மித்ராவின் குற்றச்சாட்டுகள்.

கிருஷ்ணா ஸோப்தி ஞானபீடம் விருது பெற்ற இந்தி மொழி எழுத்தாளர். இவரது மித்ரோ மராஜனி என்ற நாவல் தமிழில் மித்ராவந்தி என வெளியாகியுள்ளது. நேஷனல் புக் டிரஸ்ட் இதை வெளியிட்டிருக்கிறார்கள்.

பெண்ணின் காமத்தையும் கூட்டுக்குடும்பத்தில் பெண் நடத்தப்படும் விதம் பற்றியும் மித்ராவந்தியில் ஸோப்தி சிறப்பாக எழுதியிருக்கிறார்.

மித்ராவந்தி என்ற பெண்ணின் கதாபாத்திரம் போல இந்திய இலக்கியத்தில் எவரும் ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கியதில்லை. அவள் வெளிப்படையாகத் தனது உடலின் வேட்கைகளை, காமத்தூண்டுதல்களைப் பேசுகிறாள். மற்றவர்கள் ரகசியமாக இன்பங்களை அடைந்து கொள்வதைக் கண்டு பொறாமைப்படுகிறாள். தன் கணவன் மீது தனது தாய் மோகம் கொள்கிறாள் என்பது கூட அவளுக்குப் பெரிய விஷயமில்லை. தன் கணவன் உள்ளிட்ட ஆண்களை வாய் சவடால் வீரர்கள் என்று மித்ராவந்தி கேலி பேசுகிறாள்.

கிருஷ்ணா ஸோப்தியை வாசிக்கையில் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான பியர்ல்.எஸ்.பக் நினைவிற்கு வருகிறார். ஆனால் பியர்ல்.எஸ்.பக்கிடம் காணப்படாத உன்மத்தம், வெளிப்படைத்தன்மை, உணர்ச்சிகளைத் தைரியமாக வெளிப்படுத்தும் முறை ஸோப்தியிடம் காணப்படுகிறது. ஆனால் இந்த இரண்டு எழுத்தாளர்களின் படைப்புகளிலும் பெண்கள் மிக நிஜமாகச் சித்தரிக்கபட்டிருக்கிறார்கள். பெண்களின் அசலான பிரச்சனைகளும் உளவியலும் முன்வைக்கப்படுகின்றன.

கிருஷ்ணா ஸோப்திக்கு 2017-ம் ஆண்டுக்கான ‘ஞானபீட விருது’ வழங்கப்பட்டது. பத்துக்கும் மேற்பட்ட நாவல்களும் நான்கு சிறுகதைத் தொகுதிகளும் ஸோப்தி எழுதியிருக்கிறார். இந்தியப் பிரிவினையின் போது பஞ்சாபில் ஏற்பட்ட இனக்கலவரத்தை முன்வைத்து இவர் எழுதிய ஜிந்தகிநாமா குறிப்பிடத்தக்க நாவல்.

மித்ராவந்தியில் வரும் வயதான தம்பதியருக்கு மூன்று மகன்கள் உள்ளனர், ஒவ்வொருவரும் அவருடைய மனைவியுடன் கூட்டுகுடும்பாக ஒன்றாக வாழுகிறார்கள். அதில் ஒரு மருமகள் தான் மித்ராவந்தி. அவளது மாமியார் அவள் நல்ல குடும்பத்திலிருந்து வரவில்லை என்று அடிக்கடி குறை சொல்லிக் கொண்டிருக்கிறாள். மித்ராவந்தியும் அவள் கணவனும் தினமும் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். இதில் தலையிட்டு மாமியார் மித்ராவை திட்டுகிறாள்.

மாமனார் குருதாஸ், மாமியார் தன்வந்தி இருவருக்குள்ளும் இருக்கும் புரிதலை, அன்பை ஸோப்தி அழகாகச் சித்தரித்திருக்கிறார்.

மித்ராவந்தியை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. அவள் வீட்டில். எந்த விஷயங்களை வெளிப்படையாகப் பேசக்கூடாது எனத் தடுக்கிறார்களே அதை மிக வெளிப்படையாகப் பேசுகிறாள். இதனால் அடங்காபிடாரி என்று பெயரெடுக்கிறாள்.

தான் காமத்தால் பீடிக்கப்பட்டிருப்பதாகவும் தன்னை மகிழ்ச்சிப்படுத்தக் கணவனால் முடியவில்லை என்றும் அவள் நேரடியாகக் குற்றம் சாட்டுகிறாள்.

மித்ராவந்தி மிகச்சிறிய நாவல். ஆனால் அதற்குள் ஸோப்தி மரபான பஞ்சாபிக் குடும்பத்தின் வாழ்க்கை நெருக்கடிகளைத் துல்லியமாகச் சித்தரிக்கிறார்.

இந்த நாவலின் தனித்துவம் தெறிக்கும் உரையாடல்கள். அதிலும் மித்ரா பேசுவதில் கேலியும் குத்தலும் அழகாக வெளிப்படுகின்றன.

