போய்வாருங்கள் பொருட்களே.


பார்த்துக் கொண்டிருந்த போதே நம் வாழ்விலிருந்து பல பொருட்கள் நிசப்தமாக வெளியேறி மறைந்து போய்விட்டன. நவீன வாழ்க்கையின் விஞ்ஞான வளர்ச்சியால் பல புதிய பொருட்கள் வாழ்விற்குள் நுழைந்திருக்கின்றன. அதைப் பயன்படுத்துவதில் நமக்கு எவ்விதமான சிரமமும் இல்லை. ஒருவகையில் இந்த மாற்றம் தவிர்க்கமுடியாதது. அது தான் வளர்ச்சியும் கூட.



ஆனால் யோசிக்கையில் நம்மை விட்டுச் சென்ற பல பொருட்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டிய அவசியமுள்ளது.  நோபல் பரிசு பெற்ற கவிஞரான பாப்லோ நெருதா  உடைகள், உண்ணும் பழங்கள் ,காய்கறிகள் என்று  வாழ்வில் பங்குபெற்ற யாவற்றிற்கும் வாழ்த்துக் கவிதை எழுதியிருப்பார்.


அப்படி இன்று பயன்பாட்டில் இல்லாது போன பொருட்களை நினைவுபடுத்திக் கொள்ள  முயன்றேன். பகல் எல்லாம் யோசித்தில் முப்பத்தைந்து  பொருட்கள் உடனடியாக நினைவில் வந்தன. இதற்கு வெளியிலும் நிறையப் பொருட்கள் இருக்க கூடும். 


இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பான தமிழ்வாழ்வில் ஒவ்வொரு குடும்பத்தினராலும் பயன்படுத்தபட்டு இன்று வழக்கொழிந்து போன பொருட்களின் பட்டியல் இவையே.


1)நாழி கால்படி அரைப்படி : அரிசி அளப்பதில் துவங்கி அன்றாட சமையல் சாமான்கள்  அளப்பதற்கு பயன்படுத்தபட்ட  நாழி,கால்படி அரைப்படி அரைமாணி வீசிம் போல அளவை கருவிகள் இன்று முழுமையாக பயன்பாட்டிலிருந்து மறைந்துவிட்டன


2) அரிக்கேன் விளக்கு : மின்சாரம் வருவதற்கு முன்பு, மின்சாரம் வந்து தட்டுபாடான நேரங்களிலும் அநேக வீடுகளில் பயன்படுத்தபட்டது. இந்த விளக்கின் கண்ணாடி சிம்னியை பளபளவென துடைப்பது சிறுவர்களின் வேலை. திருநீறு போட்டு துடைப்பார்கள். இன்று அரிக்கேன் விளக்கு ஒரு அலங்கார பொருள் மட்டுமே



3)  உலக்கை ; நெல் குத்துவதற்கு மற்றும் தானியங்களை இடிப்பதற்கு பயன்படுத்தபட்ட உலக்கை இன்று பயன்பாட்டை விட்டுசென்று விட்டது. ருதுவெய்திய பெண்கள் தங்கள் அருகில் உலக்கையைப் போட்டு கொள்வார்கள். உலக்கையால் சண்டையிட்டார்கள் என்று மகாபாரதத்தில் குறிப்பு வருகிறது. இன்று உலக்கையை காண்பது கூட அரிதானது


4) அம்மி, திருகை : சமைப்பதற்கு அம்மி அரைக்காத பெண்களே கிடையாது. இன்று பெரிய நகரங்களில் அம்மிக்கு இடமில்லை. சிறு நகரங்களில், கிராமங்களில் மிக அரிதாக பயன்படுத்தபடுகிறது. . அது போலவே திருகையும் மாவு அரைப்பதற்கானது. இன்று பயன்பாட்டில் இல்லை



5) வெற்றிலைபெட்டி : வயதானவர்கள் அத்தனை பேரும் அந்தக் காலங்களில் ஆளுக்கொரு வெத்திலை பெட்டி வைத்திருப்பார்கள். பித்தளையில் ஆன வெற்றிலைபெட்டிகள் உண்டு. அதில் சுண்ணாம்பு பாக்கு பாக்குவெட்டி புகையிலை கொழுந்து வெற்றிலை இருக்கும். வெற்றிலை எச்சில் துப்ப தனியான கிண்ணங்கள் இருந்தன. 



