ஹாங் இசை.

திருவண்ணாமலையில் நடைபெற்ற பவாசெல்லதுரையின் சிறுகதை தொகுதி வெளியீட்டுவிழாவிற்குச் சென்றிருந்தேன். நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பாக ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு இசைக்கலைஞர் அறிமுகப்படுத்தி வைக்கபட்டார். முப்பது வயதைக்கடந்த தோற்றம். யூத இனத்தைச் சேர்ந்த அவர் தனது மெய்தேடலின் வழியில் ரமண ஆசிரமத்திற்கு வந்துள்ளதாகத் தெரிவித்தார்கள். அவர் தோளில் தொங்கிக்கொண்டிருந்த பூ வேலைப் பாடு கொண்ட பை என் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருந்தது.


நிகழ்ச்சி ஆரம்பமானதும் அந்த ஜெர்மானிய இளைஞர் அரைமணி நேரம் தனது இசையை வழங்கவிருக்கிறார் என்றார்கள். அவர் தனது பூவேலைபாடுள்ள பையிலிருந்து கேடயம் போன்ற கருவி ஒன்றை வெளியில் எடுத்து வைத்தார். என்ன அது என்று வியப்பாக இருந்தது.


அந்த இசைக்கருவியின் பெயர் ஹாங் (HANG) என்றும் அது கண்டுபிடிக்கப்பட்டு ஏழு வருடங்களே ஆகியிருக்கின்றன. இதுவரை அந்த வாத்தியக்கருவியை வாசிக்கத் தேர்ச்சி பெற்றவர்கள் ஐநூறு பேர்கள் மட்டுமே என்ற தகவலைத் தெரிவித்தார்கள்.

கைவிரல்களால் வாசிக்கப்படக்கூடிய அந்த இசைக்கருவியை அவர் வாசிக்கத் துவங்கியவுடன் அதுவரை நாம் கேட்டிராத மயக்கமூட்டும் இசை கசிந்து பெருகத் துவங்கியது. அதை என்ன வகையான இசை என்று வகைப்படுத்த தெரியவில்லை. இசை துவங்கும் போது கண்களை மூடிக் கொண்டு கேட்டால் அது தியான நிலையை உருவாக்க கூடியது என்றார்கள். அதை மெய்பிப்பது போன்றே இருந்தது ஹாங் இசை.

சில வேளைகளில் ப்யானோ இசை போன்றும் சில கணங்களில் டிரம்ஸ் இசை போன்ற தாளக்கட்டும் ஆங்காங்கே சந்தூர் இசையின் துள்ளலும் கலந்த விநோத இசைக்கருவியது. தன்விரல்களால் அவர் ஹாங்கின் மேல்பரப்பில் ஆங்காங்கே தாளமிட இசை உயர்க்கிறது.

முன்பு கேட்டிராத விசித்திர இசையால் அரங்கமே மயங்கியிருந்தது. காண் உலகம் துண்டிக்கப்பட்டு ஆற்றின் பெருக்கில் படகில் செல்வதைப்போல என் மனது நழுவிக் கொண்டிருந்தது. இரண்டு மாறுப்பட்ட இசையமைப்புகளை அவர் வாசித்துக் காட்டினார். அந்த இசைத் துணுக்குகள் நமது மரபான இசையோடு வெகுவாக நெருக்கம் கொண்டிருப்பதை உணர முடிந்தது. எட்டு இசைப்புள்ளிகளுக்குள் அவரது விரல்கள் ஊர்ந்து நகர்கின்றன. தாவரத்தின் இலையைப் போல பசுமை பொங்க துளிர்க்கிறது இசை.

இந்த இசை நிகழ்வில் இரண்டு விஷயங்கள் என்னை வெகுவாகக் கவர்ந்தன. ஒன்று இசைக்கலைஞரின் முகத்திலிருந்த புன்னகை. நிகழ்ச்சி முழுவதும் அவர் முகத்தில் மெல்லிய சந்தோஷம் பீறிட்டுக் கொண்டிருந்தது. துள்ளும் மீன்களைப் போல விரல்கள் அசைந்து கொண்டிருந்த போதும் முகத்தில் மாறாத புன்சிரிப்பு. இன்னொன்று வெகுதிரளாக வந்திருந்த பார்வையாளர்களில் பெரும்பான்மையினர் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள். அவர்கள் அந்த இசையை தன்னை மறந்து ரசித்தது.

