நாகார்ஜுனனின் வலைப்பக்கம்.

வலைப்பதிவுகளில் நான் அன்றாடம் வாசிக்கும் பதிவாக மாறியிருக்கிறது நாகார்ஜுனனின் திணை இசை சமிக்ஞை என்ற வலைப்பக்கம்.


நாகார்ஜுனன் எனது நல்ல நண்பர்களில் ஒருவர். தமிழ் இலக்கிய உலகில் கவனத்திற்குரிய விமர்சகர். கோட்பாட்டாளர். பத்திரிக்கையாளர். புனைகதையாசிரியர், பின்நவீனத்துவ சிந்தனையாளர் என்று அவரது ஆளுமை பன்முகப்பட்டது.



தற்போது லண்டனில் வசிக்கிறார். அவர் சென்னையில் வசித்த நாட்களில் ஆறேழு வருடம் தினமும் சந்தித்து பேசியிருக்கிறேன். நாகார்ஜுனன் வீட்டு மாடியில் அவரோடு தங்கிக் கொண்டு பல இரவுகள் நானும் கோணங்கியும்  ஏதேதோ பேசி விவாதித்திருக்கிறோம்.



உலக இலக்கியம், விஞ்ஞானம், தத்துவம், மாற்று சினிமா, சமகால சமூக, அரசியல் சூழல்கள் என்று விரிந்த தளங்களில் வாசிப்பு அனுபவங்களும் தனித்துவமான பார்வைகளும் கொண்டவர் நாகார்ஜுனன். பத்திரிக்கையாளராக யுஎன்ஐ போன்ற பெரிய நிறுவனங்களில் பணிபுரிந்தவர். அதன்பிறகு பிபிசியில் பணியாற்ற லண்டன் சென்ற  பத்து வருடங்களுக்கும் மேலாக அவரோடு தொடர்பற்று போய்விட்டது.


ரசனை மட்டுமே விமர்சனம் என்றிருந்த தமிழ் இலக்கிய சூழலில் நாகார்ஜுனன் வருகை பிரதி, கட்டுடைத்தல், எதிர்கலாச்சாரம், என்ற புதிய சொற்களையும் இலக்கியவாசிப்பின் புதிய சாத்தியங்களையும், கோட்பாடுகளையும் பின்நவீனத்துவ தத்துவ பின்புலங்களையும், மொழி  குறித்த ஆழ்ந்த கவனத்தையும் உருவாக்கியது. நவீன தமிழ்கவிதைகள் குறித்த நாகார்ஜுனனின் வாசிப்பு முறைகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை.


அமைப்பியல்வாதம் அறிமுகமாகி அதன் தொடர்ச்சியான நான்லீனியர் ரைட்டிங் குறித்த விவாதங்கள் எழுந்த சூழலில் நான் கல்லூரியில் முதுகலை படித்துக் கொண்டிருந்தேன். அந்த நாட்களில் நான்லீனியர் மற்றும் தமிழில் அறிமுகமான அமைப்பியல் வாதம் குறித்து நானும் கோணங்கியும் நிறைய கேலி செய்து கொண்டு திரிந்தோம். நாகார்ஜுனனின் கட்டுரை தொகுப்பிற்கு நான் பகடியான விமர்சனம் ஒன்றை எழுதியிருக்கிறேன்.


சென்ற ஆண்டில் அவரது நேர்காணல் தீராநதியில் வெளியாகி இருந்தது. அதன் தொடர்ச்சி போல அவர் இணையத்தில் திணை இசை சமிக்ஞை என்ற வலைப்பக்கத்தை உருவாக்கியிருந்தார்.


கடந்த நான்கு மாதங்களாக அவரை தொடர்ந்து வாசித்து வருகிறேன். நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய பதிவுகள் அவர் வலைப்பக்கத்தில் உள்ளன.
பிரெஞ்சு கவிதைகள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் என்று தொடர்ந்து அறிமுகப்படுத்துவதோடு பிரெஞ்சிலிருந்து நேரடியாக தமிழுக்கு மொழியாக்கம் செய்கின்றார். அது வரவேற்கபடவேண்டிய முக்கிய பங்களிப்பாகும்.


மிலோராட் பாவிக், ம்யூசில், அலெஜோ கார்பெந்தர், மரியான் மூர்,  ஹர்ட் வெனார்ட்,பார்த்தல்மே, என்று பல முக்கிய படைப்பாளிகளை எனக்கு முதலில் அறிமுகப்படுத்தியர் நாகார்ஜுனனே. மார்க்வெஸின் படைப்புலகம் குறித்து அவரோடு பல நாட்கள் பேசியிருக்கிறேன். அவரது  பார்வையிலிருந்து நிறைய நான் மாறுப்பட்ட போதும் கூட அவர் என்னோடு விவாதிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். என் படைப்புகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்.


