மனசாட்சியின் கண்கள்

ஆர்மீனியர்களுக்கும் சென்னைக்குமான தொடர்பு மிக பழமையானது.



சென்னை பிராட்வே பகுதியில் ஆர்மீனியன் வீதி இருக்கிறது. இங்கே மிக பழமையான ஒரு புனிதமேரி தேவாலயம் இருக்கிறது. 1772ம் ஆண்டு கட்டப்பட்ட ஆலயமது. இதன் உள்ளே  சென்னையில் வாழ்ந்து இறந்து போன ஆர்மீனியர்களின் கல்லறைதோட்டம் உள்ளது.  அந்த சமாதிகற்களில் ஆர்மீன மொழியில் அவர்களை பற்றிய விபரங்கள் எழுதப்பட்டிருக்கின்றன


1794ம் ஆண்டு ஆர்மீனிய மொழியில் வெளியான முதல் செய்திதாள் அஸ்தரார் சென்னையில் இருந்தே அச்சிடப்பட்டது. அதை அச்சிட்ட ஆராதுôன் ஷ்மாவோன் சென்னையில் நாற்பது ஆண்டுகாலம் வாழ்ந்திருக்கிறார். சென்னையின் வளர்ச்சியில் ஆர்மீனியர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது .சைதாப்பேட்டையில் உள்ள பாலத்தையும், பரங்கிமலையில் உள்ள தேவாலயத்திற்காக ஏறிச்செல்லும் படிக்கட்டுகளையும் அமைக்க உதவி செய்தவர்கள் ஆர்மீனியர்களே. 


 இதற்காக அந்த காலத்திலே முப்பதாயிரம் பகோடா பணத்தை கோஜா பெத்ரோஸ் வாஸ்கன் என்ற வணிகர் செலவழித்திருக்கிறார். கல்வி மற்றும் நகர வளர்ச்சிக்கு இவர் ஆற்றிய பங்கு அளப்பறியது. இவரது உடலும் இந்த ஆலயத்தினுள் புதைக்கபட்டிருக்கிறது.  இவரது இதயம் ஒரு தங்கப்பேழையில் வைத்து எடுத்துசெல்லப்பட்டு ஈரானில் புதைக்கபட்டிருந்த அவரது பெற்றோர்களின் சமாதியின் அருகில் புதைக்கபட்டது என்பது குறிப்ப்பிடத்தக்கது.


ஆர்மீனியர்கள் உலகம் எங்கும் சென்று  வணிகம் செய்தவர்கள். வாஸ்கோட காமாவிற்கு முன்பாகவே ஆர்மீனிய வணிகர்கள் வாசனை திரவி வணிகத்திற்கான உரிமையை கேரள அரசிடம் இருந்து பெற்றிருந்தார்கள். அலெக்சாண்டருடன் ஆர்மீனியர்கள் இந்தியா வந்தார்கள் என்றும் ஒரு குறிப்பு கூறுகிறது.  பதினாறாம் நூற்றாண்டில் கல்கத்தாவிற்கு வருகை தந்த ஆர்மீனியர்கள் அங்கிருந்து சென்னைக்கும் வர துவங்கினார்கள். பதினேழாம் நூற்றாண்டில் சென்னையின் புகழ்பெற்ற வணிகர்கள் ஆர்மீனியர்களே.


ரோம சாம்ராஜ்யத்திற்கு முன்பே ஆர்மீனிய கிறிஸ்துவ தேசமாகியது. அதற்கான காரணம் ஆர்மீனிய மலைசிகரமான ஆராரட் மலையின் மீது தான் மகாபிரளயத்தின் பிறகு நோவாவின் கப்பல் தட்டி நின்றது என்ற நம்பிக்கையிருக்கிறது. இன்றும் அந்த மலையின் மீது நோவாவின் படகின் மிச்சங்கள் இருப்பதாக ஆர்மீனியர்கள் நம்புகிறார்கள். அவ்வகையில் ஆராரட் அவர்களது புனிதமலை. அது வழிபாட்டிற்குரியது.


