எப்போதாவது இசைகேட்பவன்.


ரத்தத்தில் மிதந்து வரும் பித்தப்பூவை பறிக்கிறேன் – தேவதச்சன்



சில வாரங்களாகவே தொடர்ந்து நாளைக்கு நாலைந்து மணிநேரம் இசை கேட்டுவருகிறேன். பொதுவில் நான் அதிகம் இசை கேட்பவன் இல்லை. என்னுடைய நண்பர்கள் சுரேஷ்கண்ணன், ஷாஜி போன்றவர்கள் இசையில் தேர்ந்த விற்பன்னர்கள். அவர்கள் அளவு நான் கேட்க கூடியவன் இல்லை. எனக்கு இசை தேவைப்படும் தருணங்கள் எப்போதாவது தான் ஏற்படுகின்றது. அதன் முன்பு வரை என் அருகாமையில் உலகின் சிறந்த இசை ஒலித்துக் கொண்டிருந்தாலும் அது என்னுள் செல்வதேயில்லை.



இசையினுள் பிரவேசம் செய்வதற்கான மனத்தருணம் வேண்டியிருக்கிறது. அப்படியான அகத் தூண்டல் ஏற்பட்ட பிறகு தொடர்ந்து சில வாரங்கள், மாதங்கள் திரையிசை பாடல்கள், மேற்கத்திய சங்கீதம், ஹிந்துஸ்தானி, பழைய ஹிந்தி பாடல்கள், என்று கலவையாக கேட்டுக் கொண்டிருப்பேன்.
தறியில் ஒடிக்கொண்டிருந்த இழை சட்டென அறுபடுவது போல இசையின் ஊடுகலப்பு ஏதொவொரு நாளில் அறுபட்டு போய் பின் நீண்ட நிசப்தம் என்னை கவ்விக் கொண்டுவிடும். அந்த நிசப்தம் பின்பு எப்போது விலகும் என்று தெரியாது. ஆகவே நான் எப்போதாவது இசைகேட்பவன்.


நான் இசையின் அடிப்படையோ, ரசனையோ அறியாதவன். என்வரையில் இசை கேட்பது என்பது தனிமையில் பசுமையும் காற்றோட்டமும் உள்ள பாதையில் செல்லும் நீண்ட நடைப்பயணம் போன்றது. அதில் என்ன கிடைக்கிறது. என்ன காண்கிறோம் என்பதை வரையறை செய்ய முடியாது. வெயிலைக் குடித்து மயங்கி நின்ற இடத்திலயே சிறகடித்தபடியே மிதக்கும் தட்டாரப்பூச்சியின்  நிலைபோல சில வேளை உணர்ந்திருக்கிறேன்.


இசை கேட்கத் துவங்கும் நாட்களில் நீண்ட நேரம் தொடர்ச்சியாக இசை கேட்டிருக்கிறேன். சில நாட்கள் இரவு ஏழு மணிக்கு துவங்கி விடிகாலை ஐந்து மணி வரை இசைகேட்டிருக்கிறேன். ஒரு ரயில் பயணத்தில் சென்னையில் துவங்கி கோவை வந்து சேரும்வரை உறக்கமில்லாமல் தொடர்ந்து இசை கேட்டேன்.


நான் கேட்பது கலவையான சங்கீதம். விசேசமான  இசைத்தேர்வுகள் என்னிடமில்லை. மதுரை சோமு, கேட்டுக் கொண்டிருக்கும் போதே மனது எனியோ மோரிகோனை கேட்கச் சொல்லும். அதிலிருந்து விடுபட்டு பனாலால் கோஷ் கேட்பேன். இதற்கு சம்பந்தமில்லாமல் நாகூர் ஹனீபா கேட்கவும் ஆசையாக இருக்கும். சில நேரம் ஒரே இசைநாடா இரவெல்லாம் ஒடிக்கொண்டிருக்கும்.


உண்மையில் இசை கேட்கும் போது என்ன நடக்கிறது. எப்போதும் நம்மை பீடித்திருக்கும் யோசனைகள் விலகி போகத் துவங்குகின்றன. இசை கேட்ட நேரத்திலிருந்து மனது ஆழ்நிலையை நோக்கி நழுவ ஆரம்பிக்கிறது. இசையின் உச்ச நிலைகளில் மனது அதோடு ஒன்றிக் கொள்கிறது. தியானத்திற்கும் விழிப்பிற்கும் இடைப்பட்ட வெளி. அந்த வெளியை இசையே உருவாக்கி தருகிறது.