6) மரக்குதிரை ; சிறுவர்கள் விளையாடுவதற்காக செய்யபட்டது. என் வீட்டில் மூன்று தலைமுறையினர் ஏறி விளையாடிய மரக்குதிரையிருக்கிறது. இன்று அதை தொட்டு பார்க்க கூட எவருமில்லை. சிறுவயதில் மரக்குதிரையில் ஏறி ஆடத்துவங்கியதும் மனம் ராஜா காலத்தை கற்பனை செய்து கொண்டுவிடும். அந்த நினைவுகள் இன்றுள்ள சிறுவர்கள் அறியாதது.



7)கிராமபோன் இசைதட்டுகள் : பாட்டு கேட்பதற்கு இருந்த ஒரே கருவி. கறுப்பு இசைதட்டுகள் சுழன்று இசை பீறிடும். அவ்வப்போது முள்ளை மாற்றி விட வேண்டும். இன்று மதுரை போன்ற நகரங்களில் உள்ள சந்தைகளில் பழைய இசைத்தட்டுக்ள உடைந்து சிதறியதும் ஒரு ரூபாய்க்கு கிடைக்கின்றன. அப்படி என் சிறுவயதில் பீதோவனின் இசையை இசைதட்டில் கேட்டிருக்கிறேன்



8)மரப்பாச்சி : இரண்டு மூன்று வயது குழந்தைகள் விளையாடுவதற்காக மரப்பொம்மை. பெண் உருவம் கொண்டது. இந்த பொம்மையை குளிக்க வைத்து ஆடை உடுத்தி பூச்சூடி விளையாடுவார்கள். இன்று அந்த இடத்தை பர்பி பொம்மை பிடித்துக் கொண்டுவிட்டது



9)கலப்பை : நிலத்தை உழுவதற்கு ஏர்கலப்பை தான் பிரதானம். மாட்டை பூட்டி உழுவார்கள். இன்று இயந்திரங்கள் வந்தபிறகு கலப்பை மிகவும் குறைந்து போய்விட்டது. அநேகமாக கலப்பை பயன்படுத்தபடுவதேயில்லை என்பதே இன்றைய உண்மை



10)கோலிசோடா ; வயிற்று வலி வந்தால் தான் அந்த காலத்தில் சோடா குடிப்பார்கள். சோடாபுட்டிக்குள் உள்ள கறுப்பு நிற அல்லது நீல நிற கோலி மிக அழகாக இருக்கும். கோலி சோடா குடிப்பதற்கே பயிற்சி வேண்டும்; பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களின் வருகை இதை முற்றிலும் அழித்துவிட்டது



11)குதிரைவண்டி : ரயில் நிலையம் பேருந்து நிலையம் என்று எங்கே இறங்கினாலும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு குதிரைவண்டிகள் வரிசையாக நின்றிருக்கும். மதுரைவீதிகளில் என் பால்யத்தில் குதிரைவண்டியில் ஏறி சுற்றியது பசுமையான நினைவுகள். இன்று குதிரைவண்டி பயன்பாட்டில் மிக அருகி போனது.



12)கணித வாய்ப்பாடு : ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த நாளில் முதன்முதலாக படிக்கும் பாடம் கணித வாய்ப்பாடு. ஒன்றிலிருந்து பதினாறு வரையான எண் கணிதம் பாடலாக சொல்லிக் கொடுப்பார்கள். கணிதவாய்பாடு புத்தகம் இருபத்தைந்து பைசா விலை. இன்று கணிதவாய்பாடு பள்ளிகளில் நடைமுறையில் இல்லை