 ஆர்மீனியர்கள் கிறிஸ்துமûஸ டிசம்பர் மாதம் 25ம் நாள் கொண்டாடுவதில்லை. மாறாக அவர்கள் ஜனவரி 6ம் தேதியை கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடுகிறார்கள். இது தான் பண்டைய வழக்கம் என்றும் கிபி325 ல் தான் டிசம்பரில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் நடைமுறை அமுலுக்கு வந்ததும் என்றும் கூறுகிறார்கள்.


ஆர்மீனியாவின் தலைநகரம் எரவான். அது கிரேக்க நகரங்களை போல உன்னதமான நாகரீகமும் கலச்சார மேன்மையும் கொண்டவை.
1915ம் ஆண்டு துருக்கிய அதிகாரிகள் ஆர்மீனியர்களை பெருவாரியாக கான்ஸ்டான்டிநோபிளில் இருந்து வெளியேற்றினார்கள். தனிமைப்படுத்தி பல நூறு மைல் நடக்க செய்து அவர்கள் கூட்டம் கூட்டமாக கொன்று குவித்தனர். ஆர்மீனிய இனப்படுகொலையே உலகின் மிகப்பெரிய மனித பேரழிவு. ஒன்றரை லட்சம் ஆர்மீனியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சிரியா பாலைவனத்தில் ஆர்மீனியர்கள் விரட்டியடிக்கபட்டு கொல்லப்பட்டனர். ஆர்மீனிய நகரங்கள் எரிக்கபட்டன. பெண்கள் கற்பழிக்கபட்டார்கள். ஒரு இனமே அதிகாரவெறியால் பெரும்பகுதி அழிக்கபட்டது.


உயிர்தப்பியவர்கள் அகதியாக உலகெங்கும் புகலிடம் தேடி அலைந்தார்கள். சென்னைக்கும் இந்த இனஅழிவின் காரணமாக ஆர்மீனியர்கள் வந்திருக்கிறார்கள். யூதப்படுகொலை போல ஆர்மீனிய இனஅழிப்பு பொதுமக்களின் கவனத்திற்கு உள்ளாகவே இல்லை. இன்று வரை துருக்கி அந்த இனப்படுகொலையை ஒத்துக் கொள்ளவேயில்லை. ஒவ்வொரு ஆர்மீனியன் கண்ணிலும் இனப்படுகொலையின் துயரம் பீறிட்டுக் கொண்டுதானிருக்கிறது.


ஆர்மீனியர்கள் ஒருபோதும் வாய்விட்டு சிரிப்பதில்லை. நூற்றாண்டுகால வலி அவர்கள் தாடைகளை ஒடுக்கி வைத்திருக்கிறது என்று புகழ்பெற்ற எழுத்தாளர் வில்லியம் சரோயன் எழுதுகிறார். இவரும் ஆர்மீனிய வம்சாவழியை சேர்ந்தவரே.


இன்று சென்னையில் ஆர்மீனியர்கள் வீதி நினைவுசின்னம் போலவே  இருக்கிறது. புனித மேரி தேவாலயத்திற்கு பொறுப்பாக இருந்த கடைசி ஆர்மீனியரும் தனது சொந்த தேசம் திரும்பி போய்விட்டார். அவர் வளர்த்த வாத்துகள் மட்டும் தனிமையில் க்வாக் கவாக் என்று சப்தமிட்டபடியே கல்லறை தோட்டத்தினுள் உலவுகின்றன. மாமர நிழலில் நிசப்தமாக ஆர்மீனிய உடல்கள் பூமியினுள் புதையுண்டிருக்கின்றன.


 ஞாயிற்றுகிழமைகளில்  இன்றும் ஆர்மீனய தேவாலயத்தின் பிரம்மாண்டமான மணிகள் ஒலிக்கின்றன. அது கடந்தகாலங்களில் இருந்து  சென்னையில் வாழ்ந்து மடிந்த  ஆர்மீனியர்களின் நினைவுகளை மறந்துவிடாமல் ஞாபகமூட்டிக் கொண்டேயிருக்கிறது.