இந்த நிலையை ஆன்மீகமான அனுபவம் என்றோ, அல்லது தியானநிலை என்றோ சொல்லமாட்டேன். மாறாக. மொழியில்லாமல் நினைவை பகிர்ந்து கொள்ளும் விதம் எனலாம்.


நம் உடல் கண்ணுக்கு தெரியாத இன்னொரு உடலைக் கொண்டிருக்கிறது. அந்த அரூப உடலின் பசிக்கு, ஏக்கத்திற்கு தான் இசை கேட்கிறமோ என்று கூட எண்ணுவதுண்டு. இசை ஏற்படுத்தும் அழகியல் வெறும் உவகை மட்டுமில்லை. மாறாக அது ஒரு தத்தளிப்பு.


சில நேரங்களில் இசை கேட்கும் போது மிக அதிகமான தனிமையை உணர்ந்திருக்கிறேன். பொதுவில் எழுதும் போது சொற்கள் உலகை மிக நெருக்கமாக உணர செய்திருக்கின்றன. இசை இதற்கு மாறானது. இசைவழியே அகத்தனிமையை உணரும் போது  மனதில் காரணமற்ற வருத்தம் உருவாகும். சில வேளைகளில் அளவில்லாத சந்தோஷத்தையும் உணர்ந்திருக்கிறேன்.


எல்லா நேரமும் இசை சாந்தம் தருவதில்லை. மாறாக இசை நம்முள் உள்ள ஏதோவொரு வேட்கையை பகிர்ந்து கொள்கிறது. அல்லது அதிகமாக்குகிறது. சில இசைக்கோர்வைகளை கேட்கும் போது பாலியல் தூண்டுதல்கள் அதிகமாகியிருக்கின்றன. சில இசையின் வழியே மெய்தேடலின் ஏக்கம் உருவாகும். பல தருணங்களில் இந்த இரண்டும் ஒன்று சேர்ந்துமிருக்கின்றன.  


நமக்கும் உலகிற்கும் இடையில் உள்ள மூடுதிரை ஒன்றை இசை விலக்குகிறது. அல்லது தற்காலிகமாக துண்டிக்கிறது. இசை கேட்கத் துவங்கி முடித்தபிறகு இயல்பான அன்றாட உலகிற்கு திரும்புவது எளிதானதில்லை. காரணம் இசையின் வழியாக உலகின் இயல்பு நெகிழ்வு நிலை கொண்டிருக்கும். இசை முடிந்த பிறகு உலகம் மிகுந்த  குரூரமானதாகவும், மூச்சு முட்ட செய்வதாகவும் ஆகிவிடுகிறது. ஆகவே இசை கேட்டவுடன் அதிலிருந்து விடுபட முடியாது. பல நேரங்களில் இதனாலே இசை கேட்பதை விலகிச் சென்றிருக்கிறேன்.


வாழ்வின் துடிப்பு தான் இசையின் ஆதாரபுள்ளி. அது ஏற்படுத்தும் சலனங்கள், பிரதிபலிப்புகள், உணர்வெழுச்சிகள் இவையே இசையின் வழியாக வெளிப்படுகின்றன. இசை உள்ளார்ந்த ஒரு குதூகலத்தை உருவாக்ககூடியது.


என் மனது பெரிதும் மேற்கத்திய செவ்வியல் இசையோடு நெருக்கம் கொள்கிறது. Beethoven, Mozart ,Georges Bizet,  Brahms,  Verdi, Vivaldi, Chopin,  Grieg,  Handel,  Haydn, Franz Liszt ,  Mahler,  Schubert, , Richard Wagner, Tchaikovsky என்று நிறையக் கேட்டிருக்கிறேன். நூறு மணி நேரத்திற்கும் மேலாக மேற்கத்திய இசையின் குறுந்தட்டுகள் என்னிடம் இருக்கின்றன.



இவர்களில் என் விருப்பத்திற்குரிய இருவர் Johann Sebastian Bach மற்றும் Niccolò Paganini  . மேற்கத்திய இசையின் நுட்பங்கள் எனக்கு தெரியாது. கேட்கத் துவங்கி நானாக அதன் நுட்பங்கள் என்று சிலவற்றை அறிந்து வைத்திருக்கிறேன். இந்த இசை  என்ன மேஜர், என்ன மைனர் என்பது எல்லாம் எனக்கு தெரியாது. தெரிந்து கொள்வதில் ஈடுபாடும் வரமறுக்கிறது.



