இயக்குநர் இங்மர் பெர்க்மென் தான் பிறந்த சில நாட்களில் நடைபெற்ற நிகழ்வுகளைத் துல்லியமாக நினைவு கொண்டிருக்கிறார்.

அதைப் பற்றி தனது சுயசரிதையான The Magic Lantern நூலில் குறிப்பிடுகிறார்.
எனது நினைவில் மூன்று நான்கு வயதுகளில் நடந்த நிகழ்ச்சிகளே இருக்கின்றன. அதுவும் துல்லியமாக இல்லை. சில தெளிவற்ற காட்சிகள். சில முகங்கள். சில இடங்கள் மட்டுமே இருக்கின்றன.

பெர்க்மென் பிறந்தபோது அவரது அம்மா உடல்நலமற்று இருந்த காரணத்தால் பால்புகட்டுவதற்கு தாதியை ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்தத் தாதியின் குறட்டைச் சப்தம் துவங்கி. அடிக்கடி தான் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தது வரை அத்தனையும் பெர்க்மென் துல்லியமாக எழுதியிருக்கிறார்.
இது குறித்துப் பெர்க்மெனின் அம்மாவிடம் கேட்டபோது தனக்கு எதுவும் நினைவில்லை. அவன் பிறந்த போது மருத்துவர் பிழைக்கமாட்டான் என்று சொன்னது மட்டுமே நினைவிலிருக்கிறது. பெர்க்மென் நிறைய கற்பனை செய்யக்கூடியவன். அவனது வாழ்க்கை வரலாற்று நூலில் எது உண்மை என அவனுக்கே தெரியும் என்கிறார்
பெர்க்மெனின் அண்ணனும் இது போன்ற விளக்கத்தை தான் கொடுத்திருக்கிறார். அவரது முதல்நினைவுகள் உண்மையா, இல்லை கற்பனையா என்பதை விடவும் ஒருவர் தனது நினைவுகளை எவ்வளவு துல்லியமாக விவரிக்கிறார் என்பது தான் எனக்கு பிரமிப்பாக இருக்கிறது
தனக்கு உணவு கொடுப்பதற்காக வைத்திருந்த கிண்ணம். அதில் வரையப்பட்டிருந்த நீலமலர்கள். அந்தக் கிண்ணத்தில் பட்டு ஒளி பிரதிபலிப்பு கொள்வது. கிண்ணம் சுழலும் போது ஏற்படும் வியப்பு இவை பற்றி பெர்க்மென் மிகவும் துல்லியமாக எழுதியிருக்கிறார்.
பயம் மட்டும் தான் பின்னாளில் உருவானது என்ற அவரது வரி ரசிக்கத் தக்கது
சிறுவயதின் பயங்களைப் பட்டியல் போட்டால் வியப்பாக இருக்கிறது. இதற்கெல்லாம் ஏன் பயந்தோம் என்று சிரிப்பாகவும் வருகிறது.
பால்யகாலம் என்பதே ஏமாற்றங்களின் விளைநிலம் தானோ. அந்த வயதில் கிடைத்தவை குறைவு. ஏங்கிக் கிடைக்காமல் போனது அதிகம். கண்ணுக்குத் தெரியாமல் நிறைய காயங்களை பால்யவயது ஏற்படுத்தியிருக்கிறது. அந்தக் காயங்கள் வாழ்நாள் முழுவதும் ஆறிப்போவதேயில்லை.

