நவீன ஓவியங்கள் குறித்த நூல்கள் தமிழில் குறைவு. அதிலும் மேற்கத்திய ஓவியங்களின் வகைமை மற்றும் சிறப்புகள் குறித்து எழுதப்பட்ட நூல்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
ஓவியம் : தேடல்கள், புரிதல்கள் என்ற நூலை ஓவியர் கணபதி சுப்பிரமணியம் எழுதியிருக்கிறார்.
இதில் ஓவியங்கள் குறித்த நாற்பது கட்டுரைகள் உள்ளன. நூலை மிகச்சிறப்பாக வடிவமைத்துள்ளார்கள்.
ஓவியங்களின் அடிப்படைகள், ஓவியத்தினை ரசிக்கும் விதம். அழகியல், கோட்பாடுகள். உலகப்புகழ் பெற்ற ஓவியர்களின் ஆளுமைகள் என்று ஓவிய உலகின் முப்பரிமாணத்தையும் விவரிப்பதாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
“ஒரு உருவ ஓவியத்திலுள்ள கோடுகளின் தடிமன் அந்த உருவத்தின் வடிவத்திற்கு ஏற்ப மாறுகின்றபொழுது அது நம் கண்களின் கவனத்தை ஈர்க்கத்தொடங்குகிறது ஓவியத்தில் அமைந்துள்ள வடிவங்களும் (Shapes and Forms) அவை தொகுக்கப்பட்டிருக்கும் விதங்களுமே அதன் கட்டமைபிற்குப் பெரிதும் காரணமாகின்றன.
இரு வடிவங்கள் ஒரே நிறத்திலோ, ஒளித்திண்மயிலோ இருந்தால் அங்கே ஒரு தட்டைத்தன்மை உருவாகும். மாறாக இரு மாறுபட்ட நிறங்களோ, ஒளிதிண்மையோ இந்த இருவடிவங்களுக்கு இருக்கும் பொழுது அங்கே ஒரு விசை (Force) உருவாகி வலிமையினை (Strength) ஏற்படுத்துகின்றது. அதுபோலவே வடிவங்கள் ஒன்றுடன் ஒன்று இணையும்பொழுது ஒரு தெளிவான ஊடுருவல் (penetration or interlocking) ஏற்படும்பொழுது ஒரு ஸ்திரத்தன்மை அந்த கட்டமைப்பிற்கு ஏற்படுகின்றது“ என ஒரு கட்டுரையில் சுப்ரமணியம் கூறுகிறார்.
எவ்வளவு அழகாக, எளிமையாக, தமிழ் கலைச்சொற்களைக் கொண்டு விளக்குகிறார் பாருங்கள். அது தான் நூலின் சிறப்பு.
சுயமாக ஓவியம் கற்றுக் கொண்டு நவீன ஓவியராகத் திகழும் கணபதி சுப்பிரமணியம் தனது தீவிர கலைஈடுபாட்டின் வெளிப்பாடாக இந்நூலைக் கொண்டு வந்திருக்கிறார்.
அவருக்கு என் மனம் நிரம்பிய பாராட்டுகள்.
கலை நேர்த்தியுடன் நூல்களை வெளியிட்டு வரும் யாவரும் பதிப்பகத்திற்கு அன்பும் வாழ்த்துகளும்
••