பாஹ் கேட்கத் துவங்கிய நாட்களில் மல்லாங்கிணரில் இருந்தேன். சிறிய கிராமம் என்பதால் பகல்வேளையின் நிசப்தம் மிக ஆழமானதாகயிருக்கும். எங்கள் வீடு இருந்த தெருவில் அதிகம்வீடுகளும் இல்லை. ஆகவே நடமாட்டமேயிருக்காது. வீட்டின் அருகாமையில் உள்ள வேம்பலிருந்து உதிரந்து கிடக்கும் இலைகள் காற்றின் உரசலில் ஏற்படும் சிறு சலசலப்பை தவிர வேறு சப்தமிருக்காது.


ஆழமான நீருற்று பொங்கி வழிவது போல நிசப்தம் பெருகியோடிக் கொண்டிருக்கும். என் அறையில் வெயில் வழிந்து இரும்பு கம்பிகள் முறுக்கேறியிருக்க பாஹின் வயலின் அல்லது பியானோ இசை கேட்டுக் கொண்டிருப்பேன்.



இசையின் உயர்வெழுச்சியான தருணங்களில் பற்றி எரியும் நெருப்பின் வசீகரமும் ஆவேசமும்  போன்ற தகிப்பைக் கண்டிருக்கிறேன். இசை ஊரை பற்றியிருந்த தனிமையை மிக அதிமாக்கியது.  பாஹ் இசை நினைவுகளைத் தூண்டக்கூடியது. ஒரு இசைத்துணுக்கிலிருந்து இன்னொரு இசைதுண்டிற்கு கடந்து செல்வது எளிதானதில்லை. ஒரே இசைநாடாவை பகல் முழுவதும் கேட்டுக் கொண்டேயிருப்பேன்.


அறையிலிருந்து வழிந்து வீதிகள் மரங்கள் புழுதிபடிந்த தெருவோர கற்கள் யாவும் இசை குடித்து கிறங்கியிருப்போயிருக்கும். வீட்டின் அருகாமையில் கட்டப்பட்டுக் கிடந்த ஆட்டுக்குட்டிகள் கூட இடையில் சப்தமிடுவல்லை என்பதை ஒரு முறை கண்டுபிடித்தேன். தேனின் பிசுபிசுப்பும் ருசியும் போல எனக்கு பாஹ் இருந்தது. அவரிடமிருந்தே மற்ற இசைக்கலைஞர்களை நோக்கி செல்லத்துவங்கினேன். ஆனால் ஒவ்வொருவரையும் அவரை வைத்து அளவிடுவது அல்லது திரும்பவும் பாஹிடம் திரும்பிவிடுவது என்றே இருந்தேன். யோசிக்கையில் வியப்பாக இருக்கிறது


நான் வசித்த கிராமத்தில் பால்ய வயதிலிருந்து எனக்கு அறிமுகமாகியிருந்த இசை முழுவதும் நாட்டார் இசைக்கருவிகளின் உரத்த இசை. அந்த இசையை கேட்க துவங்கியதும் ரத்த நாளங்கள் துடிக்க ஆரம்பித்துவிடும். மேளம், நாதஸ்வரம், பம்பை, உறுமி என்று கேட்டு பழகிய காதுகள் அதே எழுச்சியை மேற்கத்திய செவ்வியல் இசையின் வழியாகவும் அடைந்தது வியப்பாக இருந்தது.


ஒரு பக்கம் தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்கள் மறுபக்கம் பாஹ் இசை இரண்டுக்கும் இடையில் முடிவற்ற வெயிலும் நீண்ட தனிமையுமாகவே கிராமத்திலிருந்த நாட்களில் என் அகவுலகம் உருவானது.


நீண்ட வருசங்களுக்கு பிறகு ஒரு இசைத்துணுக்கின் வழியாக பகானினியை(Paganini) கண்டுபிடித்தேன். இத்தாலிய வயலின் மேதை அவர். அவரை இசையின் டிராகுலா என்கிறார்கள். ஒருமுறை அவரது இசையை கேட்டவர்கள் அந்த இசைக்குத் தன்னை அடிமையாக்கி கொண்டுவிடுவார்கள். டிராகுலாவின் பற்கள் பதிந்துவிடுவது போல வயலின் இசை நரம்புகளில் படிந்துவிடும். பின்பு பகானினியைக் கேட்காமல் இருக்கவே முடியாது என்பார்கள். அது உண்மை. பகானினியை கேட்பது ஒரு உன்மத்தமான அனுபவம். விஷம் கலந்த அமுதம்.


