுகிறது. பூம்பூகாரில் இந்திரவிழா துவங்கிய நாட்களில் கொலைதண்டனை நிறைவேற்ற மாட்டார்கள். ஆகவே அவள் இதைப் பயன்படுத்தி திருடனை விடுவித்து மணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறாள்

மகளின் பிடிவாதத்தை கண்ட அவளது தந்தை அரசனிடம் சென்று காளனை விடுவிக்கும்படி கேட்கிறார். அவன் எடைக்கு எடை பொன்னும் எண்பத்தியோறு யானைகளும் தந்து காளனை விடுவிக்க வைத்து மகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்.

காளனோடு குண்டலகேசி இன்பமாக வாழத் துவங்குகிறாள். காவிரியில் புதுவெள்ளம் வரும்போது புனலாட அவர்கள் கிளம்புகிறார்கள். காளன் வேண்டுமென்றே குண்டலகேசியின் குங்குமச்சிமிழை எடுத்து ஒளித்து வைக்கிறான். அதைக் காணாமல் தேடி அலைகிறாள் குண்டலகேசி. காளன் வேடிக்கை முடிந்து எடுத்து தந்துவிடவே உங்கள் கள்ளதனம் மாறவேயில்லையே என்று கேலியாக சொல்கிறாள். அது அவன் மனதில் தன்னைக் குத்திகாட்டுவது போல படுகிறது. தன் கடந்தகாலத்தை அவள் சொல்லிக்காட்டுவதாக நினைத்துக் கொண்டு அவளைக் கோவித்துக் கொள்கிறான்.

வீடு வந்த போதும் அவன் மனதில் குண்டலகேசியின் வார்த்தைகள் மறையவேயில்லை, மறுநாள் அவளைக் கொல்ல முடிவு செய்து மலைஉச்சியில் உள்ள தெய்வத்தை வழிபட துணை வர வேண்டும் என்று அழைத்துப் போகிறான். அங்கே காளன் தன்னைக் கொல்ல முயற்சிப்பதை அறிந்து அவனைத் தந்திரமாக கிழே தள்ளி கொன்றுவிடுகிறாள் குண்டலகேசி.

பிறகு தானும் குதித்து உயிர்விட முயற்சிக்கிறாள். அவளை ஒரு வேடுவப்பெண் தடுத்துக் காப்பாற்றுகிறாள். அதன்பிறகு அவள் பௌத்த சமயத்தில் சேர்ந்து துறவியாகி பல இடங்களில் தன் அறிவுத் திறனால் வாதிட்டு பௌத்த சமயத்தை பரப்பி ஞானம் அடைந்தாள் என்கிறது காப்பியம்.

காப்பியத்தின் சாரத்தை மட்டுமே திரைக்கதையாகக் கொண்டு சுவாரஸ்யமான புனைவை மேற்கொள்கிறது திரைப்படம்,  கலைஞரால் நாடகமாக எழுதப்பெற்று பல ஊர்களிலும் நடத்தப்பட்ட மந்திரிகுமாரியை மார்டன் தியேட்டர்ஸ் சுந்தரம் திரைப்படமாக்க முன்வந்தார், ஆகவே இப்படத்தின் ஆதார வடிவம் மேடை நாடகமே,

முல்லை நாட்டு மன்னரின் மகள் ஜீவரேகவும் (ஜி.சகுந்தலா) மந்திரியின் மகள் அமுதாவும் (மாதுரிதேவி)  தோழிகள். தளபதி வீரமோகனை ( MGR) ராஜகுமாரி காதலிக்கிறாள். மன்னரை ஆட்டிப்படைக்கும் ராஜகுருவின் (எம்.என்.நம்பியார்) மகன் பார்த்திபன் (எஸ்.ஏ.நடராஜன்) ஒரு திருடன், அதிலும் ராஜகுருவின் மகன்.  “கொள்ளையடிப்பது ஒரு கலை” என்பது அவனது கொள்கை.

