வாசிப்பின் வழியாக

பேராசிரியர் பாரதிபாலன்

ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் இலக்கியம் என்ற மகாசமுத்திரத்திற்குள் இறங்குகிறார்கள், நுழைகிறார்கள். இந்த இலக்கியத்துக்குள் நுழைவதற்கு எத்தனையோ வாயில்கள் திறந்திருக்கின்றன. அவரவர் சூழலுக்கு ஏற்ப அவரவர் வாயில்களை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்கின்றார்கள்!

எஸ். ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுத்துக் கொண்ட வாயில்ரஷ்ய இலக்கியங்கள்’.

இளம் வயதில் தனக்கு ஏற்பட்ட ரஷ்ய இலக்கியத்தின் தாக்கத்தால், ஆற்றுப்படுத்துதலால் உந்தப்பட்டு எழுத வந்தவர் எஸ். ராமகிருஷ்ணன்!

பின்னர் பழந்தமிழ் இலக்கியம் தொட்டு தமிழில் இலக்கிய வளமைகளை எல்லாம் உள்வாங்கிக் கொண்டு தன் திசைகளை விரிவுபடுத்திக் கொண்டவர்.

இடையறாத வாசிப்பு, தொடர் சந்திப்புகள் முடிவுறாபயணங்கள் என்று கற்ற பாடங்களை, பெற்ற அனுபவங்களை தொடர்ந்து பகிர்ந்து கொள்ளும் விரிந்த மனம்! இதுவே எஸ். ராமகிருஷ்ணனின் இலக்கியத்தின் அடித்தளமாக அமைகிறது! இதனை இவர் மனம் விரும்பிச் செய்கிறது:

செல்லும் இடமெல்லாம் எனக்கு நண்பர்கள் உண்டு; பேச்சும் எழுத்தும், ஊர் சுற்றுவதும் தான் என் வாழ்வு! என்பது அவரிகன் பிரகடனம்!

நான் வாசித்த எல்லாவற்றையும் சேர்ந்த ஒரு பகுதியே நான்என்பார் தியோடர் ரூஸ்வெல்ட்! இதேபோன்று, , “இதுவரை நான் உண்ட உணவின் ஒரு பகுதியாக என் உடலும், என் வாசிப்பின் ஊடாக உருவான என் மனமும் சேர்ந்தது தான் நான்என்று குறிப்பிடுகிறார் எஸ் ராமகிருஷ்ணன்!

ஆழ்ந்த வாசிப்பின் வழியாக அடையும் உன்னதம்!

ஒரு புத்தகத்தை வாசிப்பதன் மூலமே நாம் பார்க்காத, புது உலகத்தைப் பார்க்க முடியும்! புத்தக வாசிப்பு என்பது நம்மை வேறொரு மனநிலைக்கு, வேறொரு உலகத்திற்கு அழைத்துச் சென்றுவிடுகிறது!

இந்த உலகத்தில் நாம் இருக்கிறோம்! நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு உலகம் இருக்கிறது! அந்த உலகத்தைப் பார்க்கத்தான் தனி கண்கள் வேண்டும்! ”

அப்படியான தனி கண்கொண்டு பார்த்த பார்வை தான்சொற்களின் புதிர் பாதைஎன்ற இந்த நூல்! இந்த பாதை செல்லும் தூரம் என்னவோ சிறிது தான்! என்றாலும் அது தரும் அனுபவம் சுகமும் விரிவானது.

எஸ். ராமகிருஷ்ணன் படைப்புகளுக்கு கிடைத்த வெளிச்சம் அவருடைய இலக்கிய உரைகளுக்கும் கிடைத்துள்ளது! இப்படி அமைவது அபூர்வம்! தமிழில் ஜெயகாந்தனுக்கு அப்படி வாய்த்தது!

