இரவில் பெய்யும் மழை தனித்த சுபாவமுடையதாக இருக்கிறது. அது எப்போது சீறும் எப்போது தணியும் என்று அறிய முடியாது. பள்ளி வயதில் ஒரு நாளிரவு தூக்கத்தின் ஊடே ஏதோ சப்தம் கேட்டு விழித்துக் கொண்டேன். வெளியே மழை பெய்து கொண்டிருந்த சப்தம் கேட்டது. மின்விசிறி சுழலும் ஒசை தான் அப்படி இருக்கிறதா அல்லது மழை தானா என்று உறுதியாக தெரியவில்லை. ஜன்னல்கள் அடைத்து சாத்தப்பட்டிருந்தன.
மெல்லிய இரவு விளக்கின் வெளிச்சம் சுவர்களில் ஊர்ந்து கொண்டிருந்தது. பின்னிரவில் வீடு கொள்ளும் தோற்றம் விவரிக்கமுடியாதது. அதன் தன்னியல்பிற்கு திரும்பியிருப்பது போல இயக்கம் ஒய்ந்து சாந்தம் கொண்டிருந்தது.
வீட்டின் இயக்கம் பேச்சால் தான் உருவாகிறது போலும். பேச்சு நின்று போனால் வீடு நிம்மதியிழந்துவிடுகிறது. பகல் சொற்களின் விளை நிலம். இரவு சொற்களற்ற தியான வெளி. ஒரு நாளைக்கு எவ்வளவு பேசுகிறோம். எவ்வளவு சொற்கள் உதட்டிலிருந்து உதிர்ந்து போகின்றன பேச்சு துவங்கி பேச்சு ஒயும் வரை பகலெல்லாம் வீடு உருமாறிக் கொண்டேயிருக்கிறது.
சில நாட்கள் பள்ளியில் இருந்து திரும்பி வரும் போது தெருவில் நின்றபடியே வீட்டினை பார்த்துக் கொண்டிருப்பேன். அது யாரோ ஒருவரின் வீட்டினை போலவே தெரியும். மிக பெரியதாக, அகன்ற சிறகுள்ள பறவை ஒன்று உட்கார்ந்திருப்பது போன்று கூட தோன்றும். சில வேளைகளில் வீடு ஒரு அடி முன்னால் நகர்ந்து வந்துவிட்டதோ என்று நினைத்திருக்கிறேன். பெரும்பான்மை வீடுகள் அதில் வசிப்பவரின் சுபாவத்தை தனதாக்கி கொள்கின்றன.
விளையாட துவங்கி விட்டால் எல்லா வீடும் சிறியதாகவிடுகின்றன. அதிலும் கள்ளன் போலீஸ் விளையாடும் போது ஒளிந்து கொள்ள இடம் தேடினால் வீடு தீப்பெட்டி போலாகிவிடுகிறது. அன்றைக்கு பின்னிரவில் தூக்கம் அழுத்திய இமைகளுடன் மழையை கேட்டுக் கொண்டிருந்த போது வீடு தன் அகன்ற கைகளால் எங்களை அணைத்து சேர்ந்து படுத்திருப்பது போலிருந்தது. அது குளிர்காலத்திற்கே உரியதான தனித்த அனுபவம். குளிர் நாட்களில் வீடு தரும் கதகதப்பு போல உலகில் வேறு எதுவுமில்லை. சூடான உணவின் ருசி குளிர்காலத்தில் தான் முழுமையாக தெரிகிறது.
எழுந்து ஜன்னலைத் திறந்து மழையை பார்க்கலாமா என்று தோன்றியது. ஜன்னலை திறந்தால் மழை சீறி உள்ளே வந்துவிடும். நிச்சயம் நனைந்து போய்விடுவேன் என்று மனக்குரல் சொல்லியது. அறையை விட்டு வெளியே வந்து கதவை திறந்து வாசலில் போய் நின்றால் என்னவென்று ஏனோ தோன்றியது.
