புதிய ரூ.2,000 நோட்டில் மங்கள்யான் படம் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இந்திய விண்வெளி சரித்திரத்தில் மங்கள்யானுக்கு தனியிடம் உண்டு. மங்கள்யான் என்பது செவ்வாய் கோளுக்கு இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் செலுத்தப்பட்ட ஆளில்லாத விண்கலம் ஆகும்.
இவ்விண்கலம் 2014 செப்டம்பர் 24 அன்று செவ்வாய்க் கோளின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக இணைந்தது. இதன் வழியே, முதல் முயற்சியிலேயே செவ்வாய்க்குச் செயற்கைக் கோள் ஒன்றை வெற்றிகரமாக அனுப்பிய முதலாவது நாடு என்ற பெருமை இந்தியாவிற்குக் கிடைத்தது.
மங்கள்யானை வடிவமைத்து, தயாரிக்க இந்தியா விஞ்ஞானிகள் எடுத்துக் கொண்ட கால அவகாசம் இரண்டு வருடங்கள் மட்டுமே.
இஸ்ரோவின் செயற்கைக்கோள் ஏவும் திட்டத்தில் பெண் விஞ்ஞானிகள் பலரும் பணிபுரிந்தனர் அவர்களின் பங்களிப்பு இந்த வெற்றியில் குறிப்பிடத்தக்கது.
Hidden Figures (2016) என்ற அமெரிக்கத் திரைப்படமும் பெண் விஞ்ஞானிகளின் கதையைத் தான் பேசுகிறது.
இனவெறி மற்றும் பெண் என்ற அடையாளத்தால் ஒதுக்கப்பட்ட மூன்று கறுப்பின பெண்கள் எவ்வாறு விண்வெளித்துறையில் சாதனை செய்தார்கள் என்பதையே இப்படம் விளக்குகிறது
கேத்ரீன் ஜான்சன் , டோரதி வாகன். மற்றும் மேரி ஜாக்சன் என்ற மூன்று பெண்களின் கதையே இப்படம்.
1961ல் கதை நடக்கிறது. சோவியத்தைச் சோர்ந்த யூரி ககரின் வெற்றிகரமாக விண்வெளிக்குச் சென்று வந்த காரணத்தால் அமெரிக்கா உடனடியாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப முயன்றது. இதற்கான சிறப்புத் திட்டம் ஒன்று உருவாக்கபட்டது. .
விண்வெளி ஆய்வின் பொறுப்பாளரான விவியன் மிட்சல், கேதரின் என்ற இளம்பெண்ணை Al Harrison’s Space Task Groupல் முக்கிய உறுப்பினராக இணையச் செய்கிறார். காரணம் analytic geometryல் உள்ள அவளது அறிவாற்றல். . குழுவில் இணைந்த முதல் கறுப்பினப் பெண்ணாகயிருக்கிறாள். இனவேறுபாடு காரணமாக அவள் மிக மோசமாக நடத்தப்படுகிறாள்.
கேதரின் கணித்த்தில் சிறந்தவள். அவளும் இனவெறிக் காரணமாக ஒதுக்கப்படுகிறாள். கேதரின் ஒரு காட்சியில் கறுப்பின பெண்கள் பயன்படுத்தும் கழிப்பறை தேடி ஓடும் காட்சி மனதைத் தொடுகிறது. காபி மெஷினில் இருந்து அவள் காபி பெறுவது தடைசெய்யப்படுகிறது. சக ஊழியர்கள் அவளை மிக மோசமாக நடத்துகிறார்கள்
கேதரின் உயர்படிப்பு படிக்க இடம் மறுக்கப்படுகிறது. நீதிமன்றதை நாடி முறையிடுகிறாள். பகுதி நேரக் கல்லூரியில் படிக்க இடம் கிடைக்கிறது. குடும்பம் பிள்ளைகள் என ஒரு பக்கம் வீட்டின் சுமை அவளை அழுத்துகிறது. அதைத் தாண்டி அவளது கணித மேதமை அவளை உயர்வடையச் செய்கிறது.
இது போலவே டோரதி என்ற கறுப்பினப் பெண் IBM 7090 electronic computer முதன்முறையாக நிறுவப்படும் போது அதை வியந்து பார்க்கிறாள். அந்த அறைக்குள் போவதற்கு அவளுக்கு அனுமதியில்லை. அந்தக் கணிப்பொறி எப்படிச் செயல்படுகிறது என்பதை அவளாகக் கற்றுக் கொள்கிறாள். இதற்காகப் புத்தகங்களைத் திருடிப் படிக்கிறாள் பல்வேறு விதமான போராட்டங்களின் முடிவில் அவளும் விண்வெளி ஆராய்ச்சி குழுவில் இடம்பெறுகிறாள்.
அமெரிக்காவின் விண்வெளி வெற்றிக்கு இந்த மூன்று பெண்களும் எவ்வாறு பங்களித்தார்கள் என்பதை மிகச் சுவாரஸ்யமாகப் படம் விவரிக்கிறது.
உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட Margot Lee Shetterly நூலை மையமாக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
1961 இல் நாசா லாங்லி ஆராய்ச்சி மையம் துவங்கியது. வெஸ்ட் ஏரியா கம்ப்யூட்டிங் பிரிவில் பணியாற்ற தேர்வு செய்யப்பட்ட பெண் கணிதவியலாளர்களில் கறுப்பினத்தை சேர்ந்தவர்கள் தனிப்பிரிவாக அமர்த்தபடுகிறார்கள். அவர்களுக்கான சாப்பாடு மேஜை. கழிப்பறை போன்றவை தனித்தே இருந்தன. வெள்ளையர்களின் கழிப்பறையை அவர்கள் ஒரு போதும் பயன்படுத்தக்கூடாது என்ற கட்டுபாடு இருந்தது. மிக மோசமான இனவெறியை தாண்டி அவர்கள் எவ்வாறு சாதித்தார்கள் என்பதையே இப்படம் பிரதிபலிக்கிறது
படம் முழுவதும் குடும்பச்சுமைகளை மீறி மூன்று பெண்களும் தங்களின் திறமையை உலகறியச் செய்யப் போராடுகிறார்கள். முடிவில் அவர்கள் வெற்றியடையும் போது நம் சகோதரிகள் அடைந்த வெற்றியைப் போல உணருகிறோம்.
நம் காலம் விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பும் அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்த காலமாகவுள்ளது. ஆனால் பெண்களை நடத்தும் விதத்திலோ அது கற்கால உலகைப் போலவே இருக்கிறது. இந்த முரண்களை தான் படம் சுட்டிக்காட்டுகிறது
••