சொற்களின் புதிர் பாதைஎன்ற இந்த நூல்! 26 கட்டுரைகளின் தொகுப்பு நூல்! புற வடிவ நிலையில் வேண்டுமானால் இது கட்டுரையாக இருக்கலாம், ஆனால் அது ஏற்படுத்தும் மன உணர்வு என்பது ஒரு கவிதையைப் போல, ஒரு சிறுகதையைப் போல, ஒரு நாவலைப் போல வாசிப்பு இன்பத்தைத் தந்து விடுகிறது. நம் மனநிலையை வெவ்வேறு நிலைக்கு அப்படியே உயர்த்திச் சென்று விடுகிறது.

இந்தக் கட்டுரைகள் வெறும் தரவுகளால் மட்டும் எழுதப்பட்டதல்ல மனதால் எழுதப்பட்டது. காலத்தின் குரலாக ஒலிக்கிறது!

இவர் துல்லியமாக கவிதைக் கண்கொண்டு பார்க்கிறார்என்று ரஷ்ய எழுத்தாளர் இவான் துர்கனேவ் பற்றி ஒரு உரையில் எஸ். ராமகிருஷ்ணன் குறிப்பிடுகிறார்.

அப்படியான கவிதைக் கண்பார்வையில் தான் இந்தச் சொற்களின் பாதை விரிகிறது. பல முகங்களையும், பல புதிய திசைகளையும் இந்தப் பாதை நமக்குக் காட்டுகிறது !. இந்தப் பாதையில் நடக்கின்ற சுகமும், நடக்கின்ற போது நாம் காண்கின்ற காட்சிகளும் அந்தக் காட்சிகள் வழியாக விரிகின்ற உலகங்களும் நமக்கு தனி அனுபவமாக வாய்த்து விடுகிறது.

சிறுகதைகள் குறித்தும் கவிதைகள் குறித்தும் குறிப்பாக நவீனக் கவிதைகளின் நுட்பங்கள் குறித்தும் குறுநாவல்கள் குறித்தும் பல்வேறு கட்டுரைகள் குறித்தும் சில நிகழ்வுகளைக் குறித்தும் அவர் சந்தித்த எழுத்தாளர்களைப் பற்றியும் அறிஞர்களைப் பற்றியும் வாசித்த, பழந்தமிழ் இலக்கியங்களைப் பற்றியும், இத்துடன் தன் சுய அனுபவங்கள் குறித்த மனப் பதிவாகவும் இந்த நூல் அமைகிறது! இந்திய எழுத்தாளர்களைப் பற்றி குறிப்பாக, மலையாள படைப்பாளிகள் குறித்து மிக நுட்பமாக, அவர்களுடைய தனித்தன்மைகளை தனித்த பண்புகளை அவர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் குறித்தும், ஒரு படைப்பாளனுக்கு கிடைத்திருக்கும் பரந்த வெளிகளைக் குறித்தும் பரவசத்தோடு பேசுகிறார்.

இதேபோன்று அவர் மேற்கொண்ட பயணங்கள் மூலம் கற்றவைகளையும் ஆழ்ந்த வாசிப்பின் மூலம் பெற்றவைகளையும் நமக்குத் தருகிறார். மிக சுருக்கமாகச் சொல்வதென்றால், “சொற்களின் புதிர் பாதைஎன்ற இந்த நூல் ஒரு எளிமையான நேர்மையான உரையாடல்!.

இந்த உரையாடல் நமக்கு பல புதிய சொற்களைத் தருகிறது. அந்தச் சொற்கள் பல புதிய பொருள்களைத் தருகிறது. அந்தப் பொருள்கள் வாழ்வனுபவத்தால் பெற்றவை!.

இங்கே நான் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். எஸ். ராமகிருஷ்ணனின் மொழி அலாதியானது! தனித்துவம் மிக்கது! இந்தக் கட்டுரையில் அவர் வகைப்படுத்தி, வரிசைக்கிரமமாக அமைக்கப்பட்ட வாக்கிய அடுக்குகளில் வீசும் ஒளியும், மனதை ஈர்க்கும் மொழிகட்கும் முக்கியமானதாகிறது. அந்த மொழி தரும் சுவை தான் இந்த நூலின் சிறப்பு! ஒருவிதமான வசீகர மொழி!