கனவின் ஆழங்களில் நீந்திக் கொண்டிருந்த வீட்டோரை தாண்டி வாசற்கதவை நோக்கி நடந்தேன். சப்தமில்லாமல் வாசல்கதவைத் திறக்கவே முடியாது. எந்த உறக்கத்திலும் வாசற்கதவு திறக்கும் சப்தம் அம்மாவிற்கு கேட்டுவிடும். எப்படி அது என்று இன்று வரை எனக்கு புரியவேயில்லை. மெல்ல நடந்து வாசற்கதவை நோக்கி சென்றேன்.
கதவின் முன் நிற்பது ஒரு விசித்திரமான மனநிலை. அதிலும் வீட்டின் முன்னே கதவை தட்டுவதா வேண்டாமா என்ற தயக்கத்துடன் நிற்பது பெருங்குழப்பம். அதுவும் அலைந்து திரிந்த இருபத்தைந்து வயதில் நண்பர்களுடன் சுற்றி சினிமா பார்த்துவிட்டு தெருவிளக்குகள் வெளிச்சம் மட்டுமே கரைந்தோடும் நடுநசியில் தனியாக நாய்களும் உறங்கிய பின்பொழுதில் வீட்டின் வாசற்படியில் வந்து நின்றபடியே கதவை தட்ட கூசும் கைகளுடன் நிற்பது வாலிப வயதின் தத்தளிப்புகளில் ஒன்று. பலநாட்கள் அப்படியே திரும்பி போய்விடலாமா என்று கூட தோன்றும்.
அன்றைக்கு கதவை திறக்கையில் அது எழுப்பிய சப்தம் கேட்டு அம்மா உறக்கத்திலிருந்தபடியே சப்தமிட்டார். நான் தான் என்று சொல்லியபடியே கதவை திறந்தேன். வாசலில் மழை. நிச்சயம் இந்த இரண்டுசொற்களால் அந்த காட்சியின் பிரம்மாண்டத்தை சொல்லிவிட முடியவில்லை. மழை என்ற சொல்லில் உள்ள அமைதியும் சாந்தமும் அன்று கண்ட மழையில் இல்லை. அது காற்றோடு பூமியை புரட்டி போட்டுவிட முயன்ற பெரும்யுத்தம் ஒன்றைப் போலிருந்தது. வாசலில் நின்றிருந்த வேம்பு மழையின் சீற்றம் தாளமுடியாமல் சுழன்று நடுங்கிக் கொண்டிருந்தது.
வீதி கண்ணிற்கே தெரியவில்லை. அடைத்த கதவுகளை முரட்டு கைகளால் தட்டி ஒய்கிறது மழை. கதவை திறந்து வாசலில் நிற்கும் என்னை அடையாளம் கண்டு கொண்டுவிட்டதை போல பாய்ந்தோடி என் வீட்டிற்குள் சென்றது மழை. சின்னஞ்சிறு கைகளால் அந்த மழையை என்னால் தடுக்க முடியவில்லை. நனையாமல் தான் நின்றிருந்தேன். ஆனால் படியேறி வந்த மழை என்னை நனைந்து வீட்டின் உள்ளேயும் எட்டி பார்த்தது. மழை தரும் முதல் கூச்சம் அலாதியானது. அன்று உடலில் பட்ட மழை துளியின் சிலிர்ப்பு இந்த நிமிசம் வரை மனதில் இருக்கிறது. அவசரமாக மழையை துடைத்தபடியே வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன்.
இடியோசை, மின்னல்வெட்டு. ஒரு நிமிசம் கண்கொள்ளாத ப்ரகாசம் தோன்றி மறைந்தது. மொத்த பூமியையும் வானம் புகைப்படம் எடுத்துக் கொள்கிறதோ என்று தோன்றும்படியான அந்த வெளிச்சம் ஒடி மறைகிறது. மழையின் ஆவேசம் அடங்கவேயில்லை. அது ஊளையிடுகிறது. கத்துகிறது. சீறி பாய்கிறது. கூத்தாடுகிறது. சில வேளைகளில் துக்கம் தாளாமல் அழுது புரளும் பெண்ணை போல நினைத்து நினைத்து வேகமெடுக்கிறது.
