புதிய சிறுகதை. ஜனவரி 25. 2026
தெரியாத எண்ணிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்திருந்தது. வாசவன் அதனை எடுக்கவில்லை. அதே எண்ணில் காலை பத்து மணிக்கும் அழைப்பு வந்ததாக ஞாபகம். லோன் கொடுப்பவர்கள் மற்றும் ஏமாற்றுப்பேர்வழிகள் அதிகமாகத் தொடர்பு கொள்கிறார்கள் என்பதால் அவர் தனது போனில் பதிவு செய்திராத எண்களில் இருந்து வரும் எந்த அழைப்பையும் ஏற்பதில்லை.
முக்கியமான அழைப்பு என்றால் வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டு செய்தி அனுப்புவார்களே என்று நினைத்துக் கொள்வார்.
அன்றாடம் இரவு ஏழு மணிக்கு தனது தொலைபேசியைச் சைலண்ட் மோடிற்கு மாற்றி மேஜை டிராயரில் போட்டுவிடுவார். மறுநாள் காலை எட்டரை மணிக்குத் தான் கையில் எடுப்பார். அந்த நேரங்களில் முக்கியமான தகவல் எனில் அவரது மனைவியின் எண்ணைத் தொடர்பு கொண்டு தெரிவிப்பார்கள்.
பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு இன்னமும் மூன்று ஆண்டுகள் இருந்தன. ஆனால் அதற்குள்ளாக விருப்ப ஒய்வு கொடுத்துவிட்டார். ஒரே மகள் கீர்த்தனா. அவளுக்குத் திருமணமாகிவிட்டது. பெங்களூரில் வசிக்கிறாள்.

ஓய்வு வாழ்க்கை என்பது பெரிய சைஸ் பிறந்த நாள் கேக்கை தனியாளாகச் சாப்பிட முயல்வது போலிருந்தது. இதுவரை வேலை தான் தன்னை இயக்கிக் கொண்டிருந்தது என்பதை இப்போது தான் அவரால் உணரமுடிந்தது.
இயற்கையில் ஓய்வு என்பதே கிடையாது. எந்த மரமாவது போதும் என ஓய்வெடுத்துக் கொள்கிறதா என்ன. பணிக்காலத்தில் நடைபயிற்சிக்காகக் காரை எடுத்துக் கொண்டு ஏவிசி பூங்கா வரை செல்வார். காரை நிறுத்த இடம் தேடுவது பெரிய பிரச்சனையாக இருக்கும்.
சரியாக நாற்பது நிமிஷம் வேகவேகமாக நடப்பார். பூங்காவில் உள்ள மரஞ்செடிகளோ, பெஞ்சில் அமர்ந்திருப்பவர்களோ அவர்து கண்ணில் பட மாட்டார்கள். ஆனால் ஓய்வு பெற்றபின்பு அதே பூங்கா மிகப் பெரியதாகத் தோன்றியது. எத்தனை விதமான மரங்கள். மலர்செடிகள். பூங்கா இரும்பு பெஞ்சில் அமர்ந்திருப்பவர்களைப் பார்த்தவுடன் தன்னை அறியாமல் புன்னகை செய்யத் துவங்கினார்.
அவர்களைப் போலவே காலை நாளிதழை கையோடு எடுத்துக் கொண்டு போய்ச் சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து படிக்க ஆரம்பித்தார். கங்காரு குட்டி தனது தாயின் வயிற்றினுள் பாதுகாப்பாக இருப்பது போல முதியவர்களுக்குப் பூங்காவில் இருப்பது பாதுகாப்பாக இருந்தது.
அலுவலக நாட்களில் நூற்றுக்கும் மேலான தொலைபேசி அழைப்புகள் வருவது வழக்கம். ஓய்விற்குப் பின்பு தினமும் நான்கோ ஐந்தோ அழைப்புகள் வருவதே அதிகம். அவராக யாரையும் போனில் அழைக்கவும் விரும்புவதில்லை.