சில உதாரணங்களை இந்த நூலிலிருந்ததே சுட்டுவது வாசகர்களுக்கு உதவியாக அமையும்! தி. ஜானகிராமனின் நாசகார உலகம்குறித்து சொல்கிறபோது கதை முழுவதும் ஒரு பெண்ணின் அழகைப் பற்றி வியப்புதான்!“ என்று ஒரே வரியில் குறிப்பிட்டு தி. ஜானகிராமனின் உலகத்தை மிக துல்லியமாகக் காட்டிவிடுகிறார். அதே நேரத்தில் லா..ராவின் பெண்களையும் நாம் நினைக்கத் தூண்டுகிறார். ஜெயக்காந்தனின் பெண்களையும் நினைக்கத் தூண்டுகிறார். ஒரு சோறு பதம் போல தி. ஜானகிராமனின் ஒரு வரியை உருவிக் காட்டுகிறார். பாருங்கள். “நெருப்புக்கு வடிவு கொடுத்தது போல் இருந்தாள்

மற்றொன்று, 96 வயதில் கி. ராஜநாராயணன் எழுதியிருக்கும்இந்த இவள்என்ற குறுநாவலை குறித்து இப்படிக் குறிப்பிடுகிறார். “கி.ரா.வின் கையெழுத்தைப் பார்த்தால் அடித்தல் திருத்தல் இன்றி எத்தனை அழகாக இருக்கிறது! இதில் முதுமையின் அடையாளமே இல்லை!“

அடுத்து

‘’நாவலின் சிறப்பு கதைசொல்லும் குரல்தான்

கதைசொல்லியின் குரல் ஒற்றைக் கதைகயில் துவங்கி, பல்வேறு கதைகள் நினைவுக்குள் ஊடுருவிச் செல்கிறது!’

‘’பிகாசோவின் ஸ்கெட்ச் புக் பக்கங்கள் சிலவற்றை ஒருமுறை பத்திரிகையில் பார்த்தேன். ஒற்றை கோட்டினால் உருவங்களை வரைந்திருப்பார். அந்த கோட்டின் வழியாக உருவங்களை மட்டுமன்றி, உணர்ச்சிகளும் துல்லியமாக வெளிப்பட்டிருக்கும். கி. ரா.வின் எழுத்தில் அதே மாயம் செயல்பட்டிருக்கிறதுஎன்று குறிப்பிடுகிறார்.

தோப்பில் முகம்மது மீரான் பற்றிய உரையாடலில் நெய்தல் மரபின் தொடர்ச்சியாக தோப்பில் முகம்மது மீரானைப் பார்க்கிறேன் என்றும், குமரி மாவட்ட கடலோரக் கிராமத்தின் வாழ்வை இவர் போல் வேறு யாரும் எழுதவில்லை என்றும் பதிவு செய்கிறார்.

அறிஞர் சி. இலக்குவனார் எழுதியஎன் வாழ்க்கைப் போர்என்ற சுயசரிதையை முன்வைத்து எஸ். ராமகிருஷ்ணன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் அதில் இவரது வாழ்க்கை வரலாறு நூறு வருடங்களுக்கு முன்பு நாகை பகுதி கிராமங்கள் எப்படியிருந்தன, கிராமப்புற வாழ்க்கையில் கல்வி பெற எவ்வளவு போராட வேண்டி இருந்தது , என்பதன் சாட்சியாக உள்ளது என்றுகுறிப்பிடுவதுடன்,

அப்போதைய அன்னச் சத்திரங்கள் ஏழை மாணவர்களின் இலவச உணவு விடுதிகளாக மாற்றப்பட்டது குறித்தும், அப்போது அந்த இலவச விடுதியில் தங்கிப் பயின்ற சி. இலக்குவனார் அவருடன் மேனாள் இந்திய ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன் அவர்களும் இலவச விடுதிகளில் தங்கிப் பயின்றவர்கள் என்ற குறிப்பையும் தருகிறார்.

