வாளும் மலரும்.

2021 ஆகஸ்ட் காலச்சுவடு இதழில் வெளியான எனது குறுங்கதை

சீனாவின் குயிங் வம்ச ஆட்சிக்காலத்தில் இது நடந்தது என்கிறார்கள். யுவான் ஷு என்ற அரசன் கவிதையிலும் இசையிலும் தன்னை மறந்திருந்தான். ஒரு நாள் லின் டேயு என்ற பெண் கவிஞர் அவனைத் தேடி வந்தாள். பேரழகியான அவளிடம் உன் கவிதைகளின் சிறப்பு என்னவென யுவான் ஷு கேட்டான். என் கவிதை மாயங்கள் செய்யக்கூடியது. அது உடைவாளை ஒரு மலராக மாற்றிவிடும் என்றாள். அவனால் நம்பமுடியவில்லை. அவள் ஒரு கவிதை சொன்னாள். மறுநிமிடம் அரசனின் உடைவாள் ஒரு மலராக மாறியது. ஒரு மலரைக் கையில் வைத்துக் கொண்டு எப்படிச் சண்டையிட முடியும் என்று புன்னகையுடன் கேட்டான் யுவான் ஷு. வாளால் வெல்லமுடியாததை மலரால் வெல்லமுடியும் என்றாள் லின் டேயு.

பேரழகியான அவளின் அழகிலும் கவிதையிலும் மயங்கி யுவான் அவளைக் காதலிக்கத் துவங்கினான். அவளது கவிதைகளைத் தேசமெங்கும் பாடும்படியாகக் கட்டளையிட்டான். தேசத்திலிருந்த வாள் குறுங்கத்திகள், ஈட்டிகள் யாவும் மலர்களாக உருமாறி விட்டன. உடைவாளுக்குப் பதிலாக மலர்களை ஏந்திவந்தார்கள் போர் வீரர்கள். அந்தத் தேசத்தில் போரே இல்லாமல் போனது.

லின் டேயுவின் மீது பொறாமையும் வெறுப்பும் கொண்ட மகாராணி அவளைக் கொல்வதற்காக உணவில் விஷம் கலந்தாள். ஆனால் அந்த உணவை லின் டேயு சாப்பிடவில்லை. உண்மை கண்டறியப்பட்டு மகாராணி தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டாள். அவளது சகோதரன் ஜியா சிச்சுன் பழிவாங்குவதற்காக லின்டே யு ரகசியமாக ஒருவனைக் காதலிக்கிறாள் என யுவான் ஷுவை நம்ப வைக்க ஏற்பாடுகள் செய்தான். அதன் படி லின்டேயின் அறையில் ஆணின் உடைகளை ஒளித்து வைத்தான். அதைக் கண்டுபிடித்த யுவான் மனதில். சந்தேகத்தின் துளி விழுந்தது. அதன் பிறகு யுவான் அவள் கவிதைகளுக்கு வேறு பொருள் கொள்ள ஆரம்பித்தான். அவளைக் கண்காணிக்க ஆட்களை ஏற்பாடு செய்தான்.

தனது பிறந்த நாளை முன்னிட்டு லின் டேயு தனது உடலில் புதிதாக மீனின் உருவத்தைப் பச்சை குத்திக் கொண்டாள். அது துரோகத்தின் அடையாளம் எனக் கருதிய யுவான் தன் கையாலே அவளது கழுத்தை நெறித்துக் கொல்ல முயன்றான். சாவதற்கு முன்பு லின் டேயு ஒரு கவிதை சொன்னாள். மறுநிமிடம் அந்தத் தேசத்திலிருந்த எல்லா மலர்களும் ஆயுதங்களாக உருமாறின. கையில் கிடைத்த வாள். கட்டாரி, குறுங்கத்திகளைக் கொண்டு மக்கள் ஒருவரோடு ஒருவர் தாக்கி சண்டையிட்டு மடிந்தார்கள். யாரோ வீசி எறிந்த ஒரு மலர் குறுங்கத்தியாகி யுவான் ஷுவும் இறந்து போனான்

அதன்பிறகு லின் டேயுவின் கவிதைகளை யாரும் பாடக்கூடாது என்று அரசாங்கம் தடைவிதித்தது. சில ஆண்டுகளில் அந்தக் கவிதைகள் மக்கள் நினைவிலிருந்தும் மறைந்து போனது.

***

0Shares
0