ஆகவே அவரது தொலைபேசி பாட்டுக் கேட்கும் கருவியாக மட்டுமே பயன்பட்டு வந்தது. அன்றைக்கும் அவர் மதிய உணவை முடித்துக் கொண்டு படுக்கையில் கிடந்தபடியே செல்போனில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருக்கும் போது அவரது மனைவி சவீதா அறைக்குள் வந்து சொன்னாள்
`யாரோ மதன்குமாராம். உங்க கூடப் பேசுறதுக்கு டிரை பண்ணிகிட்டே இருக்காராம். எப்போ பேசலாம்னு கேட்கச் சொல்றார்`
`மதன்குமாருனு யாரையும் எனக்குத் தெரியாதே`
`ஏதோ பெர்சனலா பேசணும்னு சொல்றான். குரலை கேட்டால் யங்பாயாத் தெரியுது` என்றாள்.
ஒருவேளை அலுவலகத்தில் வேலை பார்க்கும் எவருக்காவது தெரிந்தவனாக இருப்பானா. அல்லது ஏதேனும் உதவி கேட்க நினைக்கிறானா எனப் புரியாமல் சவீதாவிடம் சொன்னார்
`நானே பேசுறேன்`
அப்படிச் சொல்லியபோதும் அவருக்குப் பேச வேண்டும் என்ற விருப்பம் உருவாகவேயில்லை. மாலை அதே எண்ணில் இருந்து மறுபடி அழைப்பு வந்தது. இந்த முறை வாசவன் போனை எடுத்தார்

`சார். நான் மதன்குமார் பேசுறேன். என்னை உங்களுக்குத் தெரியாது. ஆனா ஒரு முக்கியமான வேலையா உங்களை நேர்ல பாக்கணும். பத்து நிமிஷம் போதும். இப்போ வரலாமா`
`என்ன விஷயமா பாக்கணும்`
`நேர்ல சொல்றேன் சார். போன்ல சொல்ல விரும்பலை`
`முன்பின் தெரியாத யாரையும் நான் பாக்க மாட்டேன்`
`உங்களை எனக்கு நல்லாத் தெரியும் சார். உங்க சொந்த ஊர் திருமோகூர். லிட்டில் ரோஸ் கம்பெனியோட ஜிஎம்மா இருந்திருக்கீங்க. உங்க பொண்ணு பேரு கீர்த்தனா. கல்யாணம் ஆகி பெங்களூர்ல இருக்காங்க. மேடம் பேரு சவீதா. சரிதானே`
`நீங்க என் சொந்தமா.. இதெல்லாம் எப்படி உங்களுக்குத் தெரியும்`
`அதை எல்லாம் நேர்ல சொல்றேன் சார். நிச்சயமா நான் உங்களைத் தொந்தரவு பண்ண மாட்டேன். பத்தே நிமிஷம். கிளம்பிடுவேன். `
`காலைல பத்துமணிக்கு வாங்க. அட்ரஸ் தெரியுமா`
`இருக்கு சார். செவன்த் மெயின் ரோடு. டோர் நம்பர் 324 தானே. `
`நாம இதுக்கு முன்னாடி சந்திச்சிருக்கோமா`
`இல்லை சார். இதான் பர்ஸ்ட் டைம். ஷார்ப்பா பத்துமணிக்கு வந்துருவேன். தேங்ஸ் சார்`
என்ன விஷயமாகப் பார்க்க நினைக்கிறான் என்று புதிராக இருந்தது. அவருக்குச் சொந்தமாக இரண்டு காலிமனைகள் போரூரில் இருந்தன. அதை விலைக்கு வாங்குவதற்கு இப்படி விசாரித்து வந்து சேருகிறவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவன் தானா. இல்லை ஏதேனும் பொருள்விற்பதற்காக வரப்போகிறானா. யாராக இருக்கும் எனக் குழப்பமாக இருந்தது. ஏன் தேவையில்லாமல் இதை எல்லாம் யோசிக்க வைத்துத் தன்னைச் சிரமப்படுத்துகிறார்கள் என்று எரிச்சலாகவும் வந்தது.
••
மறுநாள் காலை எட்டரை மணிக்கெல்லாம் அலுவலகம் புறப்படுகிறவர் போல உடை அணிந்து கொண்டு ஹாலில் காத்துக் கொண்டிருந்தார் வாசவன். பதற்றத்தை மறைக்க முயல்வதற்காக ஹிண்டு பேப்பரில் வந்துள்ள விளையாட்டு செய்திகளை விருப்பமின்றிப் படித்துக் கொண்டிருந்தார்.