நிகழ்ச்சி முடிந்த பிறகு ஜெர்மனிய இளைஞரோடு பேசிக் கொண்டிருந்தேன். தன்னுடைய இசைக்கருவியைப் பற்றி விளக்கமாகச் சொன்னார். ஹாங்கை ஸ்விட்சர்லாந்தில் உள்ள பெலிக்ஸ் ராக்னர் மற்றும் சபீனா ஷெகார் என்ற இரண்டு இசைக்கலைஞர்கள் ஒன்று சேர்ந்து இரண்டாயிரம் ஆண்டில் உருவாக்கினார்கள். பலவருடப் போராட்டத்தின் பிறகு இது உருவாக்கப்பட்டிருக்கிறது.

இரண்டு பகுதிகளாக உள்ள இந்த இசைக்கருவியின் மேல்பக்கம் டிங் என்றும் அடிப்பக்கம் ச்யூ என்றும் அழைக்கபடுகிறது. டிங் பகுதியில் எட்டு குமிழ் போன்ற அமைப்புகள் காணப்படுகின்றன. அவை இசைப்புள்ளிகள். இந்த இசைக்கருவியை வாசிப்பதற்கு மிகுந்த பயிற்சியும் கற்பனையும் தேவை என்றார்

பெலிக்ஸ் குடும்பம் மட்டுமே இசைக்கருவியை தயாரிக்கும் உரிமை பெற்றிருப்பதால் ஹாங்கை வாங்குவதற்கு உலகமெங்கும் ஆயிரக்கணக்கில் ஆட்கள் காத்திருக்கிறார்கள்.இப்போது பதிவு செய்தால் அதைப் பெறுவதற்கு ஆறு ஆண்டுகள் ஆகும் என்றார்.

எங்கோ ஜெர்மனியில் பிறந்து ஸ்விட்சர்லாந்தில் இசை கற்று, புத்தம் புதிய இசைக்கருவி ஒன்றோடு மெய்தேடலின் வழியே திருவண்ணாமலைக்கு வந்து இங்கேயே தங்கி கொண்டு தன்னுடைய இசையின் வழியே புதிய அனுபவங்களை உருவாக்கும் அந்த இளைஞனின் வாழ்க்கையை ஒப்பிடும் போது எந்த அளவு குறுகிய வட்டத்திற்குள்ளாகவே நாம் வாழ்வை கழித்துக் கொண்டிருக்கிறோம் என்ற குற்றவுணர்வே ஏற்படுகிறது.

இன்னொரு பக்கம் புத்தம் புதிய இசைக்கருவி ஒன்றிற்கு இவ்வளவு வரவேற்பும் கவனமும் கிடைக்கும் போது, இன்று வாசிக்க ஆள் இல்லாமல் போய்விட்ட பராம்பரிய
இசைக்கருவிகளை நினைத்து வேதனையாகவும் இருந்தது.

திருவாரூர் கோவிலில் 26 வகையான இசைக்கருவிகள் வாசிக்கின்றவர்கள் தலைமுறை தலைமுறையாக இருந்து வந்திருக்கிறார்கள். அந்த இசைக்கருவிகளில் சிலவற்றைத் தவிர மற்றவை இன்று வாசிக்க ஆள் இன்றிப் போய்விட்டன. அதில் ஒன்று கொடுகட்டி எனும் இசைக்கருவி அதைப் பதினைந்து வருசத்தின் முன்பு ஒருவர் வாசித்துக் கேட்டிருக்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பாக அவரும் இறந்து போய் விட்டார் என்றார்கள்

இன்னொன்று பாரிநாயனம். நாகஸ்வரத்தைப் போன்ற அமைப்புள்ளது. மிகச்சிறியது. அதை தலைமுறை தலைமுறையாக கோவிலுக்கு வாசிக்கும் குடும்பங்கள் இருந்தன. பாரி நாயனம் வாசிக்கும் இசைக்கலைஞர் ஒருவரை 1990களில் திருவாரூரில் சந்தித்திருக்கிறேன். அவர் பிள்ளைகளுக்கு அதில் விருப்பமில்லை என்று சொல்லி தன்னோடு அந்தக் கலை அழிந்து போகப் போகிறது என்று வருத்தப்பட்டார்.

ஆனால் அதன் சில வருசத்தின் பிறகு அவரைக் கண்ட போது ஒரு ஜப்பானியரை அறிமுகம் செய்து வைத்தார். தமிழரைப்போல வேஷ்டி கட்டிக் கொண்டு ஆசானே என தமிழில் அழைத்தபடி தன் பெயர் மாணிக்கம் என்று அறிமுகம் செய்து கொண்டார் அந்த ஜப்பானியர். எப்படி ஒரு ஜப்பானியருக்கு இந்த இசைக்கருவியை கற்றுக் கொள்ளும் ஆர்வம் வந்தது என்று கேட்டேன்.

