ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் ஆவணப்படத்தைக் கண்டேன். Susan Lacy இயக்கியுள்ளார் . 2h 27min ஒடக்கூடியது
ஸ்பீல்பெர்க்கின் திரைப்படங்களுக்குப் பின்னே சொந்த வாழ்வின் தடயங்கள் எவ்வளவு இருக்கின்றன என்பதை அவரது உரையாடலின் வழியே அறிந்து கொள்ள முடிகிறது.
அமெரிக்காவின் சின்சினாட்டி நகரத்தில் 1946ல் பிறந்தவர் ஸ்பீல்பெர்க்
அவரது தந்தை கணிணி தயாரிப்பில் ஈடுபட்ட என்ஜினியர். அம்மா உணவு விடுதிகளில் பியானோ வாசிப்பவர்.
தந்தையின் செல்லமாக வளர்ந்தார் ஸ்பீல்பெர்க். அவரது தாய் Leah Adler தந்தையின் நண்பர் ஒருவரைக் காதலிக்கவே பெற்றோர்கள் பிரிவது என முடிவு எடுத்து விவாகரத்து செய்து கொண்டார்கள். இதன் காரணமாக குடும்பம் பிளவுபட்டது. அன்பிற்காக ஏங்கும் சிறுவன் தனது படங்களில் தொடர்ந்து வருவதற்கு அது ஒரு காரணம் என்கிறார். ET திரைப்படம் அதன் பிரதிபலிப்பே.
சிறிய 8mm கேமிரா ஒன்றை வாங்கித் தனது பதின்வயதிலே படம்பிடிக்கத் துவங்கியதையும் ஹாலிவுட் ஸ்டுடியோக்களில் பணியாற்றிய நாட்களையும் தனது திரையுலக நண்பர்களையும் விரிவாக எடுத்துச் சொல்கிறார் ஸ்பீல்பெர்க்.
தொடர் வெற்றிகள் அவரை ஹாலிவுட்டின் வசூல் நாயகனாக மாற்றியதையும் யூதரான அவர் ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட் எடுப்பதற்காக மேற்கொண்ட ஆய்வுகளையும், கடினமுனைப்பையும் அந்தப் படப்பிடிப்பில் ஏற்பட்ட அனுபவங்களையும், படத்தின் இறுதிக்காட்சி வண்ணத்தில் படமாக்கப்பட்ட காரணத்தையும் தெரிவிக்கிறார்.
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ஆதர்ச இயக்குனர் டேவிட் லீன். பிடித்தமான படம் லாரன்ஸ் ஆப் அரேபியா.(Lawrence of Arabia)
இந்த ஆவணப்படத்தில் தனக்கு லாரன்ஸ் ஆப் அரேபியா படத்தினை வியந்து பேசுகிறார்.
1962ல் Lawrence of Arabia வெளியான போது ஸ்பீல்பெர்க் அதைத் திரையரங்களில் கண்டார். படமாக்கப்பட்ட விதமும் நடிப்பும் இசையும் அவரை மிகவும் கவர்ந்தன. பின்னாளில் டேவிட் லீனை கண்ட போது தனது குருவைக் கண்டது போலவே உணர்ந்தார்
Lawrence of Arabia படப்பிரதியின் சீர்மைப் பணிகளுக்குப் பெருமளவு உதவி செய்தார் ஸ்பீல்பெர்க். இது போலவே அகிரா குரசேவாவின் Seven Samurai, அவருக்குப் பிடித்தமான படம். குரசேவா மீதான அன்பின் காரணமாகவே ட்ரீம்ஸ் திரைப்படத்தின் தயாரிக்க ஸ்பெல்பெர்க் முன்வந்தார். அப்படம் திரை வரலாற்றின் காவியமாகக் கொண்டாடப்படுகிறது.,
ஸ்பீல்பெர்கினைப் பற்றிய இந்த ஆவணப்படத்தைப் பார்த்து முடித்தவுடன் அவரது திரைப்படங்களை மறுமுறை பார்க்க வேண்டும் என்ற ஆவல் உருவாகிறது.
திரைக்குப் பின்னே ஒரு இயக்குநரின் செயல்பாடுகள் எவ்வளவு நுட்பமானவை என்பதை அறிந்து கொள்ள இந்த ஆவணப்படத்தை அவசியம் பாருங்கள்.