மதன்குமார் சரியாக 9.55க்கு வீட்டுவாசலில் பைக்கில் வந்து இறங்கினான். இருபத்தைந்து வயதிருக்கும். பேஸ்கட்பால் பிளேயர் போன்று நல்ல உயரம். தோளில் ஒரு லெதர் பை. கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்கிறவர்களுக்கென உருவாக்கபட்ட தோற்றம். செயற்கையான புன்னகை. வாசல்கேட்டை திறந்து உள்ளே வந்துவிட்டு அதைப் பூட்டியதில் அவனது பொறுப்புணர்வு தெரிந்தது. வாசவனைப் பார்த்தவுடன் அதே புன்னைகையுடன்
`ஹலோ சார்`. என்றான்
பார்த்தமுகமாக இல்லை. அவனை வலதுபக்கமிருந்த சோபாவில் உட்காரும்படியாகக் கையைக் காட்டினார்
`இல்லை. சார். நான் இந்தச் சேர்ல உட்கார்ந்துகிடுறேன்` என மர நாற்காலி
ஒன்றைக் காட்டினான்

அவர் தலையசைத்தவுடன் அவன் அந்த நாற்காலியை அவருக்கு அருகில் இழுத்துப் போட்டு அமர்ந்து கொண்டான். பின்பு தனது சட்டைபையில் இருந்து நீலநிற விசிட்டிங் கார்டை வெளியே எடுத்து அவரிடம் நீட்டினான்.
“நீங்க அபீமி பற்றிக் கேள்விபட்டிருக்க மாட்டீங்க.
அபீமிங்கிறது ஒரு கிரேக்க சொல். அதுக்கு மன்னிப்புனு அர்த்தம். எங்க ஏஜென்சி அடுத்தவங்களுக்காக மன்னிப்பு கேட்கிறதை வேலையா செய்யுது
யார்கிட்ட மன்னிப்பு கேட்கணும். எப்படி மன்னிப்பு கேட்கணும். வெறுமனே மன்னிப்பு மட்டும் கேட்டால் போதுமா அல்லது எழுதி தரணுமா. இப்படி நிறைய விதம் இருக்கு. ஒவ்வொண்ணும் தனிப் பேக்கேஜ். இதுக்கு EMI வசதியும் இருக்கு.
எங்க ஏஜென்சியில் இருநூறு பேர் வேலை பாக்குறோம். ஸ்டார் ஹோட்டல் ரிசப்ஷனிஸ்ட் எவ்வளவு பொலைட்டா, அழகாக உங்களை வெல்கம் பண்ணுவாங்களோ. அப்படி எங்களையும் டிரைனிங் பண்ணியிருக்காங்க. நான் இதுவரைக்கு 86 பேர்கிட்ட மன்னிப்பு கேட்டு இருக்கேன். சக்ஸஸ் ரேட் 92 % அதுக்காகக் கோல்ட் ஸ்டார் கூடக் கிடைச்சிருக்கு
நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்கிறதுக்காக வந்துருக்கேன். “
அதைக்கேட்டவுடனே வாசவனுக்குக் கோபம் பீறிட்டது
`உன்னை யார் அனுப்பி வச்சது. `
`மிஸ்டர் ராஜவேல். உங்க கசின் பிரதர். 1986ல் உங்களுக்குள்ளே சொத்து தகராறு ஏற்பட்டுக் கோர்ட் கேஸ்னு அலைஞ்சி கடைசில அவர் ஜெயிச்சிட்டாராம். அதுல இருந்து உங்களுக்குள்ளே பேச்சு வார்த்தை கிடையாது அவர் மகன் கல்யாணத்துக்குக் கூட நீங்க போகலை. உங்க பொண்ணு கல்யாணத்துக்குக் கூப்பிடலை. செத்தாலும் முகத்தைப் பார்க்க மாட்டேனு சொல்லியிருக்கீங்களாம். ராஜவேல் இப்போ ரொம்பச் சிக்கா இருக்கார். நடந்ததை நினைச்சி இப்போ ரொம்பப் பீல் பண்ணுறார். உங்க கிட்ட மன்னிப்பு கேட்க ஆசைப்படுறார். நேர்ல வந்தா அவரோட பேச மாட்டீங்கன்னு.. எங்க சர்வீஸை எடுத்துருக்கார். அவர் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுகிடுறேன். பெரிய மனசு பண்ணி நடந்த எல்லாத்தையும் மறந்துருங்க.. `
என அவன் வாசவனை நோக்கி சாஷ்டாங்கமாகக் காலில் விழுந்தான். அதனை அவர் எதிர்பார்க்கவில்லை.
