பஞ்ச கல்யாணி என்றொரு படம் 1979ல் வெளியாகி வசூலை அள்ளி குவித்தது. படம் ஒடிய நாட்களில் அதில் நடித்த கழுதையைத் தியேட்டர் தியேட்டராக அழைத்துக் கொண்டு போய்க் காட்டிக் கொண்டாடினார்கள்.அக்கழுதையைப் பார்ப்பதற்கு ஏராளமான மக்கள் கூட்டம், தள்ளுமுள்ளு. நிறையப் பேர் அதனோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.அதன்பிறகு அக்கழுதை வேறு திரைப்படங்களில் நடிக்கவுமில்லை, யாரும் அதைக் கண்டுகொள்ளவும் இல்லை. என்ன ஆகியிருக்கும் அதன் வாழ்க்கை.
ஆட்டுக்கார அலமேலுவில் நடித்த ஆடு தன் நட்சத்திர அந்தஸ்தை என்ன செய்திருக்கும். அந்த ஆடு ஒரு அம்பாசிடர் காரில் பயணம் செய்து ஊர் ஊராகப்போய்க் கொண்டிருந்தது. இப்படி ஒரு நட்சத்திர வாழ்க்கை வாழ்ந்த ஆட்டின் முடிவு எப்படி இருந்திருக்கும்.அந்த ஆட்டின் வம்சாவழிகள் மீண்டும் திரைத்துறைக்குள் நுழைய முயற்சி செய்திருப்பார்களா.
குரங்கு,பாம்பு, யானை, புலி, குதிரை. ஆடு, நாய் கழுதை சேவல் எனச் சினிமாவில் பிரபலமான நட்சத்திர விலங்குகள் பற்றி யாராவது ஏதாவது எழுதியிருப்பார்களா எனத்தேடிக் கொண்டிருந்தேன், எதுவும் வாசிக்க கிடைக்கவில்லை.
ஆனால் KINSHIP WITH ALL LIFE என்றொரு நாவலை கவிஞர் தேவதச்சன் வாசிக்கும்படியாக சிபாரிசு செய்தார். நீண்ட காலத்தின் பிறகு வாய்விட்டுச் சிரித்துப் படித்த நாவலிது.
ஜே. ஆலன் பூன் (J. Allen Boone) எழுதிய இந்நாவல் ஹாலிவுட் சினிமாவில் புகழ்பெற்ற நட்சத்திரமாகிய ஸ்ட்ராங்ஹார்ட் என்ற நாயின் கதையை விவரிக்கிறது. ஜேன் என்ற எழுத்தாளரும் லேரி என்ற இயக்குனரும் ஒன்றிணைந்து இதுவரை ஹாலிவுட் சினிமாவில் யாரும் முயற்சி செய்யாதபடி ஒரு நாயை முக்கியக் கதாபாத்திரமாக வைத்துப் படமெடுக்க விரும்புகிறார்கள்.
இதற்காக நாடு முழுவதும் நடிப்பதற்கு ஏற்ற நாய்வேட்டை நடக்கிறது, அதில் தகுதியும் திறமையும் பெருமைக்குரிய வம்சாவழியும் கொண்டிருந்த ஸ்ட்ராங்ஹார்ட் தேர்வு பெறுகிறது.இந்த நாயை ஒரு கூண்டில் அடைத்து ரயிலில் ஹாலிவுட் அனுப்பி வைக்கிறார்கள்.
ஸ்ட்ராங்ஹார்ட் வந்து இறங்கிய போது அதை வரவேற்க பத்திரிக்கையாளர்கள் இல்லை, புகைப்படக்கலைஞர்கள் எவருமில்லை.புதுமுகம் இல்லையா.
அடுத்த ஆண்டிற்குள் அந்த நாய் சினிமாவின் மூலம் உலகப்புகழ் பெறுகிறது.அதன்பிறகு அதற்கெனத் தனியே ரிசர்வ் செய்த ரயில்பெட்டியில் உதவியாளர்கள், மேனேஜர் சகிதமாக அந்த நாய் பயணம் செய்ய ஆரம்பிக்கிறது.
