வாசக பர்வம்.

உயிர்மையில் தொடராக வெளிவந்து வாசகர்களின் பரந்த கவனத்திற்கும் பாராட்டுதலுக்கும் உள்ளான  எழுத்தாளர்கள் குறித்து நான் எழுதிய பத்தியான வாசகபர்வம் தொகுக்கபட்டு தனி நூலாக வெளிவருகிறது.



இந்த நூலில் வைக்கம் முகமது பஷீர், சுஜாதா,பிரமீள், விக்கிரமாதித்யன், சி.சு. செல்லப்பா பிரபஞ்சன், பா. சிங்காரம் கோபி கிருஷ்ணன், ந.முத்துசாமி, அசோகமித்ரன், கி.ராஜநாராயணன். ஏ.கே. ராமானுஜன், வண்ணநிலவன், வண்ணதாசன், கோணங்கி, கவிஞர் மீரா, சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் என்று தமிழ் இலக்கியத்தின் தனித்த ஆளுமைகளை நான் தேடிச் சென்று சந்தித்த நினைவுகளையும், அவர்களது படைப்புலகின் மீதான எனது நெருக்கத்தையும் பதிவு செய்திருக்கிறேன்.


 தேடி அலைந்து கண்ட எழுத்தாளர்களையும் அவர்கள் மீதான என் விருப்பத்தின் காரணமும் நினைவுகளும் கலந்து எழுதப்பட்டதே வாசகபர்வம்.


ஒரு எழுத்தாளனாக நான் உருவாக இவர்கள் பெரிதும் காரணமாக இருந்தார்கள். அவர்களிடமிருந்து என்ன கற்றுக் கொண்டேன். எப்படி அதிலிருந்து உருவானேன் என்பது அகரகசியம். ஆனால் என் முன்னோடி படைப்பாளிகளிடமிருந்தே நான் உருவானேன்.



வெள்ளிவீதியாரின் சங்ககவிதைகளை வாசித்துவிட்டு மதுரையில் எந்த இடத்தில் அவள் இருந்தாள் என்று இரவெல்லாம் அவள் பெயர் சொல்லி அழைத்தபடி அலைந்திருக்கிறேன். ஆண்டாளின் பாடலை முணுமுணுத்தபடியே அவள் பிறந்த நந்தவனத்தில் முளைத்த துளசி செடியை அக்காவாக வரித்துக் கொண்டிருக்கிறேன். 


 சிங்காரமும் ஜி.நாகராஜனும் இருந்த இடங்கள் என்று மதுரை எனக்குள் எழுத்தாளனின் நினைவாகவே பதிந்து கிடக்கிறது. திருவனந்தபுரத்தில் இறங்கி இன்றும் நகுலன் வீட்டிற்கு போகிறேன்.  இறந்து பலவருடமாகி அவர் இல்லாத போதும் அவரை பார்த்து கொண்டிருப்பது போலதானிருக்கிறது. நகுலன் ஒரு பூனையாக மாறி நகரில் அலைந்து கொண்டிருப்பார் என்று ஏனோ தோன்றுகிறது.



என்னை உருவாக்கிய எழுத்தாளர்களுக்கு எப்படி நன்றி சொல்லிக் கொள்வது என்று தெரியவில்லை. சிறிய புன்னகையும், பாராட்டு சொற்களும், கைகுலுக்கலும் மட்டுமே போதுமானதாக இல்லை. நேர்சந்திப்புகளில் கூட வெளிப்படுத்திக் கொள்ள முடியாத தவிப்பும், நெருக்கமும் கொண்ட வாசகனின் மனது விசித்திரமானது. அதை எழுத்தாளர்கள் புரிந்து கொள்ள போவதில்லை.


புரிந்து கொள்ளாமல் போவதற்கு எழுத்தாளர்கள் காரணம் என்றும் தோன்றவில்லை. தேன் சாப்பிட்ட ஊமை அதை எப்படி வெளிப்படுத்திக் கொள்வான் என்பது போன்ற நிலை அது.


எல்லா எழுத்தாளர்களும் யாரோ ஒருவரின் வாசகர்களே.


**
இந்த நூலை எனது நண்பரும் ஐஏஎஸ் அதிகாரியுமான திரு. ரகுபதி வெளியிடுகிறார். இதனை பற்றி மத்திய அரசின் செய்தி மற்றும்  பத்திரிக்கை துறை உயரதிகாரியாக பணியாற்றும் கீதா இளங்கோவன் பேசுகிறார்.


கீதா இளங்கோவன் தேர்ந்த வாசகர். சமூக மாற்றங்களில் அக்கறையான  பெண்ணிய சிந்தனையாளர்.


**


நூல் வெளியீடு. டிசம்பர். 13. மாலை 5.30 மணி. பிலிம்சேம்பர். அண்ணாசாலை. சென்னை.


வாசக பர்வம். பக்கம்: 192   விலை: 110

0Shares
0