அவரை அறியாமல் சப்தமாகச் சவீதா என அழைத்தார். சமையல் அறையில் இருந்த சவீதா அவசரமாக வெளியே வந்தாள்
`அந்த நாயி மன்னிப்பு கேட்கச் சொல்லி இவனை அனுப்பி வச்சிருக்கு. இவனை வெளியே போகச் சொல்லு` எனப் படபடப்பாகச் சொன்னார்
எந்த நாய் என அவளுக்குப் புரியவில்லை. தரையில் விழுந்துகிடந்த இளைஞனை எழுந்து கொள்ளச் சொன்னாள்
`ராஜவேல் சார் உங்க கிட்டயும் மன்னிப்பு கேட்கச் சொன்னார் ஆண்டி`.. என அவள் காலிலும் விழுவதற்கு முயற்சி செய்தான்
ராஜவேல் என்ற பெயரைக் கேட்டதும் அவளுக்குப் புரிந்துவிட்டது. கோபத்தை அடக்கிக் கொண்டு சொன்னாள்
`காசு இருக்கிற திமிர்ல மன்னிப்பு கேட்க ஆள் அனுப்பி வச்சிருக்கிறார். இதெல்லாம் எங்களுக்குப் பிடிக்காது.. கிளம்புங்க.. `
`ஆண்டி.. கோர்ட்ல கேஸ் போட்டா நமக்காக லாயர் வச்சிகிடுறது இல்லையா.. அது மாதிரி இது ஒரு சர்வீஸ். நான் மன்னிப்புக் கேட்டவிதம் ரொம்ப ட்ரெடிஷனல். அது பிடிக்கலைன்னா.. எப்படி மன்னிப்பு கேட்கணும்னு சொல்லுங்க. வீடியோ கால்ல ராஜவேல் சார் மன்னிப்பு கேட்டா ஒகேவா. இல்லை. நான் உங்க வீட்டுவாசல்ல நின்னு மன்னிப்பு கேட்கணுமா`
`அவன் செய்த தப்புக்கு நீ எதுக்குப்பா மன்னிப்பு கேட்குறே` என்று வாசவன் கோபத்துடன் கேட்டார்
`கிளைண்ட் செய்யச் சொல்றதை நாங்க செய்யப்போறோம். இது என்னோட ஜாப் சார்`
`மன்னிப்புங்கிறது இப்படி நீ நடத்துற நாடகம் இல்லை` என்றாள் சவீதா
`அப்படியில்லை ஆண்டி. டைம் மாறிகிட்டே இருக்கு.. ஒல்டு ஜெனரேஷன் மாதிரி இன்னும் எப்பவோ நடந்ததை மனசுல வச்சிகிட்டு பகையை வளத்துகிட்டு இருக்காம.. சேஞ்ச் ஆகிறது நல்லது தானே`
`அப்போ யார் செய்த தப்புக்கும் யார் வேணும்னாலும் மன்னிப்பு கேட்கலாமா`
`யெஸ்.. கேட்கலாம். நான் கேட்டிருக்கேன். நிறையப் பேர் இதுவே போதும் மன்னிச்சிருக்காங்க. `
`ராஜவேலு எங்ககூடச் சண்டை போட்டதை விடவும் இது கேவலமான விஷயம். இப்போ எதுக்காக அவன் மன்னிப்பு கேட்க நினைக்குறானு உனக்குத் தெரியுமா ` என்றார் வாசவன்
`அதை எல்லாம் நாங்க கேட்கிறது இல்லை சார். `
`எங்க குடும்பப் பிரச்சனையைப் பற்றிச் சொன்னா உனக்குப் புரியாது. கிளம்பு`.