பகானினி வயலின் இசை வாசிப்பில் தனித்துவம் கொண்டவர். அவரைப் பற்றிய ஒரு திரைப்படத்தை பார்த்திருக்கிறேன். அதில் கின்ஸ்கி தான் பகானினியாக நடித்திருப்பார். வயலினோடு சண்டை போடுகின்றவரைப் போல சுழற்றி சுற்றி, கைமாற்றி வீசி என பகானினி வாசிக்கும் விதம் காளைசண்டை வீரர்கள் காளையை அடக்குவது போன்றிருக்கும்.



ஆனால் அவரது இசை  பெரும்அலைகளுக்கு நிகரானது. ஒரு அலை கரை வந்து சேருவதற்குள் அடுத்த அலை வந்துவிடுவது போல ஒரு இசைபகுதி முடிவதற்குள் அடுத்த இசைப்பகுதி எழுச்சி கொள்ள துவங்கிவிடும். கேட்பவர்களை நிலை கொள்ளவிடாமல் பொம்மாலாட்ட பாவைகள் போல ஆட்டுவிப்பது பகானினியின் இசை.



சில வேளைகளில் இசை கேட்டுக் கொண்டிருக்கும் போது தண்ணீர் குடிக்க வேண்டும் போல மிகுந்த தாகம் உருவாகிவிடும். ஆனால் கை அருகே உள்ள தண்ணீரை எடுத்து குடிக்கும் நிமிசங்களில் இசை கடந்து போய்விடுமோ என்று எனக்குள் நடுக்கம் உருவாகும்.


நீண்ட நேரம் கேட்டு இசை பழகிய பிறகு காற்றில் பறக்கவிடப்பட்ட பட்டம் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து உயர்ந்து வெகுதொலைவில் தனியே காற்றின் விசையில் அலைந்து சுற்றிக் கொண்டிருப்பது போன்று வயலின் இசை உயர்ந்து மேலேறி தனியே எங்கோ வெகு தொலைவில் தனித்து அசைந்து கொண்டிருப்பதை அறிய முடியும். ஆனால் பட்டத்தின் நூல் நம் கையில் இருப்பது போல கேட்பவனின் கையில் ஏதோவொரு அரூப சரடு ஒன்றை தந்துவிட்டு பறக்கிவிடுகிறார் பகானனி. ஆகவே அந்த பரவசம் மிக அற்புதமாக இருக்கும்.


1782ல் இத்தாலியில் பிறந்த பகானினி மூன்று வயது முதல் இசைகற்றுக் கொண்டவர். சிறுவயதில் அவரது அப்பா ஒரு நாளைக்கு பதினாலு மணி நேரம் வயலின் வாசிக்க சொல்வாராம். கைவலித்து வயலின் வில்லை கிழே வைக்க முயன்றால் அடி கிடைக்குமாம். வறுமையான குடும்பம்.  அடிவாங்கி அடிவாங்கி ரணமேறிய கைகள், மனது நிரம்பிய ஆத்திரம், இசையைத் தவிர வேறு உலகமில்லை என்ற அகஉணர்வு என அத்தனையும் ஒன்று சேர்ந்து பதினாலு வயதிற்குள் பகானினியை இசை மேதையாக்கியது.


அதன்பிறகு தான் இசை கற்றுக் கொள்வதற்கு தேவையான பணத்தை தானே சம்பாதிக்க துவங்கினார். அவராக இசைக்கோர்வைகள் எழுத துவங்கினார். பயணம் செய்து பெரும்புகழ் பெற்றார். மிதமிஞ்சிய குடி, செல்லுமிடமெல்லாம் காதலிகள், முன்கோபம், சூதாட்டம், கேளிக்கை என்று தன் வாழ்வை மூர்க்கமாக மேற்கொண்டார்.


1828 முதல் 1834 வரையான ஆறு ஆண்டுகள்  நாற்பது நாடுகளில் தொடர்ந்து இசைப்பயணம் மேற்கொண்டார் பகானினி. அந்த நாட்களில் இவர் வாசித்த இசைகோர்வைகள் இன்றளவும் உலகப்புகழ் பெற்று விளங்குகின்றன. இசை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் இவர் வயலின் இசை கேட்டு அரங்கில் மண்டியிட்டு கண்ணீர் விட்டனர்.