நாடு முழுவதும் அதற்கு ரசிகர்கள் உருவாகிறார்கள், தான் நடித்த படங்கள் ஒடுகின்ற தியேட்டர்களுக்கு அந்நாய் விஜயம் செய்து பாராட்டு மழையில் நனைகிறது, ரயில் நிலையத்தில் அதைப்பார்ப்பதற்கு ஏகப்பட்ட கூட்டம். போட்டோ எடுக்கப்போட்டி. ஆட்டோகிராப் மட்டும் தான் போடவில்லை
ஸ்ட்ராங்ஹார்ட் நடித்துப் படம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அதற்குப் பொருத்தமான ரோல் கொண்ட கதைகள் தயாரிக்கபடுகின்றன, ஒவ்வொரு புதுப்படம் வெளியாகும் போதும் அதன் ரசிகர்கள் பரவசப்பட்டுக் கொண்டாடுகிறார்கள்.
ஆனால் இவ்வளவு புகழிற்குப் பிறகும் ஸ்ட்ராங்ஹார்ட் தன்னை ஒரு சாதாரண நாய் , தான் செய்வது ஒரு வேலை என்றே மனதிற்குள் எண்ணிக் கொண்டு வருகிறது
ஸ்ட்ராங்ஹார்ட் புகழ்பெறத்துவங்கியதால் அதன் கால்ஷீட் மற்றும் பயணங்களைக் கவனித்துக் கொள்வது ஜேனின் முக்கியப் பணியாக மாறுகிறது. ஜேனிற்கு திடீரென ஒருநாள் அவசர வேலை வந்துவிடவே ஸ்ட்ராங்ஹார்ட்டைத் தற்காலிகமாகக் கவனித்துக்கொள்ள சரியான ஒரு ஆள் தேவைப்படுகிறது. இதற்காக ஒருவரைக் கண்டுபிடிக்கிறார்கள், அவர் தான் இக்கதையைச் சொல்பவர்.
ஜேன் திரும்பிவரும்வரை அந்த நட்சத்திர நாயை பாதுகாப்பாகவும், அக்கறையோடும் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கபடுகிறது.
ஸ்ட்ராங்ஹார்ட் மற்ற நாய்களைப் போலின்றி மனிதர்களின் சகல உணர்ச்சிகளையும் புரிந்து கொள்வதுடன் அதற்கு ஏற்ப நடந்து கொள்ளக்கூடியது என்பதைப் புரிந்து கொள்கிறான் ஆலன். அவனுக்கு அதற்கு முன்பாக நாய்களுடன் பழக்கம் கிடையாது, அவன் நாய் வளர்த்தவனுமில்லை.
தன்னிடம் ஒப்படைக்கபட்ட நாயை அழைத்துக் கொண்டு ஹாலிவுட்டில் உள்ள தனது எளிய வீட்டிற்குச் செல்கிறான் ஆலன். கதவைத்திறந்து உள்ளே நுழைவதற்கு முன்பாக அவனை முந்திக் கொண்டு நாய் அது தன்னுடைய வீடு என்பது போலக் கம்பீரமாக நடந்து உள்ளே போகிறது. நட்சத்திர நாய் இல்லையா.
அந்த வீட்டின் ஒவ்வொரு அறையையும் அது கவனமாக முகர்ந்து பார்க்கிறது, ஜன்னல்கள், கதவுகளை துல்லியமாக ஆராய்ந்த பிறகு தனக்குத் திருப்தி என்பது போல அருகில்வந்து நின்று ஆலனை பார்த்து தலையாட்டுகிறது, புத்திசாலியான ஒரு விலங்கின் முன்னே ஒரு முட்டாள் மனிதனை போலத் தான் நிற்பதாக உணர்ந்தான் ஆலன்
இரவு உறங்கும் நேரமான போது ஸ்ட்ராங்ஹார்ட் எங்கே படுக்க வைப்பது என்ற பிரச்சனை எழுகிறது. உலகமே கொண்டாடும் ஒரு பிரபல நட்சத்திரத்தை எப்படித் தரையில் படுக்கச் சொல்வது, கடையில் அவனது படுக்கையில் கூடப் படுக்க வைத்துக் கொள்வது என முடிவு செய்து கொள்கிறான்.
நள்ளிரவில் ஸ்ட்ராங்ஹார்ட் திடீரென உஷார் ஆனது போலப் படுக்கையில் இருந்து தாவி அடுத்த அறைக்குள் போகிறது. தாவிய வேகத்தில் படுக்கையிலிருந்து ஆலன் உருண்டு கிழே விழுகிறான், ஆனால் வெளியே ஒன்றும் நடக்கவில்லை என்பது போலத் திரும்ப வந்து படுத்துக் கொள்கிறது ஸ்ட்ராங்ஹார்ட்.