இது போன்ற வாதங்கள் எதிர்மறை விமர்சனங்கள் அத்தனைக்கும் அப்பால் அவரது நட்பு மிக இயல்பானது. ஒன்றாக அவரோடு கபோலாவின் டிராகுலா திரைப்படம் பார்த்துவிட்டு இரவெல்லாம் பல்வேறு வகையான டிராகுலா திரைப்படங்கள், டிரான்சில்வேனிய பழங்கதை, புனிதப்போர்கள். மேரி கெர்லி, புதுமைபித்தன், டிராகுலா ஏன் லண்டனுக்கு வருகிறான் என்று காலை மூன்றுமணி வரை பேசிக் கொண்டிருந்தோம்.


 நானும் கோணங்கியும் அவரோடு கற்பகம் மெஸ் ராயர் கபே என்று சேர்ந்து சாப்பிட்டபடியே முடிவற்ற உரையாடலை தொடர்ந்திருக்கிறோம். ஒன்றாக கல்குதிரை சிற்றிதழ் கொண்டுவருவதில் வேலை செய்திருக்கிறோம்.


அவருக்கு இசையில் தேர்ச்சி உண்டு. டிரம் வாசிக்க தெரிந்தவர். மேற்கத்திய இசை குறித்தும் நிறைய பேசுவார். அவரது அம்மாவும் தேர்ந்த படிப்பாளி. இசையை மிக நுட்பமாக அறிந்தவர். அம்மாவும் மகனுமாக இசை கேட்க செல்வதும், இலக்கிய கூட்டங்களுக்கு வருவதையும் கண்டிருக்கிறேன். அந்த நாட்களில் நாகார்ஜுனன் வீடு எங்களுக்கு ஒரு இலக்கியபட்டறை.


வீடு நிறைய புத்தகங்கள் வைத்திருப்பார். முக்கியமான பகுதிகளை தானே படித்து காட்டுவார். அவர் வேலை செய்த யுஎன்ஐ அலுவலகத்தில் இரவுபணியின் போது நானும் கோணங்கியும் சென்று அங்கேயே பேசிக் கொண்டிருப்போம்.


நிறைய பேசினோம். நிறைய விவாதித்தோம். நிறைய கற்றுக் கொண்டேன்.
பத்து வருடங்களுக்கு பிறகு அவரது வலைப்பக்கத்தை காணும் போது நாகார்ஜுனன்  இன்றும் அதே வேகம் அதே ஈடுபாடு என்று அப்படியே இருப்பது மனநெருக்கத்தை உருவாக்குவதாக இருந்தது.


இலக்கியம் மற்றும் வாழ்வியல் குறித்த புதிய கோட்பாடுகள், முன்னெடுத்து செல்லவேண்டிய சிந்தனைகள், அறிமுகங்கள் என்று அவரது வலைப்பக்கம் தனித்துவமான மாற்றுவெளியாக உருவாகியிருக்கிறது


இலக்கியம்/ கலை,அறிவியல், சினிமா என்று அவரது தின பதிவுகளை வாசிக்கும் போது தீவிரமானதொரு சிற்றிதழ் செய்யவேண்டிய பணியை தனியொரு ஆளாக செய்வதை போன்றிருக்கிறது. அந்த வகையில் நாகார்ஜுனின் வருகைக்கும் நட்பிற்கும், பங்களிப்பிற்கும் மனம் நிறைந்த நன்றி சொல்லிக் கொள்கிறேன்


அவரோடு இணைந்து பயணிக்கவும், விவாதிக்கவும், அறிந்து கொள்ளவும் எவ்வளவோ இருக்கின்றது. அந்த வகையில் அவரது வலைப்பக்கத்தை தமிழின் மிக முக்கியமான வலைப்பக்கம் என்று வாசகர்களுக்கு சிபாரிசு செய்கிறேன்.


புதிய வாசகர்கள் அவரது வலைப்பதிவை  வாசிக்கும் போது புரியவில்லை என்ற ஆரம்ப சிரமத்தை கணக்கில் கொள்ளாமல் தொடர்ந்து ஈடுபாட்டுடன் வாசித்தால் அவர் கவனப்படுத்தும் விஷயங்களும், செயல்தளங்களும் நமக்கு புரியக்கூடும்.



 


https://nagarjunan.blogspot.com



 



 

0Shares
0