ரியோக்கன் கவிதைகள்

தஸ்தாயெவ்ஸ்கியின் புத்தக சாலை என்ற இணையதளம் ஒன்றை உருவாக்கி தொடர்ந்து எழுதி வருகிறார் சர்வோத்தமன் சடகோபன்

தஸ்தாயெவ்ஸ்கி பற்றி மிகச்சிறப்பான கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.  மிக ஆழமான பார்வை கொண்ட கட்டுரைகள்

இவரது கட்டுரைகளை விரும்பிப் படிப்பேன்.

ரஷ்ய இலக்கியங்களின் மீது தீவிர விருப்பம் கொண்டவர் சர்வோத்தமன் .

தஸ்தாயெவ்ஸ்கி பற்றி இவர் எழுதிய கட்டுரைகள் தனித்து நூலாக்க வேண்டியவை.

இவரது இணையதளத்தில் ஜப்பானிய கவியான ட்டய்கு ரியோக்கன் கவிதைகளை தொடர்ந்து மொழியாக்கம் செய்து வருகிறார்.

அதில் எனக்கு விருப்பமான சில கவிதைகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.

••••

உங்களுக்கு அதிக உடைமைகள் தேவையில்லை

எனது வீடு கானகத்தின் ஆழ்ந்த ரகசியமான இடத்தில் புதையுண்டு இருக்கிறது

ஒவ்வொரு ஆண்டும் , முந்தைய ஆண்டை விட இவி கொடிகள் நீளமாக வளர்கின்றன

உலக நடப்புகளால் சிதறாது நான் எளிமையாக வாழ்கிறேன்

விறகுவெட்டிகள் பாடுவது எப்போதாவது மரங்களின் ஊடே என்னை வந்து அடைகிறது

சூரியன் வானத்தில் இருக்கும் போதே , நான் எனது கிழிந்த துணிகளை பின்னுகிறேன்.

சந்திரனை நோக்கியவாறு,நான் எனக்கே புனித நூல்களை சத்தமாக வாசிக்கிறேன்

என் நம்பிக்கையை பின்பற்றுபவர்களுக்கு ஒரு வார்த்தை சொல்கிறேன்

மிகப்பரந்த இந்த வாழ்வை துய்க்க, உங்களுக்கு அதிக உடைமைகள் தேவையில்லை.

••

எனது சொந்த கிராமத்திற்கு திரும்புதல்

எனது சொந்த கிராமத்திற்கு பல ஆண்டுகளின் இன்மைக்கு பிறகு திரும்ப செல்கிறேன்

ஒரு நாட்டு விடுதியில் என்னை கிடத்தி மழையை கவனிக்கிறேன்

ஒரு கிண்ணமும் அங்கியும் மட்டுமே என்னிடம் இருக்கிறது

நான் ஊதுபத்தியை ஏற்றி தியானத்தில் அமர முயல்கிறேன்

சாளரத்திற்கு வெளியே இருளில் முழு இரவும் தூவானம்-

உள்ளே , இத்தனை வருட யாத்திரையின் நெகிழ்வான நினைவுகள்.

••

எனது ஆசானுக்கு

ஆள் அரவமற்ற மலையின் சரிவில்

ஆண்டாடுகளாக கவனிப்பாரற்று பரவியிருந்த நெடு களைகளில்

புதைந்திருந்தது ஒரு பழைய கல்லறை;

எப்போதாவாவது கடக்கும் விறகுவெட்டி,

சமாதியை பராமரிக்க யாருமில்லை.

நான் முன்பு அவரின் மாணவன், பரட்டை தலைமூடி கொண்ட யுவன்,

குறுகலான நதியின் கரையில் அவரிடம் ஆழமாக கற்றேன்

ஒரு காலை நான் எனது தனித்த பயணத்தை துவக்கினேன்.

எங்களுக்கு மத்தியிலான காலம் அமைதியில் கழிந்தது.

நான் இப்போது திரும்பியிருக்கிறேன், அவர் துயிலில் ஆழ்ந்திருப்பதை கண்டுகொள்ள.

நான் எப்படி அவரின் பிரிந்த ஆன்மாவிற்கு மரியாதை செலுத்துவது?

அகப்பையால் தூய நீரை நினைவுக்கல் மீது ஊற்றி

மெளனமாக பிராத்தனை செய்தேன்.

சட்டென்று சூரியன் மலைக்கு பின்னே மறைந்தது.

தேவதாரு மரங்களின் காற்றின் பேரோசையால் சூழப்பட்டேன்.

நான் என்னை விடுவித்துக் கொள்ள முயன்று தோற்றேன்;

என் சட்டைக்கைகளில் தெப்பமாக கண்ணீர்.

•••

இறுக்கமாக இருப்பதற்கு சோர்வாக இருக்கிறது

இறுக்கமாக இருப்பதற்கு சோர்வாக இருக்கிறது

இந்த உலகம் தன்னைத்தானே நிர்வகித்துக்கொள்ளட்டும்

என விட்டுவிட்டேன்

என் பொதியில் பத்து நாட்களுக்கு வரக்கூடிய அரிசி

அடுப்பக்கருகில் ஒரு கட்டுச் சுள்ளிகள்.

ஏன் அகவிழிப்பு பற்றியும் மயக்கத்தை பற்றியும்

தொணதொணக்க வேண்டும்

கூரையின் மீது விழும் இரவு மழையை

கவனித்தவாறு

நான் என் இரு கால்களையும் நீட்டி

செளகரியமாக அமர்கிறேன்.

நன்றி :

https://sarwothaman.blogspot.com/

0Shares
0