இங்கிலாந்தில் மட்டும் ஒரு மாதத்தில் 150 நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார் பகானனி. அதனால் கிடைத்த வருமானம் லட்சம் இத்தாலிய லிரா. அதேநேரம் தன்னுடைய சம கால இசைக்கலைஞரான Berliozu இசையில் மயங்கி பீதோவனுக்கு பிறகு அவரே உலகின் மிகச்சிறந்த இசைக்கலைஞர் என்று அவருக்கு இருபதாயிரம் பிராங் பணம் தந்து  பாராட்டியிருக்கிறார் பகானினி.


ஒரு முறை கச்சேரியின் போது அவரது இசையை கேட்டு ரசித்த மிகப்பெரிய டுரின் பிரதேச கவர்னர் இன்னொரு முறை தான் அந்த இசைதுணுக்கை கேட்க விரும்புவதாகவும் அதற்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தரத்தயார் என்று சொன்னதற்கு பகானினி சொன்ன பதில். 


Paganini doesn`t repeat”.


 இசை உலகில் இன்றும் இது ஒரு வழக்குச் சொல்லாக அழைக்கபடுகிறதாம்.



வயலின் வாசிப்பதில் பல புதிய முறைகளை உருவாக்கியவர் பகானினி. அவரது கை எந்த பக்கமும் சுற்றிவரக்கூடியது என்கிறார்கள். அதுபோலவே ஒரேயொரு இழையை மட்டும் வைத்து கொண்டு வயலின் வாசிப்பது. இரட்டை வயலின்களை  வாசிப்பது, வயலினில் துள்ளல் உருவாக்குவது, வேகமாக தாவுவது என்று அவர் செய்த ஜாலங்கள் நிறைய உண்டு.



இசை வரலாற்றில் அதிகம் சர்சைக்கு உள்ளான இசைக்கலைஞர் பகானினியே. இவரைப் பற்றி எண்ணிக்கையற்ற வதந்திகள். குற்றசாட்டுகள், புகழ்பாடும் கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. இவரது இசை நிகழ்ச்சியால் உந்துதல் பெற்ற ராஜா ராணிகள் பரிசாக தங்கமும் வைரமும் வாறி இறைத்தனர். அத்தனையும் வேசைகளுக்கு பரிசாக தந்தார் பகானினி.


சூதாட்டத்தில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். பாரிஸில் மிகப்பெரிய சூதாட்ட விடுதியை நடத்தி தோல்வியடைந்தார். அவரது இசை எண்ணிக்கையற்ற இளம்பெண்களைக் காதலிகளாக்கியது. அவர்கள் காதலிப்பது என்னை அல்ல என் வயலினை. என்னுடைய வயலின் ஒரு மாயப்பொருள். ஒரு மந்திரக்கோல் போன்றது. அது எதையும் சிருஷ்டிக்க கூடியது என்று குறிப்பிடுகிறார் பகானினி.
உல்லாச வாழ்க்கை, மேதமை நிரம்பிய இசை வாழ்வு என இருந்த அவருக்கு வேசைகளின் தொடர்பால் மேகநோய் தாக்கியதால் 1834 முதல் உடல் நலிவுற்று வெளியுலகம் அறியாமல் இருந்த பகானினி 1840ல் மரணமடைந்தார். இன்றுள்ள ராக் இசையை உருவாவதற்கு பகானினியின் இசைகோர்வைகளே முன்னோடியாக இருந்தன என்கிறார்கள்.


இவரது Twenty-Four Caprices for solo violin நிகரான வயலின் இசையை இதுவரை நான் கேட்டதேயில்லை. கோடை காலத்தின் வெக்கையின் ஊடாக பெய்யும் எதிர்பாரத மழையை போன்று ஆவேசமும் மிதமிஞ்சிய வேகமும் கொண்ட இசையது.


இன்றும் இசை கேட்கத் துவங்கும் நாட்களில் சில இரவுகள் பகானினிக்கு மட்டுமே உரியது. பாறைகளில் தொடர்ந்து அலையடித்து நீர்பச்சைபடிவது போல மனதில் இருந்த இறுக்கம் இசையால் மறைந்து  புத்துணர்வு ஏற்படுகிறது. ஒட்டகம் நீர் உள்ள இடத்தை கண்டவுடன் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குடித்துவிடும் பிறகு தாகம் மறந்து அலைந்து கொண்டிருக்கும் . ஒரு வகையில் நானும் அப்படித் தான் இசை கேட்கிறேன்.


**

0Shares
0