`அப்போ நான் மன்னிப்பு கேட்டதை நீங்க ஏத்துகிட்டீங்களா.. ஒகேன்னா இதுல ஒரு சைன் போடுங்க`
எனத் தனது பையிலிருந்து ஒரு படிவம் ஒன்றை வெளியே எடுத்து நீட்டினான்
`வெளியே போ`. என்று சப்தமாகச் சொன்னார் வாசவன்
`உங்க கோபம் எனக்குப் புரியுது சார். பர்ஸ்ட் ஸ்டெப்ல இப்படித் தான் ரியாக்சன் இருக்கும். ஆனா.. உங்ககிட்ட எப்படி மன்னிப்பு வாங்குறதுனு எனக்குத் தெரியும். `
`அது நடக்காது. நீ கிளம்பு. `
`உலகம் மாறிகிட்டே இருக்கு சார். எங்களை மாதிரி புதுபுதுசா நிறைய ஏஜென்சி வந்துருச்சி. இங்கே பலரோட பிராப்ளம் பணம் இல்லை சார் கில்ட். குற்றவுணர்வை வெளியே காட்டிகிடவும் முடியாது. மறக்கவும் முடியாது. எப்படியாவது கில்ட்ல இருந்து வெளியே வரணும்னு நினைக்கிறாங்க. அவங்களை ஒரு பேஷண்ட் மாதிரி நினைச்சி பாருங்க. எங்க மேல கோபம் வராது`
`உன் விளக்கம் எல்லாம் எங்களுக்குத் தேவையில்லை. `
`உங்க டைம்ல கூடுதலா ஐந்து நிமிஷம் எடுத்துகிட்டேன். சாரி.. உங்க கோபத்துக்கு நன்றி. இது என்னோட ஜாப்.. இதுக்குத் தான் சம்பளம் குடுக்குறாங்க`
அவன் பைக்கில் கிளம்பி போகும்வரை சவீதா வெறித்துப் பார்த்துக் கொண்டேயிருந்தாள். பின்பு தனது கணவரிடம் கேட்டாள்

`இதுக்கு எல்லாம்மா ஏஜென்சி நடத்துறாங்க. `
`நானும் இன்னைக்குத் தான் கேள்விப்படுறேன். இந்தப் பையனைச் சொல்லி என்ன ஆகப்போகுது. தறுதலை அந்த ராஜவேலுவ செருப்பாலே அடிக்கணும்`
`இத்தனை வருஷத்துக்கு அப்புறம் இப்போ எதுக்கு மன்னிப்புக் கேட்கணுமாம். அந்த ஆளாலே நாம பட்ட கஷ்டம் போதாதா. நம்ம காசை வாயில போட்ட ஈனப்பிறவி,, அவருக்கெல்லாம் நல்ல சாவே வராது` என்றாள் சவீதா
`இப்போ கூட ஏதாவது காரணம் இல்லாமல் மன்னிப்பு கேட்க மாட்டான். அதுவும் காசு குடுத்து மன்னிப்பு கேட்க சொல்றான்னா.. திருட்டுபய எதுக்கோ பெரிசா அடிப் போடுறான். `
`நிச்சயமா இருக்கும்.. இந்தப் பையன் எதுக்கு வர்றேனு உங்க கிட்ட போன்ல சொல்லலையா`
`நேர்ல வந்து சொல்றேன்னான். இப்படினு தெரிஞ்சிருந்தா.. வீட்டுக்குள்ளே விட்டேயிருக்க மாட்டேன்`
`இந்த பையன் எல்லாம் என்ன படிச்சிருப்பான். இவன் கம்பெனில என்ன சம்பளம் குடுப்பாங்க` எனக்கேட்டாள் சவீதா
`அது யாருக்கு தெரியும். ஐம்பது அறுபது ஆயிரத்துக்குக் குறையாம கிடைக்கும். அவன் வைச்சிருக்கப் பைக் ஒன்றரை லட்ச ரூபா. `
`அதுக்காக அடுத்தவங்க கால்ல விழுறது தப்பில்லையா`
`இதையே தொழிலா மாத்திட்டாங்க பாரு.. அதை நினைச்சா தான் கவலையா இருக்கு. `
மதன்குமார் போன பின்பும் வாசவனுக்குப் படபடப்பு குறையவேயில்லை. இத்தனை ஆண்டுகளாக இல்லாமல் இப்போது எதற்கு ராஜவேலு மன்னிப்புக் கேட்கிறான். ஒரு வேளை பூர்வீக கோவில் நிர்வாகத்தை எடுத்துக் கொள்ளப்போகிறானா. இல்லை ஏதேனும் மோசமான நோய் வந்துவிட்டதா, எப்படியாவது மன்னிப்பு கேட்க வைத்துவிடுவேன் என்று அந்த மதன்குமார் சொன்னானே. என்ன செய்வார்கள். திரும்பவும் வருவார்களா. தொந்தரவு தருவார்களா. திடீரென வலை அறுந்து தரையில் விழுந்த சிலந்திக்கு ஏற்படும் பதற்ற உணர்வு அவருக்கு உருவானது.
