சொல்வனம் இதழில் வ. அதியமான் எழுதும் கவிதைகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். சிறப்பான கவிதைகள். தனக்கான கவிதை மொழியினையும் குரலையும் கொண்டுள்ள இளங்கவிஞராக இருக்கிறார் அதியமான். இதுவரை அவரது கவிதைத் தொகுப்பு எதுவும் வெளியாகவில்லை என்று நினைக்கிறேன். இந்தக் கவிதைகளின் வழியே அவர் உருவாக்கும் சித்திரங்கள் எளிமையும் அழகும் கொண்டவை. மரபும் நவீனமும் இணைந்த கவிமொழியைக் கையாளுகிறார். ஒளியும் இருளும் கலந்த இந்தக் கவிதைகள் நெருக்கடிக்குள்ளும் வாழ்வின் இனிமையைப் பேசுகின்றன. ஜென் கவிதைகளில் அடையும் உணர்வுகளின் இன்னொரு நிலையைப் போலவே இந்தக் கவிதைகளை உணருகிறேன். அதியமானுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்.

••
ஒளிவிடும்
சின்னஞ்சிறு
கூழாங்கல்லும்
இருள் விழுங்கும்
பெருங்குன்றும்
குளிரக் குளிர
புனலாடி
அமர்ந்திருப்பது
ஒரே கரையில் தான்
••
ஒவ்வொரு
அதிகாலையிலும்
அதிசுத்தமாய்
கழுவி முடிக்கும்
என் கப்பரைக்கு
ஒவ்வொரு
அதிகாலையிலும்
எங்கோ ஓர் உலை
கொதிக்கிறது
••
முன்னமே
பிரிந்து சென்ற ஆடுகள்
குரல் கொடுப்பதும்
இல்லை
சொல் எடுப்பதும்
இல்லை
அவை மீளா பாதைகள்
என்பதறிவேன்

••
கடுந்துறவு
எதையும்
கடுகளவும்
இழப்பதில்லை
அந்தக் கிளைகள்
உலர உலர
அத்தனையும்
உதிர்க்கிறது
அவ்வளவு தான்
நுனி நாக்கு கூசும்
புளித்த காய்களை
அடி நாக்கு
இனிக்க இனிக்க
கனியாக்கி தருவது
எவனுடைய எச்சில்?
எந்தக் கவலையும்
இல்லை அதற்கு
பூத்து
காய்த்து
கனிந்து
காம்புதிர்த்தால் தான்
என்ன?
ஒரு கணமும்
ஓய்வதில்லை
தலைக்கு மேல்
வானத்தைச்
சூடிக்கொண்ட
அந்தக் கிளைகளின்
நடனம்
•••
சொல்
இன்று
ஏன்
இத்தனை
கூடுதலாக
பற்றி எரிகிறது
இந்த
நட்சத்திரங்கள்?
இருள் முழுத்த
இந்த இரவு
விடிவதற்குள்
எதையாவது
யாருக்காவது
சொல்லி
தீர்த்துவிட
அவைகளுக்கு
ஆணை
இடப்பட்டிருக்கிறதா
என்ன?
ஒரு சொல்
கொண்டு
எரிந்து
முடித்து
கரிந்து
மரிக்கவா
இத்தனை
மினுக்கும்?
••••
தோன்றாத் துணை
எந்த
ஞானியரின்
ஒளியும்
உடன் வரவில்லை
கட்டக் கடைசியாக
இந்தக் கணத்தில்
துணிந்துவிட்டேன்
தன்னந்தனியே
நானொரு
சாகரத் தோணி
என்னிலும்
நீ இன்று
துணிந்துவிட்டாய்
திருவிழாவின்
பெருந்திரளோடு
நீ அதில்
சாகசப் பயணி
••
கரும்பொன்
அந்த
சூதாடிக் கிழவனின்
மூக்குப்பொடிச்
சிமிழினை
எப்படியும்
இன்று
திறந்து பார்த்துவிட
வேண்டும்
வென்றாலும்
தோற்றாலும்
ஒரு போதும்
தாழ்வதில்லை
அவன் தலை
அவனை
நிலம் தாங்கும்
அந்த
பணயப் பொருளை
அதில் தான்
பதுக்கி
வைத்திருப்பதாக
எல்லோரும்
சொல்லிக் கொள்கிறார்கள்
அவன்
உறங்கா விழிகள்
சிறு குருவிகளின்
மழலையில்
ஒரு கணம்
நின்று
உறைகிறது
விரைந்து
எடு
ஓசை எழாது
திற திற
தேவதைகள்
கந்தர்வன்
பூதங்கள்
ஆவிகள்
எதுவும்
காணக்கிடைக்கிறதா?
எதுவுமே
இல்லையா?
பிறகு?
குன்றா
கரும்பொன்
இரவுகளை
பட்டுத் துணிபோல
சுருட்டி
வைத்திருக்கிறான்
***
யசோதா
தேகமெங்கும்
குரல் முளைத்து
கூவி நிற்கிறாய்
கொள்ளும் செவிகள்
திரும்ப வருமென
இடுப்பில் கையூன்றி
உறுதியாய்
காத்திருக்கிறாய்
அமரும் குருவியல்ல
இந்தக் கிளையில்
அத்தனையும்
பறக்கும் குருவிகள்
கரிய யமுனையில்
நாங்கள்
நர்த்தனமிட
காளிங்கன்
மட்டுமல்ல
கோபியர்களும்
துயில் கலைந்தனர்
துகில் மறந்தனர்
பீலி சூடும்
குழலோன்
சிறு குழலூதி
புவனங்களை
மேய்த்துவர
கிளம்பிவிட்டான்
அவன் நீங்காநிழல்
நாங்கள்
ஒன்று செய்
இனி உன்
வாய்ச்சொற்கள்
யாவையும்
நெய் வடியும்
அக்கார அடிசிலாக்கு
அப்போது
உன் கிளைக்கு
எங்கள் சிறகுகளை
அமர்த்துவான்
அந்த அழகன்
***
நன்றி
சொல்வனம்