Fanny and Alexander திரைப்படம் பெர்க்மெனின் பால்ய நினைவுகளையே கொண்டிருக்கிறது. அதைப் புரிந்து கொள்ள The Magic Lantern அவசியம் படிக்க வேண்டும்.
பிறந்த போது தனக்கு ஏற்பட்ட வயிற்றுப் பிரச்சனை வாழ்நாள் முழுவதும் தன்னைத்தொடர்ந்து என்று பெர்க்மென் நம்புகிறார். உணவு ஒவ்வாமையால் மிகவும் அவதிப்பட்டிருக்கிறார். படப்பிடிப்பில் காபியைத் தவிர வேறு எதையும் அவர் தொடுவதில்லை. எந்த விருந்திலும் அவர் கலந்து கொள்வதில்லை. ஒதுங்கி ஒரு தீவில் வாழ்ந்தார். அதற்கு வயிற்றுஉபாதைகள் தான் முக்கிய காரணம்.
பெர்க்மெனின் சுயசரிதை மிகவும் காட்சிப்பூர்வமாக எழுதப்பட்டிருக்கிறது. ஒரு திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வைத் தருகிறது.
உண்மையில் ஒருவர் தனது முதல் நினைவு எது எனக் கண்டுபிடிக்க முடியுமா.
அது நாமாக முடிவு செய்து கொள்வது தான்.
டால்ஸ்டாய் குழந்தையாக இருந்த போது நடந்த நிகழ்வு ஒன்றை தனது முதல்நினைவாகச் சொல்லுகிறார். தனது முதல் குதிரைவண்டி பயணத்தைப் பற்றி எழுதியிருக்கிறார். அவரது நினைவாற்றல் அபாரமானது.
ஸ்டுடியோவில் எடுக்கபட்ட புகைப்படத்தில் நாம் தவழுகிற குழந்தையாக உள்ளதைக் காணும் போது அது யாரோ போலவே இருப்பதாகவே உணருகிறோம்.
அப்பா அல்லது அம்மா கையில் குழந்தையாக இருக்கும் புகைப்படத்தைக் காணும் போது அந்த கண்களின் பிரகாசமும் தெளிந்த முகமும் மகிழ்ச்சி தருகிறது. அந்தக் குழந்தை நாம் தானா என்று சந்தேகமும் வருகிறது
எல்லா வயதின் புகைப்படங்களும் இந்தத் தலைமுறையிடம் இருக்கிறது.
என் தலைமுறையில் ஒன்றிரண்டு குழந்தைப் பருவ புகைப்படங்கள். பள்ளி நாட்கள். கல்லூரி நாட்கள் அதற்கு பிறகான புகைப்படங்களே இருக்கின்றன.
வெயில் படர்ந்த எனது வீதியும் வீடும் ஒரு புகைப்படத்திலும் இல்லை. நாயோடு சுற்றித் திரிந்த ஐந்து வயது சிறுவனான எனது உருவத்தை இனி நான் காண முடியாது. அதன் ஒரு புகைப்படம் கிடையாது.
சிறுவயதில் எத்தனையோ முறை, ஏதேதோ ஊர் ரயில் நிலையங்களில் பேருந்து நிலையங்களில் மணிக்கணக்கில் காத்திருந்திருக்கிறோம். அந்தக் காட்சியின் சாட்சியமாக ஒரு புகைப்படம் கிடையாது. விருப்பமான ஆசிரியர்களுடன் ஒரு புகைப்படமும் எடுத்துக் கொள்ளவில்லை. அவர்கள் உலகிலிருந்தும் விடைபெற்று போய்விட்டார்கள். இனி அந்த முகங்கள் நினைவில் ஆழத்தில் மட்டுமே மிதந்து கொண்டிருக்கும்
தீபாவளி அன்று புத்தாடை அணிந்து கொண்டு சினிமா தியேட்டரில் முண்டியடித்து நின்ற சாட்சியமாக ஏன் புகைப்படம் இல்லை
தூண்டிலோடு மீன்பிடிக்க கண்மாய் கரையில் நடந்த போது கண்ட சூரியன் எந்தப் புகைப்படத்திலும் இல்லை
புகைப்படமில்லாத வயதுகள் நினைவில் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. நினைவைக் காப்பாற்றுவதும் மீட்பதும் நம் கையில் இல்லை. நினைவு ஒரு விநோதப் பறவை. எப்போது எழும் எப்போது மறையும் எனக் கண்டறியவே முடியாது
••