ஆர்மீனிய சமகால இலக்கியம்  இனஅழிவு சம்பவத்தையே பெரிதும் மூலக்கருவாக கொண்டிருக்கிறது.  ஹோவன்னஸ் டுமேனியன், ஸ்டீபன் சோரியன், அகாசி ஜவாசியன், ஹோவன்னஸ் சிராஸ், தானியேல் வராஜவேன் ஆரா பாலியோஜியோன் என்று நீளும் முக்கிய படைப்பாளிகள் வரிசை அதன் சமகால புனைகதைகளை உலகின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது. தமிழில் அசோகமித்ரன் முன்னுரையுடன் வல்லிகண்ணன் மொழிபெயர்த்த ஆர்மேனியச்சிறுகதைகள் என்ற நூலை நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டுள்ளது.



ஆட்டம் ஈகோயான் ஆர்மீனியாவின் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர். இவரது படங்கள் உலகதிரைப்பட விழாக்களில் முக்கிய விருதுகளை பெற்றிருக்கின்றன. கனடாவில் வசிக்கிறார். இவரது இயக்கத்தில் வெளியான அராரத் (அழ்ஹழ்ஹற்) என்ற திரைப்படத்தினை பார்த்தேன். ஆர்மீனியவின் இனபேரழிவை பற்றிய இந்த திரைப்படம் சமகால சினிமாவில் மிக முக்கியமானதாகும். வரலாற்றின் இருண்ட பக்கங்களை இந்த படம் வெளிச்சமிடுகிறது. மனசாட்சியின் கண்கள் நம்மை உற்று கவனித்துக் கொண்டிருப்பதை  இப்படம் உணர்த்திக் கொண்டேயிருக்கிறது.


அரசியல் விழிப்புணர்விற்கான திரைப்படங்கள் ஒரு போதும் உரத்து குரல் கொடுப்பதில்லை. மாறாக அது நம் மனசாட்சியோடு பேசுகிறது. தவற்றை சுட்டிகாட்டுகிறது. உணர சொல்லி யாசிக்கிறது.  வரலாற்றின் புதைமேடு போலாகிவிட்ட இன அழிவை அது நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கிறது.
இந்த படமும் அது போன்ற ஒரு கலைமுயற்சியே. துருக்கி இன்று வரை ஆர்மீனயப்படுகொலைக்கு பொறுப்பு ஏற்றுக் கொள்ளவில்லை என்ற ஆதங்கமும்  ஆத்திரமும் தான் இப்படத்தின் அடிநாதம்.


லட்சக்கணக்கான ஆர்மீனியர்களை கொன்று குவிக்கப்பட்டதை யார் நினைவில் வைத்திருக்கிறார்கள். அதை குற்றம் என்று யாராவது சொல்கிறார்களா என்ன. அதனால் நாம் யூதர்களை கொல்வதையும் எவரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று ஹிட்லர் தனது நாஜிபடையினரிடம் பிரசங்கம் செய்திருக்கிறார். வரலாற்றின் இந்த மௌனம் சாவை விட கொடியது என்கிறார் ஆட்டம் ஈகோயான்.


படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்றுள்ள வசனம் அதை துல்லியமாக வெளிப்படுத்துகிறது. ஒரு துருக்கியை சேர்ந்தவரிடம் ஆர்மீனியர் உணர்ச்சிவசப்பட்டு சொல்கிறார்


ஆர்மீனியர்களை ஏன் வெறுக்கிறீர்கள். அவர்கள் என்ன தவறு செய்துவிட்டார்கள். அவர்கள் துருக்கியர்களை எப்போதுமே நேசிக்கிறார்கள். வரலாற்றின் தவறுகளுக்கு சமகாலம் பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மட்டும் தான் யாசிக்கிறார்கள். அவர்கள் வேண்டுவது காலம் கடந்தாவது அந்த குற்றவுணர்ச்சிக்கு மன்னிப்பு கேளுங்கள் என்பதே. அதை ஏன் துருக்கி செய்ய தவறுகிறது