மித்ராவை அவளது கணவன் அடிப்பதில் தான் நாவல் துவங்குகிறது. அவள் தன்னை அடிக்கும் கணவன் சர்தாரி லாலை முறைக்கிறாள். அவர்களின் சண்டையை விலக்கி விடுவதற்காகவே தன்வந்தி தலையிடுகிறாள். தன் மகனை அவள் எதுவும் சொல்வதில்லை. மாறாக அவள் மித்ராவைத் திட்டுகிறாள்.

மித்ரா வீட்டிற்குள் கலகம் செய்யக்கூடியவள். அவளுக்குப் பயமே கிடையாது. மற்றவர்கள் போல அடக்க ஒடுக்கமாக வாழத் தெரியாது. தன்னை அலங்கரித்துக் கொள்வது அவளுக்குப் பிடிக்கும். தெருவில் தன்னை ஆட்கள் வேடிக்கை பார்த்தால் பார்க்கட்டுமே என்று நினைப்பாள்.

குடும்பத்தின் மற்ற ஆண் உறுப்பினர்கள் இருக்கும்போது அவள் முக்காடு போட்டுக் கொள்வதோ தலைகுனிந்து நடப்பதோ கிடையாது.

மித்ரா தந்தை அறியாதவள். அவளது தாய் ஒரு பிரபலமான தாசி. அதை அறியாமல் அவளை மருமகளாகப் பெண் எடுத்துவிட்டதாகத் தன்வந்தி திட்டுகிறாள். மித்ராவின் பிடிவாதம் உறுதியானது. அவளை எவராலும் சமாதானப்படுத்த முடிவதில்லை

மித்ராவும் அவளது தாய் பாலோவும் தங்களின் காமஇச்சைகளைத் தாங்கள் விரும்பும் வழியில் பூர்த்திச் செய்து கொள்ள முனைகிறார்கள். பண்பாடு, கட்டுபாடு என்பதையெல்லாம் அவர்கள் தூக்கி எறிகிறார்கள்.

ஸோப்தி குடும்ப வரம்புகளுக்குள் ஒடுங்கிய பெண்களையும் சித்தரிக்கிறார். அதை மீறிச் செல்லும் மித்ராவையும் சித்தரிக்கிறார். கூட்டுக்குடும்பத்தின் சிதைவு மறக்கமுடியாத காட்சிப்படிமங்களாக விரிகின்றது.

நாவலின் இறுதியில் மித்ராவந்தியின் தாயும் மகளும் சேர்ந்து செய்யும் காரியமும் அதைத் தொடர்ந்த உரையாடலும் வாசிப்பவருக்கு அதிர்ச்சி தரக்கூடியவை. ஆனால் பாலோவைப் போன்ற பெண்கள் அப்படி நடந்து கொள்வது ஒன்றும் ஆச்சரியமில்லை என்றே ஸோப்தி கூறுகிறார்.

கிருஷ்ணா ஸோப்தி பள்ளியில் ஆங்கிலம், இந்தி, உருது ஆகிய மொழிகளைக் கற்றார். அவர் பஞ்சாபியாக இருந்த போதும் பஞ்சாபி மொழியில் எழுதுவதற்கு அவருக்குத் தெரியாது. டெல்லியிலும் சிம்லாவிலும் கிருஷ்ணா வளர்ந்தார். தன்னுடைய கதைகளில் அவர் கையாளும் மொழி தனித்துவமானது. ஆங்கிலத்தில் அவற்றை மொழிபெயர்க்க இயலாது. அரிய உருது சொற்களைப் பயன்படுத்த கூடியவர் என்கிறார்கள் மொழிபெயர்ப்பாளர்கள்.

கிழக்குத் தில்லியில் வசித்த கிருஷ்ணா தனது 70 வயதில் தனது நண்பரும் டோக்ரி எழுத்தாளருமான சிவ்நாத்தை மணந்தார், இருவரும் ஒரே ஆண்டு ஒரே தேதியில் பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண் எழுத்தாளர்களில் சிலர் பெண் பெயரில் எழுதுகிறார்கள். அது போலத் தான் ஹஷ்மத் என்ற ஆண் பெயரில் கட்டுரைகள் எழுதினேன் என்கிறார் ஸோப்தி.

தனது கதைகள் மீதான விமர்சனங்கள் யாவும் பண்பாட்டின் மீதான விமர்சனங்கள். தான் அதற்குப் பதில் சொல்ல முடியாது என்கிறார் ஸோப்தி

அத்தோடு தன் படைப்பின் வேலை வாசகனை திருப்தி செய்வதில்லை. அவனுக்குத் தனது கதை புரியவில்லை என்றால் அதற்காகத் தான் எதையும் செய்ய முடியாது. தான் அறிந்த, உணர்ந்த விஷயங்களை வெளிப்படுத்தவே எழுதுகிறேன். அதைத் தாண்டி எவருக்கும் உணவு படைப்பது போலக் கதைகளைச் சமைத்துப் போட தன்னால் இயலாது என்கிறார் ஸோப்தி

இந்தி இலக்கியத்தில் ஸோப்தியின் குரல் வலிமையானது. அவர் ஏற்படுத்திய அதிர்ச்சிகளும் லேசில் அடங்கக்கூடியவையில்லை. மித்ராவந்தி அதற்கு சரியான உதாரணம்.

••

0Shares
0