பார்த்திபனை அவனது சுயரூபம் அறியாமல் மந்திரிகுமாரி அமுதா மணக்கிறாள். கொள்ளையர்களைப் பிடிக்கும் முயற்சியில் ராஜமோகன் ஈடுபட்டு, பார்த்திபனைப் பிடித்து அரச சபையின் முன் நிறுத்துகிறான். ஆனால் ராஜகுருவின் சூழ்ச்சியால் பார்த்திபன் விடுவிக்கபட்டு ராஜமோகன் குற்றப் பழிக்கு ஆளாகிறான்.

தன் கணவன் கொள்ளைக்காரன் என்பதை அறிந்த அமுதா அவனைத் திருத்த முயற்சி செய்கிறாள். ஆத்திரத்தில், அவளைக் கொல்ல முடிவு செய்த பார்த்திபன் வாராய் நீ வாராய் என்று பாட்டுப்பாடி, மலை உச்சிக்கு அழைத்துச் சென்று தள்ளிவிட முயற்சிக்கும் போது அவனைக் கிழே தள்ளி அமுதா கொன்றுவிடுகிறாள்

மந்திரிகுமாரியை எல்லிஸ் ஆர்.டங்கன் டைரக்ட் செய்தார். அவர் பாதியில் அமெரிக்கா போய்விட்டதால் மீதமுள்ள படத்தை டி.ஆர்.சுந்தரம் இயக்கியிருக்கிறார்.

ராஜகுருவாக வரும் நம்பியாரின் வழியே சனாதன அரசியல் சுட்டிக்காட்டப்படுகிறது, காப்பியக்கதையை அன்றைய தமிழக அரசியல் நிகழ்வுகளின் எதிரொலிப்பு போல உருமாற்றியதே திரைக்கதையின் தனிப்பலம், கலைஞரின் வசனங்கள் அதற்கு கூடுதல் துணை செய்கின்றன

மந்திரிகுமாரியில் தனது முழு ஆளுமையை வெளிப்படுத்தியவர் எஸ்.ஏ.நடராஜன், அவரே திருடன் கதாபாத்திரத்தில் நடித்தவர், வராய் நீ வராய் என்ற பாடலின் வழியே அவர் தனது மனைவியைக் கொலை செய்ய அழைத்துப் போகும்போது காட்டும் முகபாவங்கள் அற்புதமானவை,

மந்திரிகுமாரி காப்பியத்தில் இருந்த பௌத்த கூறுகள் திரைப்படத்தில் பெரிதும் அகற்றப்பட்டு அந்த இடத்தில் பிராமண ஆதிக்கமும் அதன் எதிர்ப்பு அரசியலும் முதன்மைபடுத்தபட்டிருக்கிறது, காட்சிபடுத்தபட்ட விதம், நடிப்பு, பாடல்கள், கூர்மையான வசனங்கள் என்று பலவிதங்களிலும் மந்திரிகுமாரி முக்கியமான ஒன்றாக விளங்குகிறது

குற்றம் என்று அடையாளம் காணப்பட்டவற்றை மறுதலிக்கும் குரலை படம் முழுவதும் நாம் கேட்க முடிகிறது

ஒரு இடத்தில் ராஜகுரு தன்மகனிடம் கொள்ளை அடிப்பதை நிறுத்த சொல்கிறார், அவன் பதில் சொல்கிறார்

“கொள்ளையடிப்பது ஒரு கலை. வில்லில் இருந்து புறப்படும் அம்பு எத்தனையோ உயிர்களைக் குடிக்கிறது. ஆனால், வில்வித்தை என்ற பெயரால், கொலை அங்கே கலையாகிறது. ஓவியக் கலைஞன், பெண்ணின் அங்கங்களை வரைந்து காட்டுகிறான். ஓவியக் கலையின் பெயரால், காமம் அங்கே கலையாகிறது. அதுபோல இதுவும் ஒரு கலைதான்!”

அதைக்கேட்டு ஆதங்கமாக ராஜகுரு கேட்கிறார்,

மகனே இந்தக் கலையை விட்டுவிடக் கூடாதா?

