அனிதா தேசாயின் Fire on the mountain நாவலை அசோகமித்ரன் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார். மலைமேல் நெருப்பு சாகித்ய அகாதமி பரிசுபெற்ற நாவல். அசோகமித்ரனின் மொழியாக்கம் வெகுசிறப்பானது. சாகித்ய அகாதமி இந்நாவலை வெளியிட்டுள்ளது.
மலைப்பிரதேசமான கசவுலியிலிருந்த கரிக்னானோவில் குடியிருக்கிறாள் நந்தா கவுல். வயதானவள். மேல்தட்டுவர்க்கத்தைச் சேர்ந்தவள். கர்னலின் மனைவி. தேவதாரு மரங்கள் அடர்ந்த பகுதியில் உள்ளது அவளது வீடு. முதுமையைத் தனியே கழிக்கும் அவளுக்கு ஒரு நாள் ஒரு தபால் வந்து சேருகிறது. அதில் அவளது கொள்ளுப் பேத்தி ராக்கா அங்கே வரப்போவதாக உள்ளது.
அவள் அச்செய்தியை கேட்டு சந்தோஷம் அடையவில்லை. தனியே, தனக்கென ஒரு சின்னஞ்சிறிய உலகிற்குள் வாழ்ந்து வருபவளுக்குப் பேத்தியின் வருகை சுமையாகவே இருக்கும் என நினைக்கிறாள்.
என்ன தான் பாட்டி பேத்தி உறவு உணர்ச்சிப்பூர்வமானது என்றாலும் தனது அன்றாட வாழ்க்கையை அவளது வருகை நிலைகுலையச் செய்துவிடக்கூடும் எனப் பயப்படுகிறாள்
ஆனால் அவள் நினைத்தது போலின்றி ராக்கா பெரிய மனுஷி போல நடந்து கொள்கிறாள். பாட்டியை எதற்காகவும் தொந்தரவு செய்வதில்லை. அவளும் பாட்டி போலவே தனிமையில் முழ்கிப்போகிறாள்.
துள்ளித்திரிய வேண்டிய வயதில் ஏன் இப்படியிருக்கிறாள் எனப் பாட்டிக்கு அவள் மீது கரிசனம் உருவாகிறது. இருவருக்குள்ளும் உருவாகும் நெருக்கமே நாவல்.
என் பிள்ளைகள், பேரன் பேத்திகளை விடவும் நீ தான் என்னைப் போலிருக்கிறாய் என நாவலின் ஒரு இடத்தில் ராக்காவிடம் சொல்கிறாள் நந்தா.
வெளிப்படையான இந்த ஒட்டுதல் ராக்காவிற்குப் பிடிக்கவில்லை. அவள் தன்னை ஒரு பெரிய மனுஷியாகவே அப்போதும் காட்டிக் கொள்கிறாள், வயதுவேறுபாட்டைக் கடந்து இரண்டு பெண்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்திக் கொள்ள முயற்சிக்கும் விதம் அருமையாகச் சித்தரிக்கபட்டுள்ளது. இருவரும் காட்டுத்தீயை காணும் இடம் மிகுந்த மனஎழுச்சிதரக்கூடியது
நந்தாகவுலின் தோழி ஈலா தாஸ் மறக்கமுடியாத கதாபாத்திரம். அவள் ஒருத்தியால் மட்டுமே நந்தாவின் தனிமையைப் புரிந்து கொள்ள முடிகிறது.
அனிதா தேசாய் நாவலை அற்புதமாக எழுதியிருக்கிறார். மலைப்பிரதேசமும் முதுமையின் தவிப்பும் வெகுநுட்பமாக விவரிக்கபட்டுள்ளது. நந்தாவின் அகஉணர்ச்சிகளை அவள் வசிக்கும் மலைப்பிரதேசத்தின் சூழலே வெளிப்படுத்துகிறது. அன்பின் தவிப்பை புறச்சூழலின் வழியாக அடையாளப்படுத்துவதே இந்நாவலின் தனிச்சிறப்பு
அனிதா தேசாய் வங்காளத்தைச் சேர்ந்த ஆங்கில எழுத்தாளர். டில்லியில் கல்வி கற்றிருக்கிறார். இவரது கடலோரக் கிராமம் முக்கியமான நூலாகும்.
••