எங்கள் பகுதியில் சாரலாக மழை பெய்யும் போது கிராமவாசிகள் சொல்வார்கள் இது என்ன மழையா. மாமியார் செத்ததுக்கு மருமகள் அழுகிற மாதிரி..ஏதோ பெய்யுனுமேனு பெய்யுது என்பார்கள். அதுவே சீறிப்பாயும் மழையை கண்டால் இது தான் மழை. புருஷன் செத்ததுக்கு பெண்டாட்டி அழுகிற மாதிரி அடங்காம பெய்யுது பாருங்க என்பார்கள்.
அன்று பெய்த மழை இந்த இரண்டிற்குள்ளும் கூட அடங்காது. அது பூமியோடு மல்யுத்தம் செய்வது போன்று ஆவேசமாக இருந்தது. மழைக்குள்ளாகவே பார்த்தேன். என் வீட்டின் அருகில் இருந்த ஒரு தகர கொட்டகை ஒன்றில் ஒரு நாய் நடுங்கியபடியே மழையை பார்த்துக் கொண்டிருந்தது. அதன் நிர்கதியான நிலையும் பெருமழை கண்ட பயமும் தனிமையும் நிம்மதியற்ற துயரம் கொண்டதாக இருந்தது.
நான் மழையை பார்த்தபடியே இருந்தேன். அது கற்படிகளை கரைத்து விட முடியும் என்று நம்புவதை போல வாசற்படிகளில் வழிந்து கொண்டிருந்தது. வீதி கொள்ளாத மழை தண்ணீர். வீட்டின் தூம்புவாய்களில் இருந்து சிறிய அருவி கொட்டுவது போல கொட்டிக் கொண்டிருந்தது மழை நீர். பிடிப்பவர் யாருமில்லை. காவியடித்த வெளிச்சுவரை கரைத்தோடுகிறது நீன்;. தும்பை செடிகள் அந்த வேகம் தாங்கமுடியாமல் சரிந்து கிடந்தன போலும்.
எங்கோவொரு மரத்தின் கிளை முறியும் சப்தம். மழையின் உக்கிரம் தாளாமல் ஏதோவொரு மாடு கத்துகிறது. தூக்கம் அந்த பெருமழையை விட அகன்றது போலும். அதிலிருந்து எவரும் மீளவேயில்லை. பகடைகளை உருட்டி சூது விளையாடுவது போல மழை உருள்கிறது. எழுகிறது. தான் வென்ற பணயத்தை கையில் அள்ளி கெக்கலிக்கிறது. இருளை கரைத்தபடியே மழையின் ஆசையடங்காத களியாட்டத்தை அன்றிரவு கண்டேன்.
காற்றும் மழையோடு சேர்ந்து கொண்டதால் இரட்டை நடனம்போல அவை ஊரை சுழற்றியாடிக் கொண்டிருந்தன. மழை என்னை வாசற்படியை விட்டு இறங்கி வா இறங்கி வா என்று அழைப்பது போலவே இருந்தது. இறங்கி போகலாமா என்று மனதின் உள்ளுற ஆசை எழுந்தது. ஆனால் பயமாக இருந்தது. படியில் நின்று கொண்டேயிருந்தேன். கால்கள் என் ஆசையின் இழுப்பில் முன்நகர்ந்து கொண்டிருந்தன. சாமியாடிகளுக்கு வரும் ஆவேசம் போல மழை கொந்தளித்து வீதியில் ஆடிக் கொண்டிருந்தது. இருளுக்குள் அந்த காட்சிகள் துல்லியமாக தெரியவில்லை. தெருவிளக்குள் அந்த காட்சிகளை காண பயந்து கண்ணை மூடி மூடி திறப்பது போல மின்னுவதும் மறைவதுமாகவே இருந்தன.
என்னுடைய ஊரையே மழை தன் இடுப்பில் தூக்கி கொண்டு போய் எங்கோ வைத்து விடும் போன்று தோன்றியது. பார்க்க பார்க்க மழைக் காட்சியின் தித்திப்பு அடங்கவேயில்லை. அது கால்பெருவிரல் துவங்கி உச்சந்தலை வரை பற்றிக் கொண்டது. உடலெங்கும் மயிர்கள் கூட மழையின் தித்திப்பில் துளிர்த்தது போல மகிழ்ச்சி கொண்டிருந்தன.