அதற்கு பார்த்திபன் உற்சாகமாக பதில் சொல்கிறான்

“கொக்கு மீனைப் பிடிக்காமல் இருந்தால், பாம்பு தவளையை விழுங்காமல் இருந்தால், நானும் என் கலையை விட்டு விடுவேன்.”

இப்படி கொலையைக் கலையாக்கும் காரசாரமான விவாதம் இன்றைய சமகால உண்மைகளுக்கு நெருக்கமாகவே இருக்கிறது,

நாடகமேடை கதைகளிலும் மௌனப்பட யுகத்திலும் கடவுளின் அவதாரமாக முன்னிறுத்தப்பட்ட கதாநாயகன் என்ற பிம்பத்தை இந்த படம் தன்னளவில் முழுமையாகச் சிதறடித்தது, ஒருவகையில் எதிர்நாயகனை முதன்மைபடுத்தி உருவாக்கபட்ட முதல்படம் இதுவே,

ரத்தகண்ணீர்  கன்னடத்தில் சமீபத்தில் மறுஉருவாக்கம் செய்யப்பட்டு பெரிய வெற்றியைப் பெற்றது, அதுபோலவே மந்திரிகுமாரியை யாராவது மறுஉருவாக்கம் செய்ய முற்பட்டால் அது இன்றைய காலத்திற்கும் பொருத்தமான ஒன்றாகவே இருக்ககூடும்,

••••

காலமிது காலமிது… கண்ணுறங்கு மகளே… காலமிதைத் தவற விட்டால்… தூக்கமில்லை மகளே… தூக்கமில்லை மகளே…’ என்ற சித்தி திரைப்பாடல் திரையிசைப்பாடல்களில் மிக அபூர்வமான ஒன்று,

இப் பாடலை கேட்டு பலநேரங்களில் எனது சித்தி அழுவதைக் கண்டிருக்கிறேன், பல இரவுகளில் நானே இதை கேட்டு மனம் நழுவிப்போய் கரைந்திருக்கிறேன், ஒரு திரையிசைப்பாடலுக்குள் பெண்ணின் வலியை அத்தனை துல்லியமாகப் பதிவு செய்துவிட முடியும் என்பதற்கு இப்பாடல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு

சித்தி திரைப்படம் 1966-ல் வெளிவந்த்து, இதில் ஜெமினி கணேசன், பத்மினி, எம்.ஆர். ராதா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்கியவர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.

சித்தி என்றாலே கொடுமைகள் செய்வாள் என்ற பொய்யான பிம்பத்தை மாற்றியது இப்படம். பத்மினியின் நடிப்பு படத்தின் தனிப்பலம்,  வை.மு.கோதைநாயகியின் நாவலைப் படமாக்கியிருந்தார்கள்

திரையிசையில் எவ்வளவோ தாலாட்டு பாடல்கள் உள்ளன, ஆனால் இந்த தாலாட்டு உறங்கும் குழந்தைக்கு மட்டுமானதில்லை, அது உலகெங்கும் உள்ள பெண்களின் மனக்குரலாகவே ஒலிக்கிறது. பாடல் இப்படித் துவங்குகிறது

பெண்ணாகப் பிறந்தவர்க்கு
கண்ணுறக்கம் இரண்டு முறை
பிறப்பில் ஒரு தூக்கம்
இறப்பில் ஒரு தூக்கம்
இப்போது விட்டு விட்டால்
எப்போதும் தூக்கம் இல்லை
என்னரிய கண்மணியே
கண்ணுறங்கு கண்ணுறங்கு

ஆரம்ப வரிகளிலே இது எளிமையானதொரு தாலாட்டு இல்லை என்பது புரிந்துவிடுகிறது.பெண்ணாகப் பிறந்தவளுக்கு சிறு வயதில் மட்டுமே. நிம்மதியான தூக்கம் கிடைக்கிறது, வயது. வளர வளர அவளது தூக்கம் தானாக ஓடிப் போய்விடுகிறது என்பதை அடுத்த வரிகள் அடையாளம் காட்டுகின்றன

