மின்னும் சிவப்புப் பூக்கள்

காற்றில் பனித் துகள்கள் பறந்து கொண்டிருக்கின்றன.  சுழன்று ஆடும் மரக்குதிரையின் மீது பனி பொழிகிறது. நான்கு வயது பாங் குயிங் அதை வியப்போடு பார்த்துக் கொண்டிருக்கிறான்

இப்படிதான் Little Red Flowers திரைப்படம் துவங்குகிறது. கிண்டர் கார்டன் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் உலகைச் சித்தரிக்கும் அற்புதமான படமது. இத்தனை குழந்தைகளை எப்படி நடிக்க வைத்தார்கள் என ஆச்சரியமாக இருக்கிறது. அதிலும் பாங் குயிங்காக நடித்துள்ள சிறுவன் அசத்துகிறான்.

சீனத்திரைப்படங்கள் என்றாலே மார்ஷல் ஆர்ட்ஸ் படங்கள் அல்லது வரலாற்றையும் போர்களத்தையும் முதன்மைப் படுத்திய படங்கள் என்ற எண்ணம் பொதுவிலிருக்கிறது, அதைத்தாண்டி சமகாலச் சீனத்திரைப்படங்கள் அழகியல் ரீதியாகவும் கலைநுட்பத்திலும் சமூகப்பிரச்சனைகளைக் கையாளுவதிலும் மிகச்சிறப்பான நிலையை எட்டியிருக்கின்றன, சர்வதேச திரைப்பட விழாக்களில் சீனத்திரைப்படங்கள் தொடர்ந்து விருதுகளைப் பெற்று வருவதே இதன் அத்தாட்சி.

ஆறாவது தலைமுறை திரைப்பட இயக்குனர்கள் என வரிசைப்படுத்தபடும் இன்றைய இயக்குனர்களில் zhang yuah முக்கியமானவர். இதுவரை ஆறு திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் வெளியான little red flowers- 2006 ம் ஆண்டு வெளியாகியுள்ளது.

முதன்முதலாகப் பள்ளிக்கு சென்ற அனுபவம் எவராலும் மறக்கமுடியாதது, பயந்து போய், அழுதபடியே எனக்குப் பள்ளி வேண்டாம், வீட்டுக்கே போய்விடலாம் எனக் கதறியது என் நினைவிலிருக்கிறது. பலருக்கும் இப்படித் தான் பள்ளி வாழ்க்கை துவங்கியிருக்கும்.ஆனால் பள்ளியும் டீச்சரும் பழகிப்போய்விடப் பிறகு வேடிக்கைகள், விளையாட்டுகள், சேஷ்டைகள் என ஆண்டுகள் ஒடி மறைந்த விதம் இனிமையானது

1949ல் கதை நடக்கிறது. நான்கு வயதான பேங் குயிங்கை அவனது அப்பா உறைவிடப்பள்ளி ஒன்றில் கிண்டர்கார்டன் வகுப்பில் சேர்த்துவிடுகிறார். பள்ளி வளாகத்திற்குள்ளே வர மாட்டேன் முரண்டு பிடிக்கிறான் பேங், அப்பா அவனைத் தூக்கிக் கொண்டு உள்ளே வருகிறார். அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் பேங்கை வகுப்பு ஆசிரியர் மிஸ் லி வரவேற்கிறாள்.  பேங்கின் பள்ளி வாழ்க்கை துவங்குகிறது

ஒழுக்கத்திற்கும் கட்டுபாட்டிற்கும் பெயர் போன உறைவிடப்பள்ளியது. தானே உடை மாற்றிக் கொள்வது, உணவை வீணடிக்காமல் சாப்பிடுவது, சுத்தமாக சோப் போட்டு கைகால்களை கழுவிக் கொள்வது, நேரத்திற்கு மலஜலம் கழிப்பது. சேர்ந்து பாடி ஆடி விளையாடுவது என எல்லா பழக்கவழக்கங்களையும் மாணவர்களுக்கு கற்றுதருகிறார்கள்.

பேங் எதையும் எளிதில் கற்றுக் கொள்ள மறுக்கிறான், வற்புறுத்தி கற்றுக் கொள்ள வைப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை. அவனை மக்குப்பயல் என மற்ற மாணவர்கள் கேலி செய்கிறார்கள்

அவன் ஒருவன் மட்டுமே தானே உடைகள் அணிந்து கொள்ளத் தெரியாதவன், இதை திருத்துவதற்காக டீச்சர் அனைவரின் முன்பாக உடைகளைக் கழட்டி காட்டும்படியாகச் சொல்கிறாள், அந்தக் காட்சியில் பேங் தனது உடைகளைக் கழட்ட முயற்சிக்கிறான். பனியனை தலைவழியாகக் கழட்ட முடியவில்லை, தலையில் சிக்கிக்  கொண்டு தடுமாறுகிறான். டீச்சர் உதவி செய்ய மறுக்கிறார். தானாகக் கற்றுக் கொள்ளட்டும் என்கிறார். முடிவில் போராடி அவனாகக் கற்றுக் கொண்டுவிடுகிறான்.

