மாநில கல்விக்கொள்கை உருவாகிறது.

தமிழக அரசு உருவாக்கியுள்ள மாநில கல்விக்கொள்கைக்கான உயர்மட்டக்குழுவில் உறுப்பினராகப் பணியாற்றுகிறேன். நீதியரசர் முருகேசன் தலைமையில் இந்தக் கல்விக்குழு மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் மட்டுமே இது போலக் கல்விக் கொள்கைக்கான குழு உருவாக்கப்பட்டிருக்கிறது. இது தமிழக அரசின் சிறந்த முன்னெடுப்பு என்பேன்.

தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள். மாணவர்கள், தன்னார்வ அமைப்புகள். பெற்றோர்கள், கல்வியியல் அறிஞர்கள், பொதுமக்களைச் சந்தித்துக் கருத்துக் கேட்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் நானும் கலந்து கொண்டேன்.

இந்தக் கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கைக்கான பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டோம்.

இதுதவிர மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு கல்வி சார் அமைப்புகள். சிறுபான்மை கல்வி அமைப்புகள். கிறிஸ்துவ, இஸ்லாமியக் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளின் ஆலோசனைகள், சட்டப்பல்கலைகழகம், மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய அளவிலான பல்வேறு கல்வியியல் அறிஞர்களின் பரிந்துரைகள் என்று தொடர்ந்து கருத்துக் கேட்கும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன. கருத்துக்கேட்பு கூட்டத்தின் மூலம் பொதுமக்களின் எதிர்பார்ப்பு மற்றும் இன்றைய தேவைகள். பிரச்சனைகளை அறிந்து கொள்ள முடிகிறது.

இந்தியாவில் இதுவரை வெளியாகியுள்ள பல்வேறு கல்விக்குழுவின் அறிக்கைகளையும் பரிந்துரைகளையும் வாசித்து ஆய்வு செய்து வருவதுடன், சர்வதேச அளவில் உள்ள கல்வி அறிக்கைகளையும் ஆழ்ந்து படித்துத் தேவையான விஷயங்களைத் தொகுத்து வருகிறேன்.

இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் அனைவரும் தனது துறையில் சிறந்து விளங்குபவர்கள். கல்வி குறித்த ஆழ்ந்த புரிதலைக் கொண்டவர்கள். மாற்றத்தை உருவாக்க நினைப்பவர்கள். அனைவரும் ஒன்றுகூடி புதிய கல்விக் கொள்கையை உருவாக்கி வருகிறோம். நிச்சயம் மிகச்சிறந்த அறிக்கையாக அமையும் என நம்புகிறேன்.

0Shares
0