மார்க் ஷகாலின் ஆடு

மார்க் ஷகாலின் (Marc Chagall)  I and the Village  என்ற ஒவியத்தினை நியூ யார்க் ம்யூசியம் ஆப் மார்டன் ஆர்டில் பார்த்தபோது ஆஹா என்னவொரு அற்புதமான ஒவியம் என வியப்பு மேலோங்கியது,

ஷகாலின் இந்த ஒவியத்தின் நகல்பிரதியை முன்பே கண்டிருக்கிறேன், ஆனால் அதற்கும், ஒரிஜினல் ஒவியத்தை நேரில் பார்ப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம் என்பதை அன்று  என்னால் துல்லியமாக உணர முடிந்தது,

பார்ப்பவர் எவரும் அந்த ஒவியத்திலிருந்த தலையை திருப்பமுடியாத, மாயக்கவர்ச்சியொன்று அவ்வோவியத்திலிருந்தது, அதன் முன்பாக நின்றபடியே ஷகாலின் ஆட்டினையே பார்த்துக் கொண்டிருந்தேன், மனதில் பிகாசோ வரைந்த ஆட்டின் உருவமும், அவரது கர்ப்பமான பெண் ஆட்டினை பற்றிய சிற்பமும் வந்து போனது,

பெரும்பான்மை ஒவியங்களில் ஆடு, பலியிடப்படுவதன் அடையாளமாக இடம்பெறுகின்றது, சிலநேரம் களங்கமின்மையைக் குறிக்கவும் ஆட்டினை வரைகிறார்கள், ஷகாலின் ஆடு அவரது குழந்தைப்பருவத்தின் அடையாளம், அவரது தொலைந்து போன கிராம வாழ்வின் குறியீடு,

நானும் எனது கிராமமும் என்ற அந்த ஒவியத்தை ஷெகாலின் குழந்தை பருவநினைவுகளின் மீள்பதிவு என்றே சொல்ல வேண்டும், ஒவியத்தில் ஒரு புறம் ஆட்டின் தலை பிரதான இடம்பெற்றிருக்கிறது, அதற்கு நேர் எதிராக ஒவியரின் முகம் இடம் பெற்றுள்ளது, இரண்டினையும் இணைக்கிறது ஒரு வட்டம்,  ஒவியனின் நிறம் பச்சையில் தீட்டப்பட்டுள்ளது, அவன் கழுத்தில் ஒரு சிலுவை அணிந்திருக்கிறான், தலையில் குல்லா உள்ளது, அவனது கை ஒரு செடியை பற்றியுள்ளது

ஒவியத்தில் நம்மை ஈர்க்கும் பிரதான அம்சங்கள் அதன் வண்ணத்தேர்வு, மற்றும் வட்டம் கூம்பு போன்ற வடிவங்கள்,  சிவப்பும் நீலமும் அவரது விருப்பமான இரண்டு நிறங்கள், அவற்றை ஷகால் தனித்துவமாகப் பயன்படுத்துகிறார்,

ஒவியத்தில் ஆட்டின் கண்களும் மனிதனின் கண்களும் ஒன்றை ஒன்று எதிர்கொள்கின்றன, ஒருவருக்காக மற்றவர் பலியாகிறார் என்பதையே அது குறிக்கிறது எனலாம், அதன் ஊடாக பல்வேறு கிராமியக் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன, இவ்வோவியம் சர்ரியலிச பாணியைச் சேர்ந்த்து.

பொதுவாக ஷகாலின் ஒவியங்களில் கழுதைகள், ஆடு, கோழிகள், நாய் என பல்வேறு விலங்குகள் இடம்பெறுகின்றன, இது போலவே சர்க்கஸ் மனிதர்கள் போல மிதக்கும் தோற்றங்களும், வேடிக்கையான செயல்களில் ஈடுபடும் மனித உருவங்களும் இடம்பெறுகிறார்கள், குழந்தைகள் வரைவது போன்ற தீட்டுதல் கொண்டவை அவரது கோடுகள்,

இந்த ஒவியத்திலும் அது போன்றே இடைவெட்டுக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன, இவை ஷகால் தனது பால்யத்தில் கிராமத்தில் கண்ட காட்சிகளின் நினைவுத்தோற்றங்கள்.

இதில் ஒரு பெண் மாட்டிடம் பால் கறந்து கொண்டிருக்கிறாள், ஒரு விவசாயி விவசாயக் கருவியோடு நடந்து போகிறான், ஒரு பெண்  தலைகீழாக நின்று வயலின் வாசிக்கிறாள், பின்புலத்தில் ஒரு சர்ச், அதற்குள்ளொரு பாதிரியார், தலைகீழாக இருக்கும் இரண்டு வீடுகள் போன்ற படிமங்கள் காணப்படுகின்றன, இவற்றை இயற்கையோடு இணைந்து வாழ்ந்த மரபின் மீதான அவரது நாட்டம் என்கிறார்கள் விமர்சகர்கள்

