மதுரை சென்றுள்ளேன்

சென்னையில் ஏற்பட்டுள்ள கடுமையான மழை காரணமாக மூன்று நாட்களாக மின்சாரமில்லை, குடிநீரில்லை. உணவுப்பொருட்கள் கிடைக்கவில்லை.

தீவைப்போல சென்னை மிதக்கிறது. வெளியே எங்கும் போக முடியாத நிலை, எனது வீட்டின் முன்புள்ள சாலையில் நான்கடி தண்ணீர் வெள்ளம்.

காய்ச்சல் பரவி பலருக்கும் நோய். வயிற்றுப்போக்கு.

பகலிலும் வெளிச்சமில்லை, பாதி இருட்டு, ஐந்து மணிக்கெல்லாம் முழு இருட்டாகிவிட்டது. சென்னையின் இருண்ட காலமிது.

போன், நியூஸ் பேப்பர், ஏடிஎம் எதுவும் கிடையாது. அவசர உதவிக்கு தரப்பட்ட எந்த எண்ணும் வேலை செய்யவில்லை. மழை. மழை,. மழை, பகலிரவாகக் கொட்டித் தீர்க்கிறது. இடைவிடாத மழையின் சப்தம்  ெட்டவெளியில் மாட்டிக் கொண்டது போன்ற அச்சத்தைஏற்படுத்ததியது.

வேறு வழியில்லாமல் சென்னையை விட்டு கிளம்பிவிடலாம் என பெங்களுர் ஹைவே வழியாக கிருஷ்ணகிரி, சேலம் வழியாக நேற்றிரவு மதுரை வந்து சேர்ந்தேன்.

நான்கு நாட்களுக்குப் பிறகு இன்று காலை தொலைக்காட்சி பார்த்தேன், மாநகரம்  வெள்ளத்தில் மிதக்கிறது.

ஊர் போய் சேர்ந்தவர்கள், சென்னையில் மாட்டிக் கொண்டவர்கள் என நண்பர்கள் ஒவ்வொருவராக விசாரித்துக் கொண்டிருக்கிறேன். வீடு இழந்து, போக்கிடமின்றி தவிக்கிறார்கள், படகுகளில் ஆட்கள் மீட்கப்படுகிறார்கள். ஒரு கொசுவர்த்தியின் விலை 300 ரூபாய். மெழுகுவர்த்தியின் விலை 160. அதற்கும் அடிதடி.

மீட்பு பணியில் தன்னார்வக் குழுக்களும் இளைஞர்களும் ராணுவமும் துடிப்புடன் உதவி செய்கிறார்கள்.

சென்னை எங்கும் அழுகுரல்கள், பயத்தில் மக்கள் செய்வதறியாமல் தவிக்கிறார்கள். இன்னும் புயல் மழை இருக்கிறது என்கிறார்கள்

சென்னைக்கு என்ன ஆகுமோ எனப்பயமாக இருக்கிறது.

என் மீதான அக்கறையுடன் விசாரித்த நண்பர்கள், வாசகர்கள், பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் நன்றி

அடுத்த பத்து நாட்கள் மதுரையில் தானிருப்பேன்.

•••

0Shares
0