அதற்கு மாணிக்கம் தனது பயணத்தில் ஒருமுறை அந்த இசையை கோவிலில் கேட்டதாகவும் கற்றுக் கொள்வதற்காக இங்கேயே வந்து தங்கியிருப்பதாகவும் சொன்னார், பிறகு புன்சிரிப்போடு தனது பெயரை இதற்காகவே மாணிக்கம் என்று மாற்றி கொண்டபடியே தனது லட்சியம் தியாகராஜர் சன்னதியில் வாசிக்க வேண்டும் என்பதே என்றார். அந்த இளைஞர் சில வருடங்கள் இசை படித்து திருவாரூரிலே அரங்கேற்றம் செய்தார் என்று பின்னாளில் அறிந்து கொண்டேன்.

சமீபத்தில் அவர் ஜப்பானிய மொழியில் பாரி நாயனம் பற்றி ஒரு புத்தகம் எழுதியிருப்பதாக செய்திகள் வந்தன. இன்று அந்த இசைக்கருவியில் நுட்பமாகத் தேர்ச்சி பெற்ற ஒரே ஆள் அந்த ஜப்பானியர் மட்டுமே. நமது பராம்பரிய இசைக்கருவியை வாசிப்பதற்கு தமிழகத்தில் ஆள் இல்லை. ஜப்பானில் இருக்கிறார் என்பது எவ்வளவு பெரிய முரண்

ஆழ்வார் திருநகரி கோவிலில் கல்லால் ஆன நாயனம் ஒன்றிருக்கிறது. அதை விழா நாட்களில் முன்பு வாசிப்பார்கள் என்றார்கள். கல்லில் இசையை உருவாக்கும் திறன் கொண்டிருந்த நமது இசைமரபில் முக்கியச் செல்வங்கள் அத்தனையும் இன்று கவனிப்பார் அற்று அழிந்து கிடக்கின்றன.
சென்னையில் உள்ள அருங்காட்சியகத்தில் காணப்படும் தொன்மையான இசைக்கருவிகளை காணும் போது எதற்காக அந்த இசைக்கருவிகள் கைவிடப்பட்டன என்ற ஆதங்கமே ஏற்படுகின்றன.

பேரிகை, பாடகம், இடக்கை, சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை, கணப்பறை, தமருகம், தண்ணுமை, தடாரி, அந்தரி, முழவு, சந்திரவளையம், மொந்தை, முரசு, கண்விடு, தூம்பு, நிசாளம், துடுகை, சிறுபறை, துடி ,பெரும்பறை, கண்டிகை, டமருகம், தாரணி, படகம், காளம், மேளம், தட்டளி, சங்கு, தாரை, வீணை ,யாழ், குழல், கொம்பு, மணி ,சகடை, கெண்டை, துடி, துந்துபி, கொடுகட்டி, கொக்கரை, தத்தளகம், தண்டு, சல்லரி கின்னரம் போன்றவை தமிழ் இசைக்கருவிகள்.

இந்தக் கருவிகளில் எத்தனை இன்று வாசிக்கபடுகின்றன. ஏன் இவை அழிந்து போயின. தமிழ் வாழ்வில் இசை பிரிக்க முடியாதபடி ஊடு கலந்தது. ஆனால் தமிழகத்தின்
பராம்பரிய இசைக்கருவிகள் வாசிப்பதற்கும், மீட்டு எடுப்பதற்கும் முயற்சிகள் அற்று முடங்கிக் கிடக்கின்றன.

நெல்லை மாவட்டம் சாம்பவர் வடகரையைச்சேர்ந்த ஆபிரகாம் பண்டிதர் தமிழிசை ஆய்விற்கு மிகப்பெரும் பணி செய்திருக்கிறார். 1912 முதல் 1917 வரை தஞ்சையில் ஏழு இசைமாநடுகள் நடத்தியதோடு கருணாமிர்தசாகரம் என்ற மிகப்பெரிய இசையாராய்ச்சி நூலையும் வெளியிட்டிருக்கிறார்.

அதுபோலவே இலங்கையைச் சேர்ந்த தமிழறிஞரான விபுலாநந்த அடிகள் சிலப்பதிகார இசையின் நுட்பத்தினையும் பொருளினையும் ஆராய்ந்து யாழ் நூல் என்ற அரிய புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்.

இசையில் ஆர்வம் உள்ளவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய இரண்டு முக்கிய நூல்கள் இவை. தற்போது புதிய பதிப்புகளாக மிக அழகாக வெளியாகி உள்ளன.
மேற்குலகில் புத்தம் புதிய இசைக்கருவி ஒன்றை வாங்குவதற்காக வருடக்கணக்கில் காத்திருக்கிறார்கள். நாமோ நம்மிடமுள்ள உயர் இசைக்கருவிகளை ம்யூசியப்பொருட்களாக மாற்றிக் கொண்டுவருகிறோம் என்பது அறிந்தே செய்யும் தவறு என்றே தோன்றுகிறது.

0Shares
0