இணையத்திலும் இலக்கிய இதழ்களிலும் நான் எழுதிய கட்டுரைகள் ஆளுமைகள், அக்கறைகள், அனுபவங்கள் என்று வகைப்படுத்தி தொகுக்கப்பட்டு தனித்த நூலாகியுள்ளது.
எதை எழுதும் போது அதில் நினைவுகள் கலந்துவிடுகின்றன. நினைவுகளின் நிழல் விழாத எழுத்து இருக்கிறதா என்ன? இந்த நினைவுகள் தனிநபர் சார்ந்தவை இல்லை. மாறாக நான் வாழும்காலத்தில் கண்டதும் காரணமற்று கைவிடப்பட்டதும், அறிந்து புறக்கணிக்கபட்டதுமான வாழ்வியலின் நுண்மையான சாட்சிகள்.
கிராமம் என்பது வெறும் சொல்லாக மட்டுமே அறிமுகமாகி போன மாநகர சூழலில் சிறுவர்கள் ஒட்டுபுல்லை கூட கண்ணில் கண்டதில்லை என்ற நிலைதானிருக்கிறது. இவர்களின் நினைவில் தொலைக்காட்சி தொடர்களும் துரிதஉணவக பட்டியலும் மட்டுமே இருக்கிறது. கணிணியும், அமெரிக்க கனவுகளும், குறுகிய காலத்தில் பணம்சேர்த்துவிட வேண்டும் என்ற குறுக்குவழிகளும் முதன்மைப்படுத்தபடும் நடப்புஉலகில் கரிசலையும் அதில் கொப்பளிக்கும் வெக்கையையும், குறுமண்ணை தெள்ளி தின்று பசியாறும் மனிதர்களையும் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் எனக்கிருக்கிறது.
அதே நேரம் மனிதர்கள் மீதான அக்கறையும் நேசமும் கொண்ட படைப்பாளிகள் உலகெங்கும் ஒன்று போலதான் செயல்பட்டிருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்ட வேண்டிய தேவையிருக்கிறது. இந்த இரண்டு கிளைகளின் வழியாகவே என் கட்டுரைகள் பெரிதும் பயணித்திருக்கின்றன.
இந்த நூலில் தஸ்தாயெவ்ஸ்கி, தால்ஸ்தாய். செகாவ். இதாலோ செவோ, கார்க்கி, ஷெல் சில்வர்ஸ்டைன், பாஷோ போன்ற இலக்கிய ஆளுமைகளை பற்றியும், இயற்கை குறித்த எனது புரிதல் மற்றும் அது சார்ந்த நினைவுகளை விவரிக்கும் சேவற்சண்டை, இந்தியாவை நடந்தே சுற்றிய மனிதர். தாமரை பூத்த குளம், ரயிலோடும் தூரம், போன்ற வாழ்வியல் அனுபவங்களில் இருந்து உருவான கட்டுரைகளுமாக மொத்தம் 48 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
**
இந்த நூலை சென்னை அரசு ஒவியக்கல்லூரியின் முதல்வர் ( பொறுப்பு) பதவி வகிக்கும் எனக்கு விருப்பமான நவீன ஒவியர் மனோகர் வெளியிடுகிறார்.
நூல் குறித்து தமிழகத்தின் முன்னோடி பத்திரிக்கையாளரும், அரசியல் விமர்சகருமான ஞாநி பேசுகிறார்.
**
நூல் வெளியீடு. டிசம்பர். 13. மாலை 5.30 மணி. பிலிம்சேம்பர். அண்ணாசாலை. சென்னை.
மலைகள் சப்தமிடுவதில்லை.பக்கம்: 240 விலை:140