கைகளை மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டு மழையை பார்த்தபடியே இருந்தேன். கண்களால் பார்ப்பதால் மழையை ஒரு போதும் புரிந்து கொள்ளவே முடியாது என்பது அன்று தான் தெரிந்தது. களிமண்ணை போல மழையில் கரைந்து போவது தான் அதை அறிந்து கொள்வதற்கான எளிய வழி. அல்லது ஒரு காட்டுச்செடி போல மழையிடம் தன்னை ஒப்படைத்துவிட்டு அதன் ஆவேசத்தை ஏற்றுக் கொள்வது தான் மழையை அறிந்து கொள்ள வழி போலும்.
அன்று நனையாமல் படியில் நின்றபோதும் சொட்ட சொட்ட நனைந்து நிற்பது போல மனவுணர்ச்சியே மிகுந்திருந்தது. அப்போது மணி என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை. ஆனால் விடிவதற்கு நிறைய நேரமிருந்தது என்றே தோன்றியது. தன் உடலை தானே சவுக்கால் அடித்துக் கொள்ளும் கழைக்கூத்தாடி போல மழை சில நேரம் தனக்குள்ளாகவே சுழன்று வீசியது. சில நேரம் சூடான எண்ணெயில் இட்ட கடுகுகள் பொறித்து துள்ளுவதை போல அதிவேகமாகியிருந்தது.
எந்த கைகளாலும் தடுக்க முடியாத அந்த மழையின் பெருநடனத்தை, உற்வசத்தை, ஒங்காரவேட்டையை அவதானித்தபடியே அதன் முன்னே மௌனமாக நின்றிருந்தேன். மழையின் முன்னே சொற்கள் ஒடுங்கி விடுகின்றன. மழை மனிதனை சாந்தம் கொள்ள வைக்கிறது. அவனது ஆவேசமிக்க சொற்களை அவனிடமிருந்து பறித்து கொண்டுவிடுகிறது. அவனது நாவில் மழையின் ஈரம் படிந்துவிடுகிறது போலும். மழைக்குள் நனையும் எந்த மனிதனும் ஆவேசம் கொள்வதில்லை. அவன் தண்ணீரில் விழுந்த காகிதம் போலாகிவிடுகிறான். அவன் இருப்பை கரைத்து கொண்டுவிடுகிறான்.
மழையே எப்போதும் வெல்கிறது. அன்றும் அப்படியே நடந்தது. மழையின் போர்படை செய்யும் சமரை கண்டபடியே இருந்தேன். அந்த வயதில் அது ஒரு பேரனுபவமாக இருந்தது. என் பள்ளியில் படிக்கும் மாணவர்களில் நான் ஒருவன் மட்டுமே இரவில் பெய்த இந்த மழையை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று ஒரு பக்கம் பெருமிதம். இன்னொரு பக்கம் இதை உடனிருந்து பார்க்க யாருமில்லையே என்ற ஆதங்கமாக நின்றிருந்தேன்.
காற்று மெல்ல ஒடுங்கிற்று. ஆனால் மழை தணியவில்லை. அது துள்ளிக் கொண்டேதானிருந்தது. யாரோ என் பின்னால் வந்து நிற்பது போலிருந்தது. பயத்துடன் திரும்பி பார்த்தேன். அப்பா நின்றிருந்தார். காற்று திரும்ப வேகமாகியிருந்தது. பேய்பிடித்த பெண்ணின் தலைமயிரை பிடித்து ஆட்டிவிரட்டும் பேயோட்டி போல மழை தன்பிடியில் மரத்தை இழுத்து அசைத்தாட்டிக் கொண்டிருந்தது. மழையின் உக்கிரத்தை கண்ட அவர் வாசற்படியை விட்டு இறங்கி வேகமாக மாட்டு தொழுவத்தை நோக்கி ஒடினார். சில நிமிசங்களின் பிறகு சூலியான பசு கால்கள் நடுங்கியபடியே படியேறி என் வீட்டிற்குள் சென்றது. அப்பா முற்றாக நனைந்திருந்தார். பசுவின் கண்களில் மிரட்சி அடங்கவேயில்லை. அதன் முதுகிலிருந்து மழைதுளிகள் சொட்டிக் கொண்டிருந்தன.