இப்படிச் சிறு சப்தத்திற்குக் கூடத் தாவியோடி அவனைப் படுக்கையிலிருந்து உருட்டிவிட்டபடியே இருக்கிறது ஸ்ட்ராங்ஹார்ட், தாங்க முடியாத தருணத்தில் ஆலன் ஸ்ட்ராங்ஹார்ட்டிடம் தான் தூங்க வேண்டுமென மன்றாடுகிறான். அப்போது தனது புத்திசாலித்தனத்தைக் கொண்டு ஒரு நாயை புரிந்து கொள்ளமுடியாது எனத் தெள்ளத்தெளிவாக அவனுக்குப் புரிகிறது
ஒரு நட்சத்திர நாயிற்கு உதவியாளராக இருப்பது எளிதானதில்லை , அதன் ரசிகர்கள் ஸ்ட்ராங்ஹார்ட் விளையாடுவதற்காக நிறையப் பொம்மைகள் அனுப்பி வைத்திருக்கிறார்கள், ஆனால் அதை வைத்துப் விளையாடுகிற பொறுமை ஸ்ட்ராங்ஹார்ட்டிடமில்லை.
அதே நேரம் ஆலன் வீட்டினை சுத்தம் செய்வது, காரை துடைப்பது போன்ற வேலைகளில் ஈடுபடும் போது தானும் ஆர்வமாக உதவி செய்ய முயல்கிறது ஸ்ட்ராங்ஹார்ட். என்ன நாயிது, ஏன் இப்படி நடந்து கொள்கிறது எனப்புரியவேயில்லை.
வாழும் ஒவ்வொரு நிமிஷத்தையும் அனுபவித்துக் கொண்டாட வேண்டும் என்ற வாழ்வியல் கலையைத் கற்றுத் தேர்ந்த விலங்கு போல அது ஒவ்வொரு நிமிசத்தையும் முழுமையாக அனுபவிக்கிறது . இதனிடையில் தனது நடிப்பை வளர்த்துக் கொள்ள அடிக்கடி நடித்துப் பார்த்துக் கொள்கிறது. நடனம் ஆடுகிறது
ஒரு நாள் இப்படி வீட்டிலே அடைந்து கிடப்பதை விடவும் வெளியே போனால் என்னவென்று ஆலனுக்குத் தோன்றிய மறுநிமிசம் ஸ்ட்ராங்ஹார்ட் வெளியே புறப்படத்தயாராகி நிற்கிறது, அதற்கு எப்படித் தனது மனது புரிந்த்து, அதற்கு ஒருவேளை மைண்ட் ரீடிங் தெரியுமா, ஆலனுக்கு வியப்பாக இருக்கிறது, இதுவரை அவன் படித்த எந்த நூலிலும் நாயின் நுண்ணறிவு பற்றி யாரும் எழுதியிருக்கவில்லை.
இன்னொரு நாள் ஒரு வழக்கறிஞரை சந்திக்கச் சென்ற போது ஸ்ட்ராங்ஹார்ட்டை உடன் அழைத்துப் போகிறான், ஒரு நட்சத்திரம் தன்னைத் தேடி வந்துள்ளதை நினைத்து வழக்கறிஞர் பெருமைப்படுகிறார். ஆனால் நாயிற்கு அந்தச் சூழல் பிடிக்கவில்லை, எதிர்பாராமல் உரத்துக் குலைத்து தனது எதிர்ப்பை தெரிவிக்கத் துவங்குகிறது. ஆலன் அதற்காக மன்னிப்பு கேட்டுச் சமாதானம் சொல்ல வேண்டிய நெருக்கடி உருவாகிறது
மௌன உரையாடலின் வழியே ஸ்ட்ராங்ஹார்ட் உடன் நெருங்கிய நட்பு கொள்கிறான் ஆலன். விலங்குகளுடன் பேசத் தெரிந்த டான் என்பவரைத் தேடி நாயை அழைத்துக் கொண்டு போகிறான், அவராலும் ஸ்ட்ராங்ஹார்ட்டை புரிந்து கொள்ளமுடியவில்லை, முடிவில் அதனிடமே நேரடியாகக் கேட்டு புரிந்து கொண்டுவிட வேண்டியது என முடிவு செய்து ஒரு நேர்காணல் செய்கிறான்
நாய்கள் ஏன் மனிதர்களுடன் பழக விரும்புகின்றன , அதன் இயல்பு எப்படி பட்டது, மனிதர்கள் அதனிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என நிறையக் கேள்விகள் கேட்கிறான் ஆலன்,
நாய் பதில் சொல்லவில்லை, மௌனமாக அவனைப் பார்த்துக் கொண்டு மட்டுமே இருக்கிறது, முடிவில் அதன் நடத்தையில் இருந்து நாமாக கற்றுக் கொள்வதே சரியான வழி எனப்புரிந்து கொள்கிறான் ஆலன், அதன்பிறகான நாட்களில் அந் நாய், ஒரு ஆசிரியரைப் போல அவனை வழிநடத்த ஆரம்பிக்கிறது.
