வெங்கடேஷ் மாட்கூல்கரின் ‘பன்கர் வாடி’ நாவலை என் இருபது வயதுகளில் படித்திருக்கிறேன். மலைக்கிராமத்துக்குச் செல்லும் ஒரு பள்ளி ஆசிரியரின் கதையை விவரிக்கக்கூடியது. ஆடு மேய்ப்பவர்கள் வாழும் அந்தச் சிற்றூரில் அவர் எப்படித் தங்கி பள்ளிக்கு மாணவர்களைச் சேர்க்கிறார் என்பதை அழகாக விவரித்திருப்பார்கள்.

The Miracle (2015 film) என்ற துருக்கிப்படத்தைப் பார்த்தபோது பன்கர்வாடி தான் நினைவில் வந்தது. இப்படமும் மலைக்கிராமத்தினை தேடிச் செல்லும் பள்ளி ஆசிரியரின் கதையே.
மாஹிர் எக்ரெட்மேன் ஒரு பள்ளி ஆசிரியர் .1960களில் துருக்கியின் கடலோர நகரத்தில் வசிக்கும் அவரைத் தொலைதூர மலைக்கிராமத்திற்கு மாறுதல் செய்கிறார்கள். படம் அங்கே தான் துவங்குகிறது. மனைவியும் பிள்ளைகளும் சொந்த ஊரைவிட்டு வர மறுக்கிறார்கள். போகும் இடத்தில் கடத்தல்காரர்கள் அதிகம். முரட்டு மனிதர்களால் அவர் தாக்கப்படக்கூடும் என்று பயத்தை ஏற்படுத்துகிறார்கள்
மாஹிர் துணிந்து தனது பணியை ஏற்கப் பயணம் புறப்படுகிறார். நீண்ட பயணத்தின் பிறகு மலையுச்சி ஒன்றில் இறக்கிவிடப்படுகிறார். மிக அழகான காட்சியது. அங்கிருந்து இரண்டு மலைகளைத் தாண்டிச் சென்றால் ஊரை அடையலாம் என்கிறார்கள். அவரும் மனம் தளராமல் நடக்கிறார். இடையில் ஓடும் சிற்றோடையைக் கடந்து போகிறார். மலைக்கிராமத்தை அடையும் போது ஊர்மக்கள் யாரோ போலீஸ் தங்களைக் கைது செய்ய வந்துள்ளது என நினைத்து துப்பாக்கியுடன் வளைத்துக் கொள்கிறார்கள்

மாஹிர் உண்மையைச் சொன்னவுடன் அவரை வரவேற்றுத் தங்க வைக்கிறார்கள். அப்போது தான் அந்த ஊரில் பள்ளிக்கூடமேயில்லை என்ற உண்மை தெரியவருகிறது. இல்லாத பள்ளிக்கூடத்திற்குத் தன்னை ஏன் ஆசிரியராக அனுப்பி வைத்தார்கள் என்று குழம்பிப் போய்விடுகிறார். வெளியாட்கள் யாரும் வராத அந்தக் குக்கிராமத்திற்குத் தேடி வந்த ஆசிரியர் என்ற முறையில் அவரிடம் தங்கள் பிள்ளைகளை எப்படியாவது படிக்க வையுங்கள் என்று ஊர்மக்கள் கேட்கிறார்கள். தான் அங்கே தங்குவதாக இருந்தால் பெண்பிள்ளைகளையும் படிக்க அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார். அதை ஏற்றுக் கொள்கிறார்கள்.
புதிய பள்ளி ஒன்றை அவர்களே உருவாக்கிக் கொள்வது என முடிவாகிறது. இதற்காகத் தன்னை யாரோ வழிப்பறி கொள்ளையர்கள் கடத்திவிட்டார்கள் என்பது போல நாடகம் ஆடி மனைவியிடம் பணயத்தொகை கேட்பதாகச் சொல்லி பணம் பறிக்கிறார் மாஹிர்.
அந்தப்பணத்தில் சிறிய பள்ளிக்கூடம் ஒன்றைக் கட்டுகிறார்கள். அந்த ஊருக்கு நான்கு நாட்களுக்கு ஒரு முறை தான் சிற்றுந்து வரும். அது ஒன்று தான் வெளியுலகோடு உள்ள தொடர்பு. ஆண்டிற்கு எட்டு மாதங்கள் பனிமூடிவிடும். வெளியே நடக்க முடியாது. அரசாங்கம் அப்படி ஒரு ஊர் இருப்பதையே மறந்துவிட்டது என்பதே உண்மை
இந்நிலையில் மாஹிர் அந்த ஊரின் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லித் தருவதுடன் ஊரின் வளர்ச்சிக்குப் பாடுபட ஆரம்பிக்கிறார். ஊர்த்தலைவரின் இளைய மகனுக்குத் திருமணம் நிச்சயம் ஆகிறது.
அவனுக்குப் பெண் பார்க்கும் விதமும் பேசிமுடிக்கும் விதமும் அற்புதம். எப்படி ஒரு பெண்ணை மணமகளாகத் தேர்வு செய்கிறார்கள் என்பது வியப்பாகவே உள்ளது. அந்தத் திருமணம் எளிமையாக நடைபெறுகிறது