அப்பா துண்டை எடுத்து தலையை துவட்டிக் கொண்டபடியே கதவை பூட்டிட்டு படு என்றார். மனதின்றி கதவை மூட எத்தனித்தேன். மழை அதை அனுமதிக்கவேயில்லை. பலத்த கைகளால் கதவை தள்ளியது. அப்பா கதவை மூடினார். நான் படுக்கைக்கு திரும்பினேன். கண்களை மூடிக் கொண்டேன். அந்த பெருமழை காட்சி ஒடிக்கொண்டேயிருந்தது. சப்தம் அடங்கவேயில்லை
மறுநாள் காலை ஊரே உருமாறியிருந்தது. இரவில் பெய்த மழையில் சூறாடப்பட்ட வீடுகளை மரங்களை, முட்டுசுவர்களை ஊரே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அவசரமாக வீதியில் இறங்கி ஒடினேன். மழையின் சுவடேயில்லை. இந்த மரங்கள் தான் இரவில் அவ்வளவு ஆவேசம் கொண்டதா என்று புரியவேயில்லை. ஆகாசம் வெளிறி இளவெயில் ஒளிர்ந்து கொண்டிருந்தது.
தூம்புவாய்களில் மழை நீர் ஒன்றிரண்டு சொட்டாக சொட்டிக் கொண்டிருந்தது. சில வீடுகளின் ஒடுகள் பிய்த்து வீசி எறியப்பட்டிருந்தன. மண் சுவர்களை முட்டி தள்ளியிருந்தது மழை. சைக்கிள் ஒன்று வளைந்து போய் தரையில் கிடந்தது. வாழைமரமொன்று முறிந்து கிடந்தது. ஊரையே துடைத்து எடுத்தது போன்றிருந்தது. முறித்து போடப்பட்டிருந்த மரம் ஒன்றின் பச்சை வாடை தெருவெங்கும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. வீழ்ந்து கிடந்த மரக்கிளைகளில் சிறார்கள் ஏறி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
நனைந்த ஆடுகள், நனைந்த மாடுகள், நனைந்த கோழிகள், பூனைகள் யாவும் வெயிலில் தன்னை உலர்த்திக் கொண்டிருந்தன. ஆறேழு கோழிக்குஞ்சுகள் விடுக்விடுக் என்று நடந்து வெயிலை கொத்தி தின்று தன் குளிரை தணித்து கொள்ள முயற்சித்தன. அவ்வளவு மழையும் எங்கே போனது. வீதியில் கிடந்த கற்கள் கூட குளிர்ச்சியேறியிருந்தன. வீட்டை இழந்த குடும்பங்கள் மாற்று இடங்களுக்கு போய்க் கொண்டிருந்தார்கள். யார் வீட்டிலிருந்தோ காற்று கொண்டுவந்து போட்டிருந்த பாய் ஒன்றின் மீது நாய் படுத்துகிடந்தது.
மழைக்கு பின்னே கொள்ளும் பேரமைதி வீதியெங்கும் நிரம்பியிருந்தது. ஈரக்காலடி தடங்கள், நீர்சொட்டும் வேலிச் செடிகள், இன்னமும் மழையை மிச்சம் வைத்திருக்கும் வேம்பு, மழையின் சாட்சியாக முளைத்து நின்ற வெண்குடை காளான். மிருதுவான காற்று. ஈரம், நீர்மை, மிருது என ஊர் மாறியிருந்தது.
பின்பு நீண்ட பகல் பொழுதில் வெயில் எழுந்து மழையின் சுவடுகளை அழித்து எப்போதும் போல ஊரை ஆள துவங்கியிருந்தது.
இவ்வளவு நடந்து முடிந்த நாளின் மாலையில் வீட்டு வாசல்படியில் உட்கார்ந்தபடியே இரண்டு வயதான பெண்கள் ராத்திரி மழை பெய்தது என்று மூன்று சொற்களுக்குள் அந்த அனுபவத்தை சுருக்கி சலித்தபடியே பேசிக் கொண்டிருந்தார்கள். அதை தான் மனது ஏற்றுக் கொள்ளவேயில்லை.
**