படத்தின் திரைக்கதை வடிமம் தனித்துவமானது. படத்திற்குள் படம் என்ற சட்டகம் கொண்டது. மூன்று தளங்களில் இயங்குகிறது இந்த திரைக்கதை. ஒன்று எட்வர்ட் சரோயன் என்ற திரைப்பட இயக்குனர் ஆர்மீனிய இனஅழிப்பை பற்றிய ஒரு படத்தினை எடுக்க விரும்புகிறார். இதற்காக அவர் துருக்கிய நடிகரை முக்கிய கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்கிறார். அத்துடன் ஆர்மீனியாவின் புகழ்பெற்ற ஒவியரான அர்சாலி கோர்கியின் வாழ்க்கை  படத்தில் ஒன்றிணைக்க விரும்புகிறார். அதற்காக கலை விமர்சகரான அனியை தனது படத்தின் ஆலோசகராக நியமிக்கிறார். அவர்கள்  படப்பிடிப்பின் வழியே கடந்த கால சம்பவங்கள் மறுஉயிர்ப்பு பெறுகின்றன.


இன்னொரு தளத்தில் அனியின் மகன் ராபி அம்மாவின் விருப்பதை மீறி சீலியா என்ற பெண்ணை காதலிக்கிறான். அனி சீலியாவின் அப்பாவை காதலிப்பதாக நடித்து ஏமாற்றிவிட்டாள். அதனால் அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்து போய்விட்டார் அதற்கு பழிவாங்கவே அவள் ராபியை காதலிப்பதாக அனி குற்றம் சாட்டுகிறார். அனி சீலியாவை நேசிக்கிறாள். சீலியா ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அனியை மோசமாக நடத்துகிறாள். திட்டுகிறாள். சண்டையிடுகிறாள்.



ஒவியர் அர்சாலி கோர்க்கியின் வாழ்க்கைக்கும் தனக்கும் சில ஒற்றுமைகள் இருப்பதாகசிலியா உணர்கிறாள். கோர்கியின் முக்கிய ஒவியமான தாயும் மகனும் என்ற ஒவியம் குறித்து அனி உணர்ச்சி ததும்ப உரையாற்றும் போது சிலியா ஏன் அர்சாலி தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்லுங்கள் என்று கத்துகிறாள். முடிவில் அர்சாலியின் ஒவியத்தை கிழித்து எறிய முயற்சித்து போலீசில் பிடிபட்டு சிறைப்படுகிறாள்


இன்னொரு பக்கம் பிலிப் என்ற சுங்கதுறை அதிகாரிக்கும் அவரது மகன் டோனிக்குமா உறவு. டோனி அலி என்பவனுடன் ஹோமோ உறவு கொண்டிருக்கிறான். அதை பிலிப்பால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒரு நாள் விமானநிலையத்தில் துருக்கியில் இருந்து வந்து இறங்கும் ராபியின் பெட்டியை சோதனையிடுகிறார். அவன் தான் அராரத் மலையை படமாக்கிவிரும்பி சென்றதாக சொல்லி இரண்டு படப்பெட்டிகளை காட்டுகிறான். அவனது விசாரணையின் வழியே ஆர்மீன இனப்படுகொலையின் இன்னொரு பக்கம் விவரிக்கபடுகிறது.


முடிவில் சரோயன் தனது படத்தினை முடித்து வெளியிடுகிறார். போதை பொருள் கடத்தி பிடிப்பட்ட ராபியை மன்னித்து விடுகிறார் பிலிப். வேற்றுமைகளை மறந்து தாயும் மகனும் ஒன்றாகிறார்கள். துருக்கியை சேர்ந்த நடிகர் கடந்தகால துயரத்திற்காக தான் வருத்தம் கொள்வதாக மன்னிப்பு கோருகிறான்.