தமிழ் வகுப்புகளில் மாணவர்கள் வகுப்பறையில் தங்கள் வருகைப் பதிவைஎஸ்சார்என்று கூறி வந்த நிலையை மாற்றிஉள்ளேன் ஐயாஎன்று கூற வைத்தவர் சி. இலக்குவனார். பின்னரே தமிழகம் முழுவதும் இம்முறை பின்பற்றப்பட்டது என்பதனையும் பதிவுசெய்கிறார்!

எழுத்தாளர் பிரபஞ்சன் குறித்துஇணையற்ற தோழமைஎன்ற கட்டுரையில்ஆயிரத்தோரு அராபிய இரவுகள் போல பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டே போகலாம் அத்தனை அனுபவங்கள் அத்தனையும் அவமானங்களும் புறக்கணிப்பும் ஏமாற்றமும் துயரமும் கொண்ட நினைவு….”என்று பிரபஞ்சனின் வாழ்வு குறித்து குறிப்பிடுகிறார் . இந்த கட்டுரையில் பிரபஞ்சன் மரணப்படுக்கையில் இருந்த பொழுது அவரை சந்தித்த நினைவுகளை மிக உருக்கமாக பதிவு செய்துள்ளார்.

எஸ். ராமகிருஷ்ணனின் தெளிவான பார்வைக்கும் ரசனைக்கும் சிலவற்றைக் குறிப்பிடுகிறேன்.

ஷங்கர் ராம சுப்பிரமணியனின்கல் முதலை ஆமைகள்கவிதை நூலினை முன்வைத்துப் பேசுகின்ற பொழுதுகாலை வெளிச்சத்தைப் போல தூய்மையும் பேரழகும் கொண்டதாக இருக்கின்றனஎன்கிறார்.

இக்கவிதைகளில்புத்தனும் முயலும் ஒன்றாகிறார்கள்“- “வெளிச்சமும் சொற்களும் ஒன்றாகின்றன.“ “பூனையும் சிறுமியும் ஒன்று போல நடந்து கொள்கிறார்கள்என்று குறிப்பிடுகிறார். இது கவிதையைப் பற்றிய இன்னொரு கவிதை!

போகன் கவிதைகள் குறித்த கட்டுரையில்போகன் கவிதைகள் அன்றாட உலகத்தோடு இணைந்து வாழ முடியாத, ஆனால் வாழ விரும்புகின்ற சந்தோஷத்திற்கும், தூக்கத்திற்கும் இடையில் ஊசலாடுகிற ஒரு மனிதனின் குரலை வெளிப்படுத்துகின்றனஎன்று குறிப்பிடுகிறார்!

இங்கே மற்றொன்றையும் குறிப்பிடுகிறார்கவிஞனுக்கு சொல்கதை எழுதுகிறவன் வாக்கியம்!

எஸ். வைத்தீஸ்வரனின் முழு கவிதைத் தொகுப்பானமனக்குருவியைமுன்வைத்துப் பேசுகின்ற பொழுது, எவரும் அகராதியில் தேடி அகிம்சையின் பொருளை அறிந்து கொள்ள முடியாதுஎன்றும் கலாப்பிரியா கவிதைகளைக் குறித்துப் பேசுகின்ற பொழுதுபுரிந்து கொள்ளப்படாத மனிதர்களே கலாப்பிரியா கவிதைகளின் மையம்என்று குறிப்பிடுகிறார்!

இவருடைய எளிய கவித்துவமான மொழி கட்டமைப்பிற்கு உதாரணமாகவீட்டிற்குள் இருந்து சில குரல்கள்என்ற அம்பை கதைகள் குறித்து பேசும் கட்டுரையைக் குறிப்பிடலாம்: இதில் ஒரு வாழைப் பூவை இதழ், இழாகப் பிரித்துப் பார்க்கின்ற இன்பத்தையும்; அப்போது ஏற்படுகின்ற வியப்பையும் பிரமிப்பையும் போல, இந்தக் கட்டுரையை ஒவ்வொரு முடிச்சாக அவிழ்ப்பது போல அவிழ்க்கிறார்.

அந்தக் கட்டுரை இப்படித் தொடங்குகிறது.