13)சுருக்கு பை ; வீட்டுபெண்கள் மற்றும் கிழவிகள் தங்கள் கையிருப்பில் உள்ள பணத்தை சுருக்கி பையில் வைத்திருப்பார்கள். சுருக்கு பை எப்போதும் இடுப்பில் தொங்கிக் கொண்டிருக்கும். சுருக்கு பையிலிருந்து பணத்தை எடுப்பதற்கு ஆயிரம் முறை யோசிப்பார்கள். டெய்லர் கடைகளின் முன்பாக விதவிதமான நிறங்களில் சுருக்கு பை தைத்து தொங்கவிட்டிருப்பார்கள்



14)ஒரு பைசா ரெண்டு பைசா : ஒரு ரூபாய் நாணயத்தை கையில் கொடுத்தாலே இன்றுள்ள சிறுவர்கள் வாங்க மறுக்கிறார்கள். அந்த நாட்களில் ஒரு பைசா. ரெண்டு பைசா மூன்று பைசா நாணயங்கள் தான் சிறுவர்கள் செலவுக்கு தரப்படும் பணம். ஐந்து பைசாவை கடையில் கொண்டு போய் சில்லறை மாற்றிவருவார்கள். முற்றிலும் வழக்கொழிந்து போன நாணயங்கள் இவை.



15)முள்வாங்கி : கிராமப்புறங்களில் சாலைகள் கல்லும் முள்ளும் நிரம்பியதாக இருக்கும். இதனால் காலில் முள் தைப்பது என்பது அன்றாடம் நடக்கிற செயல். முள்ளை எடுப்பதற்கு முள்வாங்கி என்ற கருவியை வைத்திருப்பார்கள். முள் ஆழமாக தைத்து புரையோடி போனால் நாவிதர்களை அழைத்து வந்து கத்தியால் சீவி முள்ளை எடுப்பார்கள். இன்று முள்வாங்கி என்ற சொல்லே பலருக்கும் தெரியாது.



16)சாவி கொடுக்கும் கடிகாரம்; கடிகாரம் வைத்திருக்கின்ற வீடு என்றால் மிகவும் வசதியானவர்கள் என்று பொருள். எட்டாம்வரை உள்ள கிராமபள்ளிக்கூடம் ஒன்றிற்கு ஒரேயொரு கடிகாரம் இருக்கும். அதற்கு தினமும் ஆறு முறை சாவி கொடுக்க வேண்டும். இந்த பொறுப்பு பள்ளி மாணவர் தலைவனுக்கு உரியது. வீடுகளில் இருந்த கடிகாரமும் சாவி கொடுத்தால் மட்டுமே ஒடும். அதன் மணியோசை அற்புதமானது. இன்று அந்த கடிகாரங்கள் ம்யுசியப்பொருளாகிவிட்டன.



17)கவண்கல் : தானியங்களை காவல்காக்கும் போதும் பறவைகளை துரத்தி விளையாடும் போதும் சிறுவர்கள் கவண்கல் வீசி அடிப்பார்கள். இந்த கவண்கல்லை நரிக்குறவர்கள் செய்து கொண்டுவந்து விலைக்கு விற்பார்கள். ஒணான் அடிப்பதற்கு குருவி அடிப்பதற்கும் சிறுவர்கள்  இதை பயன்படுத்துவது  உண்டு. இன்று கவண்கல்லை பயன்பாட்டில் இல்லை



18) தாயக்கட்டை : வீட்டிலிருந்த இளம் பெண்கள் பகல் வேளைகளில் தாயம் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இதற்காக தாயக்கட்டை வைத்திருப்பார்கள். தாயக்கட்டைகள் இரும்பில் செய்யபட்டிருக்கும். சில வீடுகளில் திருமணமாகி செல்லும்  பெண்ணிற்கு வெள்ளியில் தாய்ககட்டை செய்து சீராக தந்து விடுவார்கள். புளியமுத்தை உரசி விளையாடுவதும், சோழிகளை உருட்டி தாயமாடுவதும் உண்டு. இன்று இந்த விளையாட்டு பெரிதும் மறைந்து போய்விட்டது.