`சவீதா நாம இவங்க யாரு தொந்தரவும் இல்லாம.. ரெண்டு மாசம் பெங்களூர் போயிடுவோம். உடனே கிளம்பு` என்றார்
சவீதா யாருடனோ போனில் நடந்த விஷயங்களைப் பேசிக் கொண்டிருக்கும் சப்தம் கேட்டது
••

மதன்குமார் தனது அபீமி ஏஜென்சிக்கு சென்று சேர்ந்தபோது மணி மூன்றாகியிருந்தது. இன்றைக்கு இரண்டு பேரை சந்தித்துத் திரும்பியிருந்தான். இருவரும் அவனது மன்னிப்பை ஏற்கவில்லை. கோவித்துக் கொண்டு துரத்தினார்கள்.
ஆண்களிடம் மன்னிப்பு கேட்பது எளிதானது. பெண்கள் எளிதாக மன்னிக்க மாட்டார்கள். அதுவும் வயதான பெண்களாக இருந்துவிட்டால் அவர்களிடம் மன்னிப்பைப் பெறவே முடியாது.
அவன் இரண்டாவதாக மன்னிப்பு கேட்க சென்றிருந்த பெண் தனியே வாழ்ந்து வந்தாள். அவள் கணவன் வேறு பெண்ணுடன் வெளிநாட்டில் வசித்துவந்தான். அவர்களுக்குள் விவாகரத்து நடக்கவில்லை. பல வருஷங்களாகப் பிரிந்தே வாழ்ந்தார்கள்
தற்போது வெளிநாட்டு நபர் தனது மனைவியிடம் மன்னிப்பு கேட்பதற்காக அவர்களின் சேவையை நாடியிருந்தார். அந்தப் பெண் இந்தி சினிமா நடிகை ரேகாவை போன்ற சாயல் கொண்டிருந்தார். அரக்கு வண்ண காட்டன்புடவை. கழுத்துவரை மூடிய ஜாக்கெட். அந்தப் பெண் தனது கோபத்தைக் காட்டிக் கொள்ளவில்லை. மாறாக மதன்குமாரிடம் உறுதியான குரலில் சொன்னாள்
`நீங்க சொல்ற ஆள் எப்பவோ செத்துட்டாரே. `
`செத்துப் போனவங்க மேல எதுக்கு மேடம் கோபம். மன்னிச்சிரலாமே`
`உசிரோட இருக்க மனுசங்களுக்குத் தான் மன்னிப்பு வேணும். பொணத்துக்கு எதுக்கு மன்னிப்பு. கிளம்புங்க`
`அவர் செய்தது தப்பு தான் மேடம். அதை நினைச்சி ரொம்பப் பீல் பண்ணுறார். வெறும் மன்னிப்புக் கேட்கிறது போதாதுன்னா.. எது வேணும்னாலும் செய்யத் தயாரா இருக்கார்` என்று பணிவான குரலில் சொன்னான் மதன்குமார்
`என்னோட இருபது வயதை அந்த ஆளாலே திரும்பத் தர முடியுமானு கேளுங்க. `
`உங்க கோபம் புரியுது மேடம்`
`அதெல்லாம் புரியாது.. நீங்க இப்படி ஆக்ட் பண்ணுறது ரொம்ப இன்டீசன்டா இருக்கு.. இன்னொரு தடவை இது விஷயமா நீங்க வரக் கூடாது.. தெரியுதா`
`ஐ ஆம் சாரி. `.
`இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம்னு எல்லோருக்கும் மறந்து போயிருச்சி.. கிளம்புங்க` என்றாள்.