அம்பையின் கதை ஒன்றில் பன்றி பேசுகிறது. அதுவும் கறாரான தொனியில் மனிதர்கள் தங்களை குரூரமாகக் கொல்வதையும் விலங்குகளைக் கொண்டு நீதிக்கதைகள் சொல்லவைக்கும் அபத்தத்தையம் பற்றி பன்றி கண்டிப்புடன் பேசுகிறது!

அது ஒரு பெண் பன்றி. இருபது குட்டிகள் போட்ட பன்றி. சாக்கடையில் வசிக்கிறது.

பாரதியார் தனது சுய சரிதையில் அருந்தவப்பன்றி என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.

அது சாபத்தால் பன்றியாக மாறிய முனிவரின் கதை. முனிவன் ஒரு சாபத்தால் பன்றி வாழ்க்கையை வாழ்ந்து பார்த்து அதுவே மகிழ்ச்சியாக இருப்பதாக சொல்கிறான் அந்த வாழ்வை அருந்தவப்பன்றி என்று தன் வாழ்வோடு சுட்டிக்காட்டுகிறார் பாரதி.

என்று தொடங்கி, ஓல்ட் மேனேஜர் எனும் பன்றியைப் பற்றி ஜார்ஜ் ஆர்வல் தனது விலங்குப் பண்ணை நாவலில் குறிப்பிடுவதையும், “அவன் காட்டை வென்றான்என்ற தெலுங்கு நாவலில் பன்றி எவ்வளவு சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது என்பதையும்சலவான்என்ற தமிழ் நாவலில் பன்றி வளர்ப்பவர்கள் அதை எத்தனை செல்லமாக அழைக்கிறார்கள் என்பதையும் குறிப்பிட்டு, அப்படியே மெல்ல மெல்ல விரிந்து உலக இலக்கியங்களில் பன்றி எவ்வாறெல்லாம் இடம்பெறுகிறது என்பதைப் பற்றியும் சொல்லும் முறை நம்மை வியக்க வைக்கிறது!

இதேபோன்றுஎழுத்தாளர்களின் திருவல்லிக்கேணிஎன்று ஒரு கட்டுரை, அதில் திருவல்லிக்கேணியில் பண்பாட்டு அடையாளங்களை சுட்டிக் காட்டுவதோடு மகாகவி பாரதியார் .வே. சாமிநாத ஐயர், சி.சு. செல்லப்பா, கு. அழகிரிசாமி, ஞானக்கூத்தன் வை.மு.கோ., பிரபஞ்சன் என்று திருவல்லிக்கேணி வாசி எழுத்தாளர்களைப் பற்றிய ஒரு பட்டியலையும் தருகிறார்.

இக் கட்டுரையில் போகிறபோக்கில் அவர் பல தகவல்களைத் தருகிறார்.

திருவல்லிக்கேணி

மாலை ஆனதும் இந்த நூற்றாண்டிற்குப் பின்னோக்கிப் போய் விடுகிறது

பிரமச்சாரிகளின் சொர்க்கம்

திருவல்லிகேணியில் வசிப்பவர்களுக்கு முழுச் சென்னையும் தேவையில்லை

நிறைவான வாழ்க்கை

சேர்ந்து வாழும் இன்பம்!

– “பைக்கிராப்ட்ஸ் ரோடு ஆயிரம் கதைகள் கொண்டது

டிசம்பர்ஜனவரியில் திருவல்லிக்கேணி அழகானது. திருப்பாவை கேட்கலாம்!

நிறைய வயதானவர்கள் இருப்பார்கள்!

திருவல்லிக்கேணி மருத்துவர்கள் நாற்பது ஐம்பது வருடங்களாக அங்கேயே இருப்பவர்கள்!

நினைவில் பழைய திருவல்லிக்கேணி

அந்தக் கட்டுரை இப்படி முடிகிறது

ஞாபகத்தின் சிமிழ் திறந்துவிட்டால் வாசனை வெளிப்படாமலா போகும்?