நாய்களைப் பற்றி எவ்வளவு தவறான புரிதல்கள் நமக்குள் இருக்கின்றன என்பதை அவன் கொஞ்சம் கொஞ்சமாக உணர ஆரம்பிக்கிறான். ஸ்ட்ராங்ஹார்ட் வழியாக தான் ரகசிய ஞானத்தைப் பெறுவதாக உணருகிறான், தன்னுடைய ஈகோவை விலக்கிவிட்டு ஸ்ட்ராங்ஹார்ட் உடன் தன்னை முழுமையாகப் பிணைத்துக் கொள்கிறான், அப்போது நாய்கள் தங்களுக்கென தனியுலகில் வாழ்கின்றன என்ற உண்மை அவனுக்குப் புரிகிறது.
மனிதன், நாய் என்பது குறித்து மனம் உருவாக்கி வைத்துள்ள பிம்பம் வெறும் எண்ணங்களே என்று புரிகிறது. ஒவ்வொரு செயலையும் கவனத்துடனும், முழு ஈடுபாட்டுடனும் செய்ய வேண்டிய அவசியத்தை ஸ்ட்ராங்ஹார்ட் உணர்த்துகிறது. பேச்சற்ற இந்த உரையாடல்களின் வழியே அவன் நாயின் இயல்பைப் புரிந்து கொள்கிறான்.
ஒரு நாயைப் பயிற்சி கொடுத்து மாற்றுவதற்கும், கற்றுக் கொடுத்து புரியவைத்து மாற்றுவதற்கும் வேறுபாடியிருக்கிறது தனது சுயலாபங்களுக்காக நாயைப் பழக்குகிற ஒருவனுக்கு இந்த வேறுபாடு புரியாது என்கிறான் ஆலன்,
அதாவது WELL-EDUCATED DOG ஒன்றை உருவாக்குவது எளிதானதில்லை
நாய்களைப் புரிந்து கொள்வதற்கு GENUINE INTEREST ,RESPECT, APPRECIATION. ADMIRATION, AFFECTION போன்றவை அவசியமானவை எனக்கூறுகிறான்
ஸ்ட்ராங்ஹார்ட் மூலமாக உயிர்களிடத்தே அன்பு செலுத்துவதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்கிறான், அது மகத்தான வாழ்வியல் பாடமாக உருமாறுகிறது. Freddie the Fly என்ற ஈயுடன் அவன் உருவாக்கிக் கொள்ளும் உறவும் அதன் வழியே விரியும் சாத்தியங்களும் வாசகனுக்குள் புதிய புரிதல்களை உருவாக்குகின்றன
நகைச்சுவையாகத் துவங்கி மெல்லத் தீவிரமான தளத்தில் உயிர்களிடம் காட்ட வேண்டிய பரிவையும் அகவிழிப்புணர்வையும் குறித்துப்பேசும் முக்கிய நூலாகிறது. எளிமையான மொழியில் நேரடியாக கதை சொல்லிப்போகும் ஆலன், விலங்குகளின் வழியே மனித இயல்பை, விலங்குகள் குறித்த தவறான புரிதல்களை, சகல உயிர்களிடத்தும் அன்பு செலுத்தவேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டுகிறார்
அந்த வகையில் இந்நாவல் ரிச்சர்ட் பாக் (Richard Bach) எழுதிய ஜோனதன் லிவிங்ஸ்டன் சீகல் நாவலின் வரிசையில் இடம் பெறும் இன்னொரு முக்கியப் படைப்பு என்றே சொல்வேன்
••