ஒவியத்தில் காணப்படும் ஷகாலின் புன்னகையும் ஆட்டின் மிரட்சியுற்ற முகபாவமும் குறீயீட்டுதன்மை கொண்டவை , ஆடு யூதமரபில் பாவத்தை போக்கி கொள்ள பலியிடப்படும் உயிரினம், அந்தக் குறியீட்டு தனமையை குறிக்கவே ஷெகால் ஆட்டின் தலையை பிரதானமாக வரைந்திருக்கிறார் என்கிறார்கள், தலைகீழ் வீடுகள் நமது நவீன வாழ்க்கையைக் குறிக்கிறது, பாவம், அதிலிருந்து மீட்சி, அதற்கு வழிகாட்டும் திருச்சபை, இந்த நெருக்கடிக்குள் மாட்டிக் கொண்ட மனிதன், இவையே ஒவியத்தின் பிரதான குறியீட்டு தளங்கள்,

ஷகாலின் ஒவியங்கள் கனவுத்தன்மை நிரம்பியவை, எல்லா ஒவியங்களிலும் மெலிதான கேலித்தன்மையொன்று தவறாமல் இடம்பெற்றிருக்கிறது,

1887ல் ருஷ்யாவில் விதெப்ஸ்க் கிராமத்தில் பிறந்தவர் ஷகால் , நுண்கலைக் கல்விகற்று முடிந்தபின்பு 1910இல் பாரிஸுக்குச் சென்றார். அங்கே அப்போலினர் உள்ளிட்ட முக்கிய  கவிஞர்களையும் கலைஞர்களையும் சந்தித்து பழகத் துவங்கினார், பாரீஸில் ஒவியராக நிலைபெறுவது அவர் நினைத்தது போல எளிதாகயில்லை, நிறைய போராட்டங்களையும் அவமானங்களையும் சந்தித்த ஷகால் தனக்கென தனியான ஒவிய வடிவம், வண்ணத்தேர்வு, களம் ஒன்றினை உருவாக்கி கொள்ளத்துவங்கினார், அதுவே அவரது ஒவியங்களை தனித்து அடையாளம் காட்டின,

ஆயில் பெயின்டிங், வாட்டர் கலர், சுவரோவியங்கள், ஸ்டெயின்டு கிளாஸ் ஓவியங்கள், என்று பல்வேறு விதமான மீடியாக்களைப் பயன்படுத்தியிருக்கிறார் ஷகால்

பிறப்பால் யூதரான இவர் தனது நாட்டார்மரபில் இடம்பெற்றுள்ள கிராமியக் கதைகள், சடங்குகள் மற்றும் நம்பிக்கைகளை ஒவியத்திற்கான களமாக கொண்டு நிறைய ஒவியங்களை வரைந்திருக்கிறார்

இவரது காலத்தைச் சேர்ந்த மற்ற நவீன ஒவியர்கள் நகரை வாழ்வை சிதைவின் குறியீடாக முன்வைத்தபோது  அதற்கு மாற்றாக கிராமவாழ்வை நம்பிக்கையூட்டும் வாழ்வின் பற்றுக்கோடாக சித்தரிக்கிறார் ஷகால்

ஷகால் தனது ஒவியஅனுபவங்களை My life என தனிநூலாக எழுதியிருக்கிறார், இதில் அவர் ஒவியராக உருவான விதம் 20 அரிய ஒவியங்களுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது

பொதுவாக சர்ரியலிச ஒவியங்களில் அச்சமூட்டும் தன்மையும்,விசித்திரமான உருவங்களும் இடம்பெற்றிருக்கும், ஆனால் ஷகாலிடம் இது போன்ற அம்சங்கள் கிடையாது, அவை உயிரோட்டமான வாழ்வின் சித்திரங்களாகவே உள்ளன

ஷகாலின் ஒவியங்கள் ஒவ்வொன்றும் ஒரு கதைத் தொகுதி, பார்வையாளர்கள் ஒவியத்தினுள் புதைந்துகிடக்கும் கதைகளை தாங்களே மனதில் உருவாக்கி கொள்கிறார்கள் என்கிறார்கள்,  அது உண்மை என்பதை நானும் எனது கிராம்மும் ஒவியத்தினை காணும் போது நானும் உணர்ந்தேன்,

ஷகாலின் ஒவியங்களைக் காணும் போது நாம் மறுபடி பால்யகாலத்திற்கும், இழந்து போன கிராமிய வாழ்விற்கும் திரும்பிவிடுகிறோம், அவர் நம் காலத்தின் முக்கியமான கதைசொல்லி, ஒவியங்களின் வழியே தனது கதைகளை அவர் பதிவு செய்கிறார். அவரது ஒவியங்களை மட்டும் தனித்து காண வேண்டும், அது நிகரற்ற அனுபவமாக இருக்கும்  என்கிறார் கலைவிமர்சகர் மைக்கேல் ஆர் டெய்லர், அது உண்மை என்பதை அன்று முழுமையாக உணர்ந்தேன்,

நியூயார்க் மார்டன் ம்யூசியத்திற்கு செல்ல உதவி செய்த நண்பர் கோ. ராஜாராம், மற்றும் பாஸ்டன் பாலாஜி இருவருக்கும் இத்தருணத்தில் மீண்டும் எனது மனம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

****

0Shares
0