குழந்தைகள் அனைவரும் கட்டிலில் படுத்து உறங்கும் போது குயிங் மட்டும் ரகசியமாக வெளியே போய் பனியில் வெறும்காலில் நடந்து பார்க்கிறான். உயரமான மேஜை மீதேறி தாவி ஜன்னலில் நின்று வேடிக்கை பார்க்கிறான்,  டீச்சர் வருவதைக் கண்டு அங்கிருந்து  தொப்பென மெத்தையில் குதிக்கிறான். ஆசிரியரால் அவனைக் கட்டுபடுத்தமுடியவில்லை

சில நாட்கள் கனவு கண்டு படுக்கையில் மூத்திரம் போய்விடுகிறான். இதனால் மற்றபிள்ளைகள் அவனைக் கேலி செய்கிறார்கள், கோவம் கொண்டு மாணவர்களை அடித்து விடுகிறான், விளையாட்டுப் பொருட்களைத் தூக்கி எறிந்து உடைக்கிறான். இதன் காரணமாக அவனோடு யாரும் நட்பாக பழக மறுக்கிறார்கள். விளையாட்டில்  சேர்த்துக் கொள்வதில்லை.

அந்தப் பள்ளியில் ஒரு நடைமுறையிருக்கிறது., வகுப்பில் ஒழுக்கமாக நடந்து கொள்ளும் மாணவர்களைப் பாராட்டும் விதமாக அவர்களுக்குக் காகிதத்தில் செய்த சிவப்பு மலர்களைப் பரிசாகத் தருகிறார்கள், அறிவிப்பு பலகையிலும் மாணவர்கள் பெயருக்கு நேராக அடையாள ஸ்டிக்கர்கள் ஒட்டுகிறார்கள், எந்த மாணவன் அதிக மலர்களைப் பரிசாக வாங்குகிறானோ அவனே வகுப்பின் சிறந்த மாணவன். பேங் அடங்காத சிறுவனாக இருப்பதால் அவனுக்கு ஒரு மலர் கூடக் கிடைப்பதில்லை

ஒரு நாள் காற்றில் பறந்து வந்து வெளியே கிடக்கும் சிவப்பு காகித மலர் ஒன்றைக் கண்டெடுக்கும் பேங் அதை ஒரு கர்சீப்பில் ஒளித்து வைத்து இன்னொரு சிறுமிக்குப் பரிசாகத் தருகிறான், அவள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறாள்.

பள்ளி வளாகத்தை ஒட்டிய மருத்துவமனைக்குப் போய் அங்கே நோயாளியாகத் தங்கிக் கொண்டால் படிக்க வேண்டிய அவசியம் இருக்காது எனப் பேங் யோசிக்கிறான்.

இப்படிப் பள்ளியின் கட்டுபாடுகளை மீறிச் சுதந்திரமாக, விளையாட்டுதனமாக, கற்பனை உலகில் சஞ்சரிக்கும் பேங்கை எப்படித் திருத்துவது என இரண்டு ஆசிரியர்களும் போராடுகிறார்கள். இருட்டறையில் அடைத்து வைத்துத் தண்டனை தருகிறார்கள். இதனால் பேங்கின் இயல்பை மாற்ற முடியவில்லை,

படத்தின் முடிவில் பள்ளியை விட்டு வெளியே ஒடி மறைவான ஒரு இடத்தில் சாய்ந்து உறங்கத் துவங்குகிறான். அவனை காணாமல் ஆசிரியர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள்

கிண்டர்கார்டன் வகுப்பில் குழந்தைகள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை இந்தப் படம் போலத் துல்லியமாக இதுவரை யாரும் சித்தரித்ததேயில்லை. குறிப்பாகக் குழந்தைகள் தொட்டுத் தொட்டுப் பேசுவது, காதில் ரகசியம் சொல்வது, தாங்களாக ஒன்றைக் கற்பனை செய்வது, காரணமில்லாமல் ஒருவரையொருவர் அடித்துக் கொள்வது, டீச்சரை பற்றிக் கற்பனை செய்வது. வரிசையில் நடக்கும் போதே தடுமாறி விழுவது, எதையோ நினைத்துக் கொண்டு ஏங்கி ஏங்கி அழுவது என நான்கு வயது குழந்தைகளின் உலகை முழுமையாகக் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர். குழந்தைகளின் கண்ணோட்டத்தில் காட்சிகள் யாவும் படமாக்கபட்டுள்ளது தனிச்சிறப்பு

இது ஒரு அரசியல் படம், குழந்தைகள் படம் போன்ற தோற்றம் இதன் மேல்தளம் மட்டுமே, சீனா தான் இந்தக் கிண்டர்கார்டன் பள்ளி, அதன் கெடுபிடிகள், கட்டுபாடுகள், கம்யூனிச சிந்தனைகள் போன்றவற்றைக் கலைஞர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதைக் குறியீட்டுத் தளத்தில் இப்படம் விளக்குகிறது என்றொரு விமர்சனம் வெளியாகியுள்ளது, இந்தக் கோணத்தில் நோக்கும் போது படம் வேறுவிதமாக வெளிப்படுகிறது

குழந்தைகளின் உலகை சிறப்பாகக் காட்சிப்படுத்தியதற்காக இப்படம் பெர்லின் திரைப்பட விழாவில் பரிசு பெற்றுள்ளது.

•••

0Shares
0