நாலு வயதான பின்னே
பள்ளி விளையாடல்
நாள் முழுதும் பாடச் சொல்லும்
தெள்ளுதமிழ்ப் பாடல்
எண்ணிரண்டு வயது வந்தால்
கண்ணுறக்கம் இல்லையடி
ஈரேழு மொழிகளுடன்
போராடச் சொல்லுமடி
தீராத தொல்லையடி

என பருவ வயதில் தொலைத்த தூக்கத்தை சொல்லும் இதே பாடல்

மாலையிட்ட தலைவன் வந்து
சேலை தொடும்போது
மங்கையரின் தேன் நிலவில்
கண்ணுறக்கம் ஏது..
கண்ணுறக்கம் ஏது

என இல்லறசுகம் அனுபவிப்பதை சொல்லியும் விளக்குகிறது

ஐயிரண்டு திங்களிலும்
பிள்ளை பெறும்போதும்
அன்னை என்று வந்தபின்னும்
கண்ணுறக்கம் போகும்
கண்ணுறக்கம் போகும்
கை நடுங்கிக் கண் மறைந்து
காலம் வந்து சேரும்
காணாத தூக்கமெல்லாம்
தானாகச் சேரும்
தானாகச் சேரும்

என பெண்ணின் வாழ்க்கை கணவன் பிள்ளை  குடும்பம் என மற்றவர்களுக்காக தூக்கம் பறிபோய்விடுவதை  வேதனையோடு பதிவு செய்கிறது

கண்ணதாசன் வரிகளும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில்… பி. சுசீலா பாடும் முறையும் இதை மறக்கமுடியாத பாடலாக்கியிருக்கிறது, சினிமா பாடல்களை வெற்றுவரிகளாக்கி காற்றில் கறைபடிய விடும் பாடல்களுக்கு மத்தியில் இப்பாடல் காலத்தை தாண்டியும் மனதை ஈரமாக்கிக் கொண்டேயிருக்கிறது, அது தான் உண்மையின் வலிமை என்று தோன்றுகிறது,

சத்யஜித்ரே சிறந்த இயக்குனர் சிறந்த இசையமைப்பாளர், சிறந்த ஒவியர் என்பதை போலவே சிறந்த திரைக்கலை எழுத்தாளரும் கூட, உலக சினிமா குறித்த அவரது கட்டுரைகளும். சினிமாவின் தொழில்நுட்பம் குறித்த அவரது எண்ணங்களும் மிக முக்கியமானவை, அவரது Our Films, Their Films என்ற புத்தகம் சினிமாவின் நுட்பங்களை அழகாக விவரிக்கிறது, இந்திய சினிமாவினை ரே எப்படி அணுகுகிறார், எது அவரது தனித்துவம், சினிமாவின் அழகியல் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணப்புத்தகம், 1976ல் வங்களாத்தில் வெளியான இப்புத்தகம் ஆங்கிலத்தில் 1992ல் வெளியானது,

இத்தாலிய நியோ ரியலிசப்படங்களை பற்றிய ரேயின் கட்டுரையும் சாப்ளின் மற்றும் குரசோவா பற்றிய அவரது எண்ணங்களும் வாசித்து விவாதிக்கப்பட வேண்டியவை, சினிமாவின் கருத்தாக்கங்களை அறிந்து கொள்ள விரும்புவோருக்கு இது ஒரு முன்னுதாரண புத்தகமாகும்,

A story should have a beginning, a middle, and an end… but not necessarily in that order. என்று Jean Luc Godard சொல்கிறார், அது தான் திரைக்கதை எழுதுவதின் அடிப்படை கருத்து,

புதிய திரைக்கதையை எழுத விரும்புகின்றவர்கள் அவசியம் பேபல் படத்தின் திரைக்கதைப் பிரதியை ஒரு முறையாவது வாசியுங்கள், அப்போது கோடார்ட் சொன்ன உண்மை நன்றாகவே விளங்ககூடும்

••••

(பறவைக்கோணம் -3 / உயிர்மையில் வெளியாகும் பத்தி)

0Shares
0