மனசாட்சியின் குரல்

தீராநதி ஜூன் 2013 இதழில் வெளியாகி உள்ள எனது சிறுகதை கடக்கமுடியாத பாலம் குறித்து தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்  எழுதியுள்ள பதிவிது.

***

எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதை நம்  மனசாட்சியை உலுக்கும்

எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதை நம் மனசாட்சியை உலுக்கும் சாதிக்கலவரங்கள் சாகா வரம் பெற்றவை போல நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இவை எந்தப் பொறியில் துவங்கிக் கொழுந்து விட்டு எரிந்தன என்பது மட்டுமே ஒவ்வொரு முறையும் வேறுபடலாம். அல்லது பழைய பின்னணி மறுபடியும் இருக்கலாம். ஆனால் துவங்கிய பின் நடக்கும் வெறித் தாண்டவத்தில் மனிதன் மிருகமாகிறான்.

அதை அவர் நேரில் கண்டிருக்கிறார். மனம் மிகுந்த வேதனைப் பட்டிருக்கிறார். அதைப் பதிவும் செய்கிறார்.

ஏறத்தாழ 40 வருடங்களுக்கு முன்பு “ஞான ஒளி’ என்னும் நாடகம் திரைப்படமாக சிவாஜி கணேசனை மையப் படுத்தி வரும். அதில் ஒரு முரடனாகக் கதாநாயகனும் காவல்துறை அதிகாரியாக அவரது பாலிய சினேகிதரும் வருவார். முரடன் அவரைப் பார்த்து ” என் விலங்கைக் கட்ட உன் விலங்கால் முடியாது” என்று வசனம் பேசுவார். என் வீட்டுப் பெரியவர்கள் உட்படப் பலரும் இந்த சிலேடையை ரசித்து எனக்கும் ரசிக்க சொல்லிக் கொடுத்தனர்.

நம் மனங்களுள் ஜாதி என்னும் அடையாளம் ஒரு ஓரமாக இருக்கவில்லை. ஆழமாக வேரூன்றி இருக்கிறது. அது மட்டுமல்ல அவலம். ஒரு மிருகம் வெறியோடு பாயும் நொடிக்காக உறங்காமல் காத்திருக்கிறது. அது சாதுவாகக் காத்திருக்கவில்லை. சரியான சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கிறது. அது நாம் யாருமே உள்நோக்கி மிகவும் அவமானப் பட்டு ஆத்ம பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய ஒன்று.

“கடக்க முடியாத பாலம்” என்னும் சிறுகதை தீராநதி ஜூன் 2013 இதழில் வெளியாகி உள்ளது. பாலம் என்பது இங்கே ஒரு படிமமாக வருகிறது. மனித நேயம் ஒன்றே பாலம். அது நம்மை ஜாதிபேதம் தாண்டி இணைக்கும். நாம் அந்தப் பாலத்தை நிராகரிக்கிறோம்.

ஒரு ஊரில் நடக்கும் ஜாதிக் கலவரத்தில் பல கொலைகள் நடந்தபடி இருக்க ஒரு பாலத்தில் தனியே இருக்கும் ஒருவரை மண்ணெண்ணை ஊற்றி எரிக்க நடக்கும் ஒரு முயற்சி யதேச்சையாக அங்கே வந்த ஒருவர் ஒரு “டார்ச்” விளக்கை அடித்து விசாரிக்கும் போது முறியடிக்கப் பட வெறியர்கள் ஓடி விடுகின்றனர். இருளில் கால் கைகள் கட்டப்பட்டுக் கிடக்கும் அவரைக் காலையில் பால்காரர் கட்டவிழ்த்து விட்டுக் காப்பாற்றுகிறார். மயிரிழையில் உயிர் தப்பிய அந்த நபரின் மனதில் வாழ்நாள் முழுவதும் ஒரு அச்ச உணர்வை அந்த நிகழ்ச்சி நிறுவி விடுகிறது.

அந்தப் பாலத்தில் ஜாதி பேதமின்றி நண்பருடன் அளாவளாவி அந்தப் பாலத்தையே ஒரு பாலைவனச் சோலை போல உணர்ந்த அவர் நிரந்தரமாக அங்கே போவதை நிறுத்தியதோடு ஊரை விட்டும் விலகி சென்னை போய் விடுகிறார். இந்த சிறுகதை கூர்மையாக நம் மனதின் உள்ளே ஊடுருவி அதனுள் உறங்கும் மிருகத்தைக் குத்தி அது உறுமுவதை நமக்கே உணர்த்தும்.

ராமகிருஷ்ணனின் சிறந்த படைப்புகளில் இது ஒன்று. அவருக்கு நன்றியும் வணக்கமும் வாழ்த்தும்.

நன்றி:  : https://tamilwritersathyanandhan.wordpress.com/2013/06/10/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95/

0Shares
0