Liv & Ingmar என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன்
திரைப்பட நடிகை லிவ் உல்மானைக்(Liv Ullmann)காதலித்து அவருடன் வாழ்ந்தார் இயக்குநர் இங்மர் பெர்க்மென். அவரது படங்களில் முக்கிய வேஷங்களில் தொடர்ந்து நடித்து வந்தார் லிவ் உல்மான்.
தங்களின் திருமண உறவு மற்றும் தீவு வாழ்க்கை, பிரிவு, பெர்க்மெனை இறுதிக்காலத்தில் மறுபடி சந்தித்தது. அவரது மரணத்திற்குப் பிறகு அந்தத் தீவிற்குத் திரும்பப் போன நினைவுகள் என்று தன்து வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை இந்த ஆவணப்படத்தில் விவரித்திருக்கிறார் லிவ் உல்மான்.
இத்தனை வெளிப்படையான பேச்சை, உறவின் மறுபக்கத்தை பற்றிய குரலை இதுவரை கேட்டதேயில்லை
லிவ் உல்மானை விடப் பலவயது மூத்த பெர்க்மென் இளம் நடிகையான லிவ் உல்மானைக் காதலிப்பதற்காக படப்பிடிப்பு தளத்தில் ஏதேதோ வழிகளைக் கையாண்டார். பெர்க்மெனின் கலைத்திறமை மீது மரியாதை இருந்த போதும் அது காதலாகவில்லை.
ஆனால் பெர்க்மென் தீராக்காதலோடு லிவ் உல்மானைப் பின்தொடர்ந்தார். முடிவில் அவரது ஆசையே வென்றது. அவரோடு சேர்ந்து வாழ ஒத்துக் கொண்டார் லிவ் உல்மான்.
தங்கள் காதல் வாழ்க்கையைத் தயக்கமும் குழப்பமுமாக நினைவு கொள்கிறார் லிவ் உல்மான்.
“ஒரு தீவில் தான் பெர்க்மென் தன் காதலை வெளிப்படுத்தினார். அதே தீவில் ஒரு வீடு கட்டி நாங்கள் குடியிருக்கத் துவங்கினோம். வெளியுலகிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட வாழ்க்கை.
பெர்க்மென் மிகவும் கண்டிப்பானவர். வெளியே எங்கேயும் அனுப்ப மாட்டார். வாரம் ஒரு நாள் மதியம் ப்யூட்டி பார்லருக்கு போவதற்காகப் படகு வரும். அருகிலிருந்த நகருக்குப் போய் வருவேன். அது ஒன்று தான் சுதந்திரம். மற்ற நாட்களில் கைதியைப் போலேவே அடைத்து வைக்கப்பட்டிருந்தேன். வெளியாட்கள் யாரும் வந்துவிடக்கூடாது என்பதற்காக வீட்டினைச் சுற்றி பெரிய பாதுகாப்பு சுவரையும் கட்டி எழுப்பிவிட்டார். தனிமைச் சிறை. இளம்பெண்ணான எனக்குள் இருந்த கற்பனைகள். உல்லாசம் பற்றிய ஆசைகள் யாவும் ஒடுக்கபட்டது.
வீட்டில் பெர்க்மென் தனியே இசை கேட்டபடியே, எழுதியபடியே இருப்பார். தூரத்துக் கடலின் ஓசையைக் கேட்டபடியே செய்வதறியாமல் தனித்து கிடப்பேன். எங்கள் மண வாழ்வு கசந்து போனது. அவரிடமிருந்து தப்பிப் போக முயன்றேன். அந்த நாட்களில் கர்ப்பிணியானேன். பெண் குழந்தை பிறந்தது. அது ஒன்று தான் எனது துணை. என் மகள் லின்னை வளர்க்கவே அந்த வீட்டிலிருந்தேன். ஆனாலும் புற உலகை விட்டு துண்டித்து வாழுவது மூச்சுத் திணறலை ஏற்படுத்தியது. ஒருநாள் அவருக்குத் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறிப் போனேன். பெர்க்மென் திரும்பி வந்து தேடினார். நண்பர்கள் மூலம் தூது அனுப்பினார். ஆனால் நான் திரும்பிப் போகவில்லை.