இடைவெட்டாக நகரும் கதைபோக்கின் ஊடே ஆர்மீனியாவின் நூற்றாண்டுகால சோகம் வெளிப்படுத்தபடுகிறது. கலை, சமூகம் தனிநபர் வாழ்வு, சமகால மாறுதல்கள் என்ற நான்கு புள்ளிகளையும் ஆர்மீனியாவின் வரலாறு எப்படி பாதிக்கிறது என்பதையும் அவை எங்கே ஒன்றிணைகின்றன என்பதுமே படத்தின் குவிமையம்.


படம் முழுவதும் கவித்துவமான காட்சிகளும் வசனங்களும் இடம்பெற்றுள்ளன.
எங்கே போகிறோம் என்று தெரியாமல் துரத்தபடும் சரோயனின் குடும்பத்தின் கடந்த காலத்தை அவர் நினைவு கொண்டு விவரிக்கிறார். தனது தாய் ஒரேயொரு மாதுளம்பழத்தை தன்னுடன் கொண்டு சென்றதாகவும் பாலைவனத்தில் பசியோடு அலைந்த போது ஒரு நாளைக்குஒரேயொரு விதையை மட்டுமே சாப்பிட்டதாகவும். அம்மாவின் நினைவாக தன்னிடம் இருப்பது மாதுளை மட்டுமே அதை சாப்பிடுவதன் வழியே தான் நம்பிக்கையும் வலிமையும் கொள்வதாகவும் தனது அம்மா தன்னோடு இருப்பதை போல உணர்வதாகவும் சொல்கிறார். மாதுளை அதிர்ஷ்டத்தின் அடையாளம். அதை எங்கே செல்லும் போதும் கொண்டு செல்கிறேன் என்கிறார்.


ஒவியர் அர்சாலி கோர்கி தான் சிறுவயதில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றினை மாடலாக வைத்துக் கொண்டு அதை ஒவியமாக வரைய முயற்சிக்கிறார். ஒவியம் மிக தத்ரூபமாக அமைகிறது. முடிவில் ஆர்மீனிய படுகொலையின் தன் தாயும் குடும்பமும் இறந்து போன துக்கம் தாளமுடியாமல் ஒவியத்தில் இருந்த அம்மாவின் கைகளை அழித்து விடுகிறார். கைகள் ஆறுதல் தரக்கூடியவை. அவை நம்பிக்கையின் அடையாளம். நம்பிக்கை இழந்து போன மனிதன் கையில்லாத தாயை தான் கொண்டிருப்பான் என்று கதறி அழுகிறார். அர்சாலி கோர்கியின் வாழ்க்கை நிஜமாக நடந்த ஒன்று. அதை படம் சிறப்பாக பதிவு செய்திருக்கிறது


ஆர்மீனிய சமகால இளைஞர்கள் பாலியல் வேட்கை போதை மருந்து என்று அலைவதையும். அதன் காரணமாக அவர்கள் கடந்த காலத்தை மறந்து போனதையும் கூட படம் சுட்டிகாட்டுகிறது. தாய்மை என்ற உணர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது. அது கவலைப்பட வேண்டியது என்று ஒரு இடத்தில் அனி சொல்கிறாள். அது முக்கியமான அவதானிப்பு. அது போலவே கடந்த கால சம்பவங்களை வெறும் கதையாக நினைப்பதை போல அவமானம் வேறு ஒன்றுமில்லை என்று சரோயன் படத்தின் ஒரு காட்சியில் சொல்கிறார்.


நிஜமான சொல்லது. கவலையோடு பிறந்து கவலையோடு சாகிறோம். நமது சுயவிருப்பங்கள் யாவும் காற்றில் பறந்துபோய்விட்டன என்று தெமிர்சயன் என்ற ஆர்மீனியகவியின் வரியே நினைவிற்கு வருகிறது


படத்தின் குறிப்பிட்டு சொல்லவேண்டிய அம்சம் இசை. ஆர்மீனியர்கள் இசையில் தனித்துவம் பெற்றவர்கள். ஆர்மீனிய ஊர்ப்ந் ம்ன்ள்ண்ஸ்ரீ அற்புதமானது. படத்தில் ஆர்சலி ஒரு இசைத்தட்டினை சுழலவிட்டபடியே தனிநடனம் ஒன்றினை ஆடும் காட்சி உள்ளது. அதன் இசையும் அந்த நடனப்பாங்கும் உற்சாகம் கொப்பளிக்க வைக்ககூடியது. துயரத்தின் உணர்வெழுச்சிகளை இசை படம் முழுவதும் வெளிப்படுத்துகிறது.


