திருப்பூரிலுள்ள காது கேளாதவர்களுக்கான சிறப்புப் பள்ளிக்குச் சென்றிருந்தேன். தன்னார்வ அமைப்பு நடத்தும் இதில் முந்நூறு மாணவர்களுக்கும் மேலாகப் படிக்கிறார்கள்.
காலையில் சிறார்பள்ளிக்குச் சென்றிருந்தேன், அங்கிருந்த மாணவர்களுடன் கதை சொல்லிப் பேசி மகிழ்ந்தது சந்தோஷம் தருவதாக அமைந்தது. அன்று மாலை கோதபாளையம் கிராமத்திலுள்ள பள்ளி வளாகத்தில் எனது நிமித்தம் நாவலுக்கான விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
பள்ளி நிறுவனர் முருகசாமி இப்பரிசை வழங்கினார், அவரை ஒட்டு மொத்த பள்ளியும் அப்பா என்றே அழைக்கிறார்கள், அவரும் காதுகேளாதவர். தன்னுடைய இடைவிடாத முயற்சியால் இப்பள்ளியை சிறப்பாக நடத்திவருகிறார். பரிசளிப்பு விழாவில் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்
காது கேளாதோர் பள்ளியில் தியோ இன்ஸ்டியூட் என்ற பெயரில் ஒரு ஆண்டுப் புகைப்படக்கலை கற்றுதரும் மையம் ஒன்று இயங்குகிறது. இதனை Goa Center for Alternative Photography (Goa-CAP) யோடு ஒருங்கிணைந்து நடத்துபவர் புகைப்படக்கலைஞர் குமரன்
தியோ புகைப்படப்பள்ளி மாணவர்கள் ஐந்துபேர் எடுத்த புகைப்படங்களைக் கண்டேன், அற்புதமாக எடுத்திருக்கிறார்கள், அவை காங்கேயத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டவை. கோவையில் தற்போது அந்தப் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றுவருகிறது. தற்போது மூன்று மாணவிகள் முழுநேரமாகப் புகைப்படக்கலை கற்றுவருகிறார்கள்.
விருதுவழங்கும் விழாவை முன்னிட்டு மாணவர்கள் நிகழ்த்திய கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக அமைந்திருந்தன. குறிப்பாகத் தரணீதரன் இயக்கத்தில் மாணவர்கள் சிலப்பதிகாரத்தின் பாயிரத்தை சைகை மொழியில் நடித்துக்காட்டியது புதியதொரு அனுபவமாக இருந்தது. அது போலவே மாணவர்களாக நடித்த ஏலியனின் வருகையும் வேடிக்கையாக அமைந்திருந்தது
காது கேளாதோர் பள்ளியில் நான் கண்ட முதல்அம்சம், அவர்களின் காணப்படும் இடைவிடாத உற்சாகம், சோர்ந்து போன ஒரு மாணவனைக் கூடக் காணமுடியவில்லை. படித்து முடித்து என்ன ஆகப்போகிறீர்கள் எனப் பலரிடம் கேட்டபோது டீச்சர் ஆகப்போகிறோம் என்று தான் சொல்கிறார்கள்
நிகழ்த்துகலைகளில் அவர்களுக்கு உள்ள பெரு விருப்பம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது, குறிப்பாக நடனம், இசை, ஒவியம், நாடகம் விளையாட்டு என மாணவர்கள் மாநில அளவில் பல பரிசுகளைப் பெற்றிருக்கிறார்கள்
மாநில பாடத்திட்டத்தின் படியே தான் கல்வி பயிலுகிறார்கள். ஆங்கிலம் மட்டும் கிடையாது, அதைத் தனியே விருப்பமானவர்கள் கற்றுக் கொள்ள வசதி செய்திருக்கிறார்கள். பள்ளி நூலகத்தைப் பார்வையிட்டேன். பெரிதும் ஆரம்ப நிலையிலுள்ள புத்தகங்கள், நல்ல புத்தகங்கள் நிறையத் தேவை, விரும்புகிறவர்கள் வாங்கிப் பரிசளிக்கலாம் என்றார் பள்ளி முதல்வர்
இது போலவே கம்ப்யூட்டர், விஞ்ஞான உபகரணங்கள், கேமிரா, விளையாட்டுப் பொருட்கள் என அவர்களின் தேவை நிறைய உள்ளது, நிதியுள்ளவர்களின் ஆதரவுக்கரம் அவசியமானது.
விருதை ஏற்றுக் கொண்டு நன்றி தெரிவித்துப் பேசினேன்.
அப்போது காது கேளாதவர் பிரச்சனையைப் பற்றி எழுதிய நிமித்தம் நாவலுக்கு அவர்களே விருதளித்துக் கௌரவித்தது எனக்கு மிகவும் சந்தோஷம் தருகிறது, அந்த வகையில் இந்த விருது எனக்கு மிகவும் முக்கியமானது என்று தெரிவித்தேன்.
அன்றைய நிகழ்வில் நண்பர்கள் திருப்பூர் குமாரசாமி, ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். நிகழ்வினைச் சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்த நண்பர் குமரனுக்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகள்
••