19) பல்லாங்குழி : இதுவும் பெண்கள் விளையாடும் விளையாட்டு. புளியமுத்தை குழிகளில் இட்டு விருத்தம் செய்து கொண்டே போவார்கள். இந்த விளையாட்டு ஆப்ரிக்காவிலும் இருந்திருக்கிறது. பல்லாங்குழியும் காரைக்குடி பகுதியில் திருமணத்தின் போது சீராக தருவார்கள்.



20) ஊதுகுழல் : வீடுகளில் அடுப்பு எரிப்பதற்கு விறகுமட்டுமே பயன்படுத்தபட்டு வந்த காலத்தில் நீண்ட ஊதுகுழலால் ஊதி ஊதி புகை நடுவில் பெண்கள் அமர்ந்து சமைக்கும் காட்சி கண்களில் நிற்கிறது. அந்த புகைமூட்டம் மறைந்து இன்று நவீன அடுப்புகள் வந்துவிட்டன. எனவே அந்த ஊதுகுழல்கள் இன்று பயனற்று போய்விட்டன. ஊதுகுழலை இரவல் கேட்டு சிறுமிகள் வந்து நிற்பதை கண்டிருக்கிறேன்



21 ) தாழம்பூ  : வாசனைக்காகவும், கிருமிகள் வந்துவிடாமல் இருக்கவும் மர அலமாரில் பீரோவில் தாழம்பூ போட்டு வைப்பார்கள். தாழம்பூவின் வாசனைக்கு நாகம் கூட மயங்கிவிடும் என்பார்கள். தாழம்பூவை கண்டு வருசம் பலவாகி விட்டது



22 ) கும்பா – சாப்பிடும் பாத்திரம். கம்பங்கஞ்சியை கும்பாவில் கரைத்து குடிப்பார்கள். வாய் அகன்ற பாத்திரம்.


23 ) கோணி ஊசி  – கிழிந்து போன சாக்குகள் ( கோணி )யை தைப்பதற்காக பயன்படுத்தபடும் ஊசி. அளவில் பெரியது. அதை வைத்து நெல் அளந்த கோணிகளை தைத்து மூட்டுவார்கள். இன்று கோணு ஊசியின் பயன்பாடு கிடையாது



24 ) கிண்ணி – குழந்தைகள் உறிஞ்சி குடிப்பதற்காக பயன்படுத்தும் நீர் அருந்தும் பாத்திரம். கிண்ணியில் பெரியது சிறியது என்று வகைகள் உண்டு. பெரிய கிண்ணிகள் பூஜைக்கு பயன்படும். துறவிகள் அதை கமண்டலம் என்று சொல்வார்கள்.



25) சங்கு : மருந்து ஊட்டுவதற்காக சிறிய கலன். முனை சங்கு போல இருக்கும். கசப்பு மருந்தை சங்கில் பொடித்து தேன்கலந்து தருவார்கள். சிறுவர்கள் சங்கை கண்டதும் அழத்துவங்கிவிடுவது உண்டு. இன்று சங்கு அரிதாக எவராவது பயன்படுத்துகிறார்கள்.



26) தார்குச்சி – மாடுகளை ஒட்டுவதற்கு பயன்படும் கருவி. அதன் நுனி கூர்மையாக இருக்கும். அதை மாட்டின் புட்டத்தில் குத்தினால் அந்த வலியில் அது நேராக செல்லும். மாட்டுவண்டிகளின் பயன்பாடு குறைந்ததோடு தார்குச்சியும் முடிந்து போனது



27) ஒமத்திரவம் : இதை கிராமங்களில் ஒமோத்திரம் என்று வழக்கில் சொல்வார்கள். வயிற்றுவலிக்கு தரப்படும் திரவம். இது அரிதாகவே எவர் வீட்டிலாவது இருக்கும். ஒரு டம்ளரில் பாதி அளவு தந்து குடிக்க சொல்வார்கள். சுவாசம் முழுவதும் ஒம மணமாகிவிடும். இதற்காகவே ஒரு பாட்டில் வைத்திருப்பார்கள்.