மதன்குமார் வெளியே வந்து பைக்கில் ஏறியபோது எதற்காக மனிதர்கள் மன்னிப்புக் கேட்பதில் இவ்வளவு பிடிவாதம் காட்டுகிறார்கள் என்று நினைத்தான். ஜஸ்ட் லைக் தட் கேட்டுவிட்டு போக வேண்டியது தானே. ஒருவர் மற்றவரை மன்னிப்பதால் மட்டும் நடந்த விஷயங்கள் இல்லாமல் ஆகிவிடுமா என்ன. மனித மனது விநோதமானது. அது கடந்தகாலத்தில் விழுந்த முடிச்சுகளை, சிக்கல்களை மறப்பதேயில்லை.
அபீமி அலுவலகத்தில் மன்னிப்பை விதவிதமாகப் பிரித்து வகைப்படுத்தியிருந்தார்கள். அத்தோடு பலநாடுகளிலும் உள்ள மன்னிப்பு கேட்கும் முறைகளைத் தொகுத்து கையேடாக உருவாக்கியிருந்தார்கள்.
அவர்களுக்குப் பயிற்சி தருவதற்காக நியூசிலாந்திலிருந்து வந்திருந்த கிறிஸ்டினா சொன்னார்
`நீங்கள் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் ஒருவரிடம் மன்னிப்பு கேட்க முடிந்தால் அதுவே உயர்ந்த வெற்றி. உப்புத் தண்ணீரில் கரைவது போல மன்னிப்பு கேட்பது தன்னியல்பாக நடக்க வேண்டும். ஒரு போதும் ஒரு டம்ளர் தண்ணீரில் கல்லை போட்டு கரைத்துவிட முடியாது. மன்னிப்பு என்பது ஒரு முற்றுப்புள்ளி. காலம் தான் மன்னிப்பை ஏற்படுத்த கூடிய மாயப்பொருள். ஆகவே எந்த மன்னிப்பிற்கும் அவசரம் காட்ட வேண்டாம். `
மதன்குமாருக்கும் ஆரம்பத்தில் இது என்ன வேலை. எதற்காக எவர் பொருட்டோ மன்னிப்புக் கேட்கிறோம் எனக் குழப்பமாக இருந்தது. ஆனால் அது ஒருவகை விளையாட்டு என்பது போலப் புரிந்து கொண்டபின்பு அவன் ஆர்வத்துடன் ஈடுபட ஆரம்பித்தான். சம்பாதிக்கவும் துவங்கினான்.
••
தனது சட்டையில் அணிந்திருந்த ரகசியக் கேமிராவின் மூலம் வாசவன் வீட்டில் நடந்த நிகழ்வினை மதன்குமார் படம்பிடித்திருந்தான். அதனைத் தனது அலுவலகச் சிஸ்டத்தில் ஏற்றி மேலதிகாரிக்கு அனுப்பி வைத்தான். இதனை ராஜவேலு பார்ப்பதற்கும் அனுப்பி வைப்பார்கள். ஒவ்வொரு நிலையிலும் அவரது சேவை கட்டணம் உயர்ந்து கொண்டேபோகும்.
இது போன்ற காட்சிகளை ஆராய்ந்து அவர்கள் நடந்து கொள்ளும் முறையில் என்ன மாற்றம் தேவை என்பதை விளக்கும் நடத்தை நிபுணர்கள் இருந்தார்கள். அவர்கள் வாரம் ஒருமுறை அவனைப் போன்ற ஊழியர்களை அழைத்து மன்னிப்பு கேட்கும் போது நடந்து கொள்ளவேண்டிய புதிய முறைகள். உடல்மொழியை அவர்களுக்குப் பயிற்று வித்தார். குறிப்பாக என்ன சொற்களைப் பேசக்கூடாது. கைகளை எப்படிப் பயன்படுத்த வேண்டும். கண்களை எவ்வாறு அசைப்பது என்று பயிற்சி கொடுத்தார்கள்.
இது போலவே வாசவனைச் சந்திக்கப் போவதற்கு இரண்டு நாட்கள் முன்பாகவே மதன்குமார் அவர் முன்பாக எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான ஒத்திகை நடைபெற்றது. அதில் வாசவன் போல ஒருவன் நடித்தார். அநேகமாக இன்று நடந்த விஷயங்களில் எழுபது சதவீதம் ஒத்திகையின் போது நடந்தது போலவே இருந்தது.