தலைவரின் மூத்த மகன் அஜீஸ் மனவளர்ச்சியற்றவன். அவனைக் கிராமத்துப் பிள்ளைகள் கேலி செய்கிறார்கள் ஆனால் மாஹிர் அவன் மீது அன்பு கொண்டு அவனுக்காகச் சிறப்புப் பயிற்சிகள் தந்து பாடம் பயிற்றுவிக்கிறார். அவனும் ஆசையாகப் பள்ளிக்கு வருகிறான். பனிக்காலம் துவங்குகிறது. பாதைகள் மறைந்து போகின்றன. சிறார்கள் பனியில் ஆடி ஒடி விளையாடுகிறார்கள்.
ஒரு நாள் நீதிமன்ற வளாகத்தில் ஒருவரை ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறார் ஊர்த் தலைவர். இதற்கு நன்றிக்கடனாக தன் மகளை அஜீஸிற்குத் திருமணம் செய்து தருவதாகச் சொல்கிறார் அந்த மனிதர். பெண் பார்க்கப் போகிறார்கள். பேரழகியான பெண். அவளைத் திருமணம் செய்து கொள்கிறார்கள். அவள் அஜீஸை கொஞ்சம் கொஞ்சமாக உருமாற்றுகிறாள்.
பதினாறு வயதினிலே படத்தில் சப்பாணி மயிலின் அன்பால் உருமாறுவது நினைவில் வந்து போனது. அஜீஸ் தன் மனைவியை மிகவும் நேசிக்கிறான். ஆனால் ஊர் இளைஞர்களோ அவனைக் கேலி செய்கிறார்கள் அவன் இயலாமையைச் சுட்டிக்காட்டி திருமணத்திற்குத் தகுதியானவனில்லை என்று வம்பு பேசுகிறார்கள்.
இதனால் மனம் உடைந்த அஜீஸ் தற்கொலை செய்து கொள்ள முனைகிறான். அவனைக் காப்பாற்றும் மாஹிர் ஆறுதல் சொல்கிறார். அவருக்குப் பணி மாறுதல் வருகிறது. ஊரைவிட்டு வெளியேறும் மாஹிர் தன்னோடு அஜீஸையும் உடன் அழைத்துக் கொண்டு போகிறார்
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, மாஹிர் அஜீஸுடன் கிராமத்திற்குத் திரும்புகிறார். அவன் இப்போது எப்படியிருக்கிறான். அவர்கள் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதே மீதக்கதை.