2002 ம் ஆண்டு  வெளியான இந்த படம் துருக்கியர்கள் மீது வெறுப்பை வளர்க்கிறது என்று சினிமா விமர்சகர்கள் கடுமையாக தாக்கினார்கள். இன்னொரு பக்கம் துருக்கிய தொலைக்காட்சி படம் மாபெரும்தோல்வி என்று கேலி செய்தது. வரலாற்றை திரித்து உருவாக்கியிருக்கிறார்கள் இது நிஜமானதில்லை என்று சர்ச்சைகள் உருவாகின. வணிக ரீதியாக இப்படம் வெற்றிபெறவில்லை. ஆனால் சிறந்த மனிதஉரிமைக்கான திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு பரிசு பெற்றது.


ஒரு நாள் ஆட்டம் ஈகோயான் பள்ளியில் படிக்கும் தனது மகனை அழைத்து அவனிடம் ஆர்மீனிய படுகொலை பற்றிய சம்பவங்களை விவரித்திருக்கிறார். அதை கேட்ட மகன் அதற்காக இப்போதாவது துருக்கியர்கள் மன்னிப்பு கேட்டார்களா என்று பதிலுக்கு கேட்டிருக்கிறான். இல்லை என்றதும்  ஏன் கேட்கவில்லை என்று திகைத்து போயிருக்கிறான். அந்த நிமிசம் தான் இப்படம் உருவாக்க வேண்டிய எண்ணம் தனக்குள் வந்ததாக ஆட்டம் ஈகோயான் குறிப்பிடுகிறார்.


படத்தில் ஆனியாக நடித்திருப்பவர் ஈகோயானின் மனைவி அர்சனி. இவருக்கு சிறந்த நடிகைக்கான கனேடிய விருது கிடைத்தது.


உயிர்தப்பி ஒடும் ஒரு பெண்ணை பிடித்து துருக்கிய ராணுவவீரன் ஒருவன் மரவண்டி ஒன்றில் போட்டு கற்பழிக்கிறான். அந்த பெண் தனது மூன்று வயது மகளை வீரன் பார்த்துவிட கூடாது என்று வண்டியின் அடியில் ஒளித்து வைத்திருக்கிறாள். அந்த சிறுமியின் கண்கள் தன் தாயின் உடலை புணரும் மனிதனை வெறித்து பார்த்து கொண்டிருக்கின்றன. தாயின் கைகள் அந்த சிறுமியின் கண்களை மூட எத்தனிக்கின்றன. வீரன் அந்த பெண் உடலின் மீது வன்பாலுணர்வு கொள்கிறான்.  அவள் கதறியபடியே மகளை மறைக்க போராடுகிறாள். கள்ளமற்ற குழந்தையின் திகைப்பு பயம் நிர்கதி. என்னை துவள செய்தது. ஒரு நிமிச நேரம் திரையில் தோன்றிமறையும் இந்த காட்சி  விசும்ப வைத்தது. நீண்ட நாட்களின் பிறகு இந்த படத்தில் நாலைந்து இடங்களில் என்னை மீறி அழுதேன்.



மறந்து போன வரலாற்று சம்பவங்கள்  என்றாவது உயிர்தெழுந்து கேள்விகேட்கும் போது தலைகவிழ்ந்து நிற்பதை தவிர நம்மிடம் வேறு வழியில்லை. அந்தகேள்விகள் வலிமையானவை. பதிலால் திருப்தியடைய முடியாதவை. நமது புறக்கணிப்பு. அக்கறையின்மை, சுயநலம் போன்றவை அன்று பெருங்குற்றங்களாக அடையாளம் காணப்படும் என்பதே உண்மை.  
••

0Shares
0