இது போன்ற முதல் முயற்சிகளில் தோல்வி அடைவது இயல்பானதே. இதன் அடுத்தக் கட்டத்தில் மன்னிப்பு கேட்க வேண்டிய ஆளை பொதுவெளியில் சந்தித்து மன்னிப்பு கேட்க வேண்டும். பலரது முன்னால் கேட்கப்படும் மன்னிப்பு உடனே ஏற்கபட்டுவிடும். அதிலும் தோல்வி அடையும் என்றால் பள்ளிகுழந்தைகளை ஏற்பாடு செய்து மன்னிப்பு கேட்கச் செய்வார்கள். இதற்காகப் பள்ளி குழந்தைகளை ஏற்பாடு செய்து தரும் ஆட்கள் அவர்களிடம் இருந்தார்கள். அதுவும் முடியாவிட்டால் அவர்களை மிரட்டி மன்னிப்பு பெறுவதும் உண்டு. அதற்குக் கட்டணம் அதிகம் என்பதோடு பின்விளைவுகள் ஏற்படும் என்பதால் வாடிக்கையாளர்கள் குறைவாகவே விரும்பினார்கள்
மதன்குமார் புகைபிடிப்பதற்காகத் தனது அலுவலகத்தின் எதிரேயுள்ள டீக்கடைக்குச் சென்றான். அவனோடு வேலை செய்யும் யாழினியும் பிரதாப்பும் டீ குடித்துக் கொண்டிருந்தார்கள்
`மதன் ….இன்னைக்கு ஒரு சூப்பர் ஷோ தெரியுமா. நம்ம யாழினி மன்னிப்பு கேட்க போன வீட்ல ஒரே சீன். அந்த ஆள் கண்கலங்கி அழுது டிராமா பண்ணியிருக்கார். இவளும் விடலை. உங்களை என் பாதர் மாதிரி நினைக்குறேனு சொல்லிருக்கா.. அந்த ஆள் அதை நிஜம்னு நினைச்சி. இவளுக்குத் தன் மகளோட டெடி பியரை கிப்டா குடுத்துருக்கார்`
`அதை என்ன செய்தே`
`அட்டு டெடி பியர்டா. அந்த ஆளோட மக ஸ்கூல் படிக்கும் போது வாங்கினது. . அப்படியே பக்கத்துல இருக்கக் குப்பை தொட்டில போட்டுட்டு வந்துட்டேன். அப்பா பொண்ணு சென்டிமெண்ட் எப்பவும் வொர்க்அவுட் ஆகுதுறா` என்று கண்சிமிட்டியபடியே சிரித்தாள்
மூவரும் சிரித்துக் கொண்டார்கள். அப்போது யாழினியின் போன் அடித்தது. ஊரிலிருந்து அவளது அக்கா பேசினாள். ஏதோ குடும்பப் பிரச்சனை. அக்காவின் கணவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இரண்டு லட்சம் வரை இழந்திருக்கிறார். அது அலுவலகப் பணம். திரும்பக் கட்ட உடனே பணம் வேண்டுமாம். அவசரமாக அனுப்பி வைக்கச் சொல்லிக் கொண்டிருந்தாள்
`என்கிட்ட பணமில்லைக்கா.. அந்த ஆளை போலீஸ் பிடிச்சிட்டு போகட்டும் விடுக்கா`..
`அவரு என் புருஷன்டீ.. அவரை விட்டுட்டு நான் எங்க போறது.. `
`அதுக்காக அவரை இப்படியே விட்டா எப்படிக்கா.. திருந்தவே மாட்டாரா`
`நான் கோவிச்சிகிடும் போது எல்லாம் பொசுக்குனு மன்னிப்பு கேட்டிருறார்.. அதுவும் அவரு கண்ல தண்ணி வந்துருது.. என்னாலே என்ன செய்ய முடியும் சொல்லு. `
`அது நிஜமில்லைக்கா.. மன்னிப்புக் கேட்கிறது எல்லாம் விளையாட்டில்லே `
என்று யாழினி சொன்னாள்
அப்படி ஏன் சொன்னோம் என அவசரமாகத் தனது உதட்டைக் கடித்துக் கொண்டாள். நல்லவேளை அவளுடன் இருந்த அலுவலக நண்பர்கள் எவரும் அவள் சொன்னதைக் கேட்கவில்லை.
•••