28) தக்ளி – பஞ்சிலிருந்து நூல் நூற்கும் கருவி. இதை வைத்துக்  கொண்டு வயதானவர்கள் நூல் நூற்றுக் கொண்டேயிருப்பதை கண்டிருக்கிறேன். இன்று தக்ளி ஒரு காட்சி பொருள் மட்டுமே



29 )காது குடும்பி – காதில் படிந்துவிடும் அழுக்கு மற்றும் குளிக்கும்போது தண்ணீர் ஏறிக் கொள்வதை சுத்தம் செய்வதற்கான கருவி. அதுவும் மறைந்து போய் வருசமாகிறது.



30) உலைமூடி.:  சமைக்கும் போது சாதம் வைக்கும் பானையின் மேல் போடப்படும் மூடி. அடிக்கடி உலைமூடி உடைந்து போய் சந்தைக்கு வாங்க வருவார்கள். உலைமூடி பார்க்க மிக அழகாக இருக்கும்.  களிமண்ணாலானது.



31) கோந்து  : என்பது பிசின். வேம்பிலிருந்து வடியக்கூடியது. வேப்பந்கோந்து மிகவும் பிசுபிசுப்பானது. கிழிந்து போன நோட்டு புத்தகங்களை ஒட்டுவதற்கு கோந்து தயாரித்து ஒட்டுவார்கள். கோந்து வைப்பதற்கு என்றே சிரட்டைகள் இருக்கும்.


32) நெல் அண்டா:   நெல் அவிப்பதற்கு என்றே உள்ள மிகப்பெரிய பாத்திரம். சில நெல் அண்டாக்களை அடுப்பில் ஏற்றி இறக்க முடியாது. ஒரு மூட்டை நெல்லை ஒரே அண்டாவில் கொட்டி வேக வைக்க முடியும்.



33) குஞ்சலம்  : பெண்கள் சடையில் கட்டிக் கொள்ளும் அலங்கார பொருள். விதவிதமான நிறங்களில் கிடைக்கும். குஞ்சலம் வைத்து ஜடை பின்னிக் கொள்வது தான் பெண்களின் விருப்பமான அலங்காரம்.


34) பேனா கத்தி – அன்றாட உபயோகத்திற்கான கத்தி. மீன் வடிவத்தில்,கண் வடிவத்தில் இருக்கும். மடக்க கூடியது.



35) புளிய விளார் : மாணவர்களை அடிப்பதற்கென்றே ஆசிரியர் கையில் வைத்திருக்கும் தண்டனை கருவி. புளிய விளாரில் அடி வாங்கினால் அடிபட்ட இடம் சிவந்துவிடும். வலியும்லேசில் மறையாது. புளிய விளாரை எடுக்கவா என்று ஆசிரியர் சொன்னதும் மாணவர்கள் அழுதுவிடுவார்கள்.


இப்படி சிறியதும் பெரியதுமாக பல பொருட்கள் நம்வாழ்விலிருந்து விடைபெற்று போய்விட்டன. ஒரு காலத்தில் இந்த பொருட்களுக்கு இருந்த முக்கியத்துவமும் அது கிடைக்காமல் ஏங்கிய நாட்களும் இன்று யோசிக்கையில் வியப்பாக உள்ளன.


இனி ஒருபோதும் திரும்பமுடியாத இடத்திற்கு போய்விட்ட இந்த பொருட்களுக்கு நாம் நன்றி சொல்லியாக வேண்டும். காரணம் அவை நம் வாழ்விற்கு ஏதோவொரு நிலையில் உதவியிருக்கின்றன. நம் நினைவில் பதிந்து போயிருக்கின்றன.


போய்வாருங்கள் பொருட்களே உங்கள் இடத்தை உங்களது சகோதரன் போலான இன்னொரு பொருள் பிடித்து கொண்டுவிட்டது. அதுவும் இன்னொரு நாள் கடந்து போகும். இன்னொரு பொருள் வரும். இந்த நித்ய விளையாட்டு தான் வாழ்க்கை. அந்த நாடகத்தில் உங்கள் வேஷம் முடிந்தது போய்வாருங்கள். இனி உங்களை ஏதாவது ம்யுசியத்தின் காட்சிபொருளாக எங்காவது சந்திக்கிறேன். போய்வாருங்கள்.



**

0Shares
0