அமெரிக்கா சென்று ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்துப் பெயரும் புகழும் வாங்கினேன். இதற்குள் பெர்க்மென் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதாகத் தகவல் அறிந்தேன். அவரால் தனியே வாழ முடியாது என்று எனக்குத் தெரியும்.
பெர்க்மென் திரைத்துறையில் என் வளர்ச்சியைக் கண்டு சந்தோஷம் அடைந்தார். அமெரிக்காவில் எனது புதிய நாடகம் நடக்கிறது என்பதற்காக அதைக் காணுவதற்காக ஸ்வீடனில் இருந்து அமெரிக்கா வந்து போனார். பெர்க்மென் தனக்கெனச் சிறிய வட்டத்தை உருவாக்கிக் கொண்டு அதற்குள் வாழுகிறவர். அந்த வட்டம் எனக்கு ஏற்புடையதில்லை.
நீண்ட பிரிவின் பின்பு அவரது கடைசி நாட்களில் ஒருமுறை காணச் சென்றிருந்தேன். இருவருக்கும் வயதாகியிருந்தது. என் கடைசி நாள் வரை கூட இரு என்று அவர் கண்ணீர் மல்க கூறினார். இருப்பதாக ஒத்துக் கொண்டேன். ஆனால் இருக்க முடியவில்லை. அவரது மரணத்தின் போது இதே வீட்டிற்கு வந்திருந்தேன். அந்த வீடும் கடலும் எங்கள் காதலின் சின்னங்கள். அதை மறக்க முடியவேயில்லை.“
உலகின் கண்களில் பெர்க்மென் மகத்தான இயக்குநர். ஒரு கணவராக அவரை அப்படி நான் நினைக்க மாட்டேன். என் காதலை, அன்பை அவர் உணரவேயில்லை. உடற்சுகம் மட்டுமே அவருக்குத் தேவையாக இருந்தது. அதிலும் சுத்தம் சுத்தம் என அவர் அதீத தூய்மையுணர்வு கொண்டிருந்தார். அது என்னை மிகவும் இம்சை செய்தது என்று இந்த ஆவணப்படத்தில் லிவ் உல்மான் கூறுகிறார்.
இங்மார் பெர்க்மென் ஐந்து முறை திருமணம் செய்து கொண்டார். நடன கலைஞரான எல்சி ஃபிஷருடன் ஏற்பட்ட திருமணம் இரண்டு வருஷங்கள் தொடர்ந்தது. அதன்பிறகு ஏலென் லுண்ட்ஸ்ட்ராம், கன் குரூட் , கேபி லாரெட்டி வான் ரோஸன் என ஐந்து பெண்களை மணந்திருக்கிறார்.இவர்களின்றி ஹாரியட், பிபி ஆண்டெர்சன் ஆகியோரையும் காதலித்தார் பெர்க்மென்.
ஆவணப்படத்தின் ஒரு காட்சியில் பெர்க்மெனைக் காதலித்த பெண்கள் ஒன்று கூடி ஒரு இரவு குடித்துவிட்டுப் பெர்க்மெனை வம்புக்கு இழுக்கிறார்கள். அவர் தனது அறைக்கதவை மூடிக் கொண்டு விடியும் வரை திறக்கவேயில்லை. இந்த நிகழ்வை லிவ் உல்மான் விவரிக்கும் போது அவரது குரலிலிருந்த மகிழ்ச்சி அபூர்வமானது
லிவ் உல்மான் தனது வாழ்க்கை வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளைப் புத்தகமாகவும் எழுதியிருக்கிறார். Changing என்ற அந்நூலின் சில பகுதிகள் தமிழில் வெளியாகியுள்ளன.
தனது கடந்தகாலத்தின் காதலை இத்தனை வெளிப்படையாக யாரும் சொன்னதில்லை என்ற விதத்தில் இப்படம் முக்கியமானதே
••