கேரளாவில் தர்ஸக் கிராமத்திற்குச் செல்கிறார். அங்கு .வி. விஜயன் நினைவகத்தில் கசாக்கின் இதிகாசம் நாவலின் முக்கிய பாத்திரங்கள் சிற்பங்களாகவும் ஓவியங்களாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளன. இது எழுத்தாளனுக்கு மிகப் பெரிய கௌரவம்! என்பதைப் பதிவு செய்கிறார்.

எழுத்தாளனின் தீபாவளிஎன்று ஒரு கட்டுரை தமிழகத்தில் முக்கியமான பண்டிகைகள் எல்லாம் காலந்தோறும் எப்படிக் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. என்பதனை சுவையாகச் சொல்கிறார்.

தீபாவளி பண்டிகையின் போது, தொடக்க காலத்தில் ஆயத்த ஆடைகள் புழக்கத்திற்கு வராத காலத்தில் டெய்லர் கடையில் நாட்கணக்காக காத்து இருந்த தன் பால்ய கால நினைவுகளையும் அது ஏற்படுத்திய மன உணர்வுகளையும் விவரிக்கின்றார்.

பின்னர் சென்னையில் மேன்ஷன் வாழ்க்கையில் தீபாவளி நாளன்று பெரும்பாலான உணவகங்கள் மூடி விடுகின்ற சூழலில் அப்போது யாராவது நண்பர்கள் தங்கள் வீட்டிற்கு உணவுஉண்ண அழைக்க மாட்டார்களா? என்கின்ற ஏக்க உணர்வுகளையும் அவர் சித்தரிக்கின்றார்!

தற்போது பண்டிகை நாள் என்பது விருந்து உண்பதுகுடிப்பதுசினிமாவுக்குச் செல்வது என்று வழக்கமாகிவிட்ட நிலையில் தான் அதில் இருந்து மாறுபட்டு அன்றைய தினம் குறைந்தது ஒரு பத்து கவிதைகளையாவது வாசிப்பது, நல்ல இசையைக் கேட்பது என்பதை வழக்கமாக கொண்டிருப்பதாக குறிப்பிடுகிறார்.

இந்தத் தொகுப்பில் இன்னொரு கட்டுரைஆசீர்வதிக்கப்பட்ட நாள்எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகடமி விருது வழங்கியதை ஒட்டி அவருடைய மல்லாங்கிணறு கிராமத்தில் ஊர்கூடி நிகழ்த்திய பாராட்டு விழா பற்றியது! அன்றைய தினம் ஊர் மக்கள் அனைவருமே ஒன்றாகச் சேர்ந்து விருந்து உண்டு மகிழ்ந்ததையும் முகம் தெரியாத பலரும் கூட அவரை நேரில் வந்து வாழ்த்தி யதையும் பற்றி மிக மகிழ்வோடு குறிப்பிடுகிறார்.

ஒரு எழுத்தாளனுக்கு கிடைக்கக்கூடிய உச்சபட்சமான அங்கீகாரமாக இதை நாம் கொள்ளலாம் அந்த நிகழ்வையும் மகிழ்வையும் , அவர், அவருடைய வார்தைகளில் சொல்லியிருப்பது நெகிழ்வாக இருக்கிறது.

இப்படியாக இந்தத் தொகுப்பில் உள்ள அனைத்துக் கட்டுரைகளும் சமகால வாழ்வையும், சக படைப்பாளிகள் பற்றியும் தன்னைக் கவர்ந்த படைப்பாளிகளைப் பற்றியும் அவர்களுடைய பண்புகளைப் பற்றியும் அவர்களுடனான சந்திப்பு குறித்தும் சில தருணங்களைப் பற்றியும் மிக துல்லியமாக விவரித்து கூறியிருக்கின்றார்.

சொற்களின் புதிர் பாதைஎளிய மொழியில் கவித்துவமாக விரிந்து செல்கிறது. அது காட்டுகின்ற உலகும், மனிதர்களும் மனதிற்கு இதமாக இருக்கிறது.

***

சொற்களின் புதிர் பாதை/ தேசாந்திரி பதிப்பகம்/சென்னை/044/23644947

**

நன்றி :

பாரதிபாலன்

0Shares
0