மலைக்கிராமத்தின் அழகும் அந்த மக்களின் வெகுளித்தனமான செயல்களும் தூய அன்பும் அழகாகப் படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. வெளியிலிருந்து வந்த மாஹிர் மெல்ல அந்த ஊரின் மனிதனாக மாறுகிறான்.
மனவளர்ச்சியற்ற அஜீஸை திருமணம் செய்து கொண்டு மருமகளாக வந்துள்ள பெண்ணை மாமியார் அன்பாக நடத்தும் விதமும் அவர்களின் உரையாடலும் கண்ணீரை வரவழைக்கக்கூடியது.
அழகான நிலப்பரப்பு, கடந்து செல்லும் மேகங்கள். பனிபடர்ந்த ஊரின் புறவெளி , மஞ்சள் ஒளி கசியும் வீட்டின் உட்புறம் எனப் படம் முழுவதும் சிறந்த ஒளிப்பதிவு.
கிராமத்தையும் அதன் கதாபாத்திரங்களையும் சுற்றித் தொடங்கும் கதை மெல்ல அஜீஸிற்கும் ஆசிரியருக்குமான அன்பையும் அவனது திருமணத்தை முன்வைத்து நகருகிறது. .
பெண் பார்க்க செல்லும் போது தலைவரின் இளைய மகன் பெண்ணிற்கு அழகான நீல நிற கண்கள், மற்றும் சுத்தமான பற்கள் கொண்டவளாகப் பெண் இருக்க வேண்டும் என்கிறான். காரணம் படத்தில் காட்டப்பட்டுள்ள அத்தனை கதாபாத்திரங்களும் மஞ்சள் பற்கள் கொண்டவர்களே,
திருமணத்திற்கு முன்பு அந்தப் பெண்ணிற்கு .குரானின் வசனங்கள் முழுமையாகத் தெரிய வேண்டும். அவள் சமையலில் சிறந்தவளாக இருக்க வேண்டும். அவளது நடையைக் கூட அளந்து பார்க்கிறார்கள். மிகவும் சுவாரஸ்யமான காட்சி.
முதலிரவில் மணமகன் மணமகளின் அறையை அடைந்ததும், முதலில் ஒரு புறாவின் கழுத்தை உடைத்து எறிய வேண்டும். அது தான் சடங்கு. அதைக் கண்டு மணப்பெண் அலறுகிறாள். மனைவியை முதல்நாளே தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளவே இந்தச் சடங்கு என்கிறார்கள் கிராமவாசிகள். ஆசிரியரின் வருகையால் கிராமம் மாறத்துவங்குகிறது. புதிய நம்பிக்கைகள் உருவாகின்றன அஜீஸின் கதாபாத்திரம் மிக நுட்பமாகப் பின்னப்பட்டுள்ளது. மெர்ட் துராக் அந்தக் கதாபாத்திரத்தினை மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்.
சிறந்த கலை இயக்கம் மற்றும் இசை படத்தின் தனிச்சிறப்பு., இயக்குநர் ஒரு இசைக்கலைஞர் என்பதால் மரபான இசையை அதிகம் பயன்படுத்தியிருக்கிறார். ஆசிரியரின் வழியே மலைக்கிராம வாழ்க்கையினையும் அதன் தனித்துவமான நிகழ்வுகளையும் சிறப்பாகப் படமாக்கியிருக்கிறார்கள். ஊர்த்தலைவரின் மௌனமும் அவர் மற்றவர்களைப் புரிந்து கொண்டு நடத்தும் விதமும் அற்புதமானது. குறிப்பாகத் தான் செய்த உதவிக்காக மகளைத் திருமணம் செய்த தர முன்வரும் மனிதரிடம் காட்டும் நன்றியுணர்வு மறக்கமுடியாதது.

இளையமகனுக்குப் பெண் பார்க்கப் போகும் போதே அஜீஸ் தானும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறான். ஆனால் உடல் குறைபாடு கொண்ட அவனை மணக்க எவரும் முன்வரவில்லை. அந்த ஊரில் பெண் கிடைப்பது எளிதானதில்லை. அந்த ஆசையைத் தந்தை புரிந்து கொள்கிறார். திருமணம் செய்து வைக்கிறார். மகனின் சந்தோஷத்தைக் கண்டு மறைவாகக் கண்ணீர் விடுகிறார். தனக்குப் பிறகுத் தன் மகனை குளிக்க வைக்க அவன் மீது அன்பு காட்டும் ஒரு பெண் கிடைத்துவிட்டாள் என அஜீஸின் அம்மா சொல்வது சிறப்பு.
வேடிக்கையாகத் துவங்கும் படம் மெல்லத் தீவிரமாகிறது. கதை சொல்லும் விதமும் கதாபாத்திரங்களும் நிகழ்வுகளும் நாவல் படிப்பது போல அத்தனை நெருக்கத்தைத் தருகின்றன.
பன்கர்வாடியும் திரைப்படமாக வெளிவந்துள்ளது. நாவல் அளவிற்குப் படம் சிறப்பாக இல்லை. ஆனால் இந்தப்படம் மிகுந்த கலைநேர்த்தியுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. முழுமையான அனுபவத்தைத் தருகிறது.
படத்தைப் பார்த்தபிறகு அந்த மாய நிலவெளியை தேடிப்போய்ச் சுற்றியலைய வேண்டும் என்ற ஆசை உருவானது. நேற்றைய கனவில் அந்த முடிவற்ற மலைத்தொடரின் நடுவே